மாதொருபாகனைப் பற்றி கருத்துக்கேட்ட பொழுது தோழர் சா.பாலமுருகன் 'நீங்கள் நூலை முழுவதும் படியுங்கள் உங்களுக்கே ஒரு கருத்து வரும், பிறகு பேசலாம்' என்றார். இந்தக் கருத்தை சனவரி-21/2025 ஈரோட்டில் நடந்த கருத்தரங்கிலும் பதிவுசெய்தார்.

perumal muruganநானும் மாதொருபாகனைப் படித்தேன். அந்தக் கதைக் களம் முழுவதும் மிகவும் பின் தங்கிய வேளாண் உற்பத்திமுறை இருந்த காலம். பணப்பயிர்கள் வருவதற்கு முன்பு தானியங்களையும், பயிர்வகைகளையும் பயிரிட்டுக்கொண்டு மாடு, ஆடுகளை மேய்த்து வாழ்க்கை நடத்தும் சிறிய நில உடமைக் குடும்பத்தின் சாதிய சமூக மதிப்பீடுகளை பெருமாள்முருகன் முன்வைக்கின்றார். குறிப்பாக நிலம் அடிப்படைச் சொத்தாக உள்ள மக்கள் குறிப்பாக கொங்கு வேளாளர் சமூகத்தின் குழந்தை குறித்தான பார்வையைச் சொல்லுகிறார்.

குழந்தை பெண்களுக்கு இல்லை என்கிறபொழுது கடவுளிடம் வேண்டிப் பார்க்கின்றனர். கிடைக்கவில்லை என்றாகிவிட்டது. அடுத்தது அறிவியல் வகையில் கடந்தகால நடைமுறையின் மூலம் பெறவேண்டும், அதற்கு சாதிய நில உடமை மதிப்பீடுகள் தடையாக உள்ளன. இந்தச் சிக்கலைத் தீர்க்கத்தான் சாமி கொடுத்த குழந்தை என்னும் சமூக அங்கீகாரம், அந்தப் பகுதியில் இருந்ததாக தெய்வத்தன்மையோடு கூறுகிறார்.

இந்தக் கதையில் தனது சாதிய நில உடமை மதிப்பீடுகளைத்தான் காளி உயர்த்திப் பிடிக்கிறான். வேறு ஆண் மூலம் குழந்தை பெரும் நிலை வந்தவுடன் சாகத் துணிகின்றான். ஆனால் குழந்தையும் வேண்டும், அதே நேரம் காளியின் காதலும் வேண்டும் என்ற துடிப்பில் பொன்னா இருக்கிறாள். பெண்களின் கடந்த கால பாலியல் சுதந்திரம் 'நில உடமை' என்ற தனிச்சொத்திற்காக பறிகொடுக்கப்பட்டதை பொன்னாவின் வலி உணர்த்துகிறது.

இந்த இருவருக்கும் உள்ள மனப்போராட்டம் உண்மையில் ஒரு சமூகம் தனிச்சொத்தை உருவாக்கிய பின் ஏற்படுத்திய ஒழுக்க மதிப்பீடுகளையும், கவுண்டர் குடும்பமும் அதற்குள் எப்படி உள்ளது என்றும் பேசுகிறது.

ஆண்களின் தினவுக்காக ஒரு சாதிப்பெண்களையே கோவிலுக்கு என்று பொட்டுக் கட்டிவிட்டு காமக்களியாட்டம் நடத்திய பண்ணையார்கள் இருக்கும் சாதிதானே இந்தக் கவுண்டர் சாதி. ஏதோ இவர்கள் ஏகபத்தினி விரதம் இருப்பவர்கள் போல பாசாங்கு செய்கின்றனர். பெண்களை தங்கள் உடமைப் பொருளாகப் பார்க்கும் ஆணாதிக்கவாதிகள்தான் இவர்கள்.

நில உடமை சமூகத்தின் ஒழுக்கவிதிகளை மதித்து சமூகம் ஏற்படுத்தியுள்ள, அங்கீகரிக்கப்பட்ட மாற்று வழியைச் சொன்னாலே அந்த எழுத்தாளனை முடக்குவோம் என்பது பார்ப்பனிய சாதிய நில உடைமையின் திமிரும் ஆணவமும்தான்.

நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் மண்டையில் பார்ப்பனிய, சாதிய நில உடைமை ஆதிக்க உணர்வுதான் மேலோங்கி இருக்கிறது. மனித சமூக வரலாறு பற்றியோ, மக்களின் குடிஉரிமை பற்றியோ மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை! அவர்கள் அறிந்ததெல்லாம் சம்பளமும், கிம்பலும்தான்.

இந்தப் புத்தகம் ஆதிக்க சக்திகளின் பொய்முகங்களை கிழிக்கிறது. சாமிகிட்ட போனால் குழந்தை கிடைக்காது, சாமி பெயரில் ஆசாமி மூலம் தான் பெறமுடியும் என்ற பொருள்முதல்வாதத்தைப் பேசுகிறது. அதனால்தான் எதிர்க்கிறார்கள்.

முற்போக்கு சக்திகள் அனைவரும் கருத்துரிமையைப் பாதுகாக்க ஒன்றுபட்டு நிற்கவேண்டும்!

Pin It