“இங்கு உணவில்லை, மருந்தில்லை, கல்வியில்லை, வேலையில்லை, நம்பிக்கையும் இல்லை. மக்கள் இங்கு நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு மெல்லிய இனப்படுகொலை (It is a slow genocide). கடவுள் தான் எங்களுக்கு உதவ வேண்டும், ஏனெனில் இவ்வுலகம் எங்களுக்கு உதவாது...”
வறுமைக்கு பெயர் பெற்ற சோமாலியா நாட்டில் தற்பொழுது என்ன நிலைமை நிலவுகின்றது என்பதை, அங்கு பணியாற்றுகின்ற ‘எல்லைகள் கடந்த மருத்துவர்கள்’ - மெடிசின்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ் - Médecins sans Frontières (MSF) என்ற பன்னாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனம், மேலுள்ளவாறு அறிவித்திருக்கிறது. ஏறத்தாழ 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சோமாலியாவில் உச்சத்தில், தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது, பஞ்சப்பேய்.
கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம், சோமாலியாயில் குடும்பம் ஒன்றிற்கான உணவு மற்றும் குடிநீர்ச் செலவு மாதம் ஒன்றிற்கு 92 டாலர்களாக இருந்தது. அது இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 171 டாலர்களாக, சுமார் 85 விழுக்காடு உயர்ந்துள்ளது. பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதையும், உடைகள் எடுப்பதையும் தவிர்த்து விட்ட, சோமாலியா மக்கள் அதிகமானோர் உள்ளனர். பலர் கிடைக்கிற உணவை சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர்.
மேலும், சத்தான உணவு கிடைக்காததால், ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் இங்கு நீடிக்கிறது. கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர். ஆப்பிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலை தான் நீடிக்கிறது. அதாவது ஆப்பிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்கு பலியாகிக் கொண்டிருக்கிறது.
வேலையின்மையாலும், வறுமையாலும் வாடி வதையுறுகின்ற, ஆப்ரிக்க நாடுகளுக்கு, இந்நிலை திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. கடந்த 1966-1970 ஆண்டுகளில், உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த ஆப்பிரிக்க நாடுகள், அப்பொழுதே சுமார் 1.3 மில்லியன் டன் உணவுப் பொருட்களை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளமான பகுதியாகத் தான் இருந்தது. ஆனால், இன்றோ பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் அவற்றின் 25 விழுக்காட்டிற்கும் மேலான உணவை முதலாளிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்ய வேண்டியளவிற்கு கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
முதலாளிய நாடுகளின் கண்ணை உறுத்திய ஆப்பிரிக்க நாடுகளின் இயற்கை வளம், பணக்கார நாடுகளால் சூறையாடப்பட்டது. தமது இராணுவ மேலாதிக்க நடடிவக்கைகள் மூலமும், ‘பொருளாதார ஒருங்கிணைப்பு’ என்ற பெயரிலான, உணவு உற்பத்தியை சீர்குலைக்கிற சந்தைப் பொருளாதாரச் சுரண்டல் திட்டங்களின் மூலமாகவும் ஆப்பிரிக்க நாடுகளை சிதைத்ததில், முழு பங்கும் ஏகாதிபத்திய நாடுகளையே சேரும்.
இவற்றின் விளைவாக, தம் வளங்களையும், உரிமைகளையும் இழந்து, பரிதவிக்கின்றனர், அந்நாட்டு மக்கள்.
உலகமய முதலாளியத்தின் சுரண்டல் தீவிரவாதத்தின் எதிர் விளைவாக, ஆப்பிரிக்கா மட்டுமின்றி உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இது தான் இன்றைய உலக நிலைமையாக உள்ளது.
முதலாளிய இலாப வெறியின் விளைவாக தோற்று விக்கப்பட்ட, தற்போதைய பொருளியல் நெருக்கடியை முன்னிட்டு, நிறுவனங்கள் மூடப்படுதல், வேலையிழப்பு அதிகரித்தல், தொழிலாளர்கள் மேலும் அதிகமாக சரண்டப்படுதல், சுரண்டுகின்ற நிறுவனங்களுக்கு இன்னும் அதிகமான வரிச்சலுகைகளை அள்ளி வீசுதல், இவ்வாறான தொடர் நடவடிக்கைகளின் காரணமாக விலைவாசி உயர்தல் என பல்வேறு வடிவங்களில் உலக மக்கள் இன்று வாட்டப்பட்டு வருகின்றனர்.
பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (International Labor Organization- ILO), உலகில் ஒரு நாளுக்கு 2 டாலருக்குக் கீழ் வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனாக உயரும் என்று அறிவித்திருக்கிறது. உலகமய வேட்டைக்காரர்களின் நாடான அமெரிக்காவிலோ, வேலையின்மையின் விகிதம் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத வகையில், 9.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இவ்வாண்டு மட்டும் சுமார் 106 அமெரிக்க வங்கிகள் திவாலாகியுள்ளன. (காண்க: பினான்சியல் எக்ஸ்பிரஸ், 26.10.09). ஒவ்வொரு 15 மாதத்திற்கும் 1 டிரில்லியன்(1000 கோடி) டாலர் கடனாளியாகிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.
“மனித குல வரலாற்றில் இவ்வாறான பஞ்சத்தை, முதன் முறையாக இவ்வுலகம் எதிர் கொள்கிறது” என்று ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய (UN’s Food and Agriculture Organisation FAO) அமைப்பின், வளர்ச்சித்துறை இயக்குநர் கோஸ்டஸ் ஸ்டமௌலிஸ் குறிப்பிடுகிறார். அவ்வமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, மிக அதிகபட்சமாக, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஆசிய - பசிபிக் பகுதிகளில் 642 மில்லியன் மக்களும், சகாரா ஆப்பிரிக்கப் பகுதிகளில் 265 மில்லியின் மக்களும், லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் பகுதிகளில் 53 மில்லியன் மக்களும் பட்டினியில் உழல்கின்றனர்.
முதலாளிய நாடுகளில் சுமார் 15 மில்லியன் மக்கள் பட்டினி கிடப்பதாகவும் அவ்வமைப்புத் தெரிவித்திருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம், வெளியிடப்பட்ட, ஐக்கிய நாடுகள் சபையின் உணவுத்துறை நிறுவனத்தின் ஆண்டறிக்கை (United Nations - Food Agency, Annual report 2009), உலகம் முழுவதும் சராசரியாக 100 கோடி மக்கள் பட்டினியில் உழன்று கொண்டிருப்பதாகவும் அறிவித் துள்ளது. உலக நாடுகள் விவசாயத் துக்கு முன்னுரிமை கொடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவ்வறிக்கை எச்சரிக்கிறது.
விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படாததும், சேவைத்துறை ஊட்டி வளர்க்கப்படுவதும், உற்பத்தியில் ஈடுபடுத்தப்படாத பெரும் நிதி மூலதனச் சூதாட்டங்களின் ஊக்குவிப்பும் தான் உலகமயத்தை உயிருடன் வைத்துள்ளன. வெளிப்படையாக இதனைக் குற்றம் சாட்டாமல், மறைமுகமாக அவ்வறிக்கை இதனை தெரிவித்திருப்பதன் மூலம், இவ்வறிக்கை, உலகமயத்திற்கு எதிரான குற்றப் பத்திரிக்கையாகவே விளங்குகின்றது.
மேலும் அவ்வறிக்கையில்,
• உலகின் 6இல் ஒரு மனிதர் பசியில் உழன்று கொண்டிருக்கிறார்,
• உணவு கிடைக்காமலும், போதிய சத்தின்மையாலும், ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது,
• சகாராப் பகுதி ஆப்பிரிக்க நாட்டு மக்கள் தம் வாழ்நாளில் இதுவரை சந்தித்திராக விலை வாசி உயர்வையும், வறுமையையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்,
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘உணவு இல்லாமல் போனால், மக்கள் கலகம் செய்வார்கள், இடம் பெயர்வார்கள் அல்லது இறப்பார்கள். எனவே இது உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகவும் அமையலாம்’ என்கிறார் ஐ.நா. உணவுத்திட்டத்தின் இயக்குநர், ஜோசட் ஷரன். அவர் தெரிக்கும், ‘உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை’ என்ற சொற்றொடரை, உலகமய முதலாளி யத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இடைவிடாத சுரண்டல்களின் மூலம், ஏழை நாடுகளை சீரழித்த முதலாளிய நாடுகள், ‘யானைப் பசிக்கு சோளப் பொரி’ என்பது போல, தம் சுரண்டலின் ஒரு மிகச்சிறிய பகுதியை ‘ஏழை நாடுகளின் வறுமையைப் போக்குவதற்காக’ என்ற பெயரில் எலும்புத் துண்டுகளென வீசுயெறிகின்றன. அதற்கான தரகராக செயல்படுவது தான், ஐ.நா. உணவுத்துறைத் திட்ட நிறுவனத்தின் வேலை.
தற்பொழுது முதலாளிய நாடுகள் பொருளாதார நெருக்கடியில், சிக்கியிருப்பதால், பல்வேறு காரணங்களைச் சொல்லி இந்த சிறு உதவித் தொகையையும் கூட நிறுத்தி வைத்துள்ளன.
சோமாலியாவில், உணவுக்காகவும், உரிமைக்காகவும் உழைக்கும் மக்கள் ஆயுதமேந்தி நடத்தி வருகின்ற ஒருங்கிணைக்கப்படாத கலகங்களை ‘தீவிரவாதம்’ என்று முத்திரைக் குத்தி, ‘தாம் வழங்கும் உதவிகள் தீவிரவாதிகளுக்குத் தான் போய்ச் சேரும்’ என்று சோமாலியாவிற்கான நிதி உதவிகளை ஒருமையில் நிறுத்தியுள்ளது அமெரிக்கா. உணவு கொடுத்தால் அது தீவிரவாதிகளுக்குப் போய்ச் சேரும் என்று வேடம் போடுகின்ற அமெரிக்கா, சோமாலியா கலகக்காரர்களை அடக்கும் பொருட்டு, வலிமையும், பயிற்சியும் இல்லாத அந்நாட்டின் சிறு இராணுவத்திற்கு 40 டன் அளவிற்கான ஆயுதங்களை மட்டும் அள்ளி வீசியிருக்கிறது.
இவ்வாயுதங்கள் அல்-கொய்தா போன்ற இசுலாமிய அடிப்படைவாத இயக்கங்களுக்கு வணிகம் செய்யப்படுகின்றன என்று சோமாலியா நாட்டின் அரசியல்வாதிகள் சிலரே வெளிப்படையாக எச்சரித்துள்ள போது கூட அமெரிக்காவிற்கு அது பற்றியெல்லாம் கவலையில்லை. உழைக்கும் மக்களின் கலகங்களை அடக்குவதில் மட்டுமே அமெரிக்கா அதீத கவனம் செலுத்துகிறது.
இவ்வாறு, ஏகாதிபத்திய நாடுகள் தாம் வீசும் எலும்புத் துண்டுத் தொகையைக் கூட, கொடுக்காத நிலையில், இவ்வாண்டு ஐ.நா.வின் உணவுத்துறை திட்ட அமைப்பிற்கான உதவி நிதி கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத வகையில், குறைந்து விட்டதாகவும் அவ்வமைப்பு கவலைத் தெரிவித்துள்ளது.
கடந்த சூலை மாதம் இத்தாலியில் நடந்த ஜி8 எனப்படுகின்ற பணக்கார நாடுகளின் மாநாட்டிற்கு முன்பாக, ஐ.நா. உணவுத்துறை அமைப்பு இது குறித்து வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை. கடந்த 2005 ஆம் ஆண்டு நடந்த ஜி8- பணக்கார நாடுகளின் மாநாட்டில், ஏழை நாடுகளுக்கான உதவித் தொகையை ஆண்டுக்கு 50 பில்லியன் டாலர்கள் அதிகரிப்போம் என்று கூட்டாக அறிவித்திருந்தன, பணக்கார நாடுகள். ஏழை நாடுகளை மேலும் சுரண்டுவதற்கும், அந்நாடு களில் நுழைந்து மேலாதிக்கம் செய்வதற்குமே இந்நிதி பயன்படுத்தப்படும் என்ற போதும் கூட, பணக்கார நாடுகள் இதற்கென ‘உதவ’ இப்பொழுது தயாரில்லை.
இவ்வாறான தொடர் நடவடிக்கைகளின் மூலம், ‘உலக அளவில் 2015ம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம்’ என்கிற முதலாளிய நாடுகளின் போலி முழக்கத்தை, அந்நாடுகளே காற்றில் பறக்க விட்டுள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளில் தான் இந்நிலைமை என்றால், வல்லரசுக் கனவில் மிதந்து கொண்டிருக்கும் இந்தியாவில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. இன்றைய இந்தியாவில், 5 வயதுக்கு கீழான எடை குறைவுள்ளக் குழந்தைகளின் விகிதம் மட்டும் 42.5 விழுக்காடு. போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை, உகாண்டா பாகிஸ்தான், வங்கதேச நாடுகளை விட பின்தங்கிய நிலையில் தான் இந்தியா உள்ளதென உலக நாடுகளுக்கிடையே கணக்கெடுக்கப்பட்ட பசி அளவுக் குறியீடு (Global Hunger Index 2008) குறிப்பிடுகிறது. இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள 88 விழுக்காட்டு பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப் பட்டவர்களும், 80 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்களும், 85 விழுக்காட்டு முஸ்லிம் மக்களும் ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் ரூ.20க்கும் கீழ் தான் வருமானம் பெறுகிறார்கள். இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலும், குடிசைகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை மட்டும் 150 மில்லியன். ஆசியாவின் மிகப்பெரும் குடிசைப் பகுதியான தாராவி இந்தியாவில் தான் இருக்கிறது. அதில் வாழுகின்ற பெரும்பான்மை மக்கள் தமிழர்கள் ஆவர். மகாராட்டிரத்தின் 15 மாவட்டங்களில் ஊட்டச்சத்துக் குறைவால், ஏப்ரல் 2003லிருந்து மே 2004க்குள் இறந்த 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 9,000.
இப்படிப்பட்ட இந்தியா தான் ‘வல்லரசாக’ப் போகிறதென்று நம்மை கனவுக் காணச் சொல்கிறது, இந்திய ஆளும் வர்க்கம். ஒரு சிலரின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமான வளர்ச்சி என்று திரிக்கும், இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் அதன் ஊதுகுழலான முதலாளிய ஊடகங்களுக்கும, இப்படிப்பட்ட ஏழ்மையில் உழலும் ‘இந்தியா’வின் கோர முகம் தெரிவதற்கான வாய்ப்பில்லை தான்.
அமெரிக்கா உள்ளிட்ட முதலாளிய நாடுகளுடனான உலகமயப் பிணைப்பு காரணமாக, இந்தியத் தொழிற்துறை ஆட்டம் கண்டுள்ளதை அரசே வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆலை மூடல்களும், வேலை இழப்புகளும் நுணுக்கமாக இங்கு நடந்து கொண்டிருக்கின்றன. தகவல் தொழில்நுட்பத் துறைத் தொழிலாளர்களை மேலும் சுரண்டிக் கொழுப்பதற்கு வசதியாக, ஏற்கெனவே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அரை குறையாக அமல்படுத்தி வருகின்ற தொழிலாளர் நலச் சட்டங்களை 2 ஆண்டுகளுக்கு அமல்படுத்தத் தேவையில்லை என்று இந்திய அரசு அறிவித்திருக்கிறது. (காண்க: தி எகனாமிக் டைம்ஸ், 1.09.09).
இவ்வறிவிப்பின் மூலம், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பணிநேரம், குறைந்தபட்சக் கூலி, விடுப்பு உள்ளிட்ட அனைத்திலும் தம் விருப்பம் போல் நிறுவனங்கள் நடந்து கொள்ளலாம் என்ற இந்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது. இவ்வாறு, வரிச்சலுகை என்ற பெயரில், பல்வேறு தனியார் நிறுவனங்களும் மக்களை சூறையாடிக் கொள்ள தங்குதடையின்றி அனுமதி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள முதலாளிய ஆளும் வர்க்கங்கள் அனைத்தும், சர்வாதிகாரத் திமிருடன் தொழிலாளர் களை தம் விருப்பம் போல் சுரண்டிக் கொள்வதற்கு முதலாளிகளுக்கு, போலிச் சட்டங்களையும் மீறி அனுமதியளித்துக் கொண்டிருக்கின்றன. முதலாளிகளின் விசுவாசப்படையான அரச அதிகார வர்க்கத்திற்கு எதிராக, அவ்வப்போது கோபத்துடன் குமுறி எழுகின்ற மக்களின் பதிலடிகள், கலகங்களாக பிறப்பெடுத்து, ஆளும் வர்க்கத்தை நடுநடுங்கச் செய்கின்றன.
இதனால் தான், சோமாலியாவிலும் கென்யாவிலும் நடக்கிற உழைக்கும் மக்களின் கலகங்களை ‘தீவிரவாதம்’ என்று பெயரிட்டு, அமெரிக்கா அலறுகின்றது. கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில், நொய்டாவில் கிராசியாநோ என்ற தனியார் நிறுவனத்தில், பணியிலிருந்து தூக்கியெறியப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள், அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரியை அடித்துக் கொன்றதும், அண்மையில் கோவையில், 42 தொழிலாளர்களை வேலையிலிருந்து வீசியெறிந்த பிரிக்கால் ஆலையின் நிர்வாகத்திற்கு, எதிரான போராட்டத்தில், அந்நிறுவனத்தின் நிர்வாகிக் கொல்லப்பட்டதும், உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான உழைக்கும் மக்களின் பதிலடிகள் தான். தொழிலாளர்களின் இந்த பதிலடிகளை ‘வன்முறை’ என்று சாடுகின்றன, இந்திய ஆளும் வர்க்கங்கள்.
சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனத்தைச் (International Food Policy Research Institute- IFPRI) சேர்ந்த பொதுச் சுகாதார ஆய்வாளர், பூர்ணிமா மேனன் அவர்களிடம், மக்களின் வறுமை குறித்து கேட்ட போது, “ஒரு அமைப்பின் தோல்வியை தான் நாம் இன்று காண்கிறோம். அது ஏதோ செய்கிறதே தவிர, பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை” என்று கூறுகிறார். (“I see a system failing. It is doing something, but it is not solving the problem”) (காண்க : தி நியுயார்க் டைம்ஸ், மார்ச் 12, 2009).
அவர் கூற முற்படும் அமைப்பு, தற்பொழுது நிலவுகின்ற முதலாளித்துவ சமூக அமைப்பு. அவ்வமைப்பின் தோல்வியைத் தான் இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது, ஆனால் மிகக் கொடூரமான முறையில்.
உலகமயம் ஏவுகின்ற வர்க்க ஒடுக்குமுறையை மட்டுமல்லாது, இந்தியம் ஏவுகின்ற இன ஒடுக்குமுறையையும் தாங்கி நின்று கொண்டிருக்கிறது, நம் தமிழ்த்தேசம். இவற்றை எதிர் கொள்ளும் போர்வாளாக தமிழ்த்தேசியத்தை நாம் கைகளில் ஏந்த வேண்டியச் சூழலை, வரலாறு நமக்கு கொடுத்திருக்கிறது.