மார்ச் 8, 1908ல் மென்கெட்டன் வீதிகளில் 15000 பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக நடத்திய அந்தப் பேரணி.. பெண்கள் தினத்தின் அந்த முதல் புள்ளியில் ஒரு கறுப்பு நிறப் பெண் கூட கலந்து கொள்ளவில்லை என்கிற வரலாற்றை பெண்கள் தினம் கொண்டாடும் பலர் மறந்து போயிருக்கலாம். ஆனால் எங்களால் மறக்க முடியவில்லை. ஏன் தெரியுமா...? நியூயார்க்கின் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் அந்த உரிமையைக் கூட ஆப்பிரிக்கன் அமெரிக்கன் கறுப்பினப் பெண்கள் பெற்றிருக்கவில்லை.

அன்றைக்கு பெண்கள் உரிமைக்காக நடந்த அந்தப் பேரணியாகட்டும், அங்கே ஒலித்த பெண்களின் குரலிலாகட்டும், தன்னை ஒத்த சக மனுஷியான ஆப்பிரிக்க பெண்ணுக்காக எந்தக் குரலும் இல்லை.

இந்தக் கதை ஏதோ ஆப்பிரிக்க அமெரிக்க இன வரலாற்றின் பக்கம் மட்டுமல்ல, இதோ இந்தியாவின் ..சாதியக் கொடூரத்தில் எவராலும் எப்போதுமே எழுதப்படாத இந்தியப் பெண்களின் கதையும் தான்.

இந்திய இராணுவமே எங்கள் பெண்களை வல்லாங்கு செய்கிறது. காஷ்மீரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பெண்கள் இந்திய எல்லைக் காவல் படையால் அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள். பாலியல் வன்புணர்வு குற்றஞ்சாட்டப்பட்டவர்களை எங்கள் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களாக்கி நாடாளுமன்றம் அனுப்புகின்றன. எங்கள் தலைநகர் டில்லியில் ஒரு நாளுக்கு 4 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். பெற்ற மகளைத் தாயாக்கும் ஆண்மிருகங்கள் எங்களுடன் வாழ்கின்றன. ஒருதலைக் காதல் கொண்டு, ஏற்க மறுக்கும் பெண்களை ஆசிட் ஊற்றி தன் காதல் பழியைத் தீர்த்துக் கொள்ளும் இளைஞர்கள் எங்கள் சமூகத்தில் நடமாடுகிறார்கள்.

காதலும் வீரமும் எங்கள் பண்பாடு என்று கொண்டாடிய எங்கள் சமூகத்தில் சாதிமறுப்புத் திருமணம் செய்ய, அதிலும் தலித் ஆண்களைக் காதலிப்பதும் திருமணம் செய்து கொள்வதும் தங்கள் சுயசாதிப் பெருமைக்கு இழுக்கு என்று கொக்கரிக்கும் அரசியல் தலைவர்கள் பகிரங்கமாக எங்கள் மேடைகளில் உலா வருகிறார்கள்.

ஊமைகாளாக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் வீட்டுப் பெண்கள். இந்தப் பெண்களுக்கு இல்லை பெண்கள் தினம்?

எங்கள் சாலைகளில் பெருக்கி சுத்தம் செய்யும் அவள்... ஓடும் புகைவண்டியில் நெருக்கியடித்து நுழைந்து காதணியும் நைட்டியும் விற்றுப்பிழைக்கும் அவள்... சிவப்பு விளக்குப் பகுதியில் பகல் நேரத்தில் பள்ளிக்கூடம் போய் இரவு நேரத்தில் கட்டிலுக்கடியில் ஓசையின்றி தூங்கும் மகள்... இந்தப் பெண்களுக்கு இல்லை பெண்கள் தினம்.

பின் யாருக்குத்தான் இந்தப் பெண்கள் தினம்?

பெப்சி கம்பேனியில் இந்திரா நொயி, ஐசிஐசிஐ வங்கியில் CEO சந்தன் கோச்சர், அப்பலோ மருத்துவமனை மேனேஜிங் டைரக்டர் பிரீத்தா ரெட்டி, ஜே.பி.முர்கன் இந்தியாவின் CEO கல்பனா மூர்பாரியா, இந்திய பேரரசின் எல்லையில்லா அதிகாரம் கொண்ட சோனியா காந்தி, தமிழகத்தின் ஜெயலலிதா, மம்தா ...

இவர்களுக்கும் இவர்களை ஒத்த கார்ப்பரேட் மற்றும் அரசியல் தலைவர்களின் பெரிய வீடு, சின்னவீடுகளுக்கும், அவர்களின் மகள், மருமகள்கள் மற்றும் பேத்திமார்களுக்கும், வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்களுக்கும் மார்ச் 8, பெண்கள் தின கொண்டாட்டம் உண்டு, உண்டு, உண்டு.

- புதிய மாதவி, மும்பை

Comments

5 comments

5
RAJ.S
அருமை அருமை....
Nagarajan B
மதிப்பிற்குரிய படைப்பாளருக்கு.. பெண்கள் தினம் குறித்து நாம் எட்டப்படாத இலக்குகள் குறித்த உங்கள் கருத்து முற்றிலும் உண்மைதான். சர்வ தேச சந்தை முயற்சியாக துவங்கிய இந்த பெண்கள் தினம் உயர் மட்ட வசதி படைத்தவர்களுக்கு மட்டும்தான் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் நடுத்தர வர்க்க அலுவலகங்களில் இந்த ஒரு தினத்தில் மட்டுமாவது பெண்கள் மதிக்கப்படுவதும், ஒரு புதிய பாதையை நோக்கிய முதல் படியாக இருக்கிறது என்பது எம்மைப் போன்றவர்களின் அனுபவம். முன்னேற்றம் கண்டவர்களை இதற்கு சாடுவது எதிர்மறை விளைவைத்தான் உருவாக்கும்.
puthiyamaadhavi
எதிர்மறையாக எழுதுவதற்கும் மறுபக்கத்தைக் காட்ட முனைவதற்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு.
ஒரு பெண் கார்ப்பரேட் லெவலில் உச்சநிலையை எட்ட எவ்வளவு காயப்பட்டிருப்பாள் என்பதை நானறிவேன். ஆனால் அந்த நிலையை எட்டியப்பின் அவளும் முதலாளித்துவத்தை
முகத்தை மட்டுமே காட்டுகிறாள். மேலும் ஒரு பன்னாட்டு வங்கியில் வேலைப்பார்த்தவள் நான். ஒவ்வொரு பெண்கள் தினத்தன்றும் எங்கள் மேசையில் பூங்கொத்துகளுடன் வாழ்த்தட்டை இருக்கும். விருந்துகளில் பொழுதுகழியும்.
அப்போது எங்களுக்காக துப்பரவு தொழிலில் இருந்த இரண்டு பெண்களுக்கு யாரும் பூங்கொத்து கொடுப்பதில்லை. அவர்களுக்கு கொடுக்கவில்லையே என்ற எண்ணம் கூட என்னுடன் வேலைப்பார்த்த அதிகம் படித்திருந்த எந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டதில்லை. அது ஒரு தனியுலகம்...
முன்னேற்றம் என்பது என்ன? என்ற கேள்வியை நாம் மறுவாசிப்பு செய்தாக வேண்டும்.
Jayakumar
பெண்களுக்கு என்று "மகளிர் தினம்" கொண்டாடுவதே பெண்ணடிமை தனம் தான். இதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் அவர்கள் விருப்பத்திற்கு உடை அணிவது, தன்னை அழகு படுத்திக் கொள்வது, மது அருந்துவது தான் பெண் விடுதலை என்பது தவறு.

மாறாக ஆண்களிடம் இருந்து பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரே ஒரு நல்ல பண்பு எளிமை. நான் பணக்கார ஆண்களை பற்றி பேசவில்லை, நடுத்தர வர்கத்து ஆண்களின் எளிமையை பற்றி கூறுகிறேன். 90 சதவிகிதம் ஆண்கள் தன்னை அழகு படுத்தி கொள்ள எந்த ஆபகரனையும் ஆண்கள் அணிவதில்லை, அப்படியும் இருந்தாலும் கழுத்தில் ஒரே ஒரு செயின் மட்டுமே இருக்கும். பெண்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி உயர் வகுப்பாக இருந்தாலும் சரி நடுத்தர வகுப்பனாலும் சரி அவர்கள் தன்னை எப்படி அழகு படுத்தி கொள்வது என்பதில் அவர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள். இது தான் பெண்களின் முதல் எதிரி. பெண்கள் ஒன்னும் போகப் பொருள், அலங்காரப் பொருள் அல்ல மாறாக பெண்களும் ஆண்களை போல சக மனிதர்கள். இதை பெண்கள் முதலில் உணர வேண்டும்.
சத்யன்
புதிய மாதவி சொல்வதுதான் நிதர்ச்னமான உண்மை. எந்த்தெந்தப் பெண்களுக்கு “பெண்கள் தின வாழ்த்துக்கள்” , பரிசுகள் கிடைக்கிறதோ அவர்கள் ஒன்று அடிமைத் தளையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்களாக இருப்பார்கள் (குறைந்த பட்சம், அந்த நிலை துவக்க அளவிலாவது இருக்கும்).... அல்லது அவர்கள் முதலாளியச் சேவையாளர்களாக இருப்பார்கள். தெருவில் மீன் விற்க வேர்ர்க்க விறுவிறுக்கச் செல்லும் அந்த பரிதாபகரமான பெண்ணுக்கோ, உங்க்ள் வீட்டுப் பணிப்பெண்களுக்கோ இந்த வாழ்த்தைச் சொல்ல (எள்ளி நகைப்பார்கள் என்ற பயமின்றி) யாருக்கும் தைரியம் உண்டா?

இரண்டாவதாக, பெண்கள் அழகுப்டுத்திக் கொள்வது தவறல்ல ; ஏனெனில் சுத்தமாக் இருப்பதும், தூய உடைகளீ அணிவதும் ஆண்களைப் போலவே அவர்களூக்கு ஒரு புத்துணர்ச்சியையும், தன்னம்பிக்கியயும் அளிக்கக்க் கூடும்.
நகை அணிவதுதான் அப்த்தம். ஒரு ஆண்டின் மொத்த வருமானத்தை க்ழுத்திலும் காதிச்லும் போட்டுக் கொண்டு வலம் வருவது “உன்னிடம் இருக்கிறதா?’” என்று தம்பட்டமடிக்கும் அல்பத் தனம் தவிர வேறென்ன?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.