விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்கால் தனது 89வது வயதில் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் நரேந்திர மோடி தனது காலணிகளை கழட்டி வைத்து விட்டு அசோக் சிங்கால் வாழ்ந்த கொள்கைகளை நாமும் பின்பற்றுவோம் என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.

Ashok Singhalஅசோக் சிங்கால் தனது வாழ்நாள் முழுவதும் முஸ்லீம்களுக்கும், கிருஸ்துவர்களுக்கும் எதிராக வெறுப்பு அரசியலை பரப்பி வந்தவர். அதனால் அவரின் கொள்கைகளை பின்பற்றுவோம் என்று இறுதிச் சடங்குகளின் போது கூறியதன் மூலம் சிறுபான்மையினருக்கு எந்த செய்தியை நாட்டின் பிரதமர் என்ற வகையில் கூறுகிறார் என்பது கவனிக்கப்பட வேண்டிய விசயம்.

பொதுவாக இறந்தவரை விமர்சிக்கக் கூடாது என்பது இந்துத்துவவாதிகளின் மரபு. ஆனால் ஒரு நபரின் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளை நிறை மற்றும் குறையுடன் விமர்சனப்பூர்வமாக மதிப்பிடுவதே கம்யூனிஸ்ட்களின் மரபு.

இந்த உயர்ந்த மரபின் வழியே நாம் அவரின் வாழ்வை மதிப்பிடுவோம். கூகுளில் அசோக் சிங்காலின் சிந்தனைகளும் சாதனைகளும்தான் என்ன? என்று தேடினாலே இவைதான் கிட்டும்;

அசோக் சிங்கால் குறித்த செய்திகளின் சில மாதிரிகளைப் பார்த்தாலே அவர் மதவெறியின் முழு பிம்பம் கிடைத்துவிடும். அசோக் சிங்கால் எப்போதும் கூறுவது ஒன்றுதான் “இந்தியாவில் முஸ்லீம்கள் வாழ வேண்டுமானால் அவர்களின் மத வழிபாட்டுத் தலங்களான பாபர் மசூதி உள்ளிட்டு மதுரா மற்றும் காசியில் உள்ளவற்றை இந்துகளுக்கு விட்டுக் கொடுத்துவிட வேண்டும்.”

கடந்த 2013ல் சிங்கால் கூறினார்: “முஸ்லீம்களுக்கு எத்தனை திருமணங்களும் செய்து கொள்ளலாம் என்ற சுதந்திரம் உள்ளது. அதன் மூலம் பல குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும். ராம ஜென்ம பூமி விவகாரத்தில் முடிவை இனியும் நீதிமன்றத்திற்கு விட்டு விட முடியாது. நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினை குறித்து விரைவில் முடிவு எடுக்க வேண்டும்.”

2014ல் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தின்போது சிங்கால் கூறினார்: “இந்துக்கள் 5 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்துக்களை விட அதிகமாக பெருகி வரும் முஸ்லீம்கள் மற்றும் கிருஸ்துவர்களின் மக்கள் தொகையை விட நாம் விஞ்ச முடியும்.”

2014ல் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றவுடன் அவர் கூறினார்: “முஸ்லீம்களுக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்கள் தொடர்ந்து இந்துக்களை எதிர்த்து வருகின்றனர். அவர்கள் எப்படி நீண்ட காலம் உயிர் வாழ முடியும்?”

2014ல் மோடி தலைமையில் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்த பின்னர் அவர் இந்து ராஜ்ஜியம் அமைக்கப்பட்டு விட்டது என்று கூறினார். பின்னர் அவர் நரேந்திர மோடியை முந்தைய மன்னர் ஆட்சியின் போது தில்லியை ஆட்சி செய்த பிருத்திவி சௌகானுடன் ஒப்பிட்டுக் கூறினார். 800 ஆண்டுகளுக்குப் பின்னர் பிருத்திவி சௌகான் கரங்களை விட்டுப் போன ஆட்சி அதிகாரம் இப்போதுதான் மீண்டும் ஓர் இந்துவின் கையில் வந்துள்ளது என்று கூறினார்.

கடந்த ஜூன் 2015ல் அவர் கூறினார்: “வரும் 2020ல் இந்தியா நிச்சயம் ஒரு இந்து தேசமாக ஆகிவிடும். வரும் 2030ல் உலகம் முழுவதும் இந்து உலகமாக மாறி விடும்.”

மதவெறி, சிறுபான்மையினர் மீது வெறுப்பு அரசியல் மற்றும் வெறுப்பு உணர்வு, அதனடிப்படையிலான கொலை வெறி வன்மமும், வன்முறையும் தவிர இந்த மனிதரிடம் என்ன இருந்தது? இந்திய மக்கள் எந்த அடிப்படையிலும் அஞ்சலி செலுத்த தகுதியில்லாத நபரே இவர். வரலாற்றின் குப்பைத் தொட்டி இவருக்காக காத்திருக்கிறது.

- சேது ராமலிங்கம்

Pin It