young muslim man

பீஹார் மாநிலம் ராஞ்சியில் மருத்துவ பயிற்சி பெற்று வருபவர் இஸ்திகார் அலி. இவர் கடந்த ஆகஸ்டு 20ம் தேதி கிடா ரயில் நிலையத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார். இவர் மீது காவல்துறையினர் வைத்த குற்றச்சாட்டு, “நீ ரெயிலில் வெடி பொருட்களை கொண்டு சென்றாய், நீ ஒரு தீவிரவாதி”

இராணுவ உளவுத்துறை, ராஞ்சி காவல்துறை மற்றும் ரெயில்வே காவல்துறை ஆகியோர் இணைந்து இவரை கைது செய்தனர். பர்டுவான் டூ கட்டியா பயணிகள் ரெயிலில் இவர் வெடிபொருட்களை வைத்து பயணித்ததாக கூறுகின்றனர்.

ஆனால், இதற்கான எந்த ஆதாரத்தையும் காவல்துறையினரால் சமர்ப்பிக்க முடியவில்லை. அவருடைய பையில் இருந்தது மருத்துவப் புத்தகம், ஸ்டெட்டஸ்கோப், பிரஸ்ஸர் பார்க்கக்கூடிய மெஷின். ஏதாவது, ஒரு வழியில் அவரை சிக்க வைக்க வேண்டும், தீவிரவாதிகள் உடன் தொடர்பு இருப்பதற்குண்டான தகவல்களை திரட்ட வேண்டும் அல்லது அவரை சித்திரவதை செய்து வாக்குமூலம் பெற வேண்டும் என்றெல்லாம் காவல்துறையினர் முயற்சித்தனர். ஆனால், எதுவும் அவர்களால் செய்ய முடியவில்லை.

இதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட நாட்கள் 57. எந்தவித ஆதாரமுமில்லாமல் 57 நாட்கள் சிறையில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர் இன்திஷார் அலியை. ஆனால், இந்த விஷயத்தை பீஹாரில் எந்த அரசியல் கட்சிகளும் பேசவில்லை.

இஸ்திகார் அலிக்கு சிறப்பு குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. நீதிபதி கூறும்பொழுது, காவல்துறையினா இவரை தீவிரவாதியாக மாற்ற எல்லா முயற்சிகளையும் செய்துள்ளனர். ஆனால், ஒரு ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை என்றார்.

காவல்துறையினர் இன்திஷார் அலியின் தொலைபேசி விபரங்கள், லேப்டாப், மொலைபல் போன் மற்றும் அவருடைய நண்பர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்தி, ஆனால், அவரை குற்றம் சுமத்துவதற்கான எந்தவித துரும்பும் கிடைக்கவில்லை.

உளவுத்துறையினர் அவர் சென்ற பீஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் சென்று விசாரணை செய்தனர். ஆனாலும், அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி இருந்தும் காவல்துறையினர் கூறியது, ‘நீ ஐநூறு கிராம் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்கள் கொண்டு பயணம் செய்தாய்’ என்று. விசாரணையில் நம்பிக்கை இல்லாததால் ராஞ்சி ரெயில்வே போலீஸிடம் இருந்து, சி.ஐ.டி.யிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

சி.ஐ.டி.யின் முதல் விசாரணையில், ஆர்.டி.எக்ஸ். பொருட்களுக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. முழு விசாரணையில்தான் தெரியவரும் என்றது.

காவல்துறையின் ஓட்டைகளை வைத்து, இது பொய்யான முறையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்று கூறி நீதிமன்றம் இஸ்திகார் அலிக்கு ஜாமீன் வழங்கியது. வழக்கு முடியும் வரை அவர் மீது காவல்துறையின் விரல் கூட படக்கூடாது என்று நீதிபதி கூறினார்.

ஜாமீனில் வெளிவந்த இஸ்திகார் அலி கூறும்பொழுது, "நான் 57 நாட்களாக சிறையில் கழித்த சித்திரவதைகளை சொல்ல வார்த்தைகள் இல்லை. காவல்துறையினர் எல்லா வழிகளையும் பயன்படுத்தி, என்னை தீவிரவாதியாக்க முயற்சி செய்தனர். அடிப்படை ஆதாரங்கள் கூட கிடைக்கவில்லை. காவல்துறையினர் எல்லா மக்களின் முன்பும் என்னுடைய பேக்கை சோதனை செய்தனர். ஆனால், அதில் கிடைத்தது செட்டஸ்கோப் மற்றும் ரெத்த அழுத்த மிஷின்தான் இருந்தது.”

"காவல்நிலையத்தில் மோசமான முறையில் நடத்தப்பட்டேன். என்னுடைய கால்களில் லத்தியால் அடித்தனர். அதை, என்னுடைய மெடிக்கல் அறிக்கையே தெளிவாக காட்டுகின்றது. பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்தியது. நான் இப்பொழுது, ஜாமீனில் வந்துள்ளேன். நான் நீதித்துறையை முழுமையாக நம்புகிறேன். நான் நிரபராதி என்று நிரூபிக்கும் வரை, இந்த வழக்கில் போராடுவேன். நான் எந்த தவறும் செய்யாமல் சிறையில் அடைக்கப்பட்டதுபோன்று, இன்னும் நிறைய பேர் சிறையில் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் நாம் உதவி செய்ய வேண்டும்" என்றார்.

மாலேகான், மக்கா மஸ்ஜித், சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் என அனைத்து குண்டுவெடிப்புகளிலும், பல குற்ற வழக்குகளிலும் தொடர்புடைய குற்றவாளிகள் எல்லாம் வெளியில் சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத வழக்குகளில் சிக்க வைப்பதற்குண்டான முயற்சிகளை காவல்துறையினரும் உளவுத்துறையினரும் திட்டமிட்டு செய்து வருகின்றனர். காவல் துறையினர் தரும் செய்திகளை எவ்விதக் கேள்வியுமின்றி, ஊடகங்களும் பிரசுரிக்கின்றன. இதனால்தான் பாதிக்கப்படுவது அப்பாவி முஸ்லிம்கள்தான்..!