மொதக் கொழப்பம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் அவர்களே வணக்கம். தங்களது பேட்டி ஒன்றை தொலைக்காட்சியில் பார்க்கும் அரும்பெரும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன். உங்களது பேச்சில் முத்தாய்ப்பாக ஈர்த்த விசயம் ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும்.

thaa_pandian_360"நல்ல வேளையாக எனது பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் எங்கள் வளர்ப்பின் காரணமாக விஞ்ஞான கண்ணோட்டம் கொண்டவர்களாக உள்ளார்கள். அணு உலையை அதனால் உறுதியாக ஆதரிக்கிறார்கள்" என்று சொன்னீர்கள்.

வரவர விஞ்ஞானம் என்றால் என்னவென்றே தலைசுற்றுகிறது தலைவா?

அமெரிக்கா ஓர் அணுகுண்டுக்கு ‘சின்னப்பையன்’ என்று பெயர் வைத்து அதை ஜப்பானின் தலையில் போட்டு சோதித்ததே அந்த சோதனை விஞ்ஞானம் தானா?

ஈழத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் குண்டுவீசி மறையும் ‘கிபிர்’ விமானங்கள் விஞ்ஞானம் தானா?

இனத்தையே கொத்துக்கறி போட்ட ஹிட்லரின் நாஜிமுகாம்கள் விஞ்ஞான சோதனைக்கூடங்கள் தானா?

அணுஉலை..........................??? நீங்க சொல்றதால சத்தியமா அது விஞ்ஞானம் தான்.

முட்டைக்குள் ஆசிட் ஊத்தி அடிப்பதும் விஞ்ஞானம் தானா தலைவா?

எனக்கு ஸ்கூல்ல இப்படியெல்லாம் சொல்லிக் கொடுக்கல. எங்க வாத்தியார் இப்படியெல்லாம் திகில் திகிலா சொல்லிக் கொடுத்தரல. ஆனா நீங்க சொல்லித்தரதுல நல்ல திகில் இருக்கு தலைவா?

எங்க டீச்சரம்மா, செடி ஒண்ண குடுவைக்குள் வச்சு சூரிய ஒளியில வைக்கணும். அது நல்ல உயிர் காத்துத் தரும்னு சொல்லித் தந்தாங்க. மண் புழுவக்கூட கொல்லக்கூடாதுன்னு சொல்லித் தந்தாங்க. ஆனா லட்சம் பேர் செத்துச் சுண்ணாம்பானாலும் விஞ்ஞானம் விஞ்ஞானம் தாண்டான்னு கம்பா நின்னு விளக்குறீங்க பாருங்க: இந்த திகில் தான் தலைவா பள்ளிக்கூடத்துல இல்ல. அதான் எது விஞ்ஞானம்னு ஒரெ கொழப்பமா இருக்கு.

ரெண்டாங்கொழப்பம்

யுக்ரைன் நாட்டில் உள்ள செர்னோபிளில் அணுஉலை ஒண்ணு வெடிச்சு விபத்து நடந்துச்சு. செர்னோபிள் அணுஉலை என்று அது பலரால் அழைக்கப்பட்டிருந்தாலும் அந்த அணுஉலையின் பெயர் உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. அது ‘விளாடிமிர் இலியிச் லெனின் அணுஉலை’.

உலகில் முதலாளிகள் உள்ளிட்ட அனைத்து மனிதர்களையும் சொத்துடைமையின் கேடுகளிலிருந்து விடுவித்து இந்த பூமியை மானுடப்பூக்காடாக மாற்றுவதற்காக சரித்திரத்தைப் புரட்டிப்போட்ட மாபெரும் புரட்சியாளன் லெனின். அவனது பேரில் அணுஉலைகட்டி அதை வெடிச்சு உருவாக்கிய மாபெரும் விஞ்ஞான காண்டத்தை உங்கள் குழந்தைகளுக்கு நுரைக்க நுரைக்க விளக்கிப் புரியவைத்துள்ளீர்களே! சே! நிக்கிற தலைவா நிக்கிற!

உங்களின் ஆஸ்தான தலைவர் ரஷ்ய அதிபர் கோர்பச்சேவ் அதிபராக இருக்கும்போது நடந்த விபத்து அது. அவர் சொன்னால் அதை விரும்பிக் கேட்பீர்கள் என்று ஊர்பக்கம் சொன்னார்கள்.

“எத்தனை ஆண்டுக்காலம் இந்த பாதிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கும்? 800 வருடம்.. எண்ணூறு வருடம்.... எவ்வளவு காலம் இது? இரண்டாம் யேசு கிறிஸ்து பிறந்து அவர் மீண்டும் உயிர்த்தெழும் வரையா? செர்னோபிள் எங்களுக்கு மிகப்பெரிய பாடம் சொல்லிக் கொடுத்துள்ளது. செர்னோபிள் அதன் கொடிய இயல்பைக் காட்டி விட்டது. உலகளவில் சர்வதேச முகமைகளை அமைத்துப் பாதுகாப்பான ஆற்றல் தேடலை முடுக்கிவிட வேண்டும். அதுவே அத்தியாவசியம்" என்றார் அதிபர்.

தற்போது அதிபர் தன் பதவிகாலத்திற்குப் பிறகு செர்னோபிளால் சிதைக்கப்பட்ட குழந்தைகளை வைத்துப் பராமரித்து வருகிறார்.

இப்ப கொழப்பம் என்னன்னா, அதென்ன பதவி போனா அறிவு வருது.! அறிவு வந்தா பதவி போயிருமா.. நம்ம கட்சியில இருக்கவுக எல்லாம் அறிவும் பதவியும் ஒண்ணா சேந்தவுகளாத்தான இருப்பாக தலைவா?

மூணாங்கொழப்பம்

திடீர்னு ஒரு ஆளு நம்ம காதுபட பேசிகிட்டு இருக்கான். “காரல்மார்க்ஸ் முதலாளித்துவச் சுரண்டலுக்கு இணையான கேடாக முதலாளித்துவ உற்பத்தியின் அராஜகத்தை அடையாளப்படுத்தினார். அதாவது முதலாளிக எல்லாம் பொருள் விக்கணும், நெறயா விக்கணும்னு தான் உற்பத்தி செய்றான். மக்களுக்கு எந்தளவுக்குத் தேவையின்னு திட்டமிட்டுச் செய்யுறதுல்ல. இப்படி நெறயா நெறயான்னு உலகம்பூராம் முதலாளிகள் கிளம்பி தாறுமாறா உற்பத்தி செஞ்சு குவிக்கிறான். ஆனா அதையெல்லாம் வாங்க வேண்டிய சனங்களோட கூலிய மட்டும் முடிவே இல்லாம கொறச்சுக்கிட்டே போறான். இதையெல்லாம் எந்த அரசாங்கமும் கண்காணிக்கிறது இல்ல. எங்க கல்லா நெறஞ்சா போதும்னு விட்டுர்றாங்க. இதனால தேவையில்லாம நெறயா பொருள் வருது. உலகமுழுக்க தேவையில்லாத பொருளுற்பத்தியும் வீணடிப்பும் அதனாலதான் நடக்குது. ஆதனால தான் தேவையில்லாத ஆற்றல் வீணடிப்பு நடக்குது. எரிபொருள் தட்டுப்பாடு மின்தட்டுப்பாடு அதிகரிக்குது" என்று பேசிக்கிட்டே போறான்..

கேட்டுக்கிட்டிருந்த நீங்க கண்சிவந்து கொப்பளிக்கிறீங்க. ‘இதென்னயா பிரமாதம் இத நான் கதையாவே சொல்லுவேன் வாயா’ன்னு ஒரு தட்டு தட்டுறீங்க.

நீங்கள் இப்போது கதை சொல்ல தயாராகி விட்டீர்கள். இப்போது ஒரு உண்மைக்கதை என்ற தலைப்புடன் நீங்கள் சொல்லும் கதை தமிழகம் எங்கும் ஒரு அசரீரியாகக் ஒலிக்கத் தொடங்குகிறது.

‘ஒரு ஊர்ல குட்டி பாப்பா ஒருத்தி, அப்பா எனக்கு சட்ட வேணும் வாங்கித்தாப்பா’ன்னு கேக்குறா.

அப்பாவோ, ‘கையில் காசு இல்லம்மா அப்பறம் வாங்கித்தாரே'ங்கிறான்..

அந்தக்குட்டி.. 'போங்கப்பா.. ஏமாத்தாதீங்க.. ஒழுங்கா வாங்கித்தாங்கப்பா’ன்னு அடம்பிடிக்கிறா.

அப்பா, ‘இல்லம்மா சொன்னா கேளு.. காசு இல்ல’ன்னு சொல்லிப்பாத்தான்.. அவ கேக்குறதா இல்ல..

குட்டி, ‘ஏம்பா காசு இல்ல’ன்னு அடுத்தக் கேள்வியத் தொடுக்குறா..

‘அப்பாவுக்கு வேலயில்லாம போச்சும்மா, அதான்’கிறான்..

குட்டி, ‘ஏம்பா வேல இல்ல’ங்குறா..

அப்பன, ‘கம்பெனிய மூடிட்டாங்க.. அதான்’கிறான்..

குட்டி, ‘ஏம்பா மூடிட்டாங்க’ங்கிறா..

அப்ப அப்பன்காரன் சொன்னாம்பாரு ஒரு பதிலு..

‘நெறயா துணி தேங்கிக்கெடக்கு அதனால மூடிட்டாங்கம்மா’ன்னான்.

அந்தக்குட்டிக்கு கண்ணு வட்டமடிக்குது.. அவ கேட்டா.

‘இது என்னப்பா அநியாயமா இருக்கு.. எனக்கு துணி இல்ல.. அதுக்குக் காரணம் அங்க துணி நெறயா தேங்கிக் கெடக்குறதுனாலதான்னு சொல்றீங்க’..ன்னா..

‘இது கத இல்ல.. விடுகத. கண்டுபுடிங்க. யாரு கண்டுபிடிக்கிறீங்களோ அவங்களுக்கு செகப்புச் சட்ட வாங்கித்தாரேன’னு சொல்லி முடிக்கிறீங்க..

அதே ஆளு திரும்பவும் நம்ம காதுபட ஆரம்பிக்கிறான்..

"ஒவ்வொரு நாளும் இப்படி பொருள் தேக்கம் இல்லாம இல்ல. எந்தவகையிலும் மக்களின் தேவைய அறிஞ்சி திட்டமிடாம முதலாளிகளின் லாபவெறியால் தீர்மானிக்கப்படும் முதலாளித்துவ உற்பத்திமுறை, பொருட்களைக் கணக்கில்லாம வீணடிக்கிது. அதோட சேந்து எல்லா எரிபொருள் ஆற்றலையும் மின்சாரத்தையும் சேர்த்து வீணடிக்குது.. இதைத்தான் காரல்மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தியின் அராஜகம்னு சொன்னார்.. அதவிட்டுப்புட்டு மின்சாரம் பத்தல.. வளர்ச்சிநின்னு போகும்னு முதலாளிக பேசுறத அப்படியே வாங்கி வாயில போட்டு வாந்தியெடுத்தாலோ தான் கம்யூனிஸ்டுன்னு யாராவது சொல்லிக்கிட்டாளோ.. அந்தாள கூப்பிட்டு சட்டையில காங்கிரசுக் கொடியையும் பி.ஜே.பி. கொடியையும் சேர்த்துக் குத்திவிடு"ன்னு.. பேசிக்கிட்டே போறான்.

இந்த இடத்துல நிறுத்துவோம் தலைவா..

எனக்கு மறுபடியும் ஒரு கொழப்பம் தலைவா.. அந்தாளு இப்ப சொன்னதெல்லாம் உண்மையிலேயே காரல்மார்கஸ் சொன்னதுதானா? இல்லன்னா ஒங்க விஞ்ஞான பாகவதர் பட்டத்த கெடுக்குறதுக்காக விஷமிகள் பரப்புற புரளியா?

நாலாங்கொழப்பம்

புத்தமகான் சொன்னாராம்..

‘இந்த உலகத்தில் உள்ள மக்களுக்கெல்லாம் அவர்களின் தேவையைப் போக்க செல்வம் இருக்கிறது.. ஆனால் ஒரு தனியாளின் பேராசையைத் தீர்க்க இந்த உலகமே போதாது’ என்று..

இங்கிலாந்து துணி ஆலைகள் கக்கிய துணிகளை வித்துத் தீர்க்கத்தான் இந்தியாவில்; பிரிட்டிஷ் அரசு ஆயிரக்கணக்கான நெசவாளர்களின் கட்டைவிரல்களை வெட்டி எறிஞ்சுது.. சந்தைகளைப் பிடிக்க உலகப்போர்களே வெடிச்சுது.. கோடிக்கணக்கான மக்கள் செத்து மடிஞ்சாங்க.. போர்வெறி தீராம அணுகுண்டு போட்டாய்ங்க.. அந்த அணுகுண்டெல்லாம் இப்புடி மின்சாரம் தயாரிக்கிறோம்னு டகால்ட்டி விட்டுத்தான் எல்லா நாட்டுலயும் உற்பத்தி செஞ்சாங்க..

இந்தப் படிக்காத இடிஞ்சகரை கூட்டம் ஒண்ண தெரிஞ்சுவச்சிக்கிட்டு உசுர எடுக்குதுக.. அதாவது அணுஉலையில மின்சாரம் எடுக்குறதே பக்கவிளைவுதானாம். எப்படியும் அணுகுண்டுக்கு புளுட்டோனியம் எடுக்கணும்னா இப்ப இருக்குற மாதிரி உலைஎல்லாம் கட்டி எல்லா வேலையும் செஞ்சுதான் எடுக்கணுமாம்.. இடம் கொடுத்து தண்ணி கொடுக்குற பயலுக எங்களுக்கு ரெண்டு அணுகுண்டு குடுங்க தீவாளி, புத்தாண்டுக்கு போட்டுக்குறோம்னு கேப்பாய்ங்கன்னுட்டு, ஒங்களுக்கு கரண்டு தர்றோம்’னு தாக்காட்டுறதுக்குத்தான் ஒரு கொப்பறய வச்சு மின்சாரம் தயாரிக்கிறாய்ங்களாம். இப்ப நம்ம கூடங்குளத்துலயும் எறங்கிட்டாய்ங்கன்னு சத்தாய்க்கிதுக..

அடாவடியா எல்லா வளங்களயும் சூறையாடுறது. அதுக்காக போர்நடத்துறது. அப்புறம் "தேச வளர்ச்சிக்காக எல்லாம் செய்யுறோம்"னு ஏமாத்துறது.. அதனாலதான் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தின்னு சொல்லிருக்காக.

thapa_jaya

இதெல்லாம் ஒங்களுக்குத் தெரியாதது இல்ல. நம்ம மக்க இதெல்லாம் தெரிஞ்சா அப்பறம் வெட்டுக்கத்தியையும் வேல்கம்பையும் தூக்குவானா இல்லையா? அவங்க பக்கம் நிக்காம நீங்க என்னடான்னா “ஒண்ணு அணுஉலைய சீக்கிரமா தொறக்குற வேலைய பாருங்க இல்லன்னா எதிர்ப்புதான் அதிகமாகும்"னு ஐடியா கொடுக்குறீங்க. இந்த ஐடியாதான் அம்மாவுக்கும் தெரியும்.. ஐயாவுக்கும் தெரியும்ல.

ஏந்தலைவா? என் கொழப்பம் என்னன்னா இப்புடி நீங்க அவுங்க ஐடியாவா பேசி பேசித்தான் கடைசியில ‘எல்லாம் ஒரு ஐடியாதான்’னு முடிவுபண்ணி அவுகளுக்கே ஓட்டுப்போட்டுர்றாகளோ. நம்ம தோழர்களும் ‘ஐடியா மட்டுமில்ல ஐடியாலஜியும் ஒண்ணுதான்’னு முடிவுபண்ணி ஐயா கட்சிக்கே போயிர்றாகளோ? அப்புறம் நீங்க கலைஞர் கட்சிய ஒடைக்கிறார்னு முகம் கடுக்க பேட்டி கொடுக்குறீங்க. ஆனது ஆச்சு தலைவா கலைஞர் கட்சிய ஒடைக்கிறார்னு சொல்றத விட்டுப்புட்டு.. கொஞ்சம் மாத்தி இணைக்கிறார்.. இணைக்கிறார்னு சொன்னா என்னவாம்?

அஞ்சாங்கொழப்பம்

‘2004ல் இந்தியாவில் வீணான உணவுப்பொருளின் மதிப்பு மட்டும் 58 ஆயிரம் கோடிகள். உலகில் உற்பத்தியாகும் உணவுப்பொருளில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுகிறது.’ தல, நான் விஞ்ஞான பாகவதரோட வீம்பா வெளயாடுறதா நினைக்காதீக. நான் சொல்லல, ஐ.நா சபையோட உணவு மற்றும் விவசாயக்கழகம் சொல்லுது. இப்படி வீணான உணவுப்பொருள் உற்பத்திக்கு செலவிடப்பட்ட பணம், மனித உழைப்பு, மின்சாரம் மற்றும் எரிபொருள் எவ்வளவு?

இது மட்டுமில்லாம, இப்படி தொழிற்துறையில வீணடிக்கப்பட்டது எவ்வளவு? இதே போல் சேவைத்துறையில் வீணடிக்கப்படும் ஆற்றல் எவ்வளவு? இப்படி உலகம் முழுவதும் இந்தியா முழுக்க, தமிழகம் முழுக்க வீணடிக்கப்படும் ஆற்றல் எவ்வளவு?

செல்போன் மின்னேற்றியின் முனையை ஒரே வடிவத்தில் உலகம் முழுக்க வடிவமைத்துப் பயன்படுத்தினால் ஆகக்கூடிய பொருள் மிச்சம் எவ்வளவு? பொருளாதார மிச்சம், ஆற்றல் மிச்சம் எவ்வளவு என்பதை கற்பனை செய்வோம்.

இதை நம்ம நாட்டுத் தொழில்களின் கோடிக்கணக்கான பிரிவுகளில் புகுத்தினால் நாம் சேமிக்கக் கூடிய ஆற்றல் எவ்வளவு. இதை ஒவ்வொருவகை பொருளுக்கும் பொருத்திப் பார்த்துச் சரிசெஞ்சா உலகத்துல உற்பத்தியாகும் ஆற்றல் இன்னும் பலநூறு தலைமுறைகளுக்குப் போதும் போதும். ஆக அடிப்படைப் பிரச்சனை மின்தட்டுப்பாடல்ல. அது லாபவேட்டையர்களின் திருகல் வேலைகள் தான்.

முதலாளித்துவ உற்பத்திமுறையின் அராஜத் தன்மையை ஒழிக்காமல் ஆற்றல் வீணாவதைத் தடுக்க முடியாது. மனிதர்களை, விலங்குகளை, இயற்கை வளங்களைக் கொள்ளையிடாமல் முதலாளித்துவ முறையால் பிழைத்திருக்க முடியாது. இந்த சூறையாடலுக்கு நாம் துணைபோனால் நாளைக்கு ஒவ்வொரு வார்டிலும் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் அணுஉலை தொடங்க வேண்டுமென்பார்கள்.

இப்படியெல்லாம் ஒரே பேச்சா பேசி கொதிச்சிக்கிறாங்களே.. ஏன் தலைவா நான் ஒண்ணு கொழம்பித்தான் கேக்குறேன். பஞ்சாயத்து போர்டுல அணுஉலை கட்டுனா அதுக்குக் கூட்டுறவுச் சங்கம் கட்டுவமா? அதுல எலக்ஷன் வந்தா அப்பவாவது தனியா நிப்பமா?

ஆறாம் அறிவு

பக்கத்து விழுப்புரம் மாவட்டம் வெம்பிக்கிடக்கும் போது சென்னை ஏன் உலகத்திற்கே கார் தயாரிக்க வேண்டும். பக்கத்துல தாராபுரம் தோலுரிஞ்சு கிடக்கயில திருப்பூர் ஏன் உலகத்திற்கே பனியன் தயாரித்து அதற்குச் சாயம்போட வேண்டும் என்ற கேள்விகளை பாட்டாளி மக்கள் எழுப்பக் கற்றுத் தருவதுதான் நமது பணி என்று போர் முழக்கம் செய்வீர்கள் என்று பார்த்தால் படிக்கிறது மார்க்சியம், இடிக்கிறது நம்ம இடிந்தகரைய மாதிரியில்ல இருக்கு ஒங்க பேட்டி.

ஒரு முறை லெனின் ஒரு தோழர் கிட்ட சொன்ன கதையிது. ‘தோழரே தொழிலாளிககிட்ட போயி நான் ஒங்களுக்கு ஒரு ரூபா அதிகமா வாங்கித் தருவேன் ரெண்டு ரூவா அதிகமா வாங்கித் தருவேன்னு சொன்னீங்கன்னா அப்ப அவர் சொல்லுவார்.. தோழரே அதுதான் எங்களுக்குத் தெரியுமே. ஏன் நாங்க இப்படி ஒரு ரூபாய்க்கும் ரெண்டு ரூபாய்க்கும் மாரடிக்க வேண்டியிருக்குங்கறத விளக்குங்க! இப்படி இருக்குற ஒரு சமூக அமைப்ப எப்படி மாத்துறதுன்னு சொல்லுங்கன்னு சொல்லுவாரு" என்று சொன்னாராம்.

ஓங்க கிட்ட முதலாளிகளே வந்து ஐயா நாங்கதான் வளர்ச்சி வளர்ச்சின்னு கூப்பாடு போட்டு பொழப்பு நடத்துறோம்.. இதுல நீங்க வேற ஏயா போட்டிக்கு வாரீங்கன்னு கேக்குற வரைக்கும் ஒங்க சேவைய நிறுத்த மாட்டீங்க போல இருக்கே.

தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க, தி.மு.க ஆட்சிக்காலங்களில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக எந்த முன்திட்டமும் இல்லாமல் கார்ப்பரேட்களையும் பன்னாட்டு நிறுவனங்களையும் அனுமதித்ததன் விளைவாக மின்பற்றாக்குறை வந்ததா? அல்லது வேறு எதனால் வந்தது? நேற்றுவந்த நிறுவனங்களுக்காக காலகாலமாக இந்த மண்ணையும் மக்களையும் வளப்படுத்தி வரும் வேளாண்குடிகளையும் சிறு தொழில் செய்வோரையும் மின்சாரமில்ல இருட்டில் தள்ளுவது எந்த ஊர் நியாயம், இந்த கட்சிகளுக்கு தாங்கள் மாறி மாறி பல்லக்கு தூக்கியதை நான் ஏத்துக்கலாம் தலைவா. ஆனா ஊர் ஏத்துக்குமா?

அப்புறம் லெனின் மின்சாரத்தால் தான் தொழிற்புரட்சியும் சமூக வளர்ச்சியும் சாத்தியமுன்னு சொன்னார்னு சொல்லி பழைய ஏடுகள புரட்டி விடுறீங்க.. சரிதான். ஆனா என்னமோ "என்ன செய்வையோ எப்புடி செய்வையோ தெரியாது, எண்ணி 7 நாள்ல தொழிற்புரட்சி நடக்கணும்"னு தமிழ் சினிமா வில்லன் சொல்றதுபோல அவர் சொன்னது மாதிரியில்ல வரிஞ்சுகட்டி குதிக்கிறீங்க.. அவர் அணுஉலை மூலமாதான் தொழிற்புரட்சியும் சமூக வளர்ச்சியும் வரும்னு சொன்னது போல டுமீல் விடுறீங்க.

அப்பறம் அந்த அமெரிக்க சதி பத்தி....

ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியா பைப் பதிச்சு பெட்ரோலிய வாயு கொண்டு வர்ற ஒப்பந்தத்த அமெரிக்கா சொன்னதால ஒழிச்சுக் கட்டியவர்தான் நம் பாரதப் பிரதமர் மன்மோகனார்.. அமெரிக்கா சொன்னதால தன்கட்சியின் பெட்ரோலியத்துறை அமைச்சரான மணிசங்கர் ஐயரையே பதவிபறித்தவர்;. ஜார்ஜ பெர்ணான்டஸ், சாருக்கான்.. நம்ம அப்துல்கலாம்னு எல்லாத்தையும் டவுசர கழட்டி சோதனை போட்டப்ப "செய்யுறத பாத்துச் செய்யுங்கய்யா"ன்னு நம்ம சாலமன் பாப்பையா கணக்கா சொல்றவகதான் நம்ம பிரதமரு..

அவர் மூலமா ஆகாதது அமெரிக்காவுக்கு என்ன இருக்கு.. அமெரிக்காவோட 123 - அணு ஒப்பந்தத்த நிறைவேற்ற தன் ஆட்சியையே இழக்கத் துணிஞ்சாரு.. நீங்க சந்து பொந்துக்குள்ள அமெரிக்க சதிய தேடித்திரியிரீங்க.

தலைவரே இப்ப எனக்குத் தலையே சுத்துது. யார் நல்லவன் யார் கெட்டவன்னே தெரியல. நீங்க ஒரு கம்யூனிஸ்டு அணுஉலை வேணும்கிறீங்க.. அமெரிக்காகாரன் முழு முதலாளித்துவவாதி அவன் அணுஉலை இனிமேல் எங்க நாட்டுல கட்டமாட்டேங்கிறான்.. கண்ணுல ஒரே பொகமூட்டமா தெரியுது. அணுஉலை வந்தாதான் வளர்ச்சி வளர்ச்சின்னு சொன்னீங்களே அப்ப அமெரிக்காகாரன் வளர வேணாம்னு முடிவு பண்ணிட்டானா?

நீங்க அணுஉலைய ஆதரிக்கிறது.. முதலாளித்துவத்த எதுக்குறது.. வளர்ச்சியப்பத்திப் பேசுறது.. புரட்சியப் பத்தி பொதுக்குழுவுல சொல்லி புரியவைக்கப் போராடுறது எல்லாம் எங்கேயோ இடிக்குதே தலைவா!

நம்ம கட்சி இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சின்னு சொல்றீங்களே.. நான் சின்னப்புள்ளையுள எழுத்துக்கூட்டி வாசிக்கும் போது கட்சிப் பேர இந்திய காங்கிரஸ் கட்சின்னு வாசிச்சுப்புடுவேன். அப்ப தப்பு தப்புன்னு சொல்லுவாங்க.. எனக்கென்னமோ இப்ப சரிதான் சரிதான்னு படுது..

முடிவா ஒண்ணு சொல்லிக்கிறேன் தலைவா.. விஜயகாந்தோட கூட்டணிக்கு அலைபாயுறீங்க பாருங்க.. அடடடா! ஒனக்கு அணுஉலை நெஞ்சு தலைவா! இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நீங்க ஒருத்தர் போதும் தலைவா ஒருத்தர் போதும்.

- தங்கப்பாண்டியன், மதுரை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

22 comments

22
PUTHIYA DRAVIDAN
அய்யா, தங்கப்பாண்டியன் தலைவர் அவர்களே, பின்னி பெடலெடுத்து, பெண்டு நிமித்தி, ஒரு வழி பண்ணிட்டிங்களே, வாழ்க தலைவா?
iniyan
அருமையான கட்டுரை தா.பாண்டினுக்கு தங்கபாண்டியன் எழுதியமை பாராட்டுக்குரியது
நலங்கிள்ளி
கட்டுரையாளரின் நகைச்சுவை உணர்வு அருமை. தா. பாண்டியனின் போலி கம்யூனிசத்தை இதை விட நையாண்டி செய்ய முடியாது
மனோகரன்
"பிறந்த நாள் அன்று வீட்டிற்கு வந்து வாழ்த்து தெரிவித்த தமிழக முதலைமச்சர் செல்வி செயலலிதாவிற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்."
சென்னை நகரில் பிரதான இடத்தில் இது போன்ற ஒரு பதாகை CPI உறுப்பினர்களால் வைக்கப்பட்டிருகிறது.
நடராசன்.கி
அருமை...மிக மிக அருமை...
அறிவியல்...தா.பா. பற்றிய உண்மையான விமர்சனம்,கோபம் சிறப்பாக வெளிப்பட்டு உள்ளது..வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
Maulian
அருமையான கட்டுரை. போ.கா. கொ.ப.செ.வுக்கு சரியான சாட்டையடி!- மௌலியன்
சௌமி. மதுரை
தங்கப்பாண்டி நீங்க சொல்ற விசய்ம் அருமையா இருக்கு, ஆனா நீங்க சொல்லியிருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பொருந்தாது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில இருக்குற போலி கம்பூனிஸ்ட் (அதான் ஐக்கிய பொதுவுடைமை கட்சி தலைவர்)
தா,பாண்டியனுக்கு மட்டும் தான் பொருந்தும்.

இந்த போலிகளை அடையாளம் கண்டு அம்பலப்படுத்த வேண்டுமே தவிர சிவப்பு துண்டு போட்ட ஆளெல்லாம் கம்யூனிஸ்ட் அல்ல, அதில் ஒரு ஆள் தான் தா,பாண்டியன்
உண்மையான கம்யூனிஸ்ட்கள் இதை உணர்ந்து கொண்டுதான் தா.பாண்டியன் நடவடிக்கை பிடிக்காமல் கொத்துக் கொத்தாய் வெளியேறி வருகிறார்கள்,
மயிலைநாதன். மதுரை
போலி கம்யூனிஸ்ட் தா.பாண்டியன் முகமூடியை கிழித்தெறிந்துள்ள தங்கப்பாண்டியனுக்கு நன்றி.
மாநிலங்களைவை உறுப்பினர் பதவிக்காக சிபிஐ கட்சியையே காவு கொடுக்கும் தா.பாண்டியன் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல.
பரிமளா
எது அறிவியல் வளர்ச்சி, முதலாளித்துவ அராஜகம் செய்யும் தேவையற்ற பொருள் உற்பத்தி, அணு உலை ஆபத்து பற்றி கோர்பசேவ் எச்சரிக்கை என்று கடைசியில் மன்மோகன் அரசு அமெரிக்க, இந்திய முதலாளிகளுக்கான அரசு என்பதை கூறி கம்யுனிஸ்டு என்று சொல்லிகொள்ளும் தா.பா.வின் உண்மை முகத்தை நகைச்சுவையோடு வாசகர்களுக்கு புரிய வைத்த விதம் அருமை.வாழ்த்துக்கள் தோழர்.
RATHNAVELU
வாழ்த்துக்கள்.
புவிமைந்தன்
ஆழமான கருத்துகளை எளிமையாகவும், நையாண்டித்தன்மையுடனும் ,சிறப்பாக்கக் கூறியுள்ளீர்கள். போலிக் கம்யுனிஸ்ட் தா. பா.வை இதை விடச் சிறப்பாக அம்பலப்படுத்தி விடமுடியாது. வாழ்த்துகள்!
soosai raj
Congrats! It is an excellent write up which all of us should read and make others to read and discus it with other people. This is the way we should keep our people being educated about the politicians and their double game they play taking all of us for granted. This would pave the way for the people to teach a lesson to our politicians and thus become the true agents of the desired social change in our society.
kulothungan
ヌஅய்யா.. இந்திய போலி கம்யூனிஸ்ட் முகங்கள் நிறைய இருக்கின்றன. போலி கம்யூனிஸ்ட்கள் பலரால் தான் இந்தியாவில் பொதுவுடைமை சித்தாந்தம் இல்லாமல் போய்விட்டது. சமீபத்தில் அன்வர் பாலசிங்கம் என்ற எழுத்தாளர் எழுதிய செந்நீர் புத்தகத்தில் அடிமட்டத் தொண்டர்களையும் கூலித்தொழிலாளர்களையும் ஏமாற்றிப் பிழைக்கும் கம்யூனிஸ்ட் தலைகளை பற்றி தெளிவாக விளக்கியுள்ளார்.
thangapandian
இடிந்த கரையில் காங்கிரஸ் பி.ஜே.பி. கொடியுடன் கம்னிஸ்ட் கொடியும் மக்கள் காலில் போட்டு மிதித்தனர். இதை உண்மையான கம்னிஸ்ட் யாரவது பார்த்தால் கண்களில் ரத்தம் வழியும். உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களால் போற்றப்பட்ட கொடி மிதிபடுவதை ஒரு வேலை தா.பாண்டியன்/ காரத் வகையறாக்களால் தான் பார்க்க முடியும். அவர்கள் கொடுமையாக ஒடுக்க படும் பொது முதலை கண்ணீர் வடிக்க முடியும்.
Pothuvudaimai
முதல் குழப்பம்: எது விஞ்ஞானம்?
//வரவர விஞ்ஞானம் என்றால் என்னவென்றே தலைசுற்றுகிறது தலைவா?
அமெரிக்கா ஓர் அணுகுண்டுக்கு ‘சின்னப்பையன்’ என்று பெயர் வைத்து அதை ஜப்பானின் தலையில் போட்டு சோதித்ததே அந்த சோதனை விஞ்ஞானம் தானா?
ஈழத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் குண்டுவீசி மறையும் ‘கிபிர்’ விமானங்கள் விஞ்ஞானம் தானா?
இனத்தையே கொத்துக்கறி போட்ட ஹிட்லரின் நாஜிமுகாம்கள் விஞ்ஞான சோதனைக்கூடங்கள் தானா?
அணூலை..........................??? நீங்க சொல்றதால சத்தியமா அது விஞ்ஞானம் தான்.//

கத்தியும் விஞ்ஞானமே; கோடாரியும் விஞ்ஞானமே; அணு உலையும் விஞ்ஞானமே! இப்ப பிரச்சனை யார், எதற்காக இவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்பதே! துப்பாக்கி அழிவு சக்தி அதனால் நாங்கள் துப்பாக்கியால் சுட்டால் வாங்கிக் கொள்வோம் என்று பிதற்ற நாங்கள் காந்தியின் அடிமைக்கள் அல்ல. ஆக்க சக்தியாக பயன்படும் இடத்தில் (புரட்சியில்) துப்பாக்கியும் பயன்படுத்த வேண்டும் என்று கோரும் மா-லெ-மாவோ வழி வந்தவர்கள். ஏகாதிபத்தியங்கள் அணுகுண்டுகள் வைத்திருக்கும் வரை, நாமும் (மூன்றாம் உலக நாடுகளும்) அணுகுண்டு வைத்திருக்க வேண்டும். புரட்சியாளன் எதற்கு, எந்த நேரத்தில் ஆயுதம் வேண்டும் என்று கோருகிறானோ, அதே காரணத்தினால்தான் அணுகுண்டும் வேண்டும் என்று கூறுகிறோம்.

13000 கோடி மூலதனம் போட்டு மின்சாராத்தை தயாரிக்க அவர்களென்ன மூடர்களா? இந்த ஆளும்வர்க்க கும்பலுக்கு இதைவிட குறைந்த செலவில், அதீத இலாபம் தரும் காற்றாலைகள் பற்றியும், சூரிய மின்சக்தி உற்பத்தியை பற்றியும் தெரியாதா? ஏன் காற்றாடிகளையும், சூரிய தகட்டையும் விற்பவர்கள் எல்லாம் தேசிய முதலாளிகளா?... அந்த உற்பத்தியிலும் பன்னாட்டு கம்பெனிகள்தானே விற்று இலாபம் பார்க்கிறது. அப்ப ஏன் இந்திய ஆளும்வர்க்கத்திற்கு அணு உலைகள் தேவைப்படுகிறது!!
ஒன்று - குறைந்த பாதிப்பில், விலை குறைந்த மின்சாரம்;
இரண்டு - அணு குண்டு. இன்னும் பல உட்பிரிவுகள் உள்ளன.

//யுக்ரைன் நாட்டில் உள்ள செர்னோபிளில் அணூலை ஒண்ணு வெடிச்சு விபத்து நடந்துச்சு. செர்னோபிள் அணூலை என்று அது பலரால் அழைக்கப்பட்டிருந்தாலும் அந்த அணூலையின் பெயர் உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. அது ‘விளாடிமிர் இலியிச் லெனின் அணூலை’.// - அணு உலை விபத்து:
உலகில் நடக்கும் எல்லா விடயக்களையும், ஒரு பகுதியளவில் மட்டுமே பார்த்து முடிவெடுப்பதின் குறைப்பாடு இது. செர்னோபில் உலை விபத்து முதன்முதலில் நடந்த விபத்து. எந்த முதலாளித்துவ விஞ்ஞானமும் விபத்துகள் இல்லாமல் முன்னேறியது இல்லை. அதன் பிறகு நிறைய பாடங்கள் கற்கப்பட்டுவிட்டது. இந்த விபத்தில் 25000 பேர் இறந்ததாக கணக்கை ஏற்றி அன்றைய சோவியத் எதிர்ப்பு நிலைப்பாட்டுடன் ஏகாதிபத்திய அரசுகள் கொக்கரித்தது. ஒரு வாதத்துக்காக அதையே உண்மையாககொள்வோம். மூன்று மைல் தீவிலும், புகுசிமாவிலும் விபத்து ஏற்பட்டபோது மாபெரும் உயிர்சேதம் ஒன்றுமில்லை. இன்றுவரை உயர்ந்தபட்ச உயிரிழப்பாக சொல்வது 2500 பேர். இனிவரும் காலத்தில் இன்னும் 5000 பேர் இறக்கக்கூடும் (இதுவே அதீதமாக பீதியூட்டம் நிறுவனத்தின் தகவல்) என்று கொள்வோம். ஆக மொத்தம் 7500 பேர். விபத்தை விதியாகக்கொள்ள முடியாது. ஆனால் இவர்களின் வாதப்படி இதை ஏற்றுக்கொண்டாலும்கூட ஒரு வருட நிலக்கரி சார்ந்த அனல்மின்சாரம் சுற்றுச்சூழல் கேடால் உலகமுழுவதும் 10 லட்சம் பேர் கொல்லப்படுகின்றனர். சாலை விபத்துக்களில் லட்சக்கணக்கானோர் இறப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாபெரும் அணு உலை விபத்தால் ஒரு சில ஆயிரம் இவர்களுக்கு பெரியதாக தெரிகிறது. பின்னர் கதிர்வீச்சு தலைமுறை கடந்து தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற வாதம். ஏகாதிபத்தியத்திய உற்பத்தியை கட்டிசேவையில் மன்மோகன் கும்பலை மிஞ்சும் மார்க்சிய

//ஒவ்வொரு நாளும் இப்படி பொருள் தேக்கம் இல்லாம இல்ல. எந்தவகையிலும் மக்களின் தேவைய அறிஞ்சி திட்டமிடாம முதலாளிகளின் லாபவெறியால் தீர்மானிக்கப்படும் முதலாளித்துவ உற்பத்திமுறை, பொருட்களைக் கணக்கில்லாம வீணடிக்கிது. அதோட சேந்து எல்லா எரிபொருள் ஆற்றலையும் மின்சாரத்தையும் சேர்த்து வீணடிக்குது.. இதைத்தான் காரல்மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தியின் அராஜகம்னு சொன்னார்//
ஏகாதிபத்திய உற்பத்தி முறை மக்களின் அனைத்து வாழ்வுத்துறையிலும் நெருக்கடி ஏற்படுத்துகிறது. இந்த உற்பத்திமுறையின் ஒரு விளைவை (சுற்றுச்சூழல் கேட்டை) மட்டும் வைத்து போராடுவது முதலாளித்துவம் முடிவற்றது என்று அங்கீகரித்து முதலாளித்துவ உற்பத்தி முறையில் கோரும் சீர்த்திருத்த வாதமே, நிலவும் முதலாளித்துவ உற்பத்தியை கட்டிக்காப்பதே. இது ஏகாதிபத்தியத்தின் செயல்தந்திரம். ஏகாதிபத்திய உற்பத்தி உறவை எதிர்த்து மக்களின் போராட்டங்களை ஏகாதிபத்திய எதிர்ப்பற்றவகையில், முதலாளித்துவ உற்பத்திகெதிராக மாற்றாமல் முதலாளித்துவ உற்பத்திக்குள் சீர்திருத்த்த்தை கோருவது. அதவாது சோசலிசப் புரட்சியும், முன்றாம் உலக நாடுகளின் புதிய ஜனநாயகப்புரட்சியின் பக்கம் மக்களை அண்டவிடாத முயற்சி. உலகெங்கும் இதுபோன்ற போராட்டங்கள் பல இடங்களில் இன்றும் நடந்துவருகின்றது. அதாவது முதலாளித்துவ உற்பத்திமுறைக்குள் சுற்றுச்சூழல் கேடற்ற உற்பத்தியை கோரும் சீர்திருத்தவாதம். லாபவெறியால்தான் சுற்றுச்சூழல் கேடே வருகிறது. தனியார்மயத்தால்தான் சுற்றுப்புறச்சூழல் கேடுவிளைகிறது. இந்த உற்பத்தி உறவின் மாற்றத்தில்தான் நாம் மனித சமூகத்திற்குத்தேவையான இயற்கையையும், மனித சமூகத்தையும் காக்க முடியும். ஆனால் இது உங்கள் அகநிலையில் நிலவும் போராட்டம் அல்ல. எதார்த்தத்தில் இம்மாதிரியான போராட்டங்கள், ஒரு ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கையும், ஆதிக்கத்தையும் நிலை நிறுத்தும் போராட்டமாகவே உலகெங்கும் அமைகிறது. இதற்கு “அமெரிக்க பொருளாதார அடியாளின் கதை” என்ற புத்தகத்தில் அமெரிக்க ஏஜெண்ட் எழுதியதை படியுங்கள், பின்பு உங்கள் பாத்திரத்தை நீங்களே அறிவீர்கள். அணு உலை விபத்தால், அதிகபட்சம் 10,000 பேர் (தலைமுறையாக பாதிக்கப்படுபவர்களையும் கணக்கில் சேர்த்துத்கொள்ளப்பட்டுள்ளது. உண்மையில் சில நூறுகள்கூட இறக்கவில்லை புகுசிமாவில்.) இறப்பதை மாபெரும் உயிரிழப்பாக பேசும் நீங்கள், ஏன் நிலக்கரியின் இயக்கத்தை முன்னிறுத்தி பார்க்க மறுக்கிறீர்கள். ஏகாதிபத்திய உற்பத்திமுறை அவைகள் இயங்குவதாலேயே ஒரு வருடத்திற்கு உலகெங்கும் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் புற்று நோயாலும், பல்வேறு உடல் நலக்கேடாலும் இறக்கிறார்கள் என்று விக்கி லீக்கில் உள்ளது. வெறும் அந்த பாதிப்பு மட்டுமே இல்லை. அதிலிருந்து வரும் சாம்பல் கதிர்வீச்சு தண்மை கொண்டது. இது அணு உலை கதிர்வீச்சைவிட அதிகம் வெளியிடக்கூடியது. இதுவும் தலைமுறை தாண்டிய பிரச்சனைத்தான். சாதாரண சாலைவிபத்தில் ஒரு வருடத்திற்கு பொய்ப்புரட்டு சொல்லும் தரகுமுதலாளித்துவ கும்பலே 1,50,000 பேர் இறப்பதாக கூறுகிறது. இதெல்லாம் இணைத்து ஒரு விடயத்தை முழுமையாகப்பாருங்கள். ஏகாதிபத்தியத்தின் உற்பத்தியின் கீழ் உணவே விசமாக மாற்றப்பட்டுள்ளது. உண்மையான ஆரோகியமான உணவு தானியங்கள், காய்கறி வகைகள் போன்ற அனைத்தும் அழிக்கப்பட்டு வருவதுமட்டுமின்றி, அதை உட்கொள்ளும் மக்களுக்கு புற்று நோய்முதற்கொண்டு அனைத்தும் விதமான நோய்களும் வருகிறது. உலகம் முழுவதம், ஏன் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தலைமுறைகளைத்தாண்டி நாசம் விளைவிக்கும் ரசயானங்களை கழிவுகளாக வெளியிடப்படுகிறது. சாய ஆலைகளில் வரும் கழிவுகள் பல நதிகளை மாசுப்படுத்தி, நாடுமுழுவதும் பெரும்பான்மையான நீர் ஆதாரத்தை ஏற்கெனவே மாசுபடுத்திவிட்டது. சுற்றப்படுத்த நினைத்தாலும் பல தலைமுறைகள் அதற்கு போராடவேண்டியே ஆகவேண்டும். அதைப்போல் ரசாயனக் கழிவுகளின் காரணமாக மிகத் தீவிரமாக காற்று மண்டலம் மாசுபட்டதால், மாபெரும் பிரச்சனையானயாக வெப்பம் அதிகரித்துவிட்டது. அதனால் மாபெரும் இயற்கைச்சீற்றங்கள் ஏற்படுவதாக கூறி, சுனாமியையும், புயல், வறட்சி மற்றும் வெல்லங்களால் இலட்சக்கணக்கான அளவுக்கு உயிர்சாதம் ஆண்டு தோறும் நடைபெறுகிறது. உங்கள் கருத்துப்படி இதை தடுக்கவும் பல தலைமுறைகள் நாம் உழைக்கவேண்டும். ஏன் விசவாயு விபத்தால் போபாலில் இன்னமும் குடிக்க சுத்தமான தண்ணீரைக்கூட கொடுக்கமுடியவில்லை என்று உச்ச நீதிமன்றமே கண்டித்திருக்கிறது. இப்படி பல ஆயிரக்கணக்கான ஆலைகள் இன்னமும் இந்தியாவில் இயங்கிவருகிறது. இவை அனைத்தும் தனியார்மயத்தால், இலாப வெறியால் ஏற்படும் பிரச்சனை. இப்படி ஏகாதிபத்திய உற்பத்திமுறைக்கெதிராக எழ வேண்டிய போராட்டத்தை, உற்பத்தி முடக்கத்தில் வைத்து திசைத்திருப்புவது உண்மையில் ஏகாதிபத்தியத்தை கட்டிகாப்பதற்காக அதன் கைக்கூலிகள் செய்யும் செயல். இவற்றை நன்குணர்ந்து அங்குள்ள கத்தோலிக்க பாதிரிகள் முதற்கொண்டு நன்றாக செய்துவருகிறார்கள். கேட்பதற்கு அருமையான வாதம். ஆனால் பின்னாடி ஏகாதிபத்தியத்திற்கு பச்சையாக காவிடி தூக்கும் வாதம், முதலாளித்துவத்தில் சீர்த்திருத்தை கோரி அதைக் காப்பாற்றும் வாதம்.
Pothuvudaimai
// அப்பறம் அந்த அமெரிக்க சதி பத்தி....//
இன்றைய ஏகாதிபத்திய நெருக்கடி காலக்கட்டத்தில், ஏகாதிபத்திய உற்பத்தி உறவுகளினால் ஏற்படும் மாபெரும் பிரச்சனைகளை, ஏகாதிபத்தியமே தன்னைக்காப்பாற்றிக்கொள்ள சில உத்திகளை உலகெங்கும் கையாள்கிறது. அப்படிப்பட்டதுதான் அமெரிக்க ஏகாதிபத்திய போராட்டமான மத்திய கிழக்கு நாடுகளின் புரட்சி. அமெரிக்காவின் அடிமை சேவகர்களான மத்திய கிழக்கு ஆட்சியாளர்கள், தனக்கு சரியாக சேவை செய்யாத பொருட்டோ அல்லது அவர்கள் சேவையால் அம்பலமானதாலோ, அவர்களை அமெரிக்க சார்பு அடிமைகளையும் தூக்கியெறிந்து புதிய அடிமைகளை அந்த இடத்தில் மக்களின் நண்பர்களாக காட்டி அமரவைத்த்தை வரலாறு காண்பிக்கிறது. ஏகாதிபத்தியமே பொம்மை ஆட்சிகளைக்கொண்டு மக்களை ஒடுக்குபவனாகவும், அதை எதிர்த்த மக்களின் போராட்டத்தில் ஏகாதிபத்திய கைக்கூலிகளான தொண்டு நிறுவனங்களின் தலைமையில் அடக்குமுறை எதிர்த்துப்போராடும் போராளியாகவும் உள்ளது இன்றுள்ள அவல நிலை. இது எகிப்து, லிபியா, சவுதி அரேபியா, ஆப்கன் மற்றும் பல நாடுகளின் போராட்டங்கள் நமக்கு உணர்த்துகிறது. இன்று இந்தியாவிலும் அதே நிலை தொடர்கிறது. இந்தியாவின் அமெரிக்க அடிமை சேவகனான மன்மோகன் கும்பல், தமக்கு (அமெரிக்காவிற்கு) முழுமையாக சேவை செய்ய நிர்ப்பந்திக்கும் ஊழல் எதிர்ப்பு பேரில் அண்ணா அசாரே தலைமையிலான கும்பலையும், அணு ஆதிக்கத்தை, ஏகபோகத்தை நிறுவ கூடங்குள சுப.உதயக்குமார் தலைமையிலான கும்பல்களும் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. ஏகாதிபத்திய இருமுணைகளையும் எதிர்த்து, மக்கள் தங்கள் வர்க்கக் கட்சிக்குப்பின் திரளவேண்டும். எழுத்தாளர் த.பாவின் ஓடுகாலிதனத்தை குறிப்பிடும்போது, கூடவே உதயக்குமாரின் அமெரிக்க விசுவாசத்தை மறைக்கும் துரோகத்தை சரியா செய்யறாறு. த.பா எப்படி போலி கம்யூனிஸ்டோ, அதேபோல் கத்தோலிக்க பாதிரிகள் ஆசிகளின் இயங்கும் சுப.உதயகுமார் பொதுவுடமை சித்தாந்தத்தின் எதிரி. அமெரிக்க கத்தோலிக்க பாதிரிகள் வரலாறு முழுக்கவும் விஞ்ஞான எதிர்ப்பு பாத்திரத்தை, இன்று சுப.உதயக்குமார் தலைமையில் திறம்பட தேசிய இனக்குழுக்களையும், இடதுசாரி குழுக்களையும் ஒன்றினைத்து செய்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். இது அவர்களின் நிகழ்ச்சி நிரலில் மூன்றாம் உலக நாடுகளில் Red-Green-Brown Alliance என்ற பெயரும், முதலாளித்துவ நாடுகளில்Red-Green Alliance என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்ப கூடங்குளத்தை புரிந்துக்கொள்ளலாம் இல்லையா?
kulothungan
ナஅட.. என்னா அருமையான வாதம். சபாஷ். ஏகாதிபத்தியம், அப்படி இப்படின்னு பேசி ஒரு வழி பண்ணிட்டீங்க போங்க.. தொழிலாளர்களின் நலனுக்காக இயங்குறேன்னு சொல்லிட்டு அவங்க சுயமரியாதையா வாழ போராடாம 2 ரூபா கூலி உயர்த்தி வாங்கித் தரேன், 3 ரூபா உயர்த்தி வாங்கித் தர்ரேன்னு அவங்கள பொருளாதார ரீதியாகவும் சாதீய ரீதியாகவும் ஒடுக்கியதில் ஏகாதிபத்தியத்துக்கு எவ்வளவு பங்கு இருக்கோ அதைவிட அதிகமா இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட்களோட பங்கு இருக்குன்றது மறுக்க முடியாத உண்மை.. நாகை மாவட்டத்தில் அய்யா ஏ.ஜி.கே. என்ற மிகப் பெரிய போராளியின் சமூகப் பங்களிப்பை, போராட்ட வரலாற்றை மறைத்து வீரையன், தா.பா., ராமச்சந்திரன் இவர்கள்தான் பொதுவுடைமை சித்தாந்த வாதிகளாக சித்தரிக்கும் பொதுவுடைமைகளுக்கு சுப.உதயக்குமார் போன்று அரச பயங்கரவாதத்திற்கு அஞ்சாத போராட்ட குணம் பொதுவுடைமைக்கு எதிரியாகத்தான் தெரியும். முடிந்தால் வீரையன் போன்ற நீண்ண்ண்டடட நெடிய பயணம் மேற்கொண்ட பொதுவுடைமைகளிடம் நாகை தாலுக்கா ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் என்ற போராளியை பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் பொதுவுடைமை தத்துவத்தை பேசியவர் அல்ல.. அதில் வாழ்ந்தவர் அவர்..
Pothuvudaimai
//பொருளாதார ரீதியாகவும் சாதீய ரீதியாகவும் ஒடுக்கியதில் ஏகாதிபத்தியத்துக்கு எவ்வளவு பங்கு இருக்கோ அதைவிட அதிகமா இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட்களோட பங்கு இருக்குன்றது மறுக்க முடியாத உண்மை//

ஒடுக்குபவனையும், ஒடுக்கப்பட்டவனையும் ஒரே தராசில் வைத்துப்பார்ப்பது சமூகத்தை பற்றிய உங்கள் அறிவு கூர்மையை காட்டுகிறது. நான் ஓட்டுக்கட்சிகளை சேர்ந்தவனல்ல. இருந்தும் உங்களைப்போன்று அவர்களைப் ஏகாதிபத்தியத்திற்கு இணையாக பார்க்கமுடியாது. வரலாற்றை இரண்டு கண் போதவில்லையென்றால், இன்னும் சில கண்களை கடனாக பெற்றாவது நன்கு திறந்து பாருங்கள். இந்திய வரலாற்றில் சாதிய ஒடுக்குமுறை எதிர்த்த போராட்டத்திலும், சுயமரியாதைக்கும் கம்யூனிஸ்ட்கள் மாபெரும் தியாகங்களை, மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளனர். இன்றைய சிபிஐ, சிபிஎம் மலிந்த அரசியலைக்கொண்டு கட்சி நடத்தலாம். ஆனால் உண்மையான கம்யூனிஸ்டுகள் எல்லா காலங்களிலும் இருந்து வந்துள்ளனர். இது அறியமுடியவில்லை என்றால், உங்களுக்கு பொதுவுடமை சிந்தாந்தத்தின் மீதான எதிர்ப்பு கண்ணை மறைக்கிறது என்றே பொருள்படும்.

//சுப.உதயக்குமார் போன்று அரச பயங்கரவாதத்திற்கு அஞ்சாத போராட்ட குணம் பொதுவுடைமைக்கு எதிரியாகத்தான் தெரியும்//

மக்கள் போராட்டத்தில் உண்மையானப் போராளிகளை எந்தவித சட்ட நெறிகளையும் பின்பற்றாமல் சுட்டுகொள்ளும் இந்திய அரசு, 300 வழக்குகளைப் போட்டு இன்னும் கைது செய்யாமல் இருக்கும் மர்மம் என்ன? அரசு பயங்கரவாதம் அவர்களை ஒன்றும் செய்யாது என்பது அவர்களுக்கும் நன்கு தெரியும். அவர்களின் எஜமானன்தான், இந்த ஆளும் வர்க்கத்தினருக்கும் எஜமான். அதனால்தான் மற்றவர்களையும், மக்களையும் ஒடுக்குகிறார்களே ஒழிய, அதன் தலைமையை ஒன்றும் செய்வதில்லை. இது ஏகாதிபத்தியதாசர்களின் குழுவுக்குள் நடக்கும் மோதல். பொதுவுடமை சித்தாந்தத்தில் ஈடுபாடு இல்லாத பலர், சரியான மக்கள்போராட்டத்தில் பங்கு கொண்டுள்ளனர் என்பது வேறு, அதற்காக ஏகாதிபத்தியதாசர்களின் போராட்டத்தையெல்லாம் மக்களுக்காகப் போராடுவதாக சித்தரிக்கும் உங்கள் வாதம் ஏற்கத்தகுந்ததல்ல. சுப.உதயகுமார் கும்பலுக்கு காவடி தூக்குவது, ஈழப்பிரச்சனையில் ஜெகத்கஸ்பருக்கு (ஏகாதிபத்திய நேரடி கைக்கூலி) பல்லக்கு தூக்கின கதையா போயிடும். அதன் விலை... பல ஈழத்தலைவர்களின் உயிர். ஈழப்போராட்டத்தின் தற்காலிக பின்னடைவுக்கு ஒரு காரணம்.
Guest
விஞ்ஞான பாகவதரின் வாரிசு திருவாளர் பொதுவுடைமை அவர்களுக்கு....

இந்திய ஆளும் வர்க்கத்திற்கு நிறைய தொழிலாளர் தளபதிகள் தேவை. நீங்க வாலன்டரியா வந்த சேவகர். இந்திய ஆளும் வர்க்கம் கையில் அணுகுண்டு இருந்தா இந்திய மக்களுக்கு பாதுகாப்பு என்று சொல்லும் உங்களை போன்றவர்களுக்கு இருக்கும் சக்தி எந்த உளவு நிறுவனங்களுக்கும் கிடையாது. நாளைக்கு அமெரிக்காவுக்கு ஆதரவாக இந்திய ஆளும் வர்க்கம் ஒரு போரில் குதித்து எந்த இளிச்சவாயர் நாட்டின் மீதாவது அணு குண்டு போட்டால் அபோது இந்திய பாதுகாக்கப்பட்டது என்று குரல் கொடுப்பீர்கள். அப்போதும் நாங்கள் அந்த புரட்டை எதிர்த்து களமிறங்குவோம்.அபோதும் எங்களுக்கு / ஆளும் வர்க்கத்தின் கொள்ளைகார போரை எதிர்க்கும் எங்களுக்கு/ துரோகிபட்டம் கிடைக்கலாம். நீங்கள் நூறுமுறை சொல்லுங்கள் .. நாங்கள் இதை ஆயிரம் முறை பேசுவோம் எழுதுவோம் பரப்புவோம். களப்பணி செய்வோம். தங்களின் சேவைகள் தொடரட்டும்.
thangapandian
விஞ்ஞான பாகவதரின் வாரிசு திருவாளர் பொதுவுடைமை அவர்களுக்கு.... இந்திய ஆளும் வர்க்கத்திற்கு நிறைய தொழிலாளர் தளபதிகள் தேவை. நீங்க வாலன்டரியா வந்த சேவகர். இந்திய ஆளும் வர்க்கம் கையில் அணுகுண்டு இருந்தா இந்திய மக்களுக்கு பாதுகாப்பு என்று சொல்லும் உங்களை போன்றவர்களுக்கு இருக்கும் சக்தி எந்த உளவு நிறுவனங்களுக்கும் கிடையாது. நாளைக்கு அமெரிக்காவுக்கு ஆதரவாக இந்திய ஆளும் வர்க்கம் ஒரு போரில் குதித்து எந்த இளிச்சவாயர் நாட்டின் மீதாவது அணு குண்டு போட்டால் அபோது இந்திய பாதுகாக்கப்பட்டது என்று குரல் கொடுப்பீர்கள். அப்போதும் நாங்கள் அந்த புரட்டை எதிர்த்து களமிறங்குவோம்.அபோதும் எங்களுக்கு / ஆளும் வர்க்கத்தின் கொள்ளைகார போரை எதிர்க்கும் எங்களுக்கு/ துரோகிபட்டம் கிடைக்கலாம். நீங்கள் நூறுமுறை சொல்லுங்கள் .. நாங்கள் இதை ஆயிரம் முறை பேசுவோம் எழுதுவோம் பரப்புவோம். களப்பணி செய்வோம். தங்களின் சேவைகள் தொடரட்டும்.
சித்தன்
அனானிமஸ் வழிபோக்கன் அவர்களே, உங்கள் கற்பனையை வியக்கிறேன். அமெரிக்காவுக்கு ஆதரவாக இந்திய அரசு போடுகிறதோ இல்லையோ ஆனால் நம்நாட்டின் மீது அவர்கள் போட நல்ல வழி ஏற்படுத்திக்கொடுக்கிற உங்களை நினைத்து பரிதாபப்படுகிறேன். ஈராக்கை தாக்கினான், வடகொரியாவை தாக்க முடியவில்லை. தயக்கம் காட்டுகிறான். காரணம் சொல்லமுடியுமா. உங்களுக்கு நாட்டின் விடுதலைப் பற்றிய கவலை என்றுமே கிடையாது. அடிமையாய் இருப்பது பாதுகாப்பு என்று நினைக்கிறீர்க்ள். ஈரானை ஆக்கிரமிக்கவும் சர்வதேசிய அளவில் நீங்கள் சேவைசெய்கிறீர்கள். அமெரிக்காவும் ஈரானைப் பார்த்து அவர்கள் அடுத்த நாட்டின் மீது அணு குண்டு போட்டுவிடுவார்கள். ஆகையால் அவர்கள் மீது தாக்குதல் தொடுக்க வேண்டும் என்கிறார். ஆமாம் ஆமாம் அவர்கள் தாக்குதல் தொடுத்துவிட்டால் என்ன செய்ய. அவர்களை கைப்பற்றி அவர்களின் அனைத்து ஆயுதங்களையும் கைப்பற்றுங்கள். ஒருவேளை மற்றவர்கள் மீது போட்டுவிட்டால் என்ன செய்ய? உங்கள் அடிமை விசுவாசம் புல்லரிக்கிறது. அமெரிக்காவின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது பற்றி கவலை கொள்வதற்குப் பதிலாக அவர்களுக்கு எடுபிடியாக குண்டு போட்டால் என்ன செய்ய. அதாவது இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு அவர்கள் அடிமையாகவே இந்தியாவை வைத்திருக்கவேண்டும் என்ற விருப்பம் தெரிகிறது. விடுதலை பற்றியே யோசிக்காதவர்கள் அடிமையில்தான் பாதுகாப்பு என்றுதான் நினைப்பார்கள். உங்களின் விடுதலைக்கும் சேர்த்துத்தான் நாங்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது.
Pothuvudaimai
@Anonymous: கேட்க அருமையான வாதம்... பின்னணியில் ஏகாதிபத்திய சேவை. எந்த மூன்றாம் உலக நாடுகளின் சுயேச்சையான அணு சக்தி முன்னேற்றமும், அந்த நாட்டின் குறைந்தப்பட்ச இறையாண்மையை காப்பாற்றும். இல்லையென்றால் அறைகுறை ஜனநாயகம், இறையாண்மையும் மீதமிறாது என்பது ஈராக், ஈரான் போன்றவை நடைமுறை சாட்சி. அதுப்போன்று இந்தியாவும் முழுமையாக ஆகவில்லை என்பதுதான் உங்கள் ஏக்கமும்கூட... அதனால்தான் அமெரிக்காவால் உந்தப்பட்டபோராட்டத்திற்கு வரிந்துகட்டி சேவகம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.ஈரானின் அணுகுண்டு ஏன் அமெரிக்காவிற்கு குத்துகிறது? நம் நாட்டின் அணு சக்தி முன்னேற்றம் ஓரளவு சுயேட்சையான வரலாற்றைப் பெற்றுள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள், நமது அணு வளர்ச்சிக்கு பொருளாதார தடைகள் விதித்த போதிலும், தொடர்ந்து முன்னேறி வந்துள்ளது. எந்த துறையிலும் சுயேட்சையான வளர்ச்சிக்கு, பாரதூரமான ஏகாதிபத்திய பொருளாதார ஒப்பந்தங்களை பயன்படுத்துவது தவறல்ல (ஆனால் பாதகமான அரசியல் ஒப்பந்தங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது). நாம் என்ன ஆயுதத்தை வைத்துக்கொள்வது என்பது நமது எதிரிதான் தீர்மானிக்கிறான். எதிரியிடம் (அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்களிடம்) அணு ஆயுதம் இருக்கும்வரை, நமக்கு ஆயுதம் வேண்டும் என்று கோருவது ஜனநாயகவாதமா? அல்லது எதிரியின் அணு ஆயுதங்கள் குறையாதபோதும், அடிமையின் ஆயுதம் பிடிங்குவது ஜனநாயகவாதமா? கத்தி இருந்தாலே ஆலை வெட்டத்தான் என்று கருதுவது அறிவாகாது.. அது தற்காப்பிற்கே என்று தரகுமுதலாளித்துவ சட்டம்கூட அங்கீகரிக்கும் (ஆனால் நடைமுறையில் அல்ல) சமூகத்தில், உங்களின் கருத்து பொருள்முதல்பார்வைக்கு ஓவ்வாது!! மாவோ கருத்துப்படியே எங்களின் நிலைப்பாடும் தொடரும். தற்காப்பிற்காக கோரும் அணுகுண்டும், தாக்குதலுக்காக கோரும் அணுகுண்டும் ஒன்றல்ல... நாங்கள் தற்காப்பிற்காக கோருகிறோம்....

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.