சில தினங்களுக்கு முன், ஆன்லைன் மூலம் பொருட்களை விற்கும் அமேசான் என்ற நிறுவனத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் போன்றவை இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தின. அமேசான் நிறுவனம் அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதிவரை தங்கள் நிறுவனம் மூலம் ரூ.299 க்கு மேல் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்குத் தினமும் ஒரு கிலோ தங்கம் பரிசாகப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக நாளேடுகளில் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் தன்னுடைய இணையதளப் பக்கத்தில் இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி தமிழக மக்களுக்குக் கிடையாது (Note: Residents of the state of TamilNadu are not eligible to enter(or) participate in this contest) என்று அறிவித்து இருக்கின்றது.
இது பற்றி அமேசான் நிறுவனம் கூறும்போது, தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தமிழ்நாடு பரிசுத் திட்டங்கள் தடை சட்டம் 1979-ன் படி அங்கு வசிக்கும் மக்கள் இது போன்ற பரிசு குலுக்கலில் பங்கேற்க முடியாது. அதனால் தான் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குலுக்கலில் பங்கேற்கக் கூடாது என விதிமுறை வகுக்கப்பட்டு உள்ளது என்று கூறி உள்ளனர். இதன் மூலம் தாங்கள் சட்டத்துக்கு உட்பட்டுத் தான் தொழில் செய்கின்றோம் என்பதை அவர்கள் நமக்குப் புரிய வைத்திருக்கின்றார்கள்!.
ஆனால் பிரச்சினை என்பது அமேசானா அல்லது ஆன்லைன் வர்த்தகமா என்பதுதான். ஒரு வேளை அவர்கள் ஒரு கிலோ தங்கத்தைப் பரிசாக பெறும் பாக்கியத்தை தமிழ்நாட்டு மக்களுக்கும் கொடுத்துவிட்டால் இவர்கள் போராடாமல் விட்டுவிடுவார்கள். அந்தளவிற்குத்தான் இவர்களின் அரசியல் புரிதல்.
நாம் எதிர்க்க வேண்டியது ஒரு கிலோ தங்கத்தைக் கொடுக்காமல் தமிழ் மக்களை ஏமாற்றும் அமேசானை தமிழ்நாட்டைவிட்டே விரட்டுவோம் என்பதல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு சில்லறை வணிகர்களையும் விழுங்கிக் கொண்டிருக்கும் அனைத்து ஆன்லைன் நிறுவனங்களையும் அடித்து விரட்டுவோம் என்பதாகும். அதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக நாம் செய்யும் நல்ல காரியமாக இருக்கமுடியும்.
இன்று தமிழ்நாட்டு மக்களை கொள்ளையடித்துக் கொண்டு இருப்பது இந்த அமேசான் நிறுவனம் மட்டும் அல்ல, பல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள். இவர்கள் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கின்றன. கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்துவரும் சில்லறை வர்த்தகத்தை கபளிகரம் செய்துகொண்டு இருக்கின்றன. பிளிப்கார்ட், மிந்த்ரா, ஸ்நாப்டீல், நாப்டால், இபே, குவிக்கர், ஜேபாஸ், யெப்மீ, பேடீஎம், ஒஎல்எக்ஸ் போன்றவை அவற்றில் சில.
முதலாளித்துவத்தின் வளர்ச்சி எந்த அளவிற்கு மனிதனின் வேலையை எளிமைப்படுத்துகின்றதோ அந்த அளவிற்கு அது மனித இனத்தை வறுமையின் பிடியில் தள்ளுகின்றது. நாம் இத்தனை நாளாக சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை கடுமையாக எதிர்த்தோம். வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே கடைகளைத் திறந்தால் பல கோடிக்கணக்கான சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என தெருவுக்கு வந்து போராடினோம். அரசு எவன் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன என்று அதையும் கொண்டுவந்தது. பெரும் நகரங்களைத் தவிர வேறு எங்கும் அதனால் இன்று வரையிலும் பெரிய அளவில் காலூன்ற முடியவில்லை. ஆனால் இந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் இன்று கிராமங்கள் வரை ஊடுறுவி ஒட்டுமொத்த வணிக கட்டமைப்பையும் தலைகீழாக புரட்டிப்போட்டு உள்ளன.
இன்று படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரின் கைகளிலும் ஆன்ராய்டு போன்கள் வந்துவிட்டன. வெறும் ஆயிரம் ரூபாய்க்குக்கூட ஆன்ராய்டு போன்கள் சந்தையில் எளிதாகக் கிடைக்கின்றன. ஆன்லைனில் வாங்கினால் விலை குறைவு என்ற மாயை அனைவரின் மனங்களிலும் ஊடகங்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு விட்டது. மேலும் அது ஒரு கெளரவத்தின் அடையாளமாகவும் மாற்றப்பட்டு விட்டது. நாம் ஏதாவது ஒரு பொருளைக் கடையில் வாங்கி வந்தால் அதை ஏன் கடையில் வாங்கினீர்கள்; அதே பொருளை நான் பிளிப்காட்டில் பாதிவிலையில் வாங்கினேன் என்று சில ஹைடெக் அறிவாளிகள் தனது சாமார்த்தியத்தைச் சொல்லி காசுவாங்காமல் பிளிப்காட்டுக்கும் மற்ற பல ஆன்லைன் நிறுவனங்களுக்கும் விளம்பரம் செய்கின்றனர்.
அது போன்றவர்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ பல கோடிக்காணக்கான மக்களின் வாழ்க்கை இதைச் சார்ந்துதான் இருக்கின்றது என்பது. இந்த ஆன்லைன் வர்த்தகத்தால் நகரம் என்ற அமைப்பே இனி இல்லாமல்அழிந்து போவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு இருக்கின்றது. மளிகைச் சாமான்கள் முதல் கார்கள், வீடுகள், செல்போன்கள், பர்னிச்சர் பொருட்கள், மருந்துகள் என அனைத்தையும் ஆன்லைனில் பதிவுசெய்து வாங்கமுடியும் என்றால் அதுவும் கடைகளைவிட விலை மலிவாகக் கிடைக்கும் என்றால் பிறகு இங்கே ஒவ்வொன்றுக்கும் தனித்தனிக் கடைகள் எதற்கு? அனைத்தையும் மூடிவிட்டு அதில் வேலைபார்க்கும் கோடிக்கணக்கான மக்கள் பிச்சை எடுக்கப் போகவேண்டியதுதான்.
நமது நோக்கம் நம்மை நம்பி கடைவைத்த அந்த ஏழை சிறுவணிகர்களைக் காப்பாற்றுவதா? இல்லை அமேசானுடன் சண்டை போட்டு தங்கம் வாங்கித் தருவதா என்பதை ஆழமாக யோசிக்க வேண்டும். இந்த ஆன்லைன் விற்பனை நிறுவனங்களைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தோமானால் இது மிகப்பெரிய பேரழிவுக்கே இட்டுச்செல்லும். 1994-ல் ஜெப்பீஜோஸ் என்பவரால் சியாட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஆன்லைன் புத்தக விற்பனை நிறுவனமான அமேசான் இன்று அனைத்துப் பொருட்களையும் விற்கும் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனமாக மாறியுள்ளது. அமெரிக்காவில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதல் இடத்தில் உள்ளது. 2013-ல் இந்தியாவிற்குள் நுழைந்த அது மெல்ல மெல்ல தன் கொடுங்கரங்களால் அனைத்தையும் கபளிகரம் செய்துகொண்டுள்ளது. தற்போது தன்னால் வாழ்விழந்து தெருவுக்கு வந்த இந்திய வியாபாரிகளுக்குக் கடன் வழங்கும் கந்துவட்டித் தொழிலையும் செய்யப் போவதாக கூறியுள்ளது.
இது போன்ற அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேரடியாக சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட இந்தியாவில் தடை உள்ளது. ஆனால் அவை தன்னை விற்பனையாளர் என்று சொல்லிக் கொள்வதில்லை. வாடிக்கையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாக மட்டுமே தான் இருப்பதாக சொல்லிக் கொள்ளுகின்றது. மிந்தரா, ஸ்நாப்டீல், நாப்டால் போன்றவை இந்திய நிறுவனங்களாக இருந்தாலும் அவையும் அந்நிய மூலதனத்தை அதிகமாகக் கொண்டு இயங்குவதால் அதற்கும் இந்த விதி பொருந்தும். ஆனால் இந்த விதிகள் எல்லாம் அப்பட்டமாக மீறப்படுகின்றன எனத் தெரிந்தே அரசு அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. அரசு அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக எலும்புத்துண்டுகளை அந்த நிறுவனங்கள் வீசி எறிகின்றன. நாய்களுக்கு இடையே தனிப்பட்ட முறையில் விருப்பு வெறுப்புகள் இருந்தாலும் பொறுக்கித் தின்பதில் அவை ஒற்றுமையாகவே செயல்படுகின்றன.
எப்படி வால்மார்ட் சில்லறை வர்த்தகத்தில் இந்தியாவில் நுழைய ஆயிரக்கணக்கான கோடிகளை இங்கு இருக்கும் ஆளும் வர்க்கங்களுக்கு அள்ளிவீசியதோ, அதேபோல அனைத்து ஆன்லைன் விற்பனை நிறுவனங்களும் அரசியல்வாதிகளையும், அரசு அலுவலர்களையும், விலைக்கு வாங்கி வைத்திருக்கின்றன. அமேசான் நிறுவனம் 2013 ஆம் ஆண்டுமட்டும் 34.50 லட்சம் டாலரை தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக மட்டும் செலவிட்டுள்ளது. கடந்த பதிமூன்று ஆண்டுகளில் 2.15 கோடி டாலர்களை இதற்காக செலவிட்டுள்ளது.
எனவே நம்முடைய போராட்டம் என்பது அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிரானதாக இருக்கும் அதே சமயம் அதை கொள்ளையடிக்க அனுமதிக்கும் இந்த அரசுக்கு எதிராகவும் இருக்க வேண்டும். மேலும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படாமல் இது போன்ற நிறுவனங்கள் கொடுக்கும் எச்சில் காசுக்கு ஆசைப்பட்டு அவர்கள் கொடுக்கும் விளம்பரத்தை வெளியிடும் பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்களுக்கு எதிராகவும் நம்முடைய போராட்டம் இருக்க வேண்டும்.
- செ.கார்கி