மத்திய புலணாய்வு அமைப்பானது சமீபத்தில் பாரத பிரதமருக்கு அளித்த அறிக்கையில் வெளிநாட்டிலிருந்து நிதி உதவி பெறும் சில தன்னார்வ தொண்டு நிறுவன‌ங்கள் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் அந்த அமைப்புகளின் வரிசையில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பி.யு.சி.எல்)உள்ளிட்டவை இருப்பதாகவும் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

binayak sen 400இந்த அறிக்கை விசமத்தனமானதும், கண்டிக்கத்தக்கதும், சனநாயக சக்திகளின் குரல் வளையினை நசுக்க அரசு மேற்கொள்ளத் துவங்கியுள்ள ஒரு காழ்ப்புணர்வு கொண்ட திட்டமிட்ட தாக்குதலாகவும் மக்கள் சிவில் உரிமைக்கழகம் கருதுகின்றது.

மக்கள் சிவில் உரிமைக்கழகம் எந்த நிறுவனத்திடமிருந்தோ அல்லது வெளிநாட்டிலிருந்தோ நிதி பெறுவதில்லை என்பதை அதன் கொள்கையாக கொண்டுள்ளது. இதன் அமைப்பு, செயல்பாடு முழுதும் அதன் உறுப்பினர் மற்றும் ஆர்வலர்கள் தரும் நன்கொடை வழியே நடைபெறுகின்றது. இந்த நிதி உதவிகூட ஒரு சில ஆயிரங்கள் என்ற எண்ணிக்கையினை மீறியதில்லை.

இதன் நிறுவனரான விடுதலைப் போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயண‌ன் இந்த நிதிக் கொள்கையினை கடுமையாக இந்த அமைப்பு கடைபிடிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை காட்டிச் சென்றுள்ளார். அதன் ஒரு பகுதியாக சங்கம் அல்லது அமைப்புக்கான பதிவு செய்தல் என்ற வழி முறைகளின் அடிப்படையில் கூட கொள்கையளவில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் தன்னை பதிவு செய்து கொள்ளவில்லை.

கடந்த காலத்தின் அர்ப்பணிப்புள்ள தலைமையும் அதன் செயல்பாட்டாளர்களும் இந்த நாட்டின் சனநாயகப் பண்புகளை பாதுகாக்க பல்வேறு தளங்களில் இதன் செயல்பாடுகளை வளர்த்துள்ளனர். ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய பழங்குடி மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட பல்வேறு விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதார சனநாயக உரிமைகளை பாதுகாக்க அம் மக்களின் குரலாய் மக்கள் சிவில் உரிமைக்கழகம் நாடு முழுதும் போராடி வந்துள்ளது.

இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாகவே சத்தீஸ்கர் மாநிலத்தில் டாக்டர் பினாயக் சென் மற்றும் உத்திரப் பிரதேசத்தில் கவிஞர் சீமா ஆசாத் உள்ளிட்ட பல இதன் செயல்பாட்டாளர்கள் சிறை உள்ளிட்ட இடர்களை எதிர்கொண்டு வந்திருக்கின்றார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நக்சல்பாரி அமைப்புகளின் வெகு சன இயக்கங்களின் வரிசையில் மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் பெயரினையும் இணைத்து மத்திய உள் துறை செய்தி வெளியிட்டதை நாடு எதிர் கொண்டது. ஆக தொடர்ந்து சனநாயக பண்பாட்டினைப் பாதுகாக்க போராடும் மக்கள் இயக்கங்களை கொச்சைப்படுத்தி அதன் செயல்பாடுகளை மட்டுப்படுத்த முயற்சிக்கும் இந்த போக்கைத் தொடர்ந்து அரசு கையாள்கின்றது.

இந்திய அரசியலைமைப்புச் சட்டம் வழி காட்டும் பொது சமுகத்தின் பயன்பாட்டுக்காக இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கொள்கைக்கு மாறாக அரசுகள் பன்னாட்டுக் கொள்ளைக்கு கதவுகளைத் திறந்த பின்பு இயற்கை வளங்களிலிருந்து மக்கள் விரட்ட‌ப்படுவதே அரசின் முக்கிய பொருளாதாரக் கொள்கையாகிவிட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் குரல் எழுப்பும் சனநயாக இயக்கங்களை தீவிரவாதிகள் அல்லது வெளி நாட்டுக் கைக்கூலிகள் என இழிவு படுத்தும் செயல் அரச வன்முறையின் ஒரு வடிவம்.

எண்ணிக்கையில் சிலராக உள்ள இந்த சமூக சனநாயக அமைப்புகளின் செயல்பாடு பல சமயம் சமூகத்தின் மனசாட்சியினை எழுப்பியுள்ளது. எனவே அரசு இந்த சனநாயக செயல்பாடுகளை பெரும் அச்சுருத்தல் நிகழ்வாகப் பார்க்கின்றது. இந்தியாவில் வெளிநாட்டு நிதி பெறும் பட்டியலில் இந்துத்துவ அமைப்புக்கள் பல உள்ளன‌. இந்த நிதி உதவி கூட நிதி பெறும் அமைப்புகளுக்கு உள் துறையின் அனுமதியுடன் வரைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இவை ஆட்சியாளர்களுக்கு பிரச்சனையில்லை. ஆக அரசின் கொள்கைகளுக்கு மாறாக மாற்றுக்கருத்து கொண்டோரை வாய் மூடச் செய்துவிடும் ஒரு செயல்பாடாகவே சனநாயகத் தொண்டு அமைப்புகளின் மீதான இந்தத் தாக்குதல் அமைந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

ச.பாலமுருகன், பொதுச் செயலர், மக்கள் சிவில் உரிமைக்கழகம்

பேரா.சரஸ்வதி, தலைவர், மக்கள் சிவில் உரிமைக்கழகம், தமிழ்நாடு

Pin It