தாமிரபரணி ஆற்றின் நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் பன்னாட்டு குளிர்பான ஆலையை மூடக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடத்தப்பட்ட காவல்துறையினரின் தாக்குதலில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் உள்பட பலர் கொடுங்காயம் அடைந்துள்ளனர். காவல்துறை யின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

பொதுவாக பொதுமக்கள் குடிநீர் பிரச்சனைக் காகவோ, போக்குவரத்து வசதிகளுக்காகவோ, சுகாதாரச் சீர்கேடுகளுக்காகவோ, குடிமைப் பொருட் களுக்காகவோ போராட்டம் நடத்தினால் அதற்குரிய அதிகாரிகள் தான் வந்து பேசி சமரசம் செய்வார்கள். ஆனால் கடந்த 10-15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் எந்தவிதமான போராட்டங்களாக இருந்தாலும் காவல்துறை மட்டுமே வந்து மக்களிடம் பேசுவதும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையினை நிகழ்த்து வதும் தொடர்கதையாகி வருகிறது. இதை தமிழகத்தை ஆளும்கட்சிகள் கண்டும் காணாமல் இருப்பதால் காவல்துறையின் அத்துமீறல் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தமிழக மக்களின் உரிமைக்காக தமிழகத்தின் தண்ணீர்த் தேவையை கருத்தில் கொண்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பன்னாட்டு குளிர்பான ஆலைகள் முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவேரி உள்பட பலர், காவல்துறையின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது காவல்துறையின் ஆணவப் போக்கை வெளிப்படுத்து கிறது. அறவழியில் போராடும் மக்களின் மீது இது போன்று நடத்தப்படும் தாக்குதல்கள் ஆங்கிலேய வல்லாதிக்க ஆட்சியையே நினைவுபடுத்துகிறது. இந்த அத்துமீறலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதோடு இந்தத் தவறுகள் இனி நடக்காமல் இருக்க தமிழக காவல்துறையும் தமிழக அரசும் முன்வர வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

கோவன் கைது - கழகம் கண்டனம்

‘முழுமையான மதுவிலக்கு’ என்ற கொள்கையில் (அது சாத்தியமல்ல என்பதால்) நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும், ‘டாஸ்மாக்’ கடைகள் உருவாக்கி வரும் சீரழிவை எதிர்த்து கருத்தே தெரிவிக்கக் கூடாது என்ற கருத்துரிமை பறிப்பை வன்மையாகக் கண்டிக்கிறோம். மதுக்கடைகளை எதிர்த்து பாடல்கள் வழியாகப் பிரச்சாரம் செய்த மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சார்ந்த கோவன், தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் (124ஏ) நள்ளிரவில் கைது செய்யப் பட்டுள்ளார். பிரிட்டிஷார் ஆட்சி கால கட்டத்தை இப்போதும் ஆட்சிகள் கையில் எடுப்பது நாட்டுக்கே தலை குனிவு. இந்தச் சட்டம் இந்திய தண்டனைச் சட்டப் புத்தகத்திலிருந்தே நீக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

பா.ஜ.க.வைச் சார்ந்த எச்.ராஜா என்ற பார்ப்பனர் - பெரியார் குறித்தும், வை.கோ குறித்தும், இஸ்லாமியப் பெண்கள் குறித்தும் பேசிய வெறுப்புப் பேச்சுகளுக்காக மாநகர காவல் துறை ஆணையரிடம் பல அமைப்புகள் நடவடிக்கைக் கோரி மனு அளித்தன. சுமார் 8 மாதங் களுக்குப் பிறகுதான் அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்படவும் இல்லை.

தோழர் கோவன் மீது பாய்ந்த இதே பிரிவுக்காக நள்ளிரவில் வீட்டில் புகுந்து வெளியே இழுத்து வரப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். அடக்குமுறை சட்டங்களில்கூட ‘பார்ப்பன’ருக்கு ஒரு நீதி, ‘சூத்திரருக்கு’ ஒரு நீதி என்ற அணுகுமுறைதான்!

அரசுக்கு எதிராக பேசுவதே தேச துரோகம் என்றால், தமிழ் நாட்டில் நடப்பது அவசர நிலை ஆட்சியா? என்று கேட்கிறோம்.

கோவன் மீது தொடரப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற்று விடுதலை செய்ய வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.

Pin It