சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு பற்றி பலரும் பல்வேறு கோணத்தில் விவாதத்தை எடுத்து வைத்துள்ளனர். இந்த கட்டுரையில் விவசாயம் சார்ந்த உணவுப் பொருட்கள் மற்றும் இதர நுகர்வுப் பொருட்களில் மேலை நாடுகளில் பெரு நிறுவனங்களின் தாக்கம் பற்றியும் இந்தியாவில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றியும் விவாதிப்போம். உணவுப் பொருட்கள் மற்றும் பிற வாணிபப் பொருட்களை வேறுபட்ட கோணத்தில் பார்ப்பது முக்கியம்.

walmart_protests_448

1.சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டினால் நுகர்வோருக்கு குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்கும் என்பது ஒரு முக்கிய வாதமாகும். மிகப் பெரிய நிறுவனங்கள் பல்வேறு நிலைகளில் உள்ள இடை தரகர்களை ஒழித்து திறமை வாய்ந்த விநியோகச் சங்கிலியை உருவாக்கி நுகர்வோருக்கு குறைவான விலையில் உணவுப் பொருட்களை கொடுப்பர் என்பது வாதமாகும். ஆனால் உண்மையில் நடக்கப் போவது அதீதமான முதலீட்டின் மூலம் ஆரம்ப காலத்தில் குறைந்த விலையில் (நஷ்டம் ஏற்பட்டால் கூட) உணவுப்பொருட்களை விற்க ஆரம்பித்து, பிற சிறு கடைகளை மூடிய பின், போட்டிகளற்ற நிலையில் பழைய விலைவாசியை நோக்கி போகத்தான வாய்ப்பு அதிகம் உள்ளது.

அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளின் வர்த்தகம் முழுமையாக தற்போது பெரு நிறுவனங்களிடம் தான் உள்ளது. ஆனாலும் ஒரு சில ஆசிய மற்றும் ஆப்ரிக்க கடைகள் அந்தந்த குறிபிட்ட மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய சிறு கடைகளை வைத்துள்ளனர். மேலே குறிப்பிட்ட வாதத்தில் உண்மை இருக்கும் என்றால் அந்த சிறு கடைகளில் காய்கறிகளின் விலை அதிகமாகவும் பெரு நிறுவனங்களில் விலை குறைவாகவும் இருக்க வேண்டும். இரண்டு கடைகளிலும் கிடைக்கும் பொதுவான காய்கறிகளான தக்காளி, பீன்ஸ், காரட், வெள்ளரி, லெட்டியூஸ், கொத்தமல்லி, காளான் மற்றும் திராட்சை, மாதுளை, செர்ரி போன்ற பழங்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் உங்களுக்கு ஆச்சர்யம் தான் மிஞ்சும்.

மேலே குறிப்பிட்ட அனேகமான காய்கறி மற்றும் பழங்களின் விலை இந்திய மற்றும் ஆசியக் கடைகளில் 50 முதல் 100 விழுக்காடு குறைவாக இருக்கும். அதனால் எந்த ஒரு இந்தியரும் இந்திய மற்றும் ஆசிய (சிறு) கடைகளுக்கு தான் காய்கறிகளை வாங்கச் செல்வர். இதற்கு சில விதி விலக்குகளும் இருக்கலாம். பொதுவாக இந்திய மற்றும் ஆசியக் கடைகளில்தான் காய்கறி மற்றும் பழங்களின் விலை குறைவாக இருக்கும்.

2.சில நேரங்களில் காய்கறிகளை அதிக கொள்முதல் செய்து விட்டாலோ அல்லது அதன் சேமிப்புத் திறன் முடியும் நிலை வந்தாலோ அந்த காய்கறி/பழங்களை முழுமையாக விற்று விட தள்ளுபடி விலையில் பெரு நிறுவனங்கள் விற்கும் போது அதன் விலை உண்மையிலேயே குறிப்பிடும் அளவில் குறைவாகவே இருக்கும். இது ஜவுளி மற்றும் பிற பொருட்களுக்கும் பொருந்தும். இந்த அளவு விலைக் குறைப்பை சிறு கடைகளில் எதிர்பார்க்க முடியாது.

3.பெரு நிறுவனங்களால் மேலை நாடுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய ஆபத்து காய்கறி மற்றும் பழங்களின் பன்முக தன்மை (diversity) அழியத் தொடங்கியதுதான். நாடு முழுவதும் ஒரே வடிவமைப்பு மற்றும் சுவையை கொடுக்கக்கூடிய, குறைந்த விலையில் உற்பத்தி செய்யக்கூடிய மற்றும் அதிக நாள் சேமித்து வைக்கக் கூடிய காய்கறி/பழங்களின் வகைகள் தேர்வு செய்யப்பட்டு அவை மட்டுமே அனைத்து கடைகளிலும் விற்கப்படும். இதனால் நுகர்வோர் பல்லாயிரக்கணக்கான சுவைகளை இழக்கிறார்கள். இந்தியாவில் இந்தக் கலாச்சாரம் தொடங்கி விட்டாலும் பெருநிறுவனக்களின் வருகை இதை வேகமாக்கி நிரந்தரமாக்கும்.

4.பெரு நிறுவனங்களின் லாபத்திற்கு முக்கிய காரணி அவர்களுடைய மிக நீண்ட உலகளாவிய உணவுச் சங்கிலி மற்றும் நீண்ட கால குளிர் பதன சேமிப்பு முறைகளும் ஆகும். அதன் விளைவு நுகர்வோருக்கு fresh காய்கறி மற்றும் பழங்கள் கிடைப்பது அரிதாகிவிடும். அது மட்டுமன்றி உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வேதிப் பொருட்களின் பயன்பாடும் அதிகரிக்கும்.

5.சிறு மற்றும் பெரு விவசாயிகளைக் கொண்டு ஒரே மாதிரியான வடிவமைப்பு, தரம் கொண்ட காய்கறி, பழங்களை உற்பத்தி செய்வது என்பது இயலாத காரியம். அதன் விளைவு மேலை நாடுகளில் சிறு மற்றும் பெரு விவசாயிகளிடம் இருந்து காய்கறி உற்பத்தி ஒரு சில மாபெரும் நிறுவனங்களிடம் சென்றது. சிறு மற்றும் பெரு விவசாயிகள் முற்றிலும் விவசாயத் தொழிலில் இருந்து வெளியேறினர். உதாரணமாக அமெரிக்காவின் ஒட்டு மொத்த கேரட் உற்பத்தியில் 85% போல்ட்ஹவுஸ் மற்றும் மற்றொரு நிறுவனத்திடம் உள்ளது. மேலைநாடுகளில் விவசாயத்தை நம்பி இருந்த குறைந்த மக்கள், வளர்ந்த பொருளாதாரத்தினால் கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட சேவைத் துறை மற்றும் பிற தொழில் துறைகளில் வேலை தேடிச் செல்ல முடிந்தது. ஆனால் இந்தியாவில் இந்த நிலை ஏற்பட்டால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கப் போகும் பல கோடி மக்களுக்கு இந்தியாவின் பிற துறைகள் வேலை கொடுத்து காப்பாற்றுமா என்பது கேள்விக்குறியே.

6.சில்லரை வர்த்தகத்தில் முழுமையான அன்னிய முதலீட்டினால் ஏற்படப் போகும் மற்றொரு முக்கிய தாக்கம் விவசாயம் சாராத பிற பொருட்களின் உற்பத்தியில் ஏற்படக் கூடிய தாக்கம் ஆகும். பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்தின் அடிப்படையே மலிவாக பொருளை உற்பத்தி செய்யும் நாடுகளில் பொருட்களை கொள்முதல் செய்து, பிற நாடுகளில் குறிப்பிட்ட லாபம் வைத்து அந்நாட்டுப் பொருட்களின் உற்பத்தி செலவை விட குறைத்து விற்பதாகும். அதன்படி நாணய மதிப்பு குறைவாக உள்ள அண்டை நாடுகள் அல்லது அரசு ஆதரவோடு குறைந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய சீனா போன்ற நாடுகளில் உற்பத்தியாகும் பொருட்கள் பெரிய அளவில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு இந்திய தொழிற்துறை மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சீனாவில் மலிவாக உற்பத்தி செய்தால் இந்தியாவில் அதையே பின்பற்ற வேண்டியது தானே என்ற கேள்வி எழக்கூடும்.

சீனா தொழிற்துறைக்குத் தேவையான மூலப் பொருட்களை எல்லாம் குறைந்த விலையிலும் தடையில்லாமலும் கிடைக்க ஆப்ரிக்க, தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா என அனைத்துக் கண்டங்களிளும் உள்ள நாடுகளில் தொடர்பை ஏற்படுத்தி, உற்பத்தியை கையகப்படுத்தி உள்ளது. அது மட்டுமன்றி சிறு, பெரு மற்றும் மாபெரும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. அதற்கும் மேலாக தெளிவான திட்டமிடல் மூலம் தொழிற்சாலை வெற்றிகரமாக இயங்க உதவுகிறது. அதுமட்டுமன்றி பெருமளவு நேரடி மற்றும் மறைமுக மானியமும் கொடுக்கிறது. அப்படிபட்ட சீன தொழிற்துறையோடு எந்த அடிப்படை கட்டமைப்பு வசதியும் இல்லாத நிலையில் ஒரு நாளுக்கு 2 மணி நேரம் மட்டும் மின்சாரம் பெற்று இயங்கிக் கொண்டிருக்கும் இந்திய தொழிற்துறை போட்டி இட முடியுமா என்பது கேள்விக்குறியே. ஏற்கனவே விவசாயத் துறையில் வேலை இழந்து இருக்கும் மக்களுடன் இந்த தொழிற்துறை வேலை இழப்பும் சேர்ந்துகொண்டால் மிகப் பெரிய சமூகப் பிரச்சனையாக உருவெடுக்க வாய்ப்புள்ளது..

7.மேலை நாடுகளில் தற்போது வட்டியில்லா கடனுக்கு கிடைத்த முதலீட்டுடன் வரக்கூடிய பெரு நிறுவனங்களுடன், கந்து வட்டிக்கு வாங்கி பிழைப்பை நடத்தும் இந்திய சிறு வியாபாரிகள் போட்டியிடக் கூடிய நடைமுறை சாத்தியம் இல்லை.

8.பன்னாட்டு பெரு நிறுவனங்கள் உலகளவில் பரந்து இருப்பதால் அவர்களுடைய நிகர விற்பனை மதிப்பு மிக அதிகம். இந்த நிறுவனங்கள் ஆரம்பத்தில் சில வருடங்கள் மிகக் குறைந்த விலையில் நட்டத்திலேயே பொருட்களை விற்று சந்தையில் பெரு விழுக்காட்டை அடைய முடியும். அதன் பிறகு போட்டி இல்லாத நிலையில் அதிக விலையில் மீண்டும் வியாபாரத்தைத் தொடர முடியும்.

9.தற்போது சில்லரை வர்த்தகத்தில் மொத்த விற்பனையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வட நாட்டு சாதியினரிடமும் சில்லரை வர்த்தகத்தில் ஒரு குறிபிட்ட சதவீதம் தமிழக சாதியிடனரிடமும்தான் உள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டினால் இந்த நிலை மாறி, கல்லூரி படித்த பல்வேறு பிரிவினருக்கு அந்தத் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பிருக்கும். இட ஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்தும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கல்வி கற்ற அனைத்து சாதியினரும் பயனடைவர். ஆனால் பெரும்பான்மை வடமாநிலங்களில் கல்வி வாய்ப்பு கிடைத்த உயற்சாதியினர் மட்டுமே பயனடைவர். அதே நேரத்தில் தற்போதைய அமைப்பு அதிக முதலாளிகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அன்னிய நேரடி முதலீடு பெருமளவில் தொழிலாளிகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

10.பன்னாட்டு பெரு நிறுவனங்களின் வருகையால் உயர் நடுத்தர மற்றும் உயர் வர்க்க மக்கள் விரும்பும் பிராண்டேட் நுகர் பொருட்கள் ஒரளவு மலிந்த விலையில் தங்கு தடையின்றி கிடைக்க வாய்ப்புள்ளது.

11.ஏற்கனவே அதிகரித்து வரும் ஏற்றுமதி - இறக்குமதிக்கான பற்றாக்குறை, இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது இந்தியாவின் பெரும பொருளியிலில் (macroeconomic) மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆரம்ப காலங்களில் கிடைக்கும் சிறிய அளவு அன்னிய முதலீட்டிற்கு ஆசைப்பட்டு நீண்ட காலத்தைய பேரழிவிற்குக் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.

என்னதான் பொதுமக்கள் இது பற்றி விவாதித்தாலும் மத்திய அரசின் முடிவு இறுதியானதாக இருப்பதால் பொதுமக்கள் குறைவான பாதிப்புடன் எப்படி தப்பிப்பது அல்லது அதிக பயனடைவது என்று விவாதிக்கவும் திட்டமிடலைத் தொடங்கவும் நேரம் வந்தாயிற்று.

- சதுக்கபூதம்

Pin It