நாகப்பட்டின‌ம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தலைஞாயிறு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் வண்டல். இக்கிராமத்தில் கடந்த 08.05.2012 அன்று திருமிகு.சித்ரா (29) க/பெ.முருகானந்தம் என்பவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். வண்டல் கிராமம் அருகே உள்ள ஆவரிக்காடு – மேற்கு கிராமத்தில் வசித்து வருகிற தலித் இளைஞர் திரு.மாதவன் (31) என்பவருக்கும் சித்ராவிற்கும் தவறான உறவு இருந்ததாக கூறி வண்டல் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 80க்கும் மேற்பட்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் தலித் இளைஞர் மாதவனை கடந்த 08.05.2012 அன்று காலை 8.15 மணியளவில் உருட்டுக்கட்டையாலும் செருப்பாலும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். சாதி ரீதியாக இழிவாகப்பேசியும் அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் மாதவனின் உடலில் கடுமையான‌ இரத்த காயங்கள் ஏற்பட்டன.

Mathavan_Nagai_400இதுமட்டுமல்லாமல் அவ்வன்கொடுமைக் கும்பல் மாதவனை தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்ளுமாறு அவரது கழுத்தில் சேலையை மாட்டி விட்டத்தில் தொங்கவிட்டும் உள்ளனர். இதற்கிடையே அங்கிருந்த சிலர் பொது இடத்திலிருந்து சித்ராவை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மர்மமான முறையில் சித்ரா இறந்துள்ளார். மாதவன் வன்கொடுமைக் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது 08.05.2012 அன்று தலைஞாயிறு காவல்நிலைய போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்.

இறந்துபோன சித்ராவின் சடலத்தை வண்டல் கிராமத்தைச் சேர்ந்த சாதி இந்துக்கள் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தாமல் 08.05.2012 அன்று மாலை 4.00 மணியளவில் எரித்துள்ளனர். இதுசம்பந்தமாக அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு தராமல் சடலத்தை எரித்ததனால் தலைஞாயிறு காவல்நிலையத்தில் குற்றஎண்.58/2012 பிரிவு 176 இ.த.ச. ஆகியவற்றின் கீழ் திரு.வீரபத்திரன் உள்ளிட்ட 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாதவன் மீது நடந்த தாக்குதல் சம்பந்தமாக குற்றஎண்.61/2012 பிரிவுகள் 147, 323, 342, 506(2)இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(1)(10) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பினர் கடந்த 09.05.2012 அன்று நாகப்பட்டின‌ம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், தலைமைச் செயலர் – தமிழ்நாடு, காவல்துறை இயக்குனர் – தமிழ்நாடு ஆகியோருக்கு எழுத்துப்பூர்வமாகவும் புகார் அனுப்பினர். இதுமட்டுமல்லாமல் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியருக்கு 12.05.2012 அன்றும், நாகை மாவட்ட ஆட்சியருக்கு 14.05.2012 அன்றும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.

இக்கொடிய வன்கொடுமை குறித்து கடந்த 10.05.2012 தேதியிட்ட தி ஹிந்து ஆங்கிலப் பத்திரிக்கையில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தலைஞாயிறு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்தன‌ர். அதுமட்டுமல்லாமல் நாகப்பட்டின‌ம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கடந்த 09.05.2012 அன்று மின்னஞ்சல் மூலமாக புகார் அனுப்பியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது காவல்துறையினர் பாகுபாடுடன் நடந்து கொள்கிறார்களோ என்று கருதத் தோன்றுகிறது.

காவல்துறையினர் எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கைகளின் விபரங்கள்:

1. கடந்த 08.05.2012 அன்று வண்டல் கிராமத்தில் சித்ரா என்கிற இளம்பெண் மர்மமான முறையில் இறந்துபோனது குறித்து புலனாய்வு செய்ய உடனடியாக சம்பந்தப்பட்ட போலீசார் சென்றிருக்க வேண்டும். சித்ராவின் சடலத்தை கைப்பற்றி பிணக்கூராய்வு செய்து அவரது மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்று கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது சித்ராவின் சடலம் எரிக்கப்பட்டதனால் அவரது மரணம் குறித்த மர்மம் இதுவரை நீடித்து வருகிறது.

2. கடந்த 08.05.2012 அன்று வண்டல் கிராம சாதி இந்துக்களால் தாக்கப்பட்ட தலித் இளைஞர் மாதவனை தலைஞாயிறு போலீசார் மீட்டுள்ளனர். அப்போது போலீசார் அவரிடத்தில், நீ மருத்துவமனை சென்று சிகிச்சைக்காக சேர்ந்துகொள். மருத்துவர்களிடம் கிராம மக்கள் தாக்கியதாக கூறக்கூடாது. கீழே விழுந்ததனால் என் உடம்பில் காயங்கள் ஏற்பட்டன என்று கூறவேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அப்போது போலீசாரிடம் மாதவன், சித்ரா இறந்துபோன சம்பவத்தைக் கூறியுள்ளனர். ஆகவே தலைஞாயிறு காவல்நிலைய போலீசாருக்கு சித்ரா இறந்துபோன சம்பவம் 08.05.2012 அன்று காலை 10.00 மணியளவில் தெரிந்தும் அவரது சடலத்தை மீட்காமல் இருந்துள்ளனர்.

3. மாதவனை தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொள்ள நிர்பந்தித்த சாதி இந்து வன்கொடுமைக் கும்பல், சித்ராவையும் அதேபோல தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொள்ளுமாறு ஏன் நிர்பந்தித்திருக்கக் கூடாது?

4. மாதவன் மீது கடந்த 08.05.2012 அன்று வண்டல் கிராம சாதி இந்து வன்கொடுமை கும்பல் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியதனால் மாதவனுக்கு கடுமையான இரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் தலைஞாயிறு காவல்நிலைய போலீசார் மாதவனுக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டன என்கிற அடிப்படையில் சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கௌரவக் கொலைகள்

சித்ராவின் மரணம் கௌரவக் கொலையா அல்லது கௌரவ தற்கொலையா? என்கிற மர்மம் நீடிக்கின்ற அதே வேளையில் தமிழகத்தில் கௌரவக் கொலைகளின் எண்ணிக்கைகள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் சில சம்பவங்கள்.

1. ஈரோடு மாவட்டம், பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தலித் இளைஞர் திரு.இளங்கோ (25). இவர் திருப்பூரில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடை உரிமையாளர் சரவணன் என்பவரின் சகோதரி மகள் செல்வலட்சுமி (18) என்பவருக்கும் தலித் இளைஞர் இளங்கோவிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சாதி இந்துவான சரவணன் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் திருநெல்வேலி மாவட்டம், முன்னிர்பள்ளம் பகுதிக்கு தந்திரமாக இளங்கோவை வரவைத்து கடந்த 05.08.2011 அன்று கொடூரமான முறையில் கொலை செய்தனர். இப்படுகொலை குறித்து முன்னிர்பள்ளம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகள் கடந்த 29.04.2012 அன்று கைது செய்யப்பட்டனர்.

2. இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகில் உள்ள கிராமம் கலையூர். இக்கிராமத்தில் வசித்து வந்த திருச்செல்வி என்கிற சாதி இந்துப் பெண்ணும், டேனியல்ராஜ் என்கிற தலித் இளைஞரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு திருச்செல்வியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 05.06.2008 அன்று திருச்செல்வியை அவரது தாயார் இளஞ்சியமும், பாட்டி ராக்கும் கழுத்தை நெறித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து குற்றஎண்.90/2008 பிரிவுகள் 302, 201 இ.த.ச. ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகள் 3 வருடம் 10 மாதங்கள் கழித்து கடந்த 20.04.2012 அன்று கைது செய்யப்பட்டனர்.

Durai_tribe_2503. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ரெட்டியார்பாளையம் அருகில் உள்ள துறிஞ்சிக்குட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் துரை (21). பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த துரையும் சாதி இந்துவான தேன்மொழி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தேன்மொழியின் அண்ணன் ஜெயவேலும், பெரியப்பா ஏழுமலை என்பவரும் கடந்த 01.09.2011 அன்று துரையை அரிவாளால் வெட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர். ஆறு மாதம் கடந்த பிறகு குற்றவாளிகள் இருவரும் 17.03.2012 அன்று கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தானிப்பாடி காவல்நிலையத்தில் குற்றஎண்.627/2011 பிரிவு 302, 201 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

4. தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் அய்யாநல்லூர். இக்கிராமத்தில் வசித்து வந்த இளையராணி என்கிற தலித் பெண்ணை பசுபதி என்கிற சாதி இந்து காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு கட்டத்தில் சாதிய ரீதியாக தம்முடைய மனைவி மீது துவேசத்தை கடைபிடித்த பசுபதி தலித் பெண் இளையராணியை கடந்த 15.09.2011 அன்று அம்மிக்கல்லால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து திருப்பனந்தாள் காவல்நிலைய குற்றஎண்.251/2011 பிரிவு 302 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

sivaji_dalit_2505. திருவாரூர் மாவட்டம், அரிதுவார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சாதி இந்துவான லெட்சுமி, தலித் சமூகத்தைச் சேர்ந்த சிவாஜி என்பவரை காதலித்து வந்துள்ளார். லெட்சுமியின் வீட்டில் இக்காதலுக்கு கடுமையான எதிர்ப்பு. இதனால் இருவரும் வீட்டை விட்டு ஓடிவந்து திருமணம் செய்து கொண்டு நிலக்கோட்டையில் வசித்து வந்துள்ளனர். ஆறு மாதம் கடந்த பின்னர், லெட்சுமியும் சிவாஜியும் நிலக்கோட்டையில் வசித்து வருவதை அறிந்த லெட்சுமியின் சகோதரர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார் ஆகியோர் கடந்த 07.09.2008 அன்று லெட்சுமியின் கணவர் சிவாஜியை கடத்திச் சென்று தஞ்சாவூரில் வைத்து அவரை கொலை செய்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் தாழ்ந்த சாதி பையனுக்கு பிறந்த குழந்தையை வாழ விடமாட்டோம் என்று கூறி லெட்சுமியையும், லெட்சுமியின் குழந்தையையும் கொலை செய்ய முயற்சி செய்தனர். இக்கொலை முயற்சியிலிருந்து தப்பித்த லெட்சுமி சிவாஜியின் குடும்பத்தாரின் பாதுகாப்பில் தற்போது நலமுடன் உள்ளார்.

sripriya_pathrakali_wife6. பழனி அருகில் உள்ள க.கலையமுத்தூர் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் திரு.பத்ரகாளி (25) த/பெ.அம்மாபட்டியான். தலித் சமூகத்தைச் சேர்ந்த திரு.பத்ரகாளி, ஸ்ரீபிரியா என்கிற சாதி இந்துப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீபிரியாவின் தந்தை திரு.சீனிவாசன், அவருடைய உறவினர்கள் திரு.ராஜ்கண்ணன், திரு.பண்ணாடியான் ஆகியோர் கடந்த 04.11.2009 அன்று ஸ்ரீபிரியா தங்கியிருந்த வீட்டிற்கே சென்று அரிவாளால் வெட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர். மூன்று குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். தற்போது இவ்வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது.

7. சென்னை, சிமென்ட்ரி சாலை பகுதியைச் சேர்ந்தவர் தலித் இளைஞர் திரு.டேனியல் செல்வக்குமார். வங்கி அதிகாரியான டேனியல் செல்வக்குமார், சதுரா என்கிற சாதி இந்துப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சதுராவின் உறவினர்கள் சதுராவை கடந்த 23.03.2009 அன்று காதில் விஷம் ஊற்றி கொலை செய்துள்ளனர் என்று டேனியல் செல்வக்குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

8. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், கே.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் த/பெ.ஜெயராமன். இவரும் கட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த திருமிகு.மேகலா (19) என்கிற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மேகலாவின் குடும்பத்தினர் மேகலாவிற்கு 37 வயதான ஒருவரை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

Megala_380மேகலாவிற்கு திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதனால் சிவக்குமாரோடு வாழ விரும்பினார். இதனால் ஆத்திரமடைந்த மேகலாவின் குடும்பத்தினர் கடந்த 04.07.2010 அன்று சிவக்குமாரை கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்தனர். மேகலாவின் மீதும் கடுமையாக வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. முப்பது நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு மேகலா பிழைத்துக் கொண்டார். இச்சம்பவம் குறித்து மானாமதுரை காவல்நிலையத்தில் குற்றஎண்.266/2010 பிரிவுகள் 302, 307 இ.த.ச. ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் வெற்றிவேல் (23) என்பவர் சாதி இந்து பெண் சுகன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சுகன்யாவின் தந்தை தம்முடைய மகளை கடந்த 23.06.2010 அன்று படுகொலை செய்துள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த ஜெயா என்பவர் கார்த்திக் என்கிற இளைஞரை காதலித்து வந்தார். ஆத்திரமடைந்த ஜெயாவின் தந்தை செல்வராஜ் தம்முடைய மகளை 07.08.2010 அன்று படுகொலை செய்துள்ளார்.

இதுபோன்ற படுகொலைகள் தமிழகத்தில் அதிகளவு நடந்து வருகின்றன. சில படுகொலைகள் மட்டும்தான் சிவில் சமூகத்திற்கு தெரிய வருகிறது. பல படுகொலைகள் குடும்பத்தினராலும் கிராம சாதி பஞ்சாயத்துகளாலும் மறைக்கப்படுகின்ற அவலம் நடந்து வருகிறது.

கௌரவக் கொலைகள் சாதி, மதம், பொருளாதாரம், பாலினம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக‌ நடத்தப்படுகின்றன என்று கூறினாலும் தமிழகத்தில் சாதிய ரீதியான கௌரவக் கொலைகள் அதிகளவு நடந்து வருகின்றன.

பொதுவாக கௌரவக் கொலைகள் மூன்று விதமாக நடத்தப்படுகின்றன. 1.காதலர்கள் மற்றும் தம்பதியினர் இருவரையும் கொலை செய்வது, 2.தம்முடைய மகளை கொலை செய்வது, 3.தம்முடைய மகளை விரும்பிய அல்லது திருமணம் செய்து கொண்ட நபரை கொலை செய்வது.

கௌரவக் கொலைகள் மட்டுமல்லாமல் கௌரவ சித்திரவதைகளும், கௌரவ தற்கொலைகளும் தமிழகத்தில் அதிகளவு நடந்து வருகின்றன. குடும்பப் பெருமை அல்லது குடும்ப நற்பெயரை ஒரு பெண் கெடுப்பதாக நினைத்துக் கொண்டு குடும்ப உறுப்பினர்களே அப்பெண்ணை கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தி மரணத்திற்குத் தள்ளுகிற அவலம் பல இடங்களில் நடந்தாலும் அவை வெளியே தெரிவதில்லை. இதுமட்டுமல்லாமல் கௌவரக் கொலைகளில் ஈடுபடுகிறவர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருப்பதால் இக்கொடிய அநீதிக்கு எதிராக வழக்கினை நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. சாட்சிகள் மறைக்கப்படுவது, சாட்சியங்கள் அழிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு மீறல்கள் இத்தகைய சம்பங்களில் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆகவே இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டுதான் கௌரவக் கொலைகளுக்கு என்று தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்கிற வலுவான கோரிக்கை தேசிய அளவில் கவனம் பெற்று வருகிறது.

தேசிய பெண்கள் ஆணையம், கௌரக் கொலைகள் குறித்து உள்துறை அமைச்சகத்திற்கு பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. குறிப்பாக கௌரவத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிற படுகொலைகள், சித்ரவதைகள் மற்றும் தற்கொலைகள் போன்றவற்றில் போலீசார் பரந்துபட்ட பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். அப்பெண்ணை நடத்தை கெட்டவள், தவறான முறையில் உறவு கொண்டிருந்தவள் என்றெல்லாம் கருதாமல் அப்பெண் மீதான வன்கொடுமை யாரால் நடத்தப்பட்டதோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இதுமட்டுமல்லாமல் கௌரவக் கொலைகள் குறித்து சிறப்பான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அவற்றில் கொலையை மட்டும் பார்க்காமல் சாதிப் பஞ்சாயத்து, குழுவாக சேர்ந்து அவமானப்படுத்துதல், பெண்ணை இழிவாகப் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் சட்டத்திற்குள் கொண்டு வரவேண்டுமென்று தேசிய பெண்கள் ஆணையம் தம்முடைய கோரிக்கையில் விரிவாக வலியுறுத்தியுள்ளது.

தேசிய சட்ட ஆணையம் 2011ல் Prohibition of Unlawful Assembly (Interference with Freedom of Matrimonial Alliance) என்கிற சட்ட வரைவினை பரிந்துரை செய்துள்ளது. அவற்றில் இதுபோன்று கௌரவ ரீதியாக நடத்தப்படுகிற மரணம் சம்பந்தமான குற்றவாளிகளுக்கு பிணை கொடுக்கக்கூடாது. கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். எவ்வித சமரச விடுப்புகளும் கொடுக்கக்கூடாது என்றெல்லாம் வரையறுக்கப்பட்டுள்ளது.

கடந்த 21.06.2010 அன்று உச்சநீதிமன்றம் கௌரவக் கொலைகள் சம்பந்தமாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், பீகார், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 8 மாநிலங்களுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு.வீரப்பமொய்லி அவர்களும், உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களும் கௌரவக் கொலைகள் சம்பந்தமாக தனியாக சட்டம் இயற்றப்படவுள்ளது என்று கூறியிருந்தனர். ஆனால் இதுநாள் வரை அதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் எடுக்கப்படவில்லை.

தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டு 6,009 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 629 பெண்கள் கொலை செய்யப்பட்டும் உள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்களில் 18-30 வயதுடைய பெண்கள் 236. இவற்றில் ஆய்வு செய்து பார்த்தால் பல கௌரவ தற்கொலைகளும், கௌரவக் கொலைகளும் இருக்கலாம்.

ஆண்டாண்டு காலமாக மறைக்கப்பட்ட கௌரவக் கொலைகள் தற்போது வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. இதுகுறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் பரந்துபட்ட அளவில் கொண்டு செல்லப்பட வேண்டும். அரசியல் கொலைகள், தொழில் கொலைகள், சாதியக் கொலைகள், மதக் கொலைகள், சொத்துக் கொலைகள் இதெல்லாம் கடந்து குடும்ப உறுப்பினர்களே நடத்துகிற கொலைகளின் உண்மைகளை கண்டறிவது மிக சவாலானது.

ஆகவே கௌரவக் கொலைகள் சம்பந்தப்பட்ட சட்டத்தை விசாரணை அடிப்படையில், மருத்துவ அடிப்படையில் சிறப்பாக துல்லியமாக கொண்டு வர சிவில் சமூகத்தில் அழுத்தமான கோரிக்கைகள் எழுப்பப்பட வேண்டும்.

- ஆ.கதிர், செயல் இயக்குனர்,  எவிடன்ஸ்

Pin It