கீற்றில் தேட...

போற போக்கைப் பார்த்தால்… “நாம் இருபத்தியோராம் நுற்றாண்டில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?” என்ற ஐயம் வலுத்து வருகிறது. நாட்டில் சாதியின் பெயரால் நடக்கும் கொடூரங்கள் நம்மை அந்தளவுக்குப் சிந்திக்க வைக்கின்றன. செய்தித்தாள்களைப் புரட்டும் ஒவ்வொரு நாளும், சாதி தொடர்பான ஏதாவது ஒரு மனம்துயரும் வகையிலான சம்பவங்கள் நம் சிந்தையை வெதும்ப வைத்து வருகின்றன. கௌரவக் கொலைகள் அவற்றில் ஆகக் கொடூர பாத்திரத்தை வகிக்கின்றன.

ramadoss gk mani anbumaniதான் ஈன்றெடுத்த – ஆசையாய் கொஞ்சி வளர்த்த மகளையே கொலை செய்யும் காட்டுமிராண்டித்தனத்தை கௌரவம் எனக்கருதும் அவலம், பூமிப்பந்தில் வேறெங்கும் நடக்குமா என்பதை எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை.

“காதல் வயப்படுதல் என்ற புத்தியால் தான் ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்கள் தம் சாதி யுவதிகளைத் திருமணம் புரிந்து விடுகின்றனர்” என மிகுந்த கவலையுற்றனர் இராமதாசும், அவரது சகாக்களும். அச்சகாக்கள் காதலுக்கு “நாடகக் காதல்” என்றொரு புதுப்பெயரிட்டுப் பிதற்றினார்கள். பல வகைகள் கொண்ட தமிழ் இலக்கியத்தில், எவ்விடத்திலிருந்து இச்சொல்லை எடுத்தாண்டார்களோ தெரியவில்லை, தமிழ்க் குடிதாங்கியும், அவரது சீடர்களும்!;

"நாடகக் காதல் 18 வயதுடைய பெண்களைத் தான் அதிகம் பிடித்தாட்டுகிறது, எனவே, பெண்களின் மண அகவை வரம்பை உயர்த்த வேண்டும்” என தொடர்ந்து கொத்தரித்தபடி இருந்தார்கள் சாதி ஆதிக்க வெறியர்கள்! அவர்களின் சூதும் வாதும் கொண்ட எண்ணத்தை ஈடேற்றும் வகையில், ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது சென்னை உயர்நீதி மன்ற - மதுரைக் கிளை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்நீதிமன்றம், “தற்போது 18 ஆக இருக்கும் அகவையை 21-ஆக உயர்த்தி, சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்பதாக அரசு பரிசீலிக்க கேட்டுக் கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது!

இத்தீர்ப்பைக் கேட்டவுடன், வானத்துக்கும் பூமிக்கும் எக்காளமிட்டவர்களின் முக பாவத்தைப் பார்த்தே இத்தீர்ப்பு எத்தன்மைது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு வழியாக சிக்கல் ஒய்ந்தது: இனி ஏற்படும் காதலையெல்லாம் அது சாதி கடந்து ஏற்பட்டாலும், அக்காதலையெல்லாம் புரிதலான காதலென அங்கீகரித்து ராமதாசு தலைமையிலான அனைத்து சமூகப் பேரியக்கமே முன்னின்று நடத்தி முடிக்கும் என நினைப்பது மூடத்தனம். ஆஅவர்களின் நோக்கமெல்லாம், "சாதி கடந்து காதலித்து, மணம் புரிந்து, தமிழகத்தில் சாதிக்கலப்பை உண்டாக்கிவிடக் கூடாது" என்பதே. சாதித் தூய்மையை பாதுகாக்கவே இந்தக் காட்டுக் கூச்சல்களும், கழிசடை வாதங்களும்.

தூய தமிழில் தொலைக்காட்சி நடத்திக் கொண்டே- தமிழர் வரலாற்று அறத்தின் அடிப்படையில் சிந்திக்க மறுக்கிறது. “மக்கள் தொலைக்காட்சி” நடத்தும் சமூக விரோதக் கூட்டம்.
பண்டைய தமிழர் திருமண முறைகள், ஆணும், பெண்ணும் மனமொத்து வாழ்விணையர்களாக இல்லறம் ஏற்றல், அங்கே பெற்றோர்கள் பார்த்துத் திருமணம் செய்து வைத்தல் என்ற ஏற்பாடுகள் ஏதுமில்லை.

பொதுவாக, தனிச் சொத்துரிமை –சாதியத்தைப் பாதுகாக்கவும், ஆணாதிக்கச் சிந்தனையை வளர்த்தெடுக்கவுமே இத்தகைய அகமண முறைகள் பயன்பட்டன. இன்று இராமதாசு வகையறாக்களுக்கு சாதித் தூய்மையை வலுவாகப் பாதுகாக்க, அகமண முறை பெரும் கருவியாக உதவுகிறது. எனவே தான் அக்கூட்டம் அதை வலியுறுத்திக் கலகம் புரிந்து சாதித்துவிடத் துடிக்கிறது. மேலும் கடந்த பல்லாண்டுகளாக இருந்து வந்த திருமண வயதில் எந்தச் சிக்கலும் இருந்தாகத் தெரியவில்லை, பொதுமக்களுக்கும் சம்பந்தப்பட்ட பெண்களுக்கும்… ஆக பெண்களின் திருமண வயதில் இல்லை சிக்கல், சாதி வெறியர்களின் வஞ்சக நெஞ்சில் தான் அது இருக்கிறது!.

ஆண்ட பரம்பரைப் போதையிலும், ஆதிக்க சாதி மனோபாவத்திலும் இருக்கும் பிற்படுத்தப்பட்ட சூத்திர சாதியினருக்கும், ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் தனது புழுத்த வாயால் நஞ்சு கக்கியிருக்கிரார் பூரி.சங்கராச்சாரி!

பூரி.சங்கராச்சாரி நிலத்திலானந்தா கடந்த சில நாட்களுக்கு முன் ராஞ்சியில் நடந்த மத நிகழ்வு ஒன்றில், “சூத்திரர்களும் பட்டியலினத்தவர்களும் கோவிலுக்குள் நுழையக்கூடாது” என்று பேசியிருக்கிறார்! அதுவும், ஆளுநர் முன்னிலையில்!! அந்த ஆளுநர், மத்திய பிரதேசத்தின் ராம் நரேன்.

பூரி.சங்கராச்சாரியின் இப்பேச்சை அந்த ஆளுநரும், 'சங்கராச்சாரியின் பேச்சில் குற்றமேதுமில்லை, சாஸ்திரத்தில் உள்ளதைத்தான் எடுத்துக்காட்டி பேசி இருக்கிறார்' என்று ஒத்தூதியிருக்கிறார்!
சனநாயகம் கோலோச்சுவதாகச் சொல்லப்படும் இந்நாட்டில், தீண்டாமையைக் கூட சாஸ்திரத்தின் பேரால் நியாயப்படுத்தும் கொடுஞ் செயலை என்னவென்று சொல்வது?

இப்பேச்சைக் கண்டித்து, தேசிய பழங்குடியின – பட்டியலினத்தவர் ஆணையம், “ஜார்க்கண்ட காவல்துறை பூரி.சங்கராச்சாரியின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்” என உத்தரவிட்டும் - இதுவரை காவல்துறை அது தொடர்பான எந்த நகர்வையும் மேற்கொள்ளவில்லை.

சாதிவெறி ததும்பும் பூரி.சங்கராச்சாரியின் இப்பேச்சுக்கு கண்டனங்கள் பெருகியிருக்க வேண்டும்,. ஆனால், “ஆண்ட பரம்பரை” போதையிலும், இந்துத்துவக் கட்டமைப்பு வழங்கியிருக்கும் சாதியப் படி நிலையின் படி “அவனை விட மேலானவன்” என்கிற கீழான மமதையிலும் இருக்கும் வீணர்களுக்கு இத்தகைய அவமானங்கள் உறைக்காது போலும்! ஆண்ட பரம்பரைப் போதையிலும், இறுமாப்போடு அலையும் பட்டியல் சாதியினருக்கும் இது பொருந்தும்!!

பூரி.சங்கராச்சாரியின் இந்தப் பார்ப்பனத் திமிரெடுத்த ஆணவப் பேச்சுக்கும், இராமதாசின் “காதல் திருமண எதிர்ப்பு” நடவடிக்கையையொட்டிய சித்திரை முழு நிலவுப் பேச்சுக்கும் எந்த வேறுபாடுமில்லை! இவருடைய பேச்சும், செயலும் வருணசாதி கட்டமைப்பைப் பாதுகாக்கும் உள்நோக்கம் கொண்டதே! இருவருக்கும் தனக்குக் கீழான சாதியினரை இழிவாகப் பேசும் நடத்தும் வாய்ப்புகளை இந்துமதமே வழங்கியிருக்கிறது!

வருணசாதிக் கோட்பாட்டின்படி, “தூய்மையானவர்கள் மாத்திரமே கோவிலுக்குள் போக முடியும்” என்கிறார் பூரி சங்கராச்சாரி. ஆக, பூரி சங்கராச்சாரி போன்ற இந்துமதவாதிகள் இன்று வரை இராமதாசு வகையறாக்கள் உள்ளிட்ட பிற்பட்ட சமூகத்தினரை “தூய்மையானவர்கள்” என்று ஏற்றுக் கொள்ளக்கூடத் தயாராக இல்லை. இத்தகைய பார்ப்பனர்களின் நலனுக்கான சாதியக் கட்டமைப்பைத்தான் ‘பிற்பட்ட சமூக’ சூத்திர சாதியினர் தூக்கிச் சுமந்து வருகிறார்கள்!

"உலகத்திலேயே முதல் தரத்தில் செவ்வாய்க்கு ‘மங்கள்யான்’ அனுப்பிய முதல் நாடு இந்தியாதான்” என்ற மாப்பெருமை ஒரு பக்கம்!

இது எவ்வளவு பெரிய முரண்பாடு?!

பாடப்புத்தகங்கள் சொல்கின்றன, “இந்திய வேற்றுமையில் ஒற்றுமை நிரம்பிய நாடென்று”! இல்லை ... இல்லை. பல வகை முரண்பாடுகளின் மொத்த உருவமே இந்தியா! உசிலம்பட்டி தொடங்கி, உத்தரகாண்ட் வரை நடந்தேறும் சாதிவெறி ஆதிக்க வெறியாட்டங்களைத் தடுத்தாள்வது எப்போது?

சாதி கடந்த காதலர்கள், சாதலர்கள் ஆகாமல், தடுத்து – தற்காத்து, வாழ்நெறி - வாழ்விணையர்களாக இச்சமூகம் வரவேற்று மகிழ்வது எப்போது?

இந்து மதம் விதைத்த சாதியப் புற்றுநோயிலிருந்து உழைக்கும் மக்கள் தங்களை முற்றாக விடுவித்துக் கொண்டு போராடும் நாள் எப்போதோ, மனிதம் மலரும் அப்போது!

- தங்க.செங்கதிர்