'விவாதிப்போம் வாருங்கள்' என்று அழைப்பு விடுத்திருக்கிறார் குருமூர்த்தி!  பெரிய மாற்றம்தான். ஏனென்றால் இதுநாள்வரை தொடர்ச்சியாக உண்மையல்லாத ஒன்றைத் தொடர்ந்து பரப்புரை செய்து அதனை மெய்போலக் காட்டியவர்கள் அல்லவா? “நான் இந்துவாகப் பிறந்துவிட நேரிட்டுவிட்டது. ஆனால் இந்துவாகச் சாகமாட்டேன்" என உளம் நொந்து பேசி அவ்வாறே 1956ல் பல்லாயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களுடன் புத்தநெறி ஏற்றார் அண்ணல் அம்பேத்கார். இந்தப் புரிதலோடு விவாதிப்போம் குருமூர்த்தி அவர்களே!

gurumurthyஆக்ராவில் 350 முஸ்லிம்கள் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டது ஆர்எஸ்எஸ்ஸின் சாதுர்யமாம்! சின்ன நடவடிக்கை என்றாலும் சுறுசுறுப்பான - புத்திசாலித்தனமான செயல்பாடாம். அவரே ஒப்புக் கொள்கிறார், 'தினமணி' இதழில் மக்கள் சபையில் விவாதிக்க வேண்டியது தானே!

ஏன் ஓடி ஒளிகின்றார்கள்? இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு தந்திரமான எண்ணமோ குயுக்திமான எண்ணமோ நாடு பிடிக்கும் ஆசையோ இருந்ததில்லையாம்.

இந்து என்ற ஒரு மதமோ, அதனடிப்படையில் ஒரே ஆட்சி இருந்திருந்தால் மட்டுமே நாடு பிடித்தல் - போர் தொடுத்தல் நடக்க வாய்ப்பு உண்டு. அப்படி ஒரு மதமோ அதன் வழி நடக்கும் மன்னர்களும் இல்லாத நிலையில் எப்படி போர் தொடுப்பது? சமஸ்கிருதம் உள்ளிட்ட எந்த ஒரு இந்திய மொழியிலும் இல்லாத சொல் இந்து எனும் சொல். வேதங்களிலோ உபநிடதங்களிலோ ஆரண்யங்களிலோ பிராமண்யங்களிலோ இதிகாசங்களிலோ அல்லது பழமையான எந்த மொழி இலக்கியத்திலும் இல்லாத சொல். இந்த சொல் உருவானதே பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான். அப்படியிருக்க இந்துமதம் ஏது? நாடு ஏது? போர்தான் ஏது?

1799ல் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் முதன்முதலாகத் தொகுத்த உள்நாட்டு நீதி நெறிகளுக்கு 'இந்துச்சட்டம்' எனப் பெயரிட்ட பின்னரே அரசியல் அங்கீகாரம் பெற்ற சொல். இதனைத்தான் காலம் சென்ற சங்கராச்சாரியார் (சந்திரசேகரர்) 'வெள்ளைக்காரன் நமக்குப் பொதுப் பெயர் வைத்தானோ இல்லையோ நாம் பிழைத்தோம்' எனத் தனது `தெய்வத்தின் குரல்’ நூலில் எழுதினார்.

இன்று மட்டுமல்லாமல் எந்தக் காலத்திலும் இந்தியா எனப் பெயர் சூட்டப்பட்ட நிலப்பரப்பிற்கு ஒரு பொதுவான பண்பாடு இருந்ததே கிடையாது! பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சியமைப்பிற்காக செயற்கையாக செய்யப்பட்ட ஓர் ஏற்பாடு இது. குருமூர்த்தி வகையறாவிற்கு தேவைப்படும் பொழுது எல்லாம் எடுத்துவிட அவ்வப்பொழுது புதிய புதிய காரணங்கள். இப்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் தில்லிக் கோட்டையில் இருப்பதால் வேறுபாடு இல்லாத ஒரே மாதிரியான கலாச்சாரத்தை கொண்டவர்கள் என முழக்கம். இதுவே வேற்றுமையில் ஒற்றுமை என்றும் அவ்வப்பொழுது மாற்றியும் முழங்கப்படும்.

வங்கப் பகுதியில் வண்ணமயமான ஆடைகள் அணிந்து வாழ்ந்த இளம்பெண்கள் திருமணமானதும் வெண்மைநிற ஆடைக்கு மாறுவதும், தென்னிந்தியப்பகுதியில் கணவனை இழந்த பெண்கள் வண்ண ஆடைகளை நீக்கி வெண்ணிற ஆடைக்கு மாறுவதும் எப்படிப்பட்ட முரண்! ஆந்திரத்தில் ஒரு திருமண நிகழ்வில் மணமக்களை வாழ்த்தும் நிகழ்ச்சி ஏறத்தாழ தமிழ்நாட்டு கருமாதி போல நெல்லில் பாலை ஊற்றும் நிகழ்ச்சியைக் கண்டு அதிர்ந்து வெளியே வந்தோம்.

தமிழ்நாட்டிலேகூட ஒரே வகை வாழ்க்கை முறை இல்லையே. பதினைந்து நிமிடத்தில் திருமண நிகழ்ச்சியை முடித்துவிடும் இடைநிலைச் சாதியினர், கருக்கலில் சூரிய உதயத்திற்கு முன் தாலி கட்டுவோர், மாலையில் - நள்ளிரவில் என எத்தனை வேறுபாடுகள்.

மகாத்மா காந்தியின் உரையை மேற்கோள் காட்டுகிறார் குருமூர்த்தி. இவர்களுக்குச் சற்றும் குறையாத இந்துதானே அவர். பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டவர்களுக்கு நன்றி கூறும்போது எனது இந்துத்துவ நன்றிகள் என்று தானே காந்தி நன்றி கூறினார்.

ஆனாலும் காந்தியைக் கொலை செய்துவிட்டு, அவரை மேற்கோளும் காட்டுவதற்கு எத்தகைய நெஞ்சுரம் வேண்டும்? சட்டவாதம் பேசி, புள்ளி விபரங்களை யாராலும் அடுக்க முடியும். ஆனாலும் இத்தகையோர்களால் - இவர்களது வெறித்தனமான செயல்பாடுகளினால் நன்மையும் உள்ளது.

தொடர்ந்து ஒடுக்குமுறையாலும், சதிகளாலும் வன்முறைகளாலும் ஒத்த எண்ணங்கொண்டிருந்தாலும் - சிறிய காரணங்களால் இணைய முடியாதிருப்போரின் ஒற்றுமைக்கு இவர்களே வழி வகுப்பார்கள். ஒடுக்கப்பட்டோராய், இடதுசாரிகளாய், மதச்சிறுபான்மையராய், மொழிவழித் தேசியராய் அற்ப காரணங்களால் பிரிந்து கிடப்போரெல்லாம் ஒருங்கிணையவும் ஒன்றுதிரண்டு போராடவும் மறைமுக அழைப்பு விடுக்கும் குருமூர்த்திக்கும் - அவரது மதவெறிக் கட்சிக்கும் நன்றி கூறி ஒருங்கிணைவோம்.

- கே.பசும்பொன்பாண்டியன்

Pin It