kuthoosi gurusamy 300கரடியார்:- வரவேணும், வரவேணும்! ஸ்ரீலஸ்ரீ புலி ஸ்வாமிகளே! என் இருப்பிடத்துக்கு நீங்கள் இதுவரை வந்ததே யில்லையல்லவா?

புலியார்:- நமஸ்காரம் கரடியாரே! நாம் இருவரும் இப்போதுதான் முதல் முறையாக சந்திக்கிறோம்! நீங்கள் சவுக்கியந்தானே?

கரடியார்:- சவுக்கியந்தான்! ஆனாலும் உங்களைப் போன்ற மன நிம்மதி மட்டும் எனக்கில்லை! உங்களைவிட ஆயிரம் மடங்கு சொத்தும் பணமும் இருந்தாலும் உங்களுக்கு நாட்டில் இருக்கின்ற செல்வாக்கு எனக்கில்லையே! தென்னாடுடைய சிவன் என்னை மட்டுமா சோதிக்க வேண்டும்?

புலியார்:- சிவன் - விஷ்ணு; அவன்-இவன் என்றெல்லாம் பிரித்துப் பேசக்கூடாது! கடவுள் ஒன்றுதான்! அதுதான் பிரம்மம்! அந்தப் பிரம்மம் எங்கே இருக்கிறது, தெரியுமா? (தம் மார்பைக் காட்டி) இதோ, இங்கே! புரிந்ததா!

கரடியார்:- இல்லை! புரியவில்லை! நாமே கடவுளா? இது நாத்திகமன்றோ, புலியாரே?

புலியார்:- உமக்குப் புரியாது! அதனால்தான் நாமிருவரும் இதுவரை யில் சந்தித்துப் பேச முடியாது போய்விட்டது! ஆனால் இனி அப்படியிருக்கக் கூடாது; நம்மைப் பின்பற்றுகின்ற ஆடுகள் நம்மிடம் சிக்காமல் தப்பித்து ஓட ஆரம்பித்து விட்டன! ஆடுகளைக் காப்பாற்றத்தானே நாம் இருவரும் அவதரித்திருக்கிறோம்?

கரடியார்:- அதிலென்ன சந்தேகம்? ஆடுகளுக்கு நாஸ்திகப் பேய் பிடித்து விட்டது! எங்கு நோக்கிலும் நாஸ்திகம்! பள்ளிகளிலெல்லாம் நாஸ்திகம்! தொழிற் சாலைகளிலெல்லாம் நாஸ்திகம்! வீடுதோறும் நாஸ்திகம்! இனி நம் கதி என்னாவது! நம் கதி கிடக்கட்டும்! ஈசன் கதி என்னாவது? உம் சீடர்கள் எவ்வளவோ தேவலாமே? 1000-க்கு 2-3 பேர் கூட நாஸ்திகர்களாயிருக்க மாட்டார்கள்! என் சீடர்கள் தானே என் அணைப்பைவிட்டுத் தப்பியோடி நாத்திகப் புல்வெளியில் போய் மேய்ந்து கெட்டுப் போகிறார்கள்! என்ன செய்வது?

புலியார்:- அதைப் பற்றி ஆலோசிக்கவே நான் உம் ஊருக்கு வந்தேன்! நான் பூதேவர்களின் மதத் தலைவன்! நீரோ சூத்திரர்களின் மதத் தலைவன்! ஆகையால்தான் உம் மடக் குகையில் காலடி வைக்க முடிய வில்லை, அதற்காக வருந்தக்கூடாது! பிரம்மத்தை யுணர்ந்தவன் அதன் பரம்பரை எதிரியின் வீட்டில் காலடி வைப்பது தவறல்லவா?

கரடியார்:- அதனால் பரவாயில்லை! நம் பகைமையை மறந்துவிட வேண்டும். ஆடுகளை எப்படி மீட்டு நம் குகைக்குள் கொண்டு வந்து சேர்ப்பது என்பதிலேயே நம் கவனம் இருக்க வேண்டும்.

புலியார்:- ஆமாம்! நம் இருவருக்கும் பொது எதிரி நம்பர்-1 எது தெரியுமா? இந்த ஆடுகளே! இவைகளை சரிப்படுத்தி ஓட்டிக்கொண்டு வந்து நம் குகையில் சேர்ப்பதற்குப் பிரதமர் ராஜாஜியும் நமக்கு உற்ற துணையாக இருக்கப் போகிறார்.

கரடியார்:- அவர் பல்லாண்டு வாழ்க! நீடூழி வாழ்க! எம்பெருமான் தோடுடைய செவியன் அவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுப்பானாக!

புலியார்:- அப்படிச் சொல்லாதீர்! சர்வம் பிரம்மானாம் பிரவர்த்தி! சஸ்யானாம்! அஸ்யாம், பிரம்மோ பிரம்மா விசேஷானாம்! இஷ்டமித்திர ராஜாதி ராஜஸ்ய ராஜ்யானாம்!”- என்று கூறுமய்யா!

கரடியார்:- இதென்ன கோரம்? எனக்கொன்றும் புரியவில்லையே!

புலியார்:- உமக்கெப்படி புரியும்? இது தேவபாஷை யோன்னோ? நீர் சூத்திரராச்சே! உம் வாயிலேயே நுழையாதே! காதினால் கேட்பதே பாபமாச்சே!

கரடியார்:- அப்படியா, ஸ்வாமி? நான் பிரம்ம குலத்தில் பிறக்க முடியுமோ? உங்கள் வேதம் என்ன சொல்கிறது?

புலியார்:- நீரா? பிரம்ம குலத்திலா? வீணான சொர்ப்பனம்! உலகில் எவனுமே பிறக்க முடியாது! வந்த சங்கதியைப் பேசுவோம்! நாம் இருவரும் கூட்டாக இருந்து தமிழ் நாட்டு நாஸ்தீகத்தை ஒழிக்க வேண்டும்! ஆஸ்திகத்தை அகலமாகவும் நீளமாகவும் பரப்ப வேண்டும்! நமக்காக அல்ல! கடவுளுக்காக! அவர் கதி என்னாவது? நான்! நீர்! ராஜாஜி! இந்த மூன்று பேரையும் நம்பித்தானே இருக்கிறார், “அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாயுள்ள”, -கடவுள்! இந்த ஆபத்தான வேளையில் அவரை நாம் கைவிட்டு விடக்கூடாது! பாவம்! அவரை நினைத்தாலே பரிதாபமா யிருக்கிறது! நாஸ்திகர்களின் நாவை இழுத்து, கையை மடக்கி விடச்சொல்லி சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு நாம் ஞாபக மூட்ட வேண்டும்!

கரடியார்:- அப்படியே ஆகட்டும் ஜகத் குருவே! ஆடுகளை எப்படி யேனும் காப்பாற்றியாகவேண்டும்! அவைகளுக்கு நாமே துணை!

குறிப்பு:- காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜகத் குரு சங்கராச்சாரியார் சுவாமிகளும், தர்மபுரம் ஆதினம் பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் அவர்களும் கடந்த 3-ந்தேதி இரவு தாம்பரம் தர்மபுரீஸ்வரஸ்வாமி கோவிலின் கண் முதன் முறையாகச் சந்தித்துப் பேசினாராம், இச் செய்தியும் கரடியாரும் புலியாரும் தனியே உட்கார்ந்த பேசுகின்ற படமும், 7-ந் தேதி அம்மாமி (“சு. மி.”) பத்திரிகையில் வெளிவந்திருக்கின்றன.)

- குத்தூசி குருசாமி (09-06-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It