ஆசியாவின் தேசிய இனப் போராட்டத்தில் மிக சிக்கலான தேசப்பரப்பையும், சமரசமில்லா போராட்டக் களத்தினையும் கண்டிருக்கும் குர்தீஸ் விடுதலைப் போராளிகள் குழு, உலகமயமாக்கலுக்கும், இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்பான பயங்கரவாத அரசுகளின் செயல்பாட்டின் நடுவில் தமது தீரமிகு போராட்டத்தினை தக்கவைத்து முன்னகரும் தீர்க்கமான போராட்டக் குழுவாக அறியப்படுகிறது. இதன் பல்வேறு போர்க்களங்கள் பல்வேறு நாடுகளிடையே, பல்வேறு ஆதிக்க வடிவத்தினை எதிர்த்து நடத்தும் போராட்ட வடிவங்களும், அரசியல் நகர்வுகளும் தேசிய இனப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானதாக நாங்கள் பார்க்கிறோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் உட்பட ஆசிய கண்டத்தினை இன்று ஆட்டிப் படைக்கும் தேசிய இனவிடுதலைப் போராட்டங்களை உலகம் அங்கீகரிக்க வேண்டிய சூழலை உருவாக்கிய இரு பெரும் விடுதலை போராட்டங்களாகிய தமிழீழமும் குர்திஸ்தானும் வரும் காலங்களில் வரலாற்றுப் பாடமாக உலகினை நாகரீகமடையச் செய்யும் என்பதில் எமக்கு சந்தேகம் இல்லை. தமக்குள் ஓர் ஓர்மையை உருவாக்குவதும், சர்வதேசம் பற்றிய புரிதலை, மதிப்பீடுகளை வடிவமைப்பதும், தமக்குள் அங்கீகாரங்களை ஏற்படுத்துவதும் இன்றியமையாததாகக் கருதிய குர்தீஸ் இனப் போராளிகளுக்கு தமிழினம் தமது மரியாதையைச் செலுத்துகிறது. வரும் காலத்தில் இரண்டு சுதந்திர நாடுகளும் ஒரு பெரும் உறவை வளர்த்தெடுக்கும் என்பதை நாங்கள் நம்பிக்கையுடனேயே பார்க்கிறோம்.
 
இத்தகைய வரலாறு உடைய குர்தீஸ் போராளிகளுக்கு இன்று நிகழ்ந்திருக்கிற வன்முறை எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. பிரான்சு நாட்டின் தலை நகரில் மிகவும் கோழைத்தனமாக படுகொலை செய்யப்பட்ட அதன் மூத்த தலைவர்களின் ஒருவரான தோழர்.சாக்கின் கன்சிஸ் (Com. Sakine Cansiz) அவர்களுக்கும் அவருடன் சேர்ந்து கொலை செய்யப்பட்ட தோழர்களான தோழர்.பிடான் டோகன், தோழர். லேய்லா சொய்லெமெஸ் (Com.Fidan Dogan, Com.Leyla Soylemez) ஆகியயோருக்கும் மே பதினேழு இயக்கம் தனது வீரவணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறது.

குர்தீஸ் போராளிக் குழுவை உருவாக்கியவர்களில் ஒருவரும் அதன் மூத்த தலைவராக இருப்பவருமான தோழர்.சாக்கின் கன்சிஸ் சிறையில் இருந்தபடியே 80களில் குர்திஸ் போராட்டத்தினை வழி நடத்தியவர். விடுதலையான பிறகு குர்தீஸ் விடுதலைப் போராளிகளின் தலைவராக இருக்கும் அப்துல்லா ஒகலானுடன் சிரியாவில் இணைந்து பெண் போராளிகளின் தலைவராக செயல்பட்டு வடஈராக்கில் போராட்டம் நடத்தியவர். அதன் பின்னர் சனநாயக வழியில் ஐரோப்பாவில் குர்தீஸ் விடுதலை போராளி பெண்களுக்கான இயக்கத்தினை வழி நடத்தியவர்.

தோழர்.பிடான் டோகன் பாரிஸ் நகரில் இருந்து பிரெஸ்ஸல்ஸ் நகரில் செயல்படும் குர்திஸ்தான் தேசிய காங்கிரஸின் உறுப்பினர். அரசியல் செயல்பாட்டாளராக ஐரோப்பாவில் செயல்பட்டவர். குர்திஸ் போராளிகளின் மீதான தடையை நீக்க அரசுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்.

தோழர். லேய்லா சொய்லெமெஸ் மிக இளவயது குர்தீஸ் விடுதலை ஆதரவாளர்.

இந்த தோழர்களின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையானது பிரான்சு நாட்டில் தற்போது நிலவிவரும் போராளிகளுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தினை உறுதி செய்வதாகவே தோன்றுகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் பாரிஸ் நகரில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ செயற்பாட்டாளர் தோழர். பரிதி அவர்களின் படுகொலையினை பிரான்சு அரசாங்கம் கவலைக்குரிய செயலாக கண்டு எச்சரிக்கையடையாமல் இருந்த மெத்தனமே தற்போது நடைபெற்ற இந்த படுகொலைகளுக்கு காரணம் என்று அஞ்சுகிறோம். இது போன்ற நிகழ்வுகள் பிரான்சு அரசாங்கத்தின் மீதான சனநாயக ஆற்றல்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்கின்றன. இத்தகைய சனநாயகமற்ற நாகரீகமற்ற நிகழ்வுகளுக்கு பிரான்சு மக்கட்சமூகம் தனது எதிர்ப்புகளை கடுமையாக பதிவு செய்யும் போது மட்டுமே அதன் முற்போக்கு சித்தாந்த வரலாற்றினை வலுவுள்ளதாக மீள கட்டியமைக்கும்.

விடுதலைக்குப் போராடும் இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்களாக முத்திரையிடும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரைவேக்காட்டுத்தனமான, ஏகாதிபத்திய மக்கள் விரோதப் போக்கினை கண்டிக்க ஐரோப்பிய சனநாயக, முற்போக்கு சக்திகள் முன்வரவேண்டும். தமிழீழ விடுதலைப் போராளிகளை இவ்வாறு தடை செய்ததை டப்ளின் தீர்ப்பாயம் கண்டித்திருந்ததை இச்சமயத்தில் நினைவு கூற விரும்புகிறோம். விடுதலைக்காகப் போராடும் இயக்கங்களை ஒடுக்குவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இது சனநாயகத்தின் படுகொலை என்றே நாங்கள் பார்க்கிறோம். சார்த்தர் போன்ற சிந்தனையாளர்களை உருவாக்கிய நாட்டில் நிகழ்ந்த இந்தப் படுகொலையை எந்த ஒரு நாகரீகச் சமூகமும் ஏற்காது.

இதே கணத்தில், இந்தச் செய்தியை பிரசுரிக்கும் மேற்குலக பத்திரிக்கைகள் பி.பி.சி போன்றவை துருக்கிய அரசுக்கும் குர்தீஸ் போராளிகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதலினால் 20,000 மக்கள் கொல்லப்பட்டார்கள் என பொத்தாம் பொதுவாக இருவரையும் சமமானவர்களாகவும், குற்றவாளிகளாகவும் சித்தரிப்பது கண்டிக்கப்பட வேண்டியது. உலகின் எந்த ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமும் ஆளும் அரசுகளினால் தமது மக்கள் ஒடுக்கப்படும்போதும், கொல்லப்படும்போதும் தான் உதயமாகின்றன என்கிற வரலாற்று எதார்த்தத்தினைப் புறம்தள்ளுவதாக இருக்கிறது. இதனை நேர்மையான பத்திரிக்கை அறமாக மே பதினேழு இயக்கம் பார்க்கவில்லை. இது போன்ற நேர்மையற்ற பத்திரிக்கைச் செய்திகளை வெளியிட்டே இந்தியாவின் ‘தி இந்து’ போன்ற பத்திரிக்கைகள் தமிழீழத்தில் இனப்படுகொலை நடக்க உதவின என்பதை மேற்குல இதழாளலர்கள் மறந்து விடக்கூடாது.

குர்தீஸ் போராட்ட தோழர்கள் இந்தப் பின்னடைவில் இருந்து விரைவில் மீண்டு தமது விடுதலையை விரைவில் அடைவார்கள் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

மூன்று குர்தீஸ் போராளித் தோழர்களின் தியாகத்தினை மே பதினேழு இயக்கம் போற்றுகிறது. தமிழீழ விடுதலைக்கும் தமது ஆதரவு குரல் கொடுத்த இந்த சமரசமற்ற சனநாயகப் போராளிகளுக்கு தலைதாழ்த்தி வீரவணக்கம் செலுத்துகிறது
 
- மே பதினேழு இயக்கம்

Pin It