rural scheme

அண்மைக்காகமாக சமூக ஊடகங்களில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் யாரென ஆராய்ந்தால் அத்தனை பேருமே சமூகத்துக்கு எதிரானவர்களாகவும், முதலாளித்துவ எடுபிடிகளாகவும் உள்ளனர்.

100 நாள் வேலைத்திட்டத்துக்கு எதிராக கருத்து கேட்பது அல்லது விவாதத்தைக் கிளப்புவது உழைக்கும் மக்களுக்கு முற்றிலும் எதிரானது. எந்தவித சமூக பொருளாதார அறிவும் இல்லாமல் இப்படிப்பட்ட விவாதத்தை கிளப்பி விடும் நபர்கள் ஒரே ஒரு நாள் சேரியில் சென்று தினக்கூலியாக வாழ்ந்து பார்த்தால் உழைக்கும் மக்களின் வலி தெரியும்.

100 நாள் வேலைத்திட்டம் வராததற்கு முன்பு வரை கிராமங்களில் நாள் ஒன்றுக்கு பெண்களுக்கு தினக் கூலி 30 ரூபாயாகவும், ஆண்களுக்கு 60 ரூபாயாகவும் இருந்தது. அந்த சம்பளத்தில் எப்படி ஒரு குடும்பம் இந்த நாட்டில் வாழமுடியும்? ஆனால் இத்திட்டம் வந்தபிறகே கிராமப்புறங்களில் தினக்கூலி 100 ரூபாயைத் தாண்டியது. அதன் பிறகே நாட்டில் பட்டினி சாவுகள் குறைந்தன. ஆகவே ஏழை எளிய தினக்கூலி மக்களின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கும் இத்திட்டத்துக்கு எதிரான பிரச்சாரத்தை கிளப்பி விடுபவர்கள் உழைக்கும் குடும்பங்களின் பொருளாதார வாழ்வியல் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இத்திட்டத்தினால் தான் விவசாயம் நலிவடைந்து விட்டது எனச் சொல்லும் இவர்களின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. விவசாயம் செய்ய மாடுகளையும், மனித உழைப்பையும் முழுமையாக நம்பியிருந்த காலம் மாறி, நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் உணவு உற்பத்தி அதிகரித்திருப்பதால் தான் மக்கள் இலவச அரிசியைப் பெற முடிகிறது.

விவசாயத்தை மேலும் மேம்படுத்த அரசும் மக்களும் புதிய வழிமுறைகளையும் புதிய கொள்கைகளையும் வகுக்க வேண்டும். நாட்டில் 60 கோடி மக்கள் தொகை இருந்த போது விவசாயம் செய்த அதே விளை நிலத்தில் தான் 130 கோடி மக்களுக்கும் விவசாயம் செய்யப்படுகிறது. நாட்டில் கோடிக்கணக்கான ஏக்கர் நிலம் விவசாயம் செய்யப்படாமல் எதற்கும் பயனளிக்காமல் நிலச்சுவான்தாரர்களின் கைகளில் சிக்கி வெற்றிடமாக கிடக்கிறது.

விவசாயம் செய்யப்படாமல் வெற்றிடமாக கிடக்கும் நல்ல நிலத்தையெல்லாம் ஆண்டாண்டு காலமாக நிலவுடமை மறுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு வழங்கினால் விவசாயம் வளரும். நாடு மேலும் தன்னிறைவு அடையும். ஆகவே விவசாயத்தை மேம்படுத்த நிலப்பகிர்வுக்கு பொதுமக்கள் குரல் எழுப்ப வேண்டும். விவசாய மேம்பாட்டுக்கு நிலப்பகிர்வே சரியான தீர்வு.

ஆகவே...
100 நாள் வேலைத்திட்டத்தை பாதுகாப்போம்!
உழைத்து சாப்பிடும் மக்களை போற்றுவோம்!!
உழைக்காமல் சாப்பிடும் சோம்பேறிகளின் எதிர்ப் பிரச்சாரத்தை முறியடிப்போம்!!!

Pin It