சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணையத்திற்கு வரும் மனுதாரரான பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் ஏற்கனவே ஒரு துறையில் தகவல் கேட்டு, அதிகாரிகள் கொடுக்காததாலோ, அல்லது போதுமான விபரங்கள் இன்றி பதில் கொடுக்கப்பட்டு உள்ளதாலோ RTI சட்டப்படி இரண்டாவது மேல் அப்பீலுக்கு வருகிறார்கள். ஆனால் இங்கு வருபவர்கள் சென்னை மாநில தகவல் ஆணையத்தின் நடைமுறைகளால் (தகவல் ஆணைய அதிகாரிகள் ஒருமையில் பேசுவது, அலைக்கழிப்பது, நின்று மட்டுமே இருக்க வேண்டும் எனக் கூறி அமர விடாமல் இருப்பது என...) பல்வேறு உளவியில்ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர்.

சென்னை மாநில தகவல் ஆணையத்திற்கு வருகை தரும் மனுதாரர்களை அங்கு உள்ள தகவல் ஆணையர்கள் அமர வைப்பது இல்லை. டெல்லியில் உள்ள மத்திய தகவல் ஆணையத்திற்க்கும், பல்வேறு மாநில தகவல் ஆணையத்திற்கு வருகை தரும் மனுதாரர்களை அங்கு உள்ள தகவல் ஆணையர்கள் அமர வைத்தே விசாரிக்கின்றனர். இப்படி இருக்க, சென்னை மாநில தகவல் ஆணையத்திற்கு வருகை தரும் மனுதாரர்களை, அமர விடாமல் கிரிமினல்கள் போல் நடத்துவதே அங்குள்ள அதிகாரிகள், தகவல் ஆணையர்கள் பின்பற்றும் வழிமுறையாக இருக்கிறது.

உரிமையியல் நீதிமன்றம் போல் நடக்க வேண்டிய சென்னை மாநில தகவல் ஆணையம் அவ்வாறு நடப்பதில்லை. இது உடனடியாக மாற்ற வேண்டிய நடைமுறையாக உள்ளது.

சுயமரியாதைக்காக இயக்கம் கண்டு போராடிய தமிழ்நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் கடைபிடிக்கும் நடைமுறையைக் கடைபிடிக்காமல் இருப்பது மிகவும் கண்டிக்கதக்க செயலாகும். பலமுறை இது பற்றி பல்வேறு சட்ட ஆர்வலர்களும், பொதுமக்களும் சென்னை மாநில தகவல் ஆணையத்தில் நேரடியாகவே மாநில தலைமை தகவல் ஆணையரிடமும், மற்ற தகவல் ஆணையரிடமும் முறையிட்டும், புகார் அனுப்பியும் நிலைமையில் இதுவரை எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

எனவே சட்டத்திற்குப் புறம்பான சென்னை மாநில தகவல் ஆணையத்தின் நடைமுறையை கேள்விக்கு உள்ளாக்கும் வகையிலும், இந்த நடைமுறையை விவாததிற்கு உள்ளாக்கி உடைக்கும் வகையிலும், நேற்று (07-01-2015 ) புதன்கிழமை சென்னை மாநில தகவல் ஆணையத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்த சட்ட பஞ்சாயத்து இயக்கத் தலைவரும், சட்ட ஆர்வலருமான தோழர் சிவ.இளங்கோ அவர்கள் தகவல் ஆணையத்தில் அமர்ந்துதான் பேசுவேன் எனக் கூறி, சென்னை மாநில தகவல் ஆணையத்தின் விசாரணை அலுவலகத்தில் நாற்காலியில் அமர்ந்து தகவல் ஆணையரிடம் தனது தகவல் அறிவது குறித்து முறையிட்டு உள்ளார். அங்கு இருந்த அலுவலர்கள் மனுதாரர் இருக்கையில் அமரக் கூடாது, எழுந்து நின்று மட்டுமே இருக்க வேண்டும் எனக் கூறி உள்ளனர். அதற்கு தோழர் சிவ.இளங்கோ அவர்கள் எழுந்து நின்று மட்டுமே இருக்க வேண்டும் என எவ்வித விதிகளும் சட்டதில் இல்லை எனக் கூறி, எழுந்து நிற்க மறுத்துள்ளார். இதை ஏற்றுக் கொள்ள முடியாத தலைமை தகவல் ஆணையரும், மற்ற தகவல் ஆணையர்களும், தகவல் ஆணைய அலுவலர்களும் அருகே உள்ள வேறு அறைக்கு சென்று விட்டனர். பின்பு தோழர் சிவ.இளங்கோ அவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்து உள்ளனர்.

தகவல் ஆணையத்தில் அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அவதூறாகப் பேசி மிரட்டியதாகவும் கூறி, தேனாம்பேட்டை E3 காவல்நிலையத்தில் Cr.No.:39/2005, 294(b), 353, 506(i) ipc பிரிவுகளில் பொய் வழக்கு பதிவு செய்தது காவல்துறை. தற்போது தோழர் சிவ.இளங்கோ அவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்து உள்ளனர்.

உரிமைகளை மதிக்க வேண்டிய, சட்டத்தைப் பின்பற்றுவதாக சொல்லும் சென்னை மாநில தலைமை தகவல் ஆணையரும், சென்னை மாநில தகவல் ஆணைய அலுவலர்களும் உண்மையில் யாருக்காக, எதன் அடிப்படையில் செயல்படுகிறார்கள் என்ற கேள்வி நம்முன் எழுகிறது.

தமிழக மக்கள் என்ன அடிமைகளா? எந்த மாநிலத்திலும் இல்லாத இந்த அடிமைத்தனமான மனித உரிமை மீறல் இங்கு மட்டும் இவ்வளவு தீவிரமாக ஏன் செயல்படுத்தப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது.

தமிழக மக்கள் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள், தங்கள் உரிமைகளுக்காக, சுயமரியாதைக்காக‌ போராட வரமாட்டார்கள் என்ற தைரியமே, தகவல் ஆணையர்களுக்கு இதுபோன்ற சட்டத்திற்குப் புறம்பான நடைமுறைகளை மேற்கொள்ளத் தூண்டுதலாக இருக்கிறது எனக் கருதுகிறோம்.

இப்படிப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான நடைமுறைகளை உடனடியாக சென்னை மாநில தலைமை தகவல் ஆணையம் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

சென்னை தகவல் ஆணையத்தில் விசாரணைக்கு செல்லும் போது ஒவ்வொருவரும் அமர்ந்து தான் பேசுவோம் என்று தமது உரிமைகளை, சுயமரியாதையை இனி ஆணித்தரமாக கேட்க வேண்டும், சட்டப் புறம்பான நடைமுறையை ஒழிக்கப் போராட வேண்டும்.

தகவல் உரிமை ஆர்வலர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், குடிநாயக‌வாதிகள், அனைத்து அரசியல் இயக்கங்கள், மக்கள் இயக்கங்கள் அனைவரும், சென்னை தகவல் ஆணையர்கள் நடைமுறைப்படுத்தும் இந்த அடிமைத்தன நடைமுறையை எதிர்த்து தனது கண்டனக்குரலை கொடுக்க வேண்டும். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தோழர் சிவ.இளங்கோ அவர்கள் மீது போடப்பட்டு உள்ள பொய் வழக்கை திரும்பப் பெற்று, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் குரல் கொடுத்துப் போராட வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக அரசே!

* கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தோழர் சிவ.இளங்கோ அவர்கள் மீது போடப்பட்டு உள்ள பொய் வழக்கை திரும்பப் பெற்று, உடனடியாக அவரை விடுதலை செய்!

* சென்னை மாநில தகவல் ஆணையத்திற்கு வருகை தரும் மனுதாரர்களை அங்கு உள்ள தகவல் ஆணையர்கள் சுயமரியாதையோடு நடத்த உறுதிப்படுத்தி நடவடிக்கை எடு!!

-‍ முகிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம் & கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம்

Pin It