நமது சம காலத்தில் வாழ்ந்து, சில நாட்களுக்கு முன்பு நம்மை விட்டுச் சென்ற நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர் என்ற இந்த நூற்றாண்டின் மாமனிதரைப் பற்றி நான் அறிந்த சில விஷயங்களை எழுத விரும்புகிறேன். தமிழக, கர்நாடக மாநிலப் பகுதியில் சிறப்பு அதிரடிப்படை காவல் துறையினரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களில் எனது குடும்பமும் ஒன்று. அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியில் சட்ட ரீதியாக உதவும் நோக்கத்தில் மதுரையைச் சேர்ந்த மக்கள் கண்காணிப்பகம், சோக்கோ அறக்கட்டளை, பழங்குடி மக்கள் சங்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகம், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டன. மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி டிபேன் அவர்களின் உதவியுடன் நான் சட்டக்கல்லூரியில் படிப்பதற்காக மதுரை வந்த போதுதான் நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர் பற்றி சோக்கோ அறக்கட்ளையின் அறங்காவலர் திரு.மகபூப் பாட்சா மூலமாகவும் அவர் எழுதிய நீதி வானில் ஒரு செந்தாரகை என்ற புத்தகத்தின் மூலமாக தெரிந்து கொண்டேன். ஆயிரக்கணக்கில் நீதிபதிகள், அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்கள் இருக்கும் போது வி.ஆர்.கிருஷ்ணய்யர் என்ற மனிதரைப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் காரணங்கள் எண்ணிலடங்காமல் இருக்கின்றன. அதனைப் பற்றிய சில பகிர்வுகள்.

வழக்கறிஞராக...

vr-krishna-iyerவைத்தியநாதபுர ராமய்யர் கிருஷ்ணய்யரின் தந்தையார் ராமய்யா. தனது அயராத உழைப்பினால் புகழ் பெற்ற வழக்கறிஞராக ஜொலித்து வந்தார். சிறு வயதில் தனது தந்தையைப் போன்று வழக்கறிஞராக மாற வேண்டும் என்று கிருஷ்ணய்யர் கன‌வு கண்டார். தனது ஆசையின் படி வழக்கறிஞராக மாறி, ஏழை எளிய மக்களின், விவசாயிகளின், தொழிலாளர்களின் வழக்கறிஞராக கிருஷ்ணய்யர் மாறினார். தன்னுடைய தாயார் நாராயணி அம்மாவிடம் இருந்து பிற உயிர்களிடம் பரிவுடன் இருக்கும் அன்பு, பாசம், கருணை போன்ற உயரிய பண்புகளைப் பெற்றார். தனது தந்தையை விட தாத்தா வெங்கடேஸ்வர அய்யரிடம் இருந்துதான் கிருஷ்ணய்யர் உலக விஷயங்களையும், அறிவையும் கற்றுக்கொண்டார். தலைச்சேரி, கூத்துபறம்பு மற்றும் கோழிக்கோடு பகுதியில் கிருஷ்ணய்யர் புகழ் பெற்ற வழக்கறிஞராக மாறினார். நாம் அறிந்த ஐனநாயகப் போராளி யு.மு. கோபாலனுக்காக ஒரு வழக்கில் ஆஐரான போது, விசாரணை செய்து கொண்டிருந்த நீதிபதி சுந்தரம் அய்யங்கார் உணவு இடைவேளையில் கிருஷ்ணய்யரை அழைத்து, சிறு வயதில் எதற்காக கம்னியூஸ்ட்டுகளுக்கு ஆஐராகி தொழிலையும், பெயரையும் கெடுத்துக் கொள்கிறாய் என்று திட்டியதையும் பொருட்படுத்தாமல் கம்னியூஸ்ட் தோழர்களுக்காக தனது வாதத்தை அரசின் அடக்குமுறைக்கு எதிராக நீதிமன்றத்தில் எடுத்து வைத்தார்.

அரசியல்வாதியாக...

சென்னை மாகாணத்திற்கு உட்பட்ட “கூத்து பரம்பா” என்ற தொகுதியில் இருந்து கம்யூனிஸ்ட் ஆதரவு சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு கிருஷ்ணய்யர் வெற்றி பெற்றார். அதன்பிறகு 1956-ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அமைச்சரவையில் நீர்வளம், சட்டம், நீதி, சிறைத்துறை மற்றும் உள்துறை ஆகிய துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தார். தற்போது உள்ள அமைச்சர்களுக்கு மாற்று முகமாக சைரன் சத்தம் இல்லாமல் சத்தமின்றி மக்களுக்காக சேவை செய்தார். சிறையில் குறை தீர்க்கும் முகாமில், நன்றாக பாடக் கூடிய ஆகாஷ்வானியில் உறுப்பினராக இருந்த சிறைவாசி ஒருவர், தன்னை பாடுவதற்கு அனுமதியளித்தால் தனது மனைவிக்கு அந்த வருமானம் சென்று சேரும் என்று தனது வேதனையைத் தெரிவித்தவுடன், உடனடியாக ஆகாஷ்வானியில் சிறைவாசியை பாட்டு பாடச் செய்து அந்த வருமான‌த்தை சிறைவாசியின் மனைவிக்கு கிடைக்கச் செய்தார். அரசின் பயங்கரவாதத்தினால் கைது செய்யப்பட்டு கண்ணணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு முப்பது நாட்கள் தடுப்பு காவலில் கிருஷ்ணய்யர் இருந்ததால்தான் ஒரு சிறைவாசியின் வலியைப் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த அனுபவம்தான் பின்னாளில் உச்சநீதிமன்ற நீதிபதியாய் இருந்தபொழுது சுனில் பத்ரா வழக்கில், சிறையின் அவலத்தினை எழுதுவதற்கும், மற்றும் கைதிகளுக்கு கைவிலங்கு அணிவிப்பதை மனித உரிமை மீறல் என்று தீர்ப்பு அளிப்பதற்கும் உதவியாக இருந்திருக்கும். இந்திய நீதித்துறை வரலாற்றில் சிறைக்குச் சென்றுவந்த ஒரே உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மட்டுமே.

1957ல் இந்த தேசத்தின் முன்னேற்றத்திற்கு “உழைப்பு தான திட்டத்தைக்” கொண்டுவந்தார். பல்வேறு நீர்பாசனத் திட்டங்கள், மின்சாரத் திட்டங்கள் ஆகியவற்றை மக்களின் வளர்ச்சிக்காக துரிதமாக செயல்படுத்தினார். அரசினை எதிர்த்து மக்கள் போராடும்போது எந்தச் சூழ்நிலையிலும் துப்பாக்கி சூடு நடத்தக்கூடாது என்று தனது காவல்துறை அதிகாரிகளுக்கு அமைச்சராக இருந்தபோது உத்தரவிட்டார். ஏழை எளிய மக்கள், விவசாயிகள், வறுமையால் சிரமப்பட்டு வாழ்க்கையை நடத்துவதைக் கண்டு அவர்களின் வேதனைகளைப் பரிந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவாக “கடன் நிவாரணச் சட்டத்தை” இயற்றினார். நாட்டிலேயே வரதட்சணை கொடுமையை ஒழிப்பதற்கு முதல் முறையாக “வரதட்சணை ஒழிப்பு மசோதா 1957” சட்டமன்றத்தில் தாக்கல் செய்த பெருமையும் கிருஷ்ணய்யருக்கு உண்டு.

தனது அரசியல் பயணத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் சிறையில் உள்ள கைதிகளுக்கு சீர்திருத்தத்தினையும் ஏற்படுத்தினார். இந்தியாவின் முதல் பிரதமரான ஐவகர்லால் நேரு அவர்கள் கிருஷ்ணய்யருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தபோதும் மக்களிடம் இவருக்கு இருந்த செல்வாக்கினால் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

1965ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்றபோது மீண்டும் அரசியலில் இருந்து விலகி வழக்கறிஞராக பணியாற்றினார். 1968ல் கேரள உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உயர்நீதிமன்ற நீதிபதியான பின்பு, உதவியாளர் வெள்ளிச் செங்கோலை கொண்டு செல்லும் காலனி ஆதிக்கப் பழக்கத்தினை ஒழித்தார். உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும்போதே மத்திய சட்டக் கமிஷன் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஷரத்து 39-யு-ன் கீழ் பாராளுமன்றம் இலவச சட்ட உதவியை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக ஏற்படுத்துவதற்கு முன்பே இலவச சட்ட உதவி பற்றிய அறிக்கையை மத்திய சட்டக் கமிஷன் உறுப்பினராக இருந்தபோது மக்களின் நலனுக்காக உருவாக்கியவர். அதன்பிறகு நாடெங்கிலும் கீழமை நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றம்வரை இலவச சட்ட உதவி பெறுவது ஏழை எளியவர்களின் உரிமையாக மாறியது.

1972ல் கிருஷ்ணய்யர் தலைமையில் இலவச சட்ட உதவி தொடர்பாக குழு அமைக்கப்பட்டு அவரின் கடுமையான முயற்சியினால் 1976ல் தமிழ்நாடு சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. மோசமாக‌ தொழில் நடத்தியதன் காரணமாக, வழக்கறிஞர் தொழில் செய்வதற்கு வி.சி.ரங்கச்சாரி என்ற வழக்கறிஞருக்கு இந்திய வழக்கறிஞர் கவுன்சில் மேல்முறையீட்டில் ஒர் ஆண்டு தண்டனை விதித்தது. இவ்வழக்கினை விசாரித்த கிருஷ்ணய்யர் மேற்படி வி.சி.ரங்கச்சாரியை ஒர் ஆண்டு தமிழக சட்ட உதவி ஆலோசனை கழகத்தில் பணிசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன் மூலம் ஒரு வழக்கறிஞர் வாழ்க்கையும் காப்பாற்றப்பட்டது; சட்ட உதவி இயக்கத்தில் பணியாற்றுவதற்கு ஒரு வழக்கறிஞரும் கிடைத்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக...

அப்போதைய இந்திராகாந்தி அரசாங்கம் மற்றும் மோகன்குமாரமங்கலம், கிருஷ்ணய்யரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க முடிவு எடுத்தபோது அதனை அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் கிருஷ்ணய்யரை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கினால் உச்ச நீதிமன்றத்தின் மாண்பு சீர்குலைத்துவிடும் என்று கூறி நிராகரித்தார். அதன்பிறகு 17.07.1973-ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். அதேநாளில் கிருஷ்ணய்யருடன் ஒத்த சிந்தனையுடைய நீதிநாயகம் பி.என்.பகவதி அவர்களும் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆனபின்பு மிகப்பெரிய துயரத்தை கிருஷ்ணய்யர் சந்திக்க நேரிட்டார். தன்னுடன் 33 ஆண்டுகள் மூச்சு காற்றாக விளங்கிய கிருஷ்ணய்யரின் மனைவி சாரதா அம்மையார் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவருடைய இறப்பிற்குப் பிறகு மரணம் ஒருபோதும் என் மனைவியின் நினைவுகளை அழித்துவிடாது என்று சொல்லி கண்ணீர்விட்டு அழுதார். தனது மனைவியை நினைத்து நினைத்து அழுது தனிமையில் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக எந்த ஒரு குடிமகனும் வழக்கு தொடுக்கலாம் என்ற நிலையை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நீதிபதி கிருஷ்ணய்யர் அவர்களும் பகவதி அவர்களும் பொதுநல வழக்காடுதல் என்ற புதிய முறையை நீதித்துறை வரலாற்றில் புகுத்தி சாதனை படைத்தார்கள். நீதிமன்றத்தின் ஒரு தனி நீதிபதிக்கு எழுதக்கூடிய கடிதங்களை ரிட் எனப்படும் நீதிபேராணை மனுக்களாக மாற்றி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்ற முறையையும் முதல் முதலாக தோற்றுவித்தார். இதற்கு சிறையில் இருந்து எழுதப்பட்ட சுனில்பாத்ரா வழக்கே சான்றாகும்.

கிருஷ்ணய்யரைப் பொருத்தவரை குற்றவாளிகளை ஒழிப்பதைவிட குற்றங்களை ஒழிப்பதே ஒரு சமூகத்தின் நாகரீக வளர்ச்சி என்று நினைத்தார். சிறையில் உள்ள விசாரணைக் கைதிகள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது மற்ற பொது மக்களின் முன்னிலையில் அவமானப்படுத்தப்படுவதை மனித உரிமை மீறலாகக் கருதி கைதிகளுக்கு நீதிமன்றத்தின் உரிய அனுமதி இல்லாமல் கைவிலங்கை மாட்டக்கூடாது என்று பிரேம்சந்த் வழக்கில் தீர்ப்பளித்தார். கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு, ஜீவனாம்சம் தருவது பற்றியும் அதன் தேவையைப் பற்றியும் விரிவாக தீர்ப்பளித்தார். அதேபோன்று சம்சாசிங் வழக்கு, எஸ்.ஆர்.பொம்மை வழக்கு, இந்திராகாந்தி தேர்தல் வழக்கு போன்றவற்றில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் அமைப்பு சட்ட நுணுக்கத்துடன் தீர்ப்பு எழுதினார். தொழிலாளர்கள் மீது இருந்த பாசத்திற்கு கிருஷ்ணய்யரின் எல்.ஐ.சி. ஊழியர்களின் போனஸ் சம்மந்தமான வழக்கும், இரயில்வே தொழிலாளர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீடு தீர்ப்புமே சான்றாகும்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த திரு. சின்னப்பரெட்டி தனது புத்தகத்தில் கிருஷ்ணய்யர் பற்றி சொல்லும்போது “நிராயுதபாணிகளுக்காக துடிக்கும் ஓர் இதயம்” என்று பெருமையாகப் பதிவு செய்துள்ளார். சென்னை கிரிக்கெட் கிளப் ஒன்றில் வேட்டி சட்டை அணிந்துகொண்டு சிறப்பு விருந்தினராக சென்றபோது அங்கிருந்த நபர்களால் அவமானப்படுத்தப்பட்டார். உடனடியாக அங்கிருந்த பதிவேட்டில் பின்வருமாறு எழுதினார். “கிரிக்கெட் கிளப்பில் விருந்து உண்ணாமல் சுயமரியாதை உள்ள பெருமைக்குரிய இந்தியனாக திரும்பச் செல்கிறேன்” என்று பதிவு செய்தார்.

ரத்தலம் முனிசிபாலிட்டி வழக்கில் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து கிருஷ்ணய்யர் எழுதிய தீர்ப்பு சுற்றுச்சூழல் பற்றிய அரசிற்கு கொடுத்த கட்டளைகளே அவர் பொது நீதியை உயர்த்திப் பிடித்ததற்கு மிகப்பெரிய சான்று. மோதிராம் வழக்கில் பிணை கொடுக்க முடியாமல் சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான சிறைவாசிகளின் கஷ்டத்தைப் போக்கி, பிணையில் வருவதற்கு வழிவகைகளை செய்தார். ஒரு தந்தியை கேப்பியஸ் கார்ப்பஸ் மனுவாக மாற்றிய மனித உரிமை சட்டவியல் பிதாமகன் கிருஷ்ணய்யர். ஒரு தனிமனிதரின் சுதந்திரம் போலிசாரால் பறிக்கப்படும்போது நீதிமன்றம் அதனை குறித்த காலத்தில் விசாரிக்கவில்லை என்றால், அது பலரது சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று தனது தீர்ப்பில் எழுதினார்.

மனிதநேய பண்பாளர்

இந்திய அரசின் அடிப்படை அமைப்புகளான சட்டம், நீதி மற்றும் நிர்வாகம் ஆகிய மூன்று துறைகளிலும் தன்னுடைய ஆளுமையை மனித உரிமைகளுக்காக முழுமையாக அர்பணித்த மாமனிதர். தன்னுடைய நூறாவது வயதிலும் அணுசக்தி ஆக்கத்திற்கு உரியது அல்ல; கூடங்குளம் அணு உலையை செயல்பட அனுமதிக்கக் கூடாது என்று பிரதமருக்கும் தமிழக முதல்வருக்கும் கடிதம் எழுதியவர். இடஒதுக்கீடு கொள்கையை சரியான கண்ணோட்டத்தில் அணுகி தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை கிருஷ்ணய்யர் வலுப்பெறச் செய்தார். வீரப்பன் தேடுதல் வேட்டையில் காவல் துறையினரின் மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, 1996ல் பழங்குடி மக்கள் நல சங்கம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டபோது வழக்கினை நடத்துவதற்கான விதி இல்லை என்று சொல்லப்பட்டபோது, 11.11.1996ல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களுக்கு கிருஷ்ணய்யர் ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தினைப் பெற்ற அப்போதைய தலைமை நீதிபதி கே.ஏ. சாமி அவர்கள் பழங்குடி மக்கள் நல சங்கம் தாக்கல் செய்த மனுவினை, மனித உரிமை நீதிமன்றங்களின் நோக்கம், அதிகார வரம்பு, செயல்பாட்டின் தன்மை ஆகியவை குறித்து திட்டவட்டமாக வரையறுக்க விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். 1997ம் ஆண்டு இவ்வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புதான் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் அதிகார வரம்பு நடைமுறை விதிகள் பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்ககூடியவகையில் அமைந்தது.

தனது 100வது வயதிலும் தூக்கு தண்டனைக்கு தூக்கு அளிக்க வேண்டும் என்றும் தூக்கு தண்டனை வழங்கப்படுதல் மனித உரிமைக்கு எதிரான தீர்ப்பு என்றும் கூறிவந்தார். சுமார் 20 வருடங்கள் சிறையில் வாடும் பேரறிவாளனை விடுவிக்க அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு அப்போதைய முதல்வருக்கும், ஆளுநருக்கும் கடிதங்களை எழுதினார். தன்னுடைய நீண்ட வாழ்க்கையில் தனது திறமைகளை மனித உரிமைகளுக்காக, உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்களுக்காக, தலித்துகளுக்காக, சிறுபான்மையினர்களின் துயரம் நீக்குவதற்காக‌ தன்னை அர்பணித்து கொண்டார். தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் குடிப்பழக்கத்தின் சீரழிவை ஒழித்து அரிசியல் அமைப்பு சட்டம் சரத்து 47-ல் சொல்லுகிற விஷயத்தை அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்று தனது தொடர்ச்சியான கட்டுரைகள் மற்றும் கடிதங்கள் மூலம் வலியுறுத்தி வந்தார். ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் பல்வேறு புத்தகங்களையும் இந்த சமூதாய நலனுக்காக பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார்.

கிருஷ்ணய்யரின் ஆங்கில மொழி ஆளுமையை ஆராய்ச்சி செய்தால் நூற்றுக்கணக்கானோர் முனைவர் பட்டம் பெறும் அளவிற்கு அவரின் மொழியின் நடை, வார்த்தைகள் வியப்பிற்குரியது. பணி ஓய்வு பெற்ற பின்பு சுமார் 35 ஆண்டுகால அரசியலற்ற பொது சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட கிருஷ்ணய்யருக்கு பத்ம விபூசன் விருது மட்டும் கொடுத்தது ஈடாகாது. அதற்கு மேலாக இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை கிருஷ்ணய்யருக்கு வழங்கி நாம் பெருமை அடைய வேண்டும்.

- இரா.கருணாநிதி, வழக்கறிஞர், மதுரை உயர்நீதிமன்றக் கிளை