திராவிட நாடு பேசியவர்களைத் தமிழ்த் தேசியத்தின் எதிரிகளாகவும், தமிழர்களுக்குத் துரோகம் இழைத்தவர்களாகவும் தமிழ்நாட்டின் அனைத்து இழிவுகளுக்கும், பிரச்சனைகளுக்கும் திராவிடம் பேசியதே காரணம் என்றும் அண்மைக்காலத்தில் மிக அதிகமாக வாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த வாதங்கள் தமிழ்ச் சமூகத்தில் புதியது அல்ல என்றாலும், தற்போது மிகவும் கூர்மை அடைந்திருப்பதும் கணினி பயன்பாட்டின் காரணமாக முகநூல்களில் வெளிவரும் அரைவேக்காட்டுத்தனமான எழுத்துகளும் சமூக அக்கறை கொண்டவர்களுக்கு கவலை அளிப்பதாகவே இருக்கிறது.

periyar_450ஈழத்தில் நிகழ்ந்த இந்த நூற்றாண்டின் தமிழினப் படுகொலைக்குப் பின், அதை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத இந்தியத் தமிழனின் கையறுநிலையில் விரக்தி அடைந்திருக்கும் இன்றைய இளம் தலைமுறை திராவிட எதிர்ப்பு அலையால் வெகு எளிதாக ஈர்க்கப்படுகிறார்கள். தமிழ் நாட்டில் தொடர்ந்து ஆட்சியில் இருந்த திராவிட அரசுகளின் அரசியல் கோட்பாடுகளும், டில்லிக்கு காவடித் தூக்கும் அடிமைப் போக்கும், ஓட்டு அரசியலுக்காக கொள்கை தளத்திலிருந்து முற்றிலும் விலகிப் போய்விட்ட இன்றைய திராவிட அரசியல் கட்சிகளும், அவர்களின் ஊழல் பட்டியல்களும் ... இப்படியாகத் தொடரும் அனைத்து குற்றச்சாட்டுகளும் திராவிடக் கொள்கை எதிர்ப்பில் போய் நிற்கின்ற பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய திராவிட அரசியல் கட்சிகளாகட்டும், பெரியாரிய இய‌க்கங்களாகட்டும் நடைமுறையில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். ஆனால் அந்த விமர்சனகளுக்கு எல்லாம் பொறுப்பு தந்தை பெரியார் மட்டுமே என்ற கண்மூடித்தனமான குற்றச்சாட்டு மிகவும் ஆபத்தானது!

மேலும் திராவிடன், திராவிட நாடு, திராவிட மொழிகள் என்ற கருத்துருவாக்கங்கள் தமிழன், தமிழ்நாடு, தமிழ்மொழிக்கு எதிரானதாக அடையாளப்படுத்துவதன் மூலம் தமிழினத்தின் இன்றைய உண்மையான எதிரி யார்? என்பதை அடையாளம் காட்டுவதில் பெரும் தவறிழைத்துவிட்டதை தமிழினம் இன்னும் அறிந்து கொள்ளவில்லை.

ஈழப் படுகொலைக்குப் பின் கூர்மையடைந்திருக்க வேண்டிய 'இந்தியன்' என்ற தமிழனின் அடையாள எதிர்ப்பு 'திராவிடன்' என்ற இன அடையாள எதிர்ப்பைக் காட்டுவதில் விரயமாகிக் கொண்டிருக்கிறது. தமிழனின் கையறுநிலைக்குக் காரணம் திராவிடம் பேசியது தான் என்ற விமர்சனப் போக்கு ஊடகங்களாலும் வளர்த்தெடுக்கப்படுகிறது. இந்திய ஆளுமை இந்த திராவிட - தமிழ் எதிர்ப்புகளில் குளிர்காய்ந்துக் கொண்டு தன் பார்ப்பன மேலாண்மையை சரியாகவே தக்க வைத்துக் கொள்கின்றது என்பதை தமிழினத் தலைவர்கள் உணர்ந்த மாதிரி தெரியவில்லை.

தமிழனைத் திராவிடன் என்றழைப்பது சரியா தவறா, தமிழன் திராவிடனா? இந்த சொல்லாராய்ச்சிகள், கல்வெட்டு ஆராய்ச்சிகள் ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் எந்த ஒரு மலையாளியாவது, தெலுங்கனாவது, கன்னடக்காரனாவது தன்னைத் திராவிடன் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறானா? தமிழன் மட்டும் ஏன் திராவிடன் என்று அடையாளப்படுத்திக் கொண்டான்? அதனாலேயே தமிழன் தாழ்ந்தான் என்று வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மேம்போக்காக மிகச் சரியானவை போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. காவிரி நதி நீர் தர மறுக்கும் கர்நாடகமும், முல்லைப் பெரியாறு நதிநீர் தர மறுக்கும் கேரளமும், நீர் ஆதாரத்திற்காக தமிழன் தொடர்ந்து இவர்களுடன் போராடிக் கொண்டிருக்கும் நிகழ்வுகளும் திராவிட எதிர்ப்பு நிலைக்கு இன்னும் வேகமூட்டி இருக்கின்றன. இவை அனைத்தும் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த சென்னை மாகாணத்தின் சரித்திர வரலாற்றை மறந்தவைகளாகவே இருக்கின்றன.

குறிப்பிடத்தக்க அளவில் தெலுங்கர்களும் மற்றும் கன்னடர்களும் வாழ்ந்த சென்னை மாகாணத்தில் பார்ப்பன‌ர்களின் எதிர்ப்பணியாக உருவாகிய அமைப்புக்குப் பெயர் வைப்பதில் ஆரம்பத்திலிருந்தே விவாதங்கள் நடந்திருக்கின்றன. பார்ப்பன‌ர் அல்லாதோர் சங்கமாக ஒன்றுகூடி, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்க எண்ணிய சென்னை மாகாணவாசிகளுக்கு திராவிடர் என்ற அடையாளம் மட்டுமே பொருத்தமாக இருந்தது. அதுவே அக்காலக்கட்டத்தின் தேவையாகவும் இருந்தது என்பதை திராவிடம் குறித்து குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள் எண்ணிப் பார்க்க மறந்து விடுகிறார்கள்.

"தொடக்கம் முதலே பார்ப்பனர் அல்லாதாருக்குத் தங்களை எப்படி அழைத்துக் கொள்வது என்பதில் குழப்பம் இருந்ததற்கு அன்றிருந்த சென்னை மாகாணத்தின் புவியியல் அமைப்பும் பார்ப்பனர் எதிர்ப்பு மனநிலையுமே காரணம். சென்னை மாகாணத்தில் பல மொழிகள் பேசும் மக்கள் உள்ள நிலையில் மொழி அடிப்படையில் திரள்வது சாத்தியம் ஆகாமல் போய்விட்டது. எனவே அனைத்து மக்களுக்கும் பொதுவான பெயர் தேவைப்பட்டது. அப்போது அவர்களுக்கு உதவியது 1856ல் கால்டுவெல் அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம் எனும் ஆய்வுநூல்" என்கிறார் எழுத்தாளர் கவுதம சக்திவேல். (தமிழ் தேசியத்தின் தந்தை பெரியார். பக் 4).

கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் வெளிவந்த பின் தென்னிந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் பல்வேறு நிலைகளில் ஆராயப்பட வேண்டியவை. கால்டுவெல்லின் ஆய்வு முடிவுகள் தமிழின எழுச்சிக்கு பெரிதும் ஊக்கமளித்தது என்பது அதன் நேரடி தாக்கம். அதன் எதிர்மறை தாக்கமோ வேறு சில விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை இன்றுவரை சமூகவியலாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை.

திராவிட மொழிகள் தனித்தியங்க வல்லன, ஆரியரின் வடமொழிக் கலப்பின்றி வாழ்ந்த மொழி, வாழும் மொழி, வாழும் இனம் என்று திராவிட மொழிக் குடும்பத்தை அடையாளப்படுத்திய ஆய்வு, திராவிட மொழி இனத்தின் சிறப்புகள் அனைத்தையும் இன்றுவரை தக்க வைத்துக் கொண்டிருக்கும் இனமாக, மொழியாக தமிழை மட்டுமே அடையாளப்படுத்த முடிந்தது. அதாவது திராவிட மொழிகளின் சிறப்பை தனித்துவத்தை உறுதி செய்த கால்டுவெல், அவை அனைத்தையும் கொண்டிருந்த தமிழ் மொழியை முன்னிலைப் படுத்தினார். தமிழ்ச் சமூகமும் அவருடைய ஆய்வுகளை உரத்த குரலில் பதிவு செய்தார்கள். விளைவு...? ஒரு குடும்பத்தில் தனி ஒருவனின் சிறப்பும் தனித்துவமும் முன்னிலைப் படுத்தப்படும்போது அதே குடும்பத்தைச் சார்ந்த அடுத்தவன் தன்னை இரண்டாம் நிலையில் வைத்து எண்ணிப் பார்க்கும் உளவியல் சிக்கலுக்குத் தள்ளப்படுகிறான். கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிக்காரர்களுக்கும் தங்களைத் திராவிட மொழிக் குடும்பத்தினர் என்று சொல்லிக் கொள்வதில் ஏற்படும் பெருமையை விட தமிழ் மொழி, தமிழர்களுக்கு அடுத்த நிலையில் தங்களை வைத்துப் பார்க்கும் உண்மையே சுட்டது; சிறுமைப் படுத்தப்பட்டதாக எண்ணவைத்தது.

கால்டுவெல்லின் ஆய்வு முடிவுகளை எதிர்ப்பதோ அல்லது முரண்படுவதோ முடியாத நிலையில் வெட்டிக் கொண்டு விலகிச் செல்வது எளிதாகவும் அவர்களுக்கு உகந்ததாகவும் இருந்தது. கன்னட, தெலுங்கு, மலையாள எழுத்துலக‌மாகட்டும், சிந்தனையாளர்களாகட்டும் இந்த விலகிச் செல்லும் மனப்பான்மைக்கு வித்திட்டார்களே தவிர, தங்கள் மொழியும், கலாச்சாரமும் திராவிட இனத்தின் கூறுகள் என்பதை முன்னிறுத்த முயலவில்லை. அம்மொழி பேசிய பொதுமக்களின் கருத்தும் வெட்டிக்கொண்டு விலகிச் செல்வதில் மட்டுமே ஆர்வம் காட்டியதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வெறுப்பு மனப்பான்மை தான் இன்றுவரை திராவிட இனத்தை அழிக்கும் உட்பகை. திராவிட நாடு கொள்கை, இந்திய நாட்டுக்கு ஒரு தேசமாக இல்லாத இந்திய தேசத்திற்கு என்றைக்குமே அச்சம் ஊட்டிய ஒரு கருத்துருவாக்கம். எனவே இந்த உட்பகையை வளர்த்தெடுப்பதில் இந்திய நடுவண் அரசு மிகக் கவனமாக இருந்தது, இருக்கிறது.

இசுலாமியர்களை இந்துக்களின் எதிரிகளாகக் காட்டி எப்போதும் இந்துத்துவ இந்தியாவைக் காப்பாற்றுவதில் கவனமாக இருக்கும் இந்திய அரசு நிறுவனத்திற்கு தென்னிந்தியாவில் இசுலாமிய எதிர்ப்பு என்ற நெருப்பில் குளிர்காய முடியவில்லை. இசுலாமிய அரசர்களின் படை எடுப்புகளால் வட இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புகளின் அளவுக்கு தென்னிந்தியா பாதிக்கப்படவில்லை என்பதையும் நினைவுகூர வேண்டும். திராவிட இனத்தார் ஒன்றுபடுவது என்பது, இந்தியா ஒரே நாடு என்ற இந்திய அரசின் கொள்கைக்கு ஆபத்தானது. மொழி ரீதியாகவும், இன ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், நிலப்பரப்பு வகையிலும் ஓரினம் ஒன்றுபடுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். எப்போது வேண்டுமானாலும் அது நடக்கலாம் என்பதால் திராவிட நாடு கொள்கைக்கு எதிராக இருப்பதில் இந்திய நடுவண் அரசை ஆண்ட காங்கிரசும், பிஜேபியும் ஒருமித்தக் கருத்துக் கொண்டவர்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

1953ல் ஆந்திரப் பிரதேசம் தனி மாநிலமானது. மாநில எல்லைகளை மறு சீரமைப்பு செய்ய அன்றைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு 1953 டிசம்பரில் நீதிபதி பாஷல் அலி தலைமையில் கமிட்டி ஒன்றை ஏற்படுத்தினார். திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தத்தம் மாநில எல்லைப் பரப்புகளுக்காக போராடினார்கள். அதாவது ஒருவருக்கு ஒருவர் வெளிப்படையாக எதிரணியில் நின்றார்கள். எந்த ஒரு தனிப்பட்ட மாநிலத்திற்கும் அவர்கள் கேட்டதெல்லாம் கொடுக்கப்படவில்லை, தமிழ் மாநிலமும் பல இடங்களை இழந்ததும், சில இடங்களை தக்க வைத்துக் கொண்டதும் நடந்து முடிந்த வரலாறு. இந்த மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட நிலையில் ஒட்டு மொத்தமாக திராவிட நாடு என்ற கொள்கை கேள்விக்குறியானதை எவரும் மறுக்க முடியாதுதான்.

"இப்போது எது திராவிட நாடு?" என்ற கேள்வியை தந்தை பெரியார் முன் வைத்தார்கள். "எல்லாம் பிரிந்தப் பின் இப்போது எஞ்சி நிற்கும் இன்றைய சென்னை மாகாணம் தான் புதிய திராவிட நாடு" என்று தீர்க்கமாகச் சொன்னவர் தந்தை பெரியார்.

"இதற்கு முன் (அதாவது 1956க்கு முன்) இருந்த சென்னை மாகாணத்தை நான் திராவிடநாடு என்று சொன்னேன். அப்பொழுது மலையாளம், கன்னடம், ஆந்திரம் பிரிந்திருக்கவில்லை. வெள்ளையன் இந்த நாட்டைவிட்டுப் போய்விட்ட பிறகு வட நாட்டானும் இந்த நாட்டுப் பார்ப்பானும் சேர்ந்து கொண்டு இனிமேல் நமக்கு ஆபத்து என்று கருதி நான்கு பிரிவுகளாக வெட்டிவிட்டார்கள். இப்பொழுது நம்முடன் மலையாள, கன்னட நாடுகளின் சம்பந்தமில்லாமல் தனித்தமிழ் நாடாக ஆகிவிட்டோம். ஆகவே இதை இப்போது "தமிழ்நாடு" என்று சொல்லலாம்" (விடுதலை 29.08.56) என்றார் தந்தை பெரியார்.

திராவிட நாடு திராவிடருக்கே என்ற விடுதலை ஏட்டின் வாசகங்கள் மாறி தமிழ்நாடு தமிழருக்கே என்று அச்சானது. கடைசிவரை தமிழ்நாடு தமிழருக்கே என்ற கொள்கையில் எவ்விதமான மாற்றமோ சமரசமோ செய்து கொள்ளவில்லை தந்தை பெரியார்.

அப்படியானால் திராவிடர் கழகம் என்ற பெயரை மாற்றி தமிழர் கழகமாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கலாமே என்ற கேள்வி எழும். தமிழரசு கழகம் என்ற பெயரில் ஏற்கனவே மா.பொ.சி ஆரம்பித்திருந்தது ஒரு காரணம் என்றால் பிறிதொரு வலுவான காரணம், தமிழன் என்ற அடையாளம் தமிழ் நிலப்பரப்பில் வாழும் பார்ப்பனர்களையும் உள்ளடக்கியதாகவே இருக்க முடியும். பார்ப்பனர்களை விலக்கி வைப்பது என்பது பார்ப்பன இன விரோதப்போக்கால் அல்ல. பார்ப்பனர்களின் சாதியக் கோட்பாட்டால் தான்.

பெரியாருக்கு ஆரம்ப காலத்திலேயே இது குறித்த அனுபவம் ஏற்பட்டது. அதுவும் பெரியார் காங்கிரசை விட்டுப் பிரிவதற்கு பெரிதும் காரணமாக இருந்த சேரன்மகாதேவி குருகுலத்தில் நிலவிய தீண்டாமையை எதிர்த்த பெரியாரை கருத்தியல் ரீதியாக எதிர்க்க திராணியற்ற பார்ப்பன அறிவுஜீவிக் கூட்டம் அவரைத் தமிழர் அல்லர் என்று சொல்லி விலக்கி வைத்து இழிவுபடுத்த முன்வந்தது. சேரன்மகாதேவி பார்ப்பனக் கொடுமையை முதன்முதலில் வன்மையாகக் கண்டித்து எழுதிய டாக்டர் வரதராஜலு நாயுடு தம் 'தமிழ்நாடு' இதழில் 12/10/1924ல் எழுதிய கட்டுரைக்கு எதிராக காங்கிரசில் பிரச்சனையை உருவாக்கிய வ.வே.சு. அய்யர் "தமிழ்நாட்டு விசயத்தைப் பற்றி ஆந்திரத் தேசத்தாரான ஒரு நாயுடுவும் (டாக்டர் வரதராஜுலு நாயுடு) கன்னடத் தேசத்தாரான ஒரு நாயக்கரும் (ஈ.வெ.ரா) கிளர்ச்சி செய்வது நமக்கு வெட்கமாக இல்லையா? ஆதலால் அவர்களது கிளர்ச்சியை ஆதரிக்கக் கூடாது" என்று சொன்னாராம்.

எந்தப் பிரச்சனையை அய்யர் எப்படி திசை மாற்றி இருக்கிறார்? என்பதைப் புரிந்து கொண்டால் திராவிடன் என்ற அடையாளம் தொடர்ந்ததன் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும். தமிழர் என்ற அடையாளத்திற்குள் பார்ப்பனர்கள் உள்நுழைய முனைந்ததால்தான், பெரியார் 'திராவிடர்' என்ற இன அடையாளத்தை உயர்த்திப் பிடித்தார்.

திராவிட நாடு பேசிய அமைப்புகளும் தலைவர்களும் தத்தம் கருத்துகளை தமிழ் மொழியில் மட்டுமே எழுதி வந்தார்கள். அவர்களின் எழுத்துகள் பிற திராவிட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற ஓர்மையும் அவர்களிடம் இல்லை. திராவிட மொழி இன மக்களை கலை இலக்கிய தளத்தில் ஒன்றிணைக்கும் முயற்சிகளும் நடந்ததாகவோ அதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. சென்னை மாகாணத்தில் வாழ்ந்த கன்னடர், தெலுங்கர், மலையாளிகளின் திராவிட அடையாளம், அதிகாரத்தை பார்ப்பனர்களிடமிருந்து தங்களுடையதாக்கிக் கொள்ளும் அரசியலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சமூக தளத்தில் இன ஒற்றுமைக்காக கொடுப்பதில் ஈடுபாடு காட்டவில்லை. திராவிடம் பேசிய தமிழர்களும் அம்முயற்சிகளைச் செய்யத் தவறி விட்டார்களோ என்ற அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

பெரியார் திராவிடம் பேசியதால் தான் தமிழ்நாடு தன் நிலப்பரப்புகளை இழந்தது என்கிறார்கள் சிலர். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அன்றைய சென்னை மாநிலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் காங்கிரசார். டில்லியில் நடுவண் அரசும் காங்கிரசுதான். ஆட்சியாளர்கள் பொறுப்பேற்க வேண்டிய குற்றச்சாட்டுகளுக்கு திராவிட கட்சிகளோ, தந்தை பெரியாரோ எப்படி காரணமாக முடியும்? எங்காவது அவர்கள் எதிராக குரல் கொடுத்தோ, பேசியதோ இல்லை.

அடுத்து, தமிழ்த் தேசியம் பேசியவர்கள் சமூக நீதித் தளத்தில் எந்த இடத்தில் நின்றார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அடிகள் சாதியம் குறித்து என்ன கருத்துகளை உதிர்த்தார்? ஒடுக்கப்பட்ட சகோதரர்களை குளித்து விட்டு தூய்மையுடன் கோவிலுக்கு வரச் சொன்னார்! குளத்திலும் கிணற்றிலும் தீண்டாமையை வைத்துக் கொண்டு குளித்துவிட்டு வரச்சொல்லும் தூயத்தமிழ்வாதிகளை என்ன சொல்வது?

தமிழரசு கழகம் ஆரம்பித்த மா.பொ.சி. அவர்கள் சமஸ்கிருத மேலாண்மையை ஏற்றுக் கொண்டவர் என்பதுடன் அவர் எப்போதும் தனித்தமிழ் நாடு கேட்டவரில்லை. தனித்தமிழ் நாடு கோரிக்கை தமிழரசு கழகத்தின் நோக்கமும் அல்ல என்பதை அவர் இந்து நாளேட்டிற்கு எழுதிய கடிதம் உறுதி செய்துள்ளது. அக்கடிதத்தில் மேலும் இம்மாதிரி பிளவு முயற்சிகளை எதிர்ப்பதற்காகவே தமிழரசு கழகம் தொடங்கப்பட்டது என்றும் சொல்லி இருக்கிறார்.

இன்னொருவர் சி.பா. ஆதித்தனார். தமிழ்ப் பேரரசு என்று பேசினார். ஆழிசூழ் தமிழ்ப் பேரரசு என்று கனவு கண்டார். அவரும் கடைசிவரை தன் கொள்கையில் மாறாமல் தமிழ்த் தேசியவாதியாக இல்லை. அரசியல் கட்சியில் இணைந்தார். ஆழிசூழ் கனவுகள் கடல் அலையில் சிதைந்த மண்குடிசைகளாகிப் போனது.

தமிழன் என்று தன் பத்திரிகைக்குப் பெயர் கொடுத்த சிந்தனையாளர் அயோத்திதாசர், சுயசாதி அபிமானத்தினால் ஒட்டுமொத்த தமிழர்களையோ, ஏன் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களையோ இணைக்க முடியாத யதார்த்த நிலையை எவராலும் மறுக்க முடியாது.

திராவிட அவதூறுகள் பற்றி பட்டியலிடுபவர்கள் தேவதாசிகள் ஒழிக்கப்பட்டதால் தாய்வழிச் சமூகம் சிதைக்கப்பட்டதாகவும், தமிழரின் நடனக்கலை அழிக்கப்பட்டதற்காகவும் வருத்தப்படுவது பெரியாரின் தமிழ்த் தேசியத்தை இவர்கள் எதிர்ப்பதன் நுண் அரசியலையும் சேர்த்தே புரிய வைத்துள்ளது.

தந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் மொழியை மட்டுமோ அல்லது தமிழ் மண்ணை மட்டுமோ முன்னிலைப் படுத்திய தமிழ்த் தேசியம் அல்ல. தமிழ் மக்களை முதல் நிலையில் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியம். பெரியாரின் தமிழ்த் தேசியக் கோட்பாட்டில் சாதிய எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு இரண்டுமே இரு கண்கள். இந்தக் கோட்பாட்டில் தந்தை பெரியார் கடைசிவரை எவ்வித சமரசமும் செய்து கொள்ளவில்லை. பெரியாரை எதிர்ப்பவர்களுக்கு அவருடைய இந்த சமநீதிக் கோட்பாடு தான் ஒவ்வாமையை ஏற்படுத்தி இருக்கிறது.

திராவிட மொழிகளின் தலையாய ஒருமைத் தன்மையானது தாழ்த்தப்பட்ட சாதிகளையும் உள்ளடக்கிய இன ரீதியான ஒருமைத் தன்மையையும் மெய்ப்பிக்கிறது என்ற கால்டுவெல்லின் சமூகவியல் ஆய்வின் முடிவு சாதியம் கெட்டிப்பட்டுப் போன தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்புடையதாக இல்லை. அதனால் தான் கால்டுவெல்லை மேடையில் முழங்கியவர்கள் முதல் பல்கலைக் கழகத்தில் கற்பித்த பேராசியர்கள் வரை கால்டுவெல்லின் ஒப்பிலக்கணத்தை மறுபதிப்பு செய்யும்போது "தென்னிந்தியாவைச் சார்ந்த பறையர்கள் திராவிடர்களா?" என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த கட்டுரையையும் அக்கட்டுரைக்கான தரவுகளையும் நீக்கிவிட்டு மறுபதிப்பு செய்து வந்தார்கள். ஓர் ஆய்வுக்கட்டுரையில் பறையர்களும் திராவிடர்கள் தான் என்ற உண்மையை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள், பெரியார் தமிழ்த்தேசியத்தின் சாதி எதிர்ப்பையும் பெண்ணடிமைத்தன எதிர்ப்பையும் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். பெரியாரை தமிழ்த் தேசியத்தின் எதிரியாக சித்தரிப்பவர்களின் அடிப்படை நோக்கத்தைப் புரிந்து கொள்வதும், புரிய வைப்பதும் சமூக அக்கறை கொண்டவர்களின் கடமையாக இருக்கிறது.

- புதிய மாதவி, மும்பை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It