ஹாலிவுட் சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் மார்ச் 5 அதிகாலை வழங்கப்பட இருக்கிறது. கடந்த முறை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் இந்த வருடமும் தொகுத்து வழங்கவிருக்கிறார். சிறந்த திரைப்பட (Best Motion Picture) விருதுக்காக ஒன்பது படங்கள் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு தனித்தன்மையுடன் விளங்குகின்றன.

three billboards outside ebbing missouri

1. Lady Bird (Greta Gerwig)

ஒரு வளரும் டீனேஜ் பெண்ணான கிறிஸ்டினுக்கும் அவளுடைய சற்று கடினமாக நடந்து கொள்ளும் பாசமிகு தாய்க்கும் இடையே நடக்கும் சில சம்பவங்களைப் படம் பேசுகிறது. Christine தன்னுடைய பெயரையே "Lady Bird" என மாற்றிக்கொண்டு பள்ளியிலும் ரவுடித்தனம் செய்கிறாள். தான் வசிக்கும் வீட்டில் வசதி குறைவாக இருப்பதாக நினைக்கிறாள். அதனால் பள்ளியில் தன்னுடன் படிக்கும் பணக்காரப் பிள்ளைகளுடன் தேடிப்பிடித்து நட்பு வைத்துக் கொள்கிறாள். மறுபுறம் தாயோ பிள்ளைகளுக்குப் போதுமானதை செய்வதற்காகக் கடுமையாக உழைக்கிறார். Christine செய்வது எதையும் அவர் விரும்புவதில்லை. இறுதியில் தாயின் அன்பை Christine உணர்ந்தாளா இல்லையா என்பதே கதை.

இந்தப் படம் வழக்கமான ஒரு ஃபார்முலாவை கொண்டு எடுக்கப்பட்ட படம் அல்ல. ஒரு coming of age ஸ்டோரி. காட்சிகள் வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கும். அதனால் காட்சிகளோடு பயணிப்பது சிறிது கடினமாகவே இருந்தது. பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே உலகில் எந்த மூலையிலும் நடந்து கொண்டிருக்கும் கதையே இது. அமெரிக்காவில் பரவலான கவனத்தைப் பெற்ற படம் இது. தாய் மகளாக நடித்த இருவருமே ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்கள்.

2. Dunkirk( Christopher Nolan)

உலகிலுள்ள அனைத்து ஹாலிவுட் ரசிகர்களுக்கும் பரிச்சயமான இயக்குனரின் படம் இது. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியப் படையின் நெருக்குதலால் ஃப்ரான்ஸ் நாட்டின் Dunkirk எனும் இடத்தில் மூன்று லட்சத்துக்கும் மேலான பிரிட்டிஷ் ஃப்ரான்ஸ் மற்றும் பெல்ஜிய ராணுவ வீரர்கள் தஞ்சமடைகின்றனர். அவர்களை அரசாங்கமும் மக்களும் எப்படி மீட்டனர் என்பதைப் படம் பேசுகிறது. ஒரு ராணுவவீரன், ஒரு படகோட்டி, ஒரு ராணுவவிமான பைலட் ஆகிய மூன்றுபேரின் பார்வையில் கதை பயணிக்கிறது.

Dunkirk பற்றிய வரலாற்றை முழுவதும் தெரிந்து கொண்டவர்களால் மட்டுமே இந்தப் படத்தை முழுமையாக ரசிக்க முடியும். அதனாலேயே படம் பார்க்கும்போது பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படம் முடிந்தபிறகே அந்த வரலாறை தெரிந்து கொள்ள முடிந்தது. எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையை வித்தியாசமாக்க அதை மூன்று கோணங்களில் சொல்லி நோலன் தன்னுடைய திறமையை காட்டியிருந்தார். 900 படகுகளில் மூன்று லட்சம் வீரர்கள் மீட்கப்படுவதை பிரம்மாண்டமாகக் காட்டவேயில்லை. வீரர்கள் மீட்கப்படும் இறுதிக்காட்சி மிகவும் சுமாராக இருந்ததாகத் தோன்றியது. நோலனின் பலவீனமான படம் இதுதான் என ஹாலிவுட் பத்திரிகையாளர்கள் விமர்சிக்கின்றனர்.

3. Darkest Hour (Joe Wright)

நோலனின் Dunkirk க்கும் இந்தத் திரைப்படத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது. டன்கிர்க்கில் ராணுவ வீரர்கள் மாட்டிக்கொண்டிருந்த நேரத்தில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் சந்தித்த இக்கட்டான சூழ்நிலைகளைப் படம் விறுவிறுப்பாகப் பேசுகிறது.

ஆர்ப்பாட்டமான நடிப்பின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் வின்ஸ்டன் சர்ச்சிலாக நடித்த Gary Oldman. படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒருவருடம் சர்ச்சிலைப் பற்றிய புத்தகங்கள் வீடியோக்களின் மூலம் சர்ச்சிலின் மேனரிசங்களை முழுமையாக உள்வாங்கியிருக்கிறார். அதன்பிறகு அவருடைய வீட்டிலும் சர்ச்சிலின் கதாபாத்திரமாகவே நடமாடியிருக்கிறார். படத்தைப் பார்க்கும்போது அவரின் உழைப்பை உணரமுடியும். இந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கரைப் பெறுவதற்கு இவருக்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளது.

இந்தத் திரைப்படத்தின் மீது சோசியல் மீடியாக்களில் பல விமர்சனமும் எழுந்திருக்கிறது. சர்ச்சில் ஒரு முரடர். அவரை கதாநாயகன் போல காட்டியிருப்பதாக பலர் எதிர்ப்பும் தெரிவித்திருக்கின்றனர்.

4. Phantom Thread (Paul Thomas Anderson)

இந்த வருடத்தின் சிறந்த ரொமான்டிக் படம் என இதைச் சொல்லலாம். காதலர்களுக்கிடையேயான மிகவும் நுண்ணிய காதல் உணர்வுகளை காட்சிகளாக வடித்திருந்தார்கள். 1950 களில் லண்டனின் புகழ்பெற்ற உடை அலங்கார நிபுணர் ரேமன்ட். அறுபது வயது நிரம்பியவர். தன்னுடைய தொழிலையும் அதன் வேலைப்பாடு வடிவமைப்புகளுக்கு நடுவே எதையும் அவர் அனுமதிப்பதில்லை. காதல்கள் பல ஏற்பட்டாலும் அது எளிதில் அமைதிகுலையும் அவரது குணத்தால் நிலைப்பதில்லை. அப்படிப்பட்டவரின் வாழ்வில் வருகிறாள் இளம்பெண் அல்மா. அவர்கள் இருவருக்குமான வயது மற்றும் இருவேறுபட்ட குணாதிசயங்கள் அவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் விளைவுகளுமே கதை.

காதலால் தன்னுடைய தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை என புலம்பும் ரேமன்ட்டை அல்மா தன்கட்டுக்குள் வைத்திருக்க பயன்படுத்தும் உத்தி இதுவரை பார்த்திராத சினிமா அனுபவம். அமைதியான நடிப்பில் Daniel Day Lewis அசத்துகிறார். படத்திற்காக அவர் உண்மையான ஒரு உடை அலங்கார நிபுணரிடம் பயிற்சி பெற்றுள்ளார். அதன்பிறகு தன் மனைவிக்கு ஒரு உடையையும் வடிவமைத்து தந்திருக்கிறார்.

மிகவும் எதிர்பார்ப்பில்லாமல் பார்க்க ஆரம்பித்த படம் சட்டென உள்ளிழுத்துக் கொண்டது. சினிமா விரும்பிகள் பார்த்து ரசிக்க வேண்டிய படைப்பு.

5. The Shape Of Water (Guillermo del toro)

1960 களில் கதை நடக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் ஆராய்ச்சிக் கூடத்திற்கு நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய ஒரு உயிரினம் கொண்டுவரப்படுகிறது. அங்கே துப்புரவாளராக வேலை செய்யும் எலிசா ஒரு வாய் பேச முடியாத பெண். அவளுக்கு அந்த விலங்கின் மீது ஒரு பரிவு உண்டாகிறது. பின்பு அந்த பரிவு காதலாகிறாது. அந்த விலங்கை விடுவிக்க முடிவுசெய்கிறாள். ஆனால் அதை அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் கொடூர உயரதிகாரியிடம் சிக்கிக்கொள்ளாமல் செய்ய வேண்டும்.

இது ஒரு தரமான மசாலா படமென்றால் அது மிகையில்லை. எந்தவகை சினிமா விரும்பியையும் முழுமையாக திருப்திப்படுத்தக்கூடிய எளிதான திரைக்கதை. மேக்அப் மற்றும் கலையமைப்பில் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். சிறந்தபடம் சிறந்த நடிகர்கள் உட்பட பதிமூன்று ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.

எலிசாவாக நடித்திருக்கும் Sally Hawkins க்கும் நடிப்பு அரக்கி Fargo புகழ் "Frances Macdormand" க்கும் இடையேதான் சிறந்த நடிகைக்கான போட்டியே. 

6. Call Me By Your Name (Luca Guadagnino)

நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட காதல் படம் இது. 1983 ல் இத்தாலியிலுள்ள ஒரு சிறுநகரம். தாய் தந்தையுடன் வசித்து வருகிறான் எலியோ. பதினேழு வயது. எலியோவின் தந்தைக்கு உதவியாளராக தொழில் கற்க வரும் நபரைப் பார்த்ததும் காதல் கொள்கிறான் எலியோ. அதன்பின் இருவரும் காதலில் திளைக்கிறார்கள். உடலுறவு கொள்கிறார்கள். அவர்கள் காதலில் பிரிந்தார்களா சேர்ந்தார்களா என்பது மீதிக்கதை. இதிலென்ன புதுமை என்றால் எலியோ காதல் கொள்ளும் அந்த நபர் ஒரு ஆண்.

முதல் காதல் ஆணோ பெண்ணோ ஆணோ ஆணோ யாரிருவருக்கிடையில் ஏற்பட்டாலும் உணர்வு ஒன்றுதான் என ஆழமாகப் படம் பேசுகிறது. அந்நியத்தனமான சூழ்நிலைகளைப் படமெடுப்பது பெரிதல்ல. தான் உணராத சூழ்நிலைகளையும் பார்வையாளர் தொடர்புபடுத்திக்கொள்வதுதான் முக்கியம். அது இங்கே சாத்தியமாகிறது.

எலியோ கதாபாத்திரத்தில் நடித்த Timothee calahat படத்திற்கு தேவைப்படும் இத்தாலியன் மொழியையும் பியானோ இசையையும் கற்றுக் கொண்ட பின்பே படத்தில் நடித்துள்ளார்.

ஒரு வித்தியாசமான காதலைப் பேசும் உணர்வுப் பூர்வமான படமே இது. விருது பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

7. The Post (Steven Spielberg)

1955 லிருந்து 1975 வரை இருபது வருடங்கள் வியட்நாம் போர் நடைபெற்றது. அந்தப் போர் சம்மந்தப்பட்ட ரகசிய ஆவணங்களை Daniel ellsberg என்ற வியட்நாம் போரில் அமெரிக்காவின் போக்கை விரும்பாத முன்னாள் ராணுவ வீரர் பத்திரிகைகளிடம் வழங்குகிறார். அதை பிரசுரித்ததால் Washington post பத்திரிகையின் பொறுப்பாளர் Katherine Grahamm(Meryl streep) மற்றும் எடிட்டர் Ben bradlee (Tom hanks) ஆகியோர் நிஜவாழ்வில் சந்தித்த சட்டசிக்கல்களை படம் பேசுகிறது.

அமெரிக்க அதிபராக அப்பொழுது இருந்த நிக்சனை எதிர்த்து பத்திரிகைகள் செய்த கிளர்ச்சி அரசாங்கத்தையே ஆட்டம் காண வைத்திருக்கிறது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் சிறந்த படைப்பு என சொல்ல முடியாவிட்டாலும் ஒரு முறை பார்க்கலாம்.

8. Get Out (Jordan Peele)

அமெரிக்காவில் வெள்ளையர்களிடம் நிலவும் நிறவெறியை த்ரில்லராக எடுத்திருக்கிறார் இயக்குனர் Jordan Peele. கிறிஸ் ஒரு கறுப்பினத்தை சேர்ந்த வாலிபன். அவனுக்கும் ரோஸ் என்ற வெள்ளையினத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் காதல் ஏற்படுகிறது. ஒரு விடுமுறை நாளில் இருவரும் அவளது வீட்டிற்கு விருந்துக்கு செல்கிறார்கள். வெள்ளையர்களுக்கு நடுவே தனிமையாக உணர்கிறான் க்றிஸ். மெல்ல மெல்ல அந்தக் குடும்பத்தின் உண்மை முகம் தெரிய வருகிறது. க்றிஸ் இனி உயிர் பிழைப்பானா என்பதே கேள்விக்குறியாகிறது.

இந்த வருடத்தின் சிறந்த த்ரில்லர் என பலராலும் புகழப்பட்ட படம் இது. வெள்ளையர்களிடம் காணப்படும் நிறவெறியையும், அவர்களில் பலர் இன்றும் கறுப்பர்களை அடிமைகளாகவே பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்பதையும் நேரடியாகவே படம் பேசுகிறது. நான்கு விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது.

9. Three Billboards Outside Ebbing, Missouri (Martin Macdonugh)

இந்தப் பட்டியலில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது. ஒரு கொலை நடந்து மூன்று மாதங்களாகிறது. காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறந்த பெண்ணின் தாய் ஊருக்கு வெளியே மூன்று விளம்பரப் பலகைகளை வாடகைக்கு எடுத்து சில வாசகங்களை அதில் எழுதுகிறார். அந்த வாசகங்களால் காவல்துறைக்கு நெருக்கடி அதிகமாகிறது. அந்த வழக்கை விசாரிக்கும் போலிஸ் அதிகாரியும் நல்லவரே. மூன்று விளம்பரப் பலகைகளினால் அதிகாரத்தைக் கேள்விகேட்கும் அந்த தாய்க்கும் ஊரிலுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும் நடக்கும் போராட்டமே மீதிக் கதை.

படத்தின் எந்தக் காட்சியைப் பற்றி எழுதினாலும் படம் பார்க்கும் அனுபவத்தை அது மாற்றி விடும். இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் யாருமே கெட்டவர்கள் இல்லை. அனைவருமே அன்பானவர்கள்தான். காவல்துறை விசாரணையின் போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போலிஸ் அதிகாரியின் ரத்தம் கதாநாயகியின் முகத்தில் தெறித்ததும் அதுவரை கோவத்துடன் பேசிக்கொண்டிருந்த இருவரும் அக்கறையுடன் பேச ஆரம்பிக்கும் காட்சியே அதற்கு சான்று.

தாயாக நடித்திருக்கும் Frances Macdormand ஒருநடிப்பு அரக்கி. பிரபல இயக்குனர் ஜோயல் கோயனின் மனைவி. படம் பார்த்து முடித்த பின்பு நீங்கள் இதுவரைப் பார்த்த சினிமாக்களில் முக்கியமான சினிமாவாக இது இருக்கும். சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது பெறுவதற்கு பெரும் வாய்ப்பை பெற்ற படம். 

இந்த ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒன்பது படங்களில் ஏழு படங்கள் பீரியட் சினிமாக்கள் அல்லது வரலாற்று உண்மைகளைத் தழுவி எடுக்கப்பட்ட படங்கள். இரண்டு படங்கள் மட்டுமே சமகாலத் திரைப்படங்கள். இந்தத் திரைப்படங்களில் ஆஸ்கர் விருதை வெல்லப் போகும் திரைப்படம் எது என மார்ச் 5 அதிகாலை தெரிந்துவிடும்.

- சாண்டில்யன் ராஜூ

Pin It