கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

கைதிகளையும், எதிரிகளையும், போராளிகளையும் பலியெடுத்து வரலாற்றின் கோட்டை கொத்தளங்களில் குருதி குடித்து ஓங்கி வளர்ந்த தூக்கு மரங்களில் பட்டொளி வீசிப் பறக்கிறது அரசதிகாரக் கொடிகள். கொடிகளில் தொங்குகிற தூக்குக்கயிற்றின் உயிர்மூச்சு இன்னும் துடித்தடங்கவில்லை. இந்த அரசுகள் ஒருவனை சட்டப்படி கொல்வதற்கு தண்டனை என்ற ஒற்றை வார்த்தை போதுமானதாக இருக்கிறது. இறுதியாக இந்தியா எனும் அரசு தீனி போட்டு வளர்த்து வருகிற தூக்குமரம் குடித்த குருதி யாகூப் மேனனின் குருதி. இந்த தூக்கு மரத்தை வெட்டிச் சாய்க்க அரிவாள்களும் கோடாரிகளும் அவ்வப்போது உயர்ந்த போதும் செதில்கள் உதிர்த்து உறுதியோடு நிற்கிறது.

death sentenceபுவிப்பரப்பின் மேலடுக்கில் 97 நாடுகள் மரண தண்டனையை முற்றிலும் ஒழித்து விட்டன. 35 நாடுகள் கடந்த பத்தாண்டுகளாக எந்த மரண தண்டனையையும் நிறைவேற்றவில்லை. 9 நாடுகள் இராணுவ குற்றங்கள் தவிர்த்து நீக்கி விட்டன. இப்படியாக 140 நாடுகள் தங்கள் இரத்தக்கறையை கழுவி விட்டன. 58 நாடுகளே இன்னும் இந்த அரசதிகாரக் கொலையை அரங்கேற்றி வருகின்றன. அவை பெரும்பாலும் காலச்சக்கரத்தில் நசுங்கிக்கிடப்பவை. அதில் இந்தியா மட்டும்தான் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற மாயப்பதாகையில் பதுங்கிக்கிடக்கிறது. 1948ல் மனித உரிமைக்கான சர்வதேச பிரகடணம், 1982ல் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம், 2007ல் ஐக்கிய நாடுகள் பொது சபையின் 62/149 வது தீர்மானம் எதுவும் இந்தியாவின் தூக்குக்களத்தை நெருங்க இயலவில்லை.

இந்நிலையில்தான் கடந்த மாதம் மரண தண்டனையை நீக்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளது இந்திய சட்ட ஆணையம். உடனே ஸ்பீக்கர்களின் அதிர்வாட்டம் தொடங்கிவிட்டது. இது என்னவோ தடாலடியாக ஒலிக்கிறது என யாராவது சொதப்பினால் அவர்கள் வரலாறு தெரியாத அழகான டீச்சர் வாய்த்தவர்களாக இருக்க வேண்டும்.

மரண தண்டனையின் சுதந்திரப் போராட்டம்

மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் சுதந்திரப் போராட்டத்தின் சுண்டுவிரல் பிடித்து நடைபழகியது. 1931ம் வருடமே கயா பிரசாத் சிங் மரண தண்டனை ஒழிப்பு மசோதாவை கொண்டுவந்தார். 1931ல் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட பிறகு கராச்சி மாநாட்டில் மரண தண்டனையை ஒழிக்க தீர்மாணம் நிறைவேற்றியது அப்போதைய காங்கிரஸ். 1947 – 1949 ல் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் போதும் கூட விவாதங்கள் சுழன்றன. அதில் அம்பேத்கர் மரண தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிடும் சட்ட விதியை உறுதி செய்வதை விட மரண தண்டனையை ஒழிப்பதையே நான் ஆதரிக்கிறேன் என அழுத்தமாக வாதிட்டார். தேசம் விடுதலையடைந்த போதும் மரண தண்டனைக்கு விடுதலை கிடைக்கவில்லை. சுதந்திரத்திற்கு முன்பு ஒழிக்கக் கோரிய காங்கிரஸ், பின்பு முக்கால் நூற்றாண்டாக படையல்களை ருசித்துக் கொண்டிருந்தது. போராளியாக இருந்த காங்கிரஸ் அரசாகிவிட்டது.

சுதந்திர இந்தியாவில் மரண தண்டனை எனும் அடிமை

சுதந்திரத்திற்கு பிறகும் 1952 மற்றும் 1954ல் எம்.ஏ.காஜ்மி, 1956ல் முகுந்தலால் அகர்வால், 1958ல் ப்ரித்திவிராஜ் கபூர், 1961ல் சாவித்திரி தேவி நிகாம் 1962ல் ஶ்ரீ ரகுநாத்சிங் ஆகியோரின் மரண தண்டனை ஒழிப்புக் குரல்கள் பாராளுமன்றத்தை குலுக்கியது என்றால் நம்புவீர்களா ? ஆனால் எதுவும் நிறைவேறவில்லை. 1962ல் சற்று ஆறுதலாக சட்ட ஆணையத்தின் ஆய்விற்கு பரிந்துரைக்கப்பட்டது. 5 வருட ஆய்வோடு 1967ல் ஒழிப்பை நிராகரித்ததுஆணையம். சமூக, பொருளாதார கலாச்சார கட்டமைப்புகள், கல்வி, குற்ற சதவீதம் என ஊத்தி மூடிவிட்டது.

எதிர்ப்பலைகளின் முதல் பலனாக 1955ல் மரண தண்டனை விதிக்கவில்லையெனில் காரணங்களை நீதிமன்றம் விளக்க வேண்டுமென்கிற பிரிவு நீக்கப்பட்டது. அடுத்த முன்னெடுப்பாக 1973ல் சிறப்பு காரணங்களுக்காக மட்டுமே மரண தண்டனையென திருத்தப்பட்டது. உச்ச நீதிமன்றமும் 1980ல் பச்சன்சிங் 1983ல் மித்து வழக்குகளில் அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை என சுருக்கியது. அப்பெருவெடிப்பில் பிறந்த இத்தத்துவமே இன்று வரை இந்திய நீதிதுறையில் சுழல்கிற கடவுளின் துகள்.

இருந்தாலும் தரவுகளின் படி மரண தண்டனைத் தீர்ப்புகளின் வருட சராசரியே 129ஐ தாண்டுகிறது. 2004 – 2012 காலத்தில் 180439 கொலை வழக்கு தண்டனைகளில் 1178 மரண தண்டனை. 0.65 சதவீதம். இது அரிதிலும் அரிதைவிட அதீதமானதென பலமுறை உச்சநீதிமன்றமே உச்சந்தலையில் கொட்டியது. இறுதியில் 2009ல் சதீஸ்பூசன் பாரியார் 2013ல் சங்கர் கிசன்ராவ் காடே வழக்குகளில் மரண தண்டனை ஒழிப்பு குறித்து ஆராயுமாறு ஆணையத்திற்கு பரிந்துரைத்தது. ஒரு வழியாக 50 ஆண்டுகளாக ஊறவைத்த துணையை மீண்டும் துவைக்கத் துவங்கியது ஆணையம்.

இடையில் குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்த சத்ருகன் சின்கா வழக்கில் 2014 ஜனவரியில் உச்ச நீதிமன்றம் 15 மரண தண்டனைகளை ஆயுள் தண்டனையாக குறைத்தது. கருணை மனுக்கள் மீதான முடிவின் அதீத காலதாமதம் கைதிகளின் அடிப்படை உரிமையை பறிக்கிறது எனப் புதுக்கவிதை எழுதியது. இது ராஜீவ்காந்தி கொலை, தேவேந்திர பால்சிங் புலாலர் வழக்குகளிலும் நீண்டது.

நம் தேச எல்லையில் முன்னுதாரமாக ஆகஸ்ட் 2015 ல் மரண தண்டனை ஒழிப்பு தீர்மானத்தை நிறைவேற்றியது திரிபுரா சட்டமன்றம். 31.07.2015 ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி..ராஜாவும் ஆகஸ்ட் 2015 ல் திமுகவின் கனிமொழியும் மரண தண்டனை ஒழிப்பிற்கான தனிநபர் மசோதாக்களை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

உச்சகட்டமாக கடந்த மாதம் தீவிரவாதம் மற்றும் போர்க் குற்றங்கள் தவிர மற்ற அனைத்திற்கும் மரண தண்டனையை நீக்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளது ஆணையம். இது ஆரத்தழுவி வரவேற்க வேண்டிய அறிக்கை. இந்தியாவின் முகவெட்டுத் தோற்றத்தை மாற்றுகிற முக்கிய முன்நகர்த்தல். ஆனால் முற்றுப்புள்ளிக்கு பதிலாக கமா வைத்துட்டதே !

கமா எதற்கு? முற்றுப்புள்ளியே இலக்கு

மரண தண்டனை ஒழிப்பிற்கு தற்போது இந்தியாவில் வளர்ந்துள்ள சமூக, பொருளாதார, கலாச்சாரம், குறைந்துள்ள கொலைக்குற்றம், 95.7% தவறுதலான மரண தண்டனை என அழுத்தமான காரணங்களை பதித்துள்ள ஆணையம், தீவிரவாத குற்றங்களுக்கு மரண தண்டனை தேவைக்கான காரணத்தை தேசப்பாதுகாப்பு என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துவிடுகிறது.

மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நாடுகளில் தீவிரவாதமே இல்லையா?. தீவிரவாத குற்றத் தீர்ப்புகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதா?. 2002 ல் 33 பேர் இறந்த அக்சர்தாம் கோவில் குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனையாளர்கள் நிரபராதிகளென உச்ச நீதிமன்றம் விடுதலை செய்யவில்லையா? ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைத்து முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டதா? டைகர் மேனனின் சகோதரன் என்பதற்காகவே யாகூப் மேனன் தூக்கிலிடப் படவில்லையா. இப்படியாக தீவிரவாத வழக்குகளிலும் நமது நீதிமுறை தோல்வியடைந்துள்ளது. நிரபராதிகளை மீட்டெடுக்க இயலாத தண்டனையாகத்தான் மரண தண்டனையின் இறுதி மூச்சிருக்கும்.

தங்களது ஜனாதிபதி பதவிக் காலத்தில் K.R. நாரயணன், அப்துல்கலாம் ஆகியோர் எந்தக் கருணை மனுவிலும் முடிவெடுக்காமல் மரண தண்டனைக்கு எதிராக மெளன யுத்தம் புரிந்துள்ளனர். ஒரு படி மேலாக அப்துல் கலாம் அவர்கள் மரண தண்டனை ஒழிப்பை ஆதரித்து ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் 1997 க்கு பிறகு 7 ஆண்டுகளும் 2004ல் தனஞ்செய் சட்டர்ஜி தூக்கிலிடப்பட்ட பிறகு மீண்டும் 8 ஆண்டுகளும் எந்த மரண தண்டனையும் நிறைவேற்றப்படவில்லை. நவம்பர் 2012ல் அஜ்மல்கசாப், பிப்ரவரி 2013ல் அப்சல்குரு, இறுதியாக ஜூலை 2015ல் யாகூப்மேனன் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். கடைசி மூன்றும் தீவரவாத குற்றங்கள். ஆக இந்தியாவில் கடந்த 18 ஆண்டுகளில் நடைமுறையில் தீவிரவாத குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போது புரிகிறதா ஏற்கனவே நடைமுறையில் உள்ளதையே ஆணையம் சுவிகரித்துள்ளதை. அடுத்த முன்னெடுப்பாக ஒட்டு மொத்த ஒழிப்பை ஆதரித்திருந்தால் இந்தியா பட்டாசு வெடித்திருக்கும். இதனை 2வது முறை அலசுவதற்கே 50 ஆண்டுகளைத் தின்றது காலம். முழு ஒழிப்பு இப்போதில்லையெனில் மீண்டும் நூறாண்டுகளை தீனி கேட்கும். அதே சமயம் ஆணையத்தின் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளுமா என்பதே அதன் மதவாதப் பசிதான் முடிவு செய்யும். அதுவரை வாட்ஸ் அப்பில் ஹர ஹர மகாதேவா டயலாக்கை சேர் செய்வோம். இந்தத் தூக்கு மரத்தை எப்போது வேரோடு வெட்டிச் சாய்க்கப் போகிறோமென எவனாவது ஸ்டேட்டஸ் போட்டால் லைக் போடுவோம்.

- மு.ஆனந்தன்