கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பாகம் 1: குண்டு வெடிப்பு அரசியலும் மத்திய தர வர்க்க மனநிலையும்

பாகம் 2

இந்த பூமியில் ஊடகங்களே மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனங்களாகும். அப்பாவிகளை குற்றவாளிகளாகவும், குற்றவாளிகளை அப்பாவிகளாகவும் சித்தரிக்கும் சக்தி ஊடகங்களுக்கு உள்ளது. ஏனெனில் மக்களின் மனதை ஊடகங்கள் தான் ஆள்கின்றன. - மால்கம் X

ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பில் இறந்த அந்த இளம் பெண், தற்கொலைத் தாக்குதலை நடத்தி தானே உயிரிழந்ததாக தெரிய வருகிறது என வைத்துக் கொள்வோம்...இப்போது ஊடகங்கள் எப்படி எழுதும்?

media 340சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த உடன் ஊடகங்கள் எப்படி செய்தி வெளியிட்டன?

"முதல் சம்பளம் வாங்கிய உற்சாகத்தை பெற்றோருடன் கொண்டாட முடியவில்லை", "திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண் தீவிரவாத தாக்குதலுக்குப் பலி"...

தீவிரவாத தாக்குதலுக்கு என்ன வரையறை? இதனை யார் தீர்மானம் செய்வது? தீவிரவாத தாக்குதல் தான் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது எனில், ஊடகங்கள் அதனை முந்திக் கொண்டு செய்வது ஏன்?

வாசகர்கள்/நேயர்களிடம் இயல்பாக உள்ள கழிவிரக்கத்தை, ஊடகங்கள் தங்களின் 'தீர்மானிக்கப்பட்ட தீர்ப்புகளை' எழுத/காட்சிப்படுத்த பயன்படுத்திக் கொள்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். இப்படிச் சொல்லும் போது, மனித உயிர்களைக் குறித்து கரிசனம் இல்லாதவர்கள் என மொன்னையாக இதற்கு வியாக்கியானம் கொடுக்கப்படலாம்.

இரக்கம் மட்டும் நீதியை நிலைநாட்ட போதுமா? யாருக்கு இல்லை இரக்கம்? ஹிட்லருக்கும், நரேந்திர மோடிக்கும், ராஜபக்சேவுக்கும் இரக்கம் இல்லையென்று சொல்ல முடியுமா? இரக்கம் மட்டுமே நீதி வழங்கப் போதுமானது எனில், நீதிபதிகள் எங்ஙனம் தீர்ப்பு வழங்க முடியும்? இரக்கம் கொண்டு வழங்கப்பட்ட தவறான தீர்ப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்று தந்து விடும் என எந்த சட்டப் புத்தகத்தில் உள்ளது?

இப்பொழுது ஒரு வாதத்திற்கு இப்படி வைத்துக் கொள்வோம் - கற்பனை செய்து பாருங்கள்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பில் இறந்த அந்த இளம் பெண் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், ஊடகங்கள் எப்படி செய்தி வெளியிட்டிருக்கும்?........?!

குற்றச் செயலையொட்டி ஒரு தனி நபரையோ, குழுவையோ குற்றவாளி(கள்) என தீர்மானிக்க, விசாரணை அதிகாரம் பெற்ற காவல்துறைக்கே உரிமை இல்லை. நீதிமன்றம் மட்டுமே தீர்மானிக்க முடியும் எனும் போது, ஊடகங்கள் 'தீர்மானிக்கப்பட்ட தீர்ப்புகளை' ஏன் எழுதுகின்றன?

உலகமயமாக்கல் சூழலில் அனைத்தும் வியாபார பண்டமாகி விட்ட நிலையில், ஊடக துறையும் செய்தி என்ற சரக்கை, வாசகர்/நேயர் என்ற நுகர்வோருக்கு விற்பனை செய்து வருகிறது. சானல் வியாபாரிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டு யார் செய்தியை முந்தி தருவது என்ற நிர்ப்பந்தத்தினால், பரபரப்புக்காக 'தீவிரவாதி' 'பயங்கரவாதி' போன்ற சொற்றொடர்களுடன் செய்தி வெளியிட்டு ரேட்டிங்கை உயர்த்திக் கொள்கின்றன.

Crony Capitalism என அறியப்பட்டுள்ள முதலாளித்துவத்துக்கு சாதகமான ஆட்சி கட்டமைப்பு இந்தியாவில் வலுவூன்றிய நிலையில், முதலாளிகளுக்கும் ஆட்சியாளர்களுக்குமான உறவு இரு வழிப்பாதையாக பரிமாணம் அடைந்துள்ளது. தங்களுக்கு தேவையான காரியங்களை சாதித்துக் கொள்ள பரஸ்பரம் மற்றவரின் உதவியைப் பெற்றுக் கொள்கின்றன.

இப்படித்தான் பெரும் முதலாளிகளின் பிடியில் உள்ள ஊடகங்கள், அடக்குமுறைச் சட்டங்களை உருவாக்க தேவையான சூழலை உருவாக்கிக் கொடுத்து அரசுக்கு உதவுகின்றன. அரசின் அங்கங்களான காவல்துறையும் உளவுத்துறையும் ஊடகங்களோடு தொடர்பில் வந்து, ஆக வேண்டிய காரியங்களைச் சாதித்துக் கொள்கின்றன.

பரபரப்புக்கான தீனியை ஊடகங்களுக்கு காவல்துறை தருகின்றது. செய்தியை முந்திக் கொடுக்கும் வேகத்தில் காவல்துறை கொடுக்கும் செய்தியை சரிபார்க்க தொலைக்காட்சி சானல்களுக்கு நேரம் இருப்பதில்லை. காவல்துறை கொடுக்கும் செய்தியை உறுதி செய்ய கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் நேரத்தில், மற்ற சானல்கள் அந்த செய்தியைக் கொடுத்துவிடும். இதனால் செய்தியை உறுதி செய்ய முயன்ற செய்தியாளரின் வேலை பறிபோக வாய்ப்புள்ளது. மேலும் இப்படிச் செய்யும்பட்சத்தில் காவல்துறையில் உள்ள Source-களின் நல்ல நட்பை இழக்க நேரிடும். Source-களிடம் உறவைப் பேணி வந்தால் மட்டுமே செய்தியைப் பெற முடியும்.

ஊடகங்களை கையாள காவல்துறையும் பழகிக் கொண்டு விட்டது. பழகிக் கொண்டு விட்டது என்பதை விட, ஊடகங்களை 'வழிநடத்த' காவல்துறையில் தனிப் பிரிவே செயல்படுகிறது. வேளச்சேரி என்கவுண்டர் நடந்தவுடன் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அரசியல் காரணங்களுக்காக என்கவுண்டர் நடத்தப்பட்டதா என காவல்துறை அதிகாரியிடம் கேட்கப்பட்டது. என்கவுண்டர் செய்யப்பட்டதற்கு அரசியல் காரணம் எதுவுமில்லை, அதனை கவனிக்க தனி டிபார்ட்மெண்ட் இருக்கிறது என வாய் தவறி ரகசியத்தை ஒப்புக் கொண்டார். இப்படியான தனிப் பிரிவு உளவுத்துறையில் உள்ளது அனைவரும் அறிந்ததுதான்....

ஒரு அசம்பாவித சம்பவம் நடந்து விட்டால், அது குறித்த செய்திகளை குறிப்பிட்ட மணி நேர இடைவெளியில் காவல்துறை வழங்கி வருகிறது. முதல்கட்டமாக உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவார். அப்போது சில சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உங்கள் கற்பனைக்கு ஏற்றார்போல எழுதித் தள்ளுங்கள் என அனுமதி கொடுப்பது போன்ற நிகழ்வுகள் அண்மையில் அதிகரித்துள்ளன.

'செய்தியைத் தேடி அலையும் செய்தியாளர்களின் வெறி'யை காவல்துறை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்கிறது. அடுத்தடுத்து ஊடகங்கள் கொடுக்கும் நெருக்கடி காரணமாக, விசாரணையின் போக்கு பாதிக்கக் கூடாது என்பதற்காக 'பாதி உண்மைகளை' காவல்துறை வெளியிடுகிறது. இது முழுப் பொய்யை விட மிகவும் ஆபத்தானது.

காவல்துறையை ஊடகங்கள் ஏன் விரட்ட வேண்டும்? விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல் 'தீர்மானிக்கப்பட்ட தீர்ப்புகளை' எழுத ஏன் முனைய வேண்டும்?

குண்டு வெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறும் தருணங்களில் ஊடகங்களிலும் காவல்துறையிலும் பணிபுரியும் 'இந்து(த்துவ) மனம்' கொண்டவர்கள் தங்கள் பங்குக்கு ஆடித் தீர்த்து விடுகின்றனர்.

இப்படி காவல்துறையும் ஊடகங்களும் ஒரு அசாதாரண பிம்பத்தை கட்டமைத்த பின், கடுமையான சட்டங்களால் மட்டுமே தீவிரவாதத்தை ஒழிக்க முடியும் என எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அரற்றுகின்றனர். இந்த அரற்றலில் மனித உரிமை பேசுவோரின் குரல்களெல்லாம் மங்கி விடுகிறது.

(தொடரும்...)

- இயக்கன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)