தமிழகத்தில் தேர்தலுக்காக இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற இந்நேரத்தில் அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தலுக்கான களத்தில் பரபரப்பாக வேலைசெய்து கொண்டிருக்கின்றீர்கள். அவற்றில், கட்சி வேறுபாடு இல்லாமல் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி கொண்டிருக்கின்றீர்கள். இவற்றில், மது ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, மதவாதம் ஒழிப்பு, இலவசங்கள் ஒழிப்பு, லஞ்சம் ஒழிப்பு, தனியார்மய, தாராளமய ஒழிப்பு போன்ற முழக்கங்களோடு தேர்தலை சந்திக்க இருக்கின்றீர்கள். இத்தகைய பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்பட வேண்டியதுதான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், நமது தேசத்தில் சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை, தீர்க்கப்படாமல் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டு வரும் ஒரு சில பிரச்சனைகளில் விவசாயிகளின் பிரச்சினையும் ஒன்றாகும். நமது தேசமானது பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி மற்றும் நீலப் புரட்சி என பல புரட்சிகளை நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. ஆனால், அத்தகைய புரட்சியெல்லாம் யாருக்காக எனத் தெரியவில்லை. ஏனெனில், அதன் பயனானது, விவசாயத்தில் ஈடுபடாத மக்களை சென்றடைந்திருக்கிறதே, தவிர விவசாய மக்களான எங்களை சென்றடையவில்லை.
அரசியல் தலைவர்களான, நீங்கள் விவசாயிகளுக்காக பல போராட்டங்களை வெற்றிகரமாக வழி நடத்திக்காட்டி இருக்கிறீர்கள், அதனை வரவேற்கிறோம், ஆனால், தாங்கள் நடத்திய போராட்டங்கள், கொடுத்த குரல்கள் எல்லாம், விவசாயம் சார்ந்த, மாநிலத்துக்கான நீர் பங்கீடு பிரச்சனையாகவும், விவசாய நிலங்களை எல்லாம் அழித்து தொழிற்சாலைகளை உருவாக்குவதை தடுப்பதற்காகவும், அணைக்கட்டினால் ஏற்படும் பாதிப்புக்காகவும், விவசாய நிலங்களில் எண்ணெய் எடுப்பதைத் தடுக்கவும், மீத்தேன், ஷெல் எண்ணெய் மற்றும் வாயு எடுப்பதை தடுக்கவும், வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் கேட்பதற்காகவும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவும், கரும்புக்கான கொள்முதல் விலையையும், நெல்லுக்கான மற்றும் இதர வேளாண் பொருள்களுக்கான கொள்முதல் விலையை அதிகரிக்கவும் என இதைப்போன்ற விவசாய சார்பு போராட்டங்களாகவே இருக்கின்றன.
விவசாயிகளாகிய எங்களின் பிரச்சனையானது மேற்கண்டவையும்தான். ஆனால், மிக முக்கியமான பிரச்சனை என்பது, குண்டூசி முதல் மொபைல் வரை அனைத்து பொருளுக்கும் அதனை உருவாக்குபவரே விலையை நிர்ணயம் செய்யும் நிலையில், நாங்கள் விளைவித்த எங்கள் விவசாயப் பொருட்களுக்கு எங்களால் விலையை நிர்ணயம் செய்ய முடியாமல் இருப்பதுதான். இத்தகைய கோரிக்கையை வைத்து மாநில மற்றும் நாடு தழுவிய எந்தவிதப் போராட்டமும் எங்களுக்குத் தெரிந்து இதுவரை ஒருங்கிணைக்கப்படவில்லை.
எங்களின் இத்தகைய கோரிக்கைக்கு எதிராக வைக்கப்படும் மிகமுக்கியமான கேள்வியானது, விவசாயியே, விளைபொருள்களுக்கு விலையை நிர்ணயம் செய்யும்பட்சத்தில் அதன் தாக்கமானது சமூகத்தின் நடுத்தர வர்க்கத்துக்கும், வறுமைகோட்டில் இருக்கும் வர்க்கத்துக்கும் மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கும். எப்படியெனில், விவசாயியே விலையை நிர்ணயிக்கும்போது, சந்தையில் அத்தியாவசியப் பொருள்களின் விலையானது மிகக் கடுமையாக உயர்ந்து, சாமானிய மனிதனின் வாங்கும் சக்தியானது குறைந்து, அதனால் சமுகத்தில் வறுமையானது மிகக் கடுமையாக வளரும் என்ற காரணமும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, விவசாயி தனது பொருளுக்கு விலையை நிர்ணயம் செய்யும் உரிமையிலிருந்து விலக்கி வைப்பதோடு, அதற்கான மாற்று நிவாரணமாக, விவசாயிக்கு மானியம் கொடுத்து காத்துக் கொள்ளலாம் என்ற யோசனையையே முன்வைக்கின்றீர்கள்.
நமது தேசத்தில் விவசாயிக்கு கொடுக்கும் மானியமானது எந்தவிதத்திலும் விவசாயிக்கு சிறந்த நிவாரணமாக அமைவதில்லை என்பதைவிட, அரசு விவசாயிக்கு மானியம் கொடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்பதைவிட, விவசாயி ஆகிய நாங்கள்தான் அரசுக்கு மானியம் கொடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதே நிதர்சனம். இத்தகைய உயிராதாரமான பிரச்சனைக்காக நாடு தழுவிய போராட்டம் ஒருங்கிணைக்கப்படாமல், மாறாக விவசாயம் சார்ந்த சார்புப் பிரச்சனைக்கு மட்டும் குரல் கொடுப்பதால்தான், எங்களின் பிரச்சனையானது, தீர்க்கப்படாமல் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுவரும் பிரச்சனையாக எண்ணத் தோன்றுகிறது.
நமது தேசத்தில் 70 சதவிகிதத்துக்கு மேல் விவசாயிகள்தான், எங்களின் வாக்குவங்கிதான் மிகப் பெரியது. ஆனாலும், எங்களால், எங்களது பிரச்சனையை தீர்த்துக் கொள்ளும் அளவிற்கு அரசியல் பலமோ, பொருளாதார பலமோ இல்லாமல், எங்களின் போராட்டமானது நாங்களே தற்கொலை செய்து கொள்வதாகத்தான் சுருக்கி வைக்கப்பட்டிருக்கிறது, இந்தியாவில் காலங்காலமாக தொடர்ந்து நடக்கும் மிகப் பெரிய போராட்டமானது எங்களின் தற்கொலைப் போராட்டம்தான். அத்தகைய போராட்டமானது இன்று அதிதீவிரமாக எழுச்சிபெற்று அரைமணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறது.
நாட்டை வழிநடத்தும், அணு ஆயுதம் வைத்திருக்கும், நிலாவுக்கும், செவ்வாய்க்கும் செயற்கைக்கோள் விடும், டிஜிட்டல் புரட்சி பேசிக்கொண்டு வல்லரசு கனவு காணும் இந்த நாட்டால், இதனை ஆளும் அரசியல் தலைவர்களால் ஒரு விவசாயின் பிரச்சனையை தீர்த்துவைக்க முடியாதா? அல்லது தீர்த்துவைக்க விரும்பவில்லையா? அல்லது தீர்க்கும் அளவிற்கு திறமை கிடையாதா? அல்லது தீர்க்கும் அளவிற்கு துணிவு கிடையாதா? என்ற கேள்வி தானாக எழுகிறது. இந்தியாவில் பல செயல்பாடுகளில் முன்னோடியாக திகழும் தமிழ்நாடுதான் இத்தகைய சிக்கலுக்கும் தீர்வுகாண்பதில் முன்னோடியாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதற்கான சூழலும் இப்போது அமைந்துள்ளது. எதிர்கொள்ள இருக்கும் தேர்தலில் "விவசாயியே விலையை நிர்ணயிக்கும் உரிமை" எனற முழக்கமானது தேர்தலின் போக்கை தீர்மானிப்பதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில், சாதிகளின் வாக்குவங்கியை விட விவசாயிகளின் வாக்கு வங்கியானது அதிகம். நடக்க இருக்கும் தேர்தலில், முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படும் தலைவர்கள் இத்தகைய பிரச்சனைக்கு எந்தத் தரப்பினரையும் பாதிக்காமல், நிரந்தரமான தீர்வை முன்வைக்கிறார்களோ, அவர்களுக்கே முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்பட தகுதி இருக்கிறது என்பது ஒரு சாதாரண விவசாயியோட மகனின் குரலாகும்.
- அ.தங்கஅரசன்