கோவில்களை வைத்தும், ஜாதகங்களை வைத்தும் ஏமாற்றும் பல மோசடி மனிதர்களில் இருந்தும்... கோவில்களில் தலை வெட்டப்படும் ஆடுகளின் அலறல் சத்தங்களில் இருந்தும்... உடலை வருத்தி ஆண்டவனிடம் மன்றாடும் சில பக்தர்களில் இருந்தும்... எதற்கெடுத்தாலும் தெய்வங்களைக் காரணம் காட்டி தடை போடும் பெரியவர்களிடம் இருந்தும்... எனக்குள்ளே எழுந்த கேள்விகள்தான் இவைகள்!.

தெருவில் இருக்கும் சாணத்தை கால்களில் மிதித்து விட்டு போனால் "ச்சீ சாணி" என்கிறார்கள், அதே சாணத்தை கைகளில் பிடித்துக் கொண்டு போனால் "அட சாமி" என்கிறார்கள்.... அப்படியானால் அந்த சாணத்தில் சாமி எங்கிருந்தார்?

வெள்ளிக்கிழமைகளிலும், சில விரதநாட்களிலும் மாமிச உணவுகள் அருந்தக்கூடாது என்கிறார்கள்... வெள்ளிக்கிழமைக்கு முதல்நாள் இரவு 11:30 மணிக்கும், விரதநாட்களின் முதல் நாள் இரவும் 11:30 மணிக்கும் மாமிச உணவு அருந்திக் கொண்டு இருக்கும் போது ஒரு

அரைமணி நேரத்தில் வெள்ளிக்கிழமை ஆகிவிடும் அப்படியானால், அந்த அதிகாலை வெள்ளிக்கிழமை நாளில் அருந்திய உணவை எந்தக் கணக்கில் சேர்ப்பீர்கள்? சரி, இரவு முழுவதும் மாமிசம் அருந்தாமல் மதியம் அருந்திய உணவோடு இருந்து விட்டு அடுத்தநாள் காலை மலம் கழிக்க வரவில்லை என்றால், முதல்நாள் அருந்திய மாமிச உணவு எங்கே போய்விடும்?

மனித உயிர்களைக் காப்பாற்ற கடவுளிடம் வேண்டி நேர்த்திக்கடன் வைத்து ஆடு, கோழிகளை கோவில்கள் வாசலில் வைத்து கழுத்தறுத்து கொல்லுகின்றார்கள். (தமிழ்நாட்டில் அநேகமான கோவில்களில் இதுதான் நடக்கிறது) அந்த ஆடு, கோழியானது வலி தாங்க முடியாமல்.... அவைகளின் மொழிகளில் கடவுளிடம் காப்பாற்றுமாறு அழுது வேண்டியிருந்தால்..... கடவுள் காப்பாற்றியிருப்பாரா?

உயிரற்ற சிலையை கடவுள் என்கிறார்கள்.... உயிருள்ள மாட்டையும் கடவுள் என்கிறார்கள்.... சிலையை வணங்குகிறார்கள், மாட்டை கொன்று உண்ணுகிறார்கள். சேவலையும் முருகன் என்கிறார்கள், பிறகு அதையும் உரித்து உண்ணுகிறார்கள்..! இந்த புதிரான நியாங்கள்தான்

இன்னும் புரியவில்லை! கடவுள் உயிரற்ற பொருட்களில் வாழுகின்றாரா, இல்லை உயிருள்ள உயிர்களில் வாழுகிறாரா?கடவுளாகக் கருதப்பட்ட மாடு, சேவலை கொன்று தின்றால், கடவுளைக் கொன்ற பாவம் இல்லையா?

புதையல் வேண்டியும், நீண்ட ஆயுள் வேண்டியும் சிறுவர்களை "நரபலி" இடுகிறார்கள். நீண்ட ஆயுளோடும், புதையல் மூலம் வரப்போகிற சொத்துக்கள் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்ற பேராசையால் மற்றவர் குழந்தைகளையும் சில நேரங்களில் தங்களது குழந்தைகளையும் இரக்கம் இல்லாமல் கொடூரமாக கொல்லுகின்றார்கள்! தங்கள் சுயநலத்திற்காக குழந்தைகளைக் கொல்லுபவர்களுக்கு கடவுள் அருள் கொடுப்பார் என்றால் அது கடவுளே இல்லை! அந்தக் கடவுளுக்கு கருணை இருக்குமானால் குழந்தைகளைக் கொல்லுகின்ற அந்தக் கொலையாளிகளை உடனே கொன்று விட்டு காப்பாற்றியிருக்க வேண்டாமா? கடவுள் பெயரால் கொலைகள் நடக்கும் போது அந்தப் பிஞ்சுக் குழந்தைகளைக் காப்பாற்ற எந்தக் கடவுளிடம் நாம் போய் வேண்டுவது?

உயிர்களைக் கொல்லுவது பாவம் என்றால், கோவில் வாசல்களில் வைத்து ஆண்டவன் கண்முன்னாலேயே கொலை செய்யப்படும் ஆடு, கோழிகளின் உயிர்கள் பாவம் இல்லையா? இவைகளின் உயிர்கள் எந்த வகையில் சேரும்?

தெரு நாயை அல்லது வேறு உயிரினங்களை கொலை செய்தால் தெய்வம் தண்டனை தரும் என்கிறார்கள்.... அப்படியானால், தெய்வத்தின் கண்முன்னே ஆடு, கோழிகளை கொலை செய்தால்.... அந்தக் கொலைக் குற்றத்திற்கு தெய்வம் தண்டனை தராதா?

மாமிசம் அருந்தினால் கோவில்களுக்குச் செல்லக்கூடாது என்கிறார்கள்.... அதே மாமிசத்தை நேர்த்திக்கடன் என்ற பெயரில் கோவில்களில் வைத்து கொலை செய்து, அதே கோவில்களில் வைத்து கூட்டத்தோடு அருந்தினால் அது மாமிசம் இல்லையா? அவ்வாறெனில், மாமிசம் அருந்திவிட்டு கோவில்களுக்குச் செல்வதில் என்ன தவறு இருக்கிறது?

உணர்ச்சிவசப்பட்டு தெரியாமல் ஒரு கொலை செய்தால் அவன் "கொலைக்காரன்" என்கிறார்கள்... அப்படியானால், கோவில்களில் வைத்து பல பேர் பார்க்க "எல்லா உயிர்களும் ஒன்றே" என்று சொன்ன இறைவன் கண் முன்னாலேயே உயிரினங்களைக் கொல்பவர்களை

ஏன் கொலைக்காரன் என்பதில்லை? இறைச்சிக் கடைக்காரன் இறைச்சிக்கு விலங்குகளைக் கொன்றால் அது கொலை!, நேர்த்திக் கடனுக்கு கோவில்களில் விலங்குகளைக் கொன்றால் அது கொலை இல்லையா? அவ்வாறெனில், நல்ல கொலை, கெட்ட கொலையென்று கொலைகளில் இருவகை உண்டா?

பிறவியிலே இருந்தே கண் தெரியாதவர்களின் கனவில் ஆண்டவன் எந்த வடிவத்தில் தோன்றுவார்? அவ்வாறு, அவர்கள் கண்ட வடிவங்களை வார்த்தைகளில் சொன்னாலும்... அவர்கள் கண்ட ஆண்டவனையும், நீங்கள் வணங்கும் ஆண்டவனையும் சம்மந்தப் படுத்தி பார்த்ததுண்டா?

ஒரு கல்லை எடுத்து அதே கல்லில் நான்கு மத தெய்வங்களையும் (இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம், பௌத்தம்) ஒரு சிற்பி ஒரு பக்கம் இன்னொரு மதத்தவருக்கு தெரியாதமாதிரி உருவாக்கியிருந்தால் .... அந்தக் கல்லை எந்த மத தெய்வமாக வழிபடுவீர்கள்? அந்தக் கல்லின் வடிவத்தில் கடவுள் இருக்கின்றாரா?, கடவுளைக் கல்லில் உருவாக்கிய அந்தச் சிற்பியின் எண்ணங்களில் கடவுள் இருக்கின்றாரா?

ஒரு காகிதத் தாளில் ஒரு ஓவியன் பல மத தெய்வங்களை வரைந்து, ஒருவரின் மத தெய்வம் இன்னொரு மதத்தவருக்குத் தெரியாத மாதிரி வைத்து வழிபடச் சொன்னால்.... நீங்கள் எல்லா மத தெய்வங்களையும் வழிபடுவீர்களா? அல்லது, உங்களுக்குரிய தெய்வத்தை மட்டும் வழிபடுவீர்களா? இல்லை, அந்தக் காகிதத்தில் தெய்வத்தின் உருவங்களை வரைந்த அந்த ஓவியனின் எண்ணங்களை வழிபடுவீர்களா?

அந்தக் காலங்களில் இருந்து இன்றுவரையான காலங்கள் வரையும் சிற்பக் கலைஞர்களும், ஓவியக் கலைஞர்களும் இல்லாமலேயே இருந்திருந்தால்.... தெய்வங்களை எந்த வடிவங்களில் கண்டிருப்பீர்கள்? இல்லை, துறவிகள் கண்டார்கள் என நீங்கள் சொல்ல வந்தால்.... அந்தத் துறவிகளால் உலகில் வாழும் சகல இன மக்களுக்கும், இனி வரும் சந்ததியினருக்கும் தனித்தனியாகச் சந்தித்து கடவுளின் வடிவத்தை விபரிக்க முடியுமா? இப்போது கூட அப்படிப் பட்ட துறவிகளை யார் யார் சந்தித்ததுண்டு? அங்கே சிற்பியினதும், ஓவியனதும் எண்ணங்களில்தான் கடவுள் இருக்கின்றார் என்று, இப்போது கூட நீங்கள் உணருகிறீர்களா?

முள்ளிவாய்க்களில் இறுதியுத்தத்தின் போது இலட்சக்கணக்கான மக்கள் துடிக்கத் துடிக்க இறக்கும் போது அந்த இறுதித் தருணங்களில் ஒவ்வொருவரும் தமது இஸ்ட தெய்வங்களை வேண்டியிருப்பார்கள்; அவ்வாறு, மன்றாடி வேண்டியவர்களையும், கடவுள்களே தங்கியிருந்த கோவில்களையும் ஏன் கடவுள்களால் காப்பாற்ற முடியாமல் போனது?

ஊர் ஊராக, தெருத் தெருவாக நிறையக் கோவில்கள் பார்க்கின்றோம்; அந்தக் கோவில்கள் அனைத்தையும் உருவாக்கியது சாதாரண மக்களான சிற்பிகளும், ஓவியர்க்களும்தான் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா?

தினச்செய்தி தாள்களில் "சாமி சிலை திருட்டு" என்று இருந்து விட்டு செய்திகள் இடம் பிடிப்பதுண்டு. அவ்வாறெனில், ஏன் அந்த சாமியால் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போனது? சாமியை விட அந்தத் திருடன் பெரியவனா? தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளமுடியாத சாமி.... உங்களை மட்டும் காப்பாற்றுவார் என்பதை எப்படி நீங்கள் அடித்துச் சொல்லுகின்றீர்?

இவைகள் ஒருபுறம் இருக்க அன்றாடம் நமது வீடுகளில் அரங்கேறும் மூடநம்பிக்கைகளைப் பார்ப்போம்.

கைவிரல் நகம் வெட்டுவதற்குக் கூட கிழமைகள் பார்க்கிறார்கள்; அத்துடன் நின்று விடாமல் நகம் வெட்டி வீட்டினுள் போட்டால் "தரித்திரம்" என்கிறார்கள்! அதே நகம் வெட்டாமல் கைவிரலில் இருந்தால் தரித்திரம் இல்லையா? எப்படிப் பார்த்தாலும் கைவிரலில் இருக்கும் நகமும் வீட்டுக்குள்ளேதான் இருக்கிறது! வெட்டப்பட்ட நகமும் வீட்டுக்குள்ளேதான் இருக்கிறது! அப்படி இருக்கும்போது எப்படி தரித்திரமாகும்?

தலை முடி வெட்டி முழுகாமல் அப்படியே வீட்டினுள் போகக்கூடாது என்பார்கள்.... அதுவும் தலை முடி வீட்டினுள் கொட்டினால் தரித்திரம் என்பார்கள். அப்படியானால், தலை முடியானது தலையில் இருக்கும் போது "தரித்திரம்" இல்லையா? இல்லை, கொட்டினால்தான் தரித்திரம் என்றால்.... உங்களையறியாமலேயே உங்கள் தலை முடியானது கொட்டினாலும், தலை வாரும் போது சீப்பினுள் கொழுவி முடி கொட்டினாலும் அது தரித்திரம் இல்லையா? அவ்வாறெனில், வழுக்கை விழுந்தவர்கள் எல்லாம் தரித்திரவாதியா?

மேற்குறிப்பிட்ட நகமும், தலைமுடியும் வீட்டினுள் இருக்கும் உணவுப்பண்டங்களில் விழுந்து விடக்கூடாது என்பற்காக நம் முன்னோர்களானவர்கள் "தரித்திரம்" என்ற சொல்லை வைத்து அதைத் தடுத்து வந்தார்கள் அவ்வளவுதான்! (இல்லை, முடி கொட்டினால் "தரித்திரம்" என்பவர்கள்... தயவு செய்து சிகையலங்காரக் கடைக்கு (சலூன்) போகாதீர்கள்... அங்கு வெட்டிக் கொட்டிய முடி நிறைய உண்டு.)

சட்டைப் பின்னை (ஊசி) கையில் கொடுத்தால் உறவு முறியும் என்கிறார்கள்.... எதை வைத்து அப்படி சொல்லுகின்றீர்கள்? -சட்டைப் பின்னானது எதிர்பாராமல் கைகளில் குத்திவிடக் கூடாது என்பற்காக எம் முன்னோர்கள் வகுத்ததுதான் இதுவும்.

குப்பைகளை இரவினில் கொட்டக்கூடாது "தரித்திரம்" என்கிறார்கள்.... ஏன் அவ்வாறு கொட்டக்கூடதென்று நீங்கள் யாரும் சிந்தித்ததுண்டா? இரவினில் குப்பைகளைக் கொட்டினால் கண்களுக்குத் தெரியாத சில முக்கியமான பொருட்களையும் அள்ளி வீசி விடுவோம் என்பதனால்தான் எம் முன்னோர்கள் இப்படியும் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

சில வீடுகளில் சென்று உணவருந்தும் போது உணவுக்குள் தலை முடி இருந்தால் "உறவு சேரும்" என்கிறார்கள்.... எத்தனை கடைகளில் சாப்பிடுகிறோம் , அப்போது அந்த உணவினுள் தலைமுடி இருந்தால் "உறவு சேரும்" என்று இலவசமாக சாப்பாடு தருகிறார்களா? இல்லையே? உணவினுள் தலைமுடி இருந்தால் சாப்பிடுபவருக்கு அருவருப்புத் தன்மை உண்டாகும் என்பதால் அவர்களின் நெஞ்சைத் தொடுவதற்கு "உறவு சேரும்" என்று எம் முன்னோர்கள் இதையும் வகுத்து விட்டார்கள்.

பிறங்கால் கழுவாமல் விட்டால் சனியன் பிடிக்கும் என்பார்கள்... அப்படியானால் ஒருவர் ஆயுள் முழுவதும் ஒழுங்காக கால் கழுவி வந்தால் அவரை ஏழரைச் சனியன் பிடிக்காமலே விட்டுவிடுவாரா? ஒழுங்காகவும், சுத்தமாகவும் கால்களைக் கழுவ வைப்பதற்கே "சனியனை" வைத்து ஒரு பயத்தை ஏற்படுத்தினார்கள்.

கோவில்களுக்குச் செல்லும் ஆண்கள் மேல்ச்சட்டை அணியக்கூடாது (தமிழகத்தில் பெரும்பாலும் இல்லை) என்கிறார்கள்...அது ஏன் ? என்ன காரணத்திற்காக ஆண்களுக்கு மட்டும் அப்படியானதொரு சட்டம்? மேல்ச்சட்டை அணிந்தால் கடவுள் வரமாட்டாரா? அப்படி அந்த சட்டை விடயத்தில் மட்டும் என்னதான் இருக்கிறது? எல்லா உயிர்களும் ஒன்றே என்றால், மேல்ச்சட்டை விடயத்தில் மட்டும் ஏன் கடவுள் ஆண், பெண் என்று பாகுபாடு பார்க்கின்றார்?

தெருவில் கிடக்கும் யாரோ தெரியாதவரின் மலத்தை மிதித்தால் உடனே.... தண்ணீர் இருந்தால் கழுவியும், தண்ணீர் இல்லாவிட்டால் துடைத்துவிட்டும் செல்கின்றீர்கள்..! அப்படி இருக்கும் போது தாழ்த்தப்பட்ட‌ சாதியினருடன் பழகுவது ஆகாது என்கிறீர்களே? மலத்தை விட அந்த மனிதர்கள் கீழானவர்களா? யாரோ தெரியாதவரின் மலத்தை மிதிக்கும் நீங்கள்; உங்கள் ஊர்களில் வாழும் தாழ்த்தப்பட்ட‌ சாதியினரை மதிப்பதில்லை ஏன்?

அவ்வாறு சாதி பார்ப்பவரா நீங்கள்? நீங்கள் தாழ்த்தப்பட்ட‌ சாதி என்று பார்ப்பவருக்கும், உங்களுக்கும் என்னென்ன வேறுபாடுகள் என்று விபரமாகக் கூறமுடியுமா? உயர்ந்த சாதி எனக் கருதும் நீங்கள் என்ன வானத்தில் இருந்து குதித்து வந்தவரா? தாழ்த்தப்பட்ட‌ சாதியினர் போலவேதானே நீங்களும் ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறந்து வந்தீர்கள்..?! அவர்களை விட உங்களுக்கு ஏதாவது வித்தியாசமான உறுப்புக்கள் அதிகமாக இருக்கின்றனவா?

செய்யும் தொழிலை வைத்துத்தான் சாதி வந்தது! மனிதர்களின் தரத்தினை வைத்து சாதி வந்ததில்லை! "செய்யும் தொழிலே தெய்வம்" என்றது போல் இவ்வுலகினில் வாழும் அனைவரும் ஒன்றே! எந்த உயர்ந்த மனிதன் கீழ்த்தரமான எண்ணங்களுடன் வாழ்கின்றானோ... அவனே மனித ஜாதிகளில் கீழ்த்தரமான ஜாதி! மற்றப்படி எல்லோரும் ஒரே ஜாதிதான்! ஆண் ஜாதி, பெண் ஜாதி என்ற இரு ஜாதிகளைத் தவிர... வேறு எந்த ஜாதிகளும்இவ்வுலகினில் இல்லை!

"அருணாச்சலம்" திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் "அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான்தாண்டா... அன்னைத்தமிழ் நாட்டில நான் அனைவருக்கும் சொந்தம்டா. ... ஆண்டவன் நினைத்திடுவாண்டா... அருணாச்சலம் முடித்துடுவாண்டா..." என ஆரம்பித்து, இறுதியில் "தாய் என்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு... நீ தனித்தனியா கோவில் குளம் அலைவதெல்லாம் எதற்கு... அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து... நீ ஆனந்தக் கண்ணீரில் அபிஷேகம் நடத்து..." என்று பாடுவார். நீங்களே பாருங்கள் ரஜினிகாந்த் மட்டும் கோவிலுக்குப் போய் கற்பூரம் கொளுத்திப் பாடுவாராம்...ஆனால், ரசிகர்களாகிய யாரையும் கோவில் குளம் எல்லாம் போய் அலைய வேண்டாம், வீட்டோட தாய் என்ற ஒரு தெய்வம் இருக்கு... அவரை மட்டும் வணங்கினால் போதும் என்பார்!.

என்னைக் கேள்வி கேட்க விரும்புபவர்கள் முதலில் இந்தப் பாடலை எழுதிய வைரமுத்துவை கேட்டுவிட்டு வாருங்கள்!

இன்னுமொரு விடயம் எனது கருத்திற்கேற்றால் போல் சொல்லியிருக்கின்றார் "தாய் என்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு... நீ தனித்தனியா கோவில் குளம் அலைவதெல்லாம் எதற்கு... அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து.... நீ ஆனந்தக் கண்ணீரில் அபிஷேகம் நடத்து!" என்று..! இதைபோலவேதான், உங்களுக்கு அமைதியும், நிம்மதியும் வேண்டுமென்றால் நீங்கள் அமைதியாக ஆலயம் சென்று வணங்கிவிட்டு வாருங்கள். மாறாக.... உயிர்களைக் கொலை செய்தும், உடலை வருத்தியும், அந்த நேர்த்தி, இந்த நேர்த்தி என்றும் அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுத்து வணங்காதீர்கள்! எந்த ஆண்டவனும் இப்படியெல்லாம் கேட்டுக் கொண்டதில்லை! இவ்வாறாக எல்லாம் செய்தால்தான் அந்த ஆண்டவன் வரம் தருவார் என்றால் அந்த ஆண்டவனும் சுயநலவாதியே! எந்த ஆசைகளுக்கும் மயங்காத ஆண்டவன் இவ்வாறான ஆசைகளுக்கு மயங்குகிறவர் என்றால்.... அந்த ஆண்டவனும் பேராசைக்காரனே..!

ஆண்டவன், "தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்" என்றால், ஏன் உங்கள் உயிரிலும், உங்கள் உடலிலும் இருக்கமாட்டேன் என்கிறார்? அவ்வாறு உங்கள் உள்ளத்தில் இருக்கிறார் என்றால் உங்களுக்குள்ளேயே தேடிப்பாருங்கள்..!

மனதில் நல்ல எண்ணங்களும், அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்காத செயற்பாடுகளும், எல்லா உயிரினங்களிலும் அன்பு செலுத்தும் மனப்பாங்கும், ஏழை எளியவருக்கு உதவி செய்யும் இரக்க குணமும் எல்லோர் மனதிலும் இருந்தால், ஆண்டவன் எல்லோர் மனதிலும் குடியிருப்பார்! மனதில் எல்லாவிதமான அழுக்குகளையும் வைத்துக் கொண்டு, செய்யக்கூடாத பல பாவ செயல்களை எல்லாம் செய்து கொண்டு வெளித்தோற்றத்தில் " ஆண்டவனை வேண்டுகிறேன், ஆண்டவனை வேண்டுகிறேன்" என்று கோவில்களைச் சுற்றிச் சுற்றி வந்தால்.... உங்களுக்கு ஆண்டவன் அருள் தருவார் என்றால்..... அந்த ஆண்டவன் பொய்யானவரே!

எவ்வாறு சிற்பியின் எண்ணங்களிலும், ஓவியனின் எண்ணங்களிலும் ஆண்டவனின் வடிவம் கல்லிலும், காகிதத்திலும் உருவாகியதோ... அதேமாதிரி உங்கள் எண்ணங்களில் கடவுளைத் தேடுங்கள்!

கடவுளை எங்கும் தேட வேண்டாம்... உங்களுக்குள்ளேயே தேடுங்கள்! உங்களுக்கு உயிர் தந்த தாயின் வடிவில் தேடுங்கள்! உங்களுக்கு உதவுகின்ற மனிதர்கள் வடிவில் தேடுங்கள்! உங்கள் மேல் அன்பு செலுத்துகின்ற அனைத்து உயிர்களிலும் தேடுங்கள்!

- வல்வை அகலினியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It