தலித் - பார்ப்பன கூட்டணி, உ. பி.யில் வேண்டுமானால் வெற்றி பெறலாம். அது தென்னாட்டில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்திட வாய்ப்பில்லை என்று - ‘அவுட்லுக்’ மற்றொரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள முக்கிய கருத்துக்கள்:

தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் - உ.பி.யில் நடந்தது போல் - தமிழ் நாட்டிலும், தலித் - பார்ப்பனர் கூட்டணி ஏற்பட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதன் மூலம் காலம் காலமாக தலித் மக்களை ஒடுக்கியவர்கள் என்ற அவப்பெயரிலிருந்து தங்களது சமூகத்தை மீட்க முடியும் என்று கருதுகிறார்கள்.

அகில இந்திய “பார்ப்பன” கூட்டமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம், ஜூன் 10, 11 தேதிகளில் திருப்பதியில் நடந்தது. அதில் சில முழக்கங்களை முன் வைத்து - அதற் கான செயல் திட்டத்தையும் தயாரித்தனர். ‘தீண்டாமைக்கு மரணச் சடங்கு’, தலித் வாயிற் கதவில் ‘பிராமணர் நலன்’ என்ற முழக்கங்கள் முன் வைக்கப்பட்டன. இக்கூட்டம் தொடர்பாக அவர்கள் அனுப்பிய சுற்றறிக்கையில் ‘அறிவுக் கூர்மை “பிராமணர்’களுக்கே உரியது என்றும், இந்து மதத்தைக் காப்பாற்றும் கடமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்றும் கூறியிருந்தனர். ‘தலித்துகளை அன்போடு அரவணைப்போம்; நம்மைப் போல் அவர்களிடமிருந்தும் மதிப்பையும் எதிர்பார்ப்போம்’ என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உ.பி. சோதனை முயற்சி வெற்றி பெறுமா என்று கேட்டதற்கு, தமிழ்நாட்டின் பெண் கவிஞர் குட்டி ரேவதி கூறினார், “பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்க செயல்பாடுகளை விரைவில் தொடங்கிவிடுவார்கள். தலித்துகளை விழுங்கி விடுவார்கள் என்றே நினைக்கின்றேன். இப்போதே அது பற்றிக் கூறுவது சரியாக இருக்காது” என்றார்.

தமிழ்நாடு பார்ப்பன சங்கத் தலைவர் என். நாராயணன், குட்டி ரேவதியின் அச்சத்தை உறுதிப்படுத்தும் வகையில், “உ.பி.யில் நடந்துள்ள ‘மாயாவதி திட்டம்’ ஏதோ திடீரென்று, ஒரு நாள் இரவில் உருவானது அல்ல; அதற்கு திட்டமிட நீண்டகாலம் தேவைப்பட்டது” என்கிறார். ‘பார்ப்பன ரல்லாதார்’ என்ற அரசியல் கொள்கை அடிப்படையற்றது. அது மறைந்து விட்டது என்றும் பார்ப்பன சங்கத் தலைவர் கூறுகிறார். மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், அரசியலின் புதிய வரவான கார்த்திக் சிதம்பரம் கூறுகையில், “அரசியல் வெற்றிக்குத் தேவையான எண்ணிக்கையில் பார்ப்பனர்கள் இல்லை.

அவர்கள் ஓட்டு வங்கியும் அல்ல; தமிழ்நாட்டில் சாதியை விட அரசியல் கூட்டணிதான் வலிமையாக உள்ளது. எங்களது சிவகெங்கை தொகுதியில் சிறுபான்மை செட்டியார் சமூகத்தைச் சார்ந்த எனது தந்தை பெரும்பான்மையாக உள்ள தேவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். தமிழ்நாட்டில் சாதி அரசியல் வெற்றிக்குத் தடையாக இல்லை” என்கிறார். தமிழ்நாட்டில் - சமூக தளத்தில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்று கூறும் கார்த்திக், புதிய வாக்காளர்களுக்கு திராவிட இயக்கக் கொள்கைகளோடு தொடர்பே இல்லை என்கிறார்.

எழுத்தாளர் வாசந்தி (பார்ப்பனர்) கூறுகிறார்: “இரண்டு காரணங்களுக்காக - கடந்த தலைமுறை திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டது. ஒன்று பார்ப்பன ஆதிக்கம்; 3 சதவீதமாக உள்ள பார்ப்பனர்கள் அரசியல், பண்பாட்டுத் துறையில் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்த்து - பார்ப்பனரல்லாத மக்களுக்கு அறைகூவல் விடுத்தது. இரண்டாவது - இந்தி எதிர்ப்பை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட மாநில உணர்வு. இப்போது பார்ப்பன எதிர்ப்போ - இந்தி எதிர்ப்போ பிரச்சினையாகவே இல்லை. பார்ப் பனர்கள், ஓரம் கட்டப்பட்டுவிட்டனர். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற முழக்கமும் காணாமல் போய் விட்டது” என்கிறார், பார்ப்பன எழுத்தாளர் வாசந்தி.

தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் வடநாட்டுப் பார்ப்பனர் களைப் போல் இல்லை. தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள், மேலும் மேலும் முன்னேறத் துடிக்கும் நடுத்தர வர்க்கத் தினர். அண்மையில் தமிழ்நாடு பார்ப்பனச் சங்கம் - ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதன்படி, தமிழ்நாட்டில் பார்ப்பனர்களில் 7.5 சதவீதம் பேர் மிகவும் வசதிப் படைத்தவர்கள். 50 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர். எனவே, ஏனைய நடுத்தர வர்க்கத்தினரைப் போல் அரசியலில் ஆர்வம் காட்டாதவர்களாகவே பார்ப்பனர்களும் இருக்கிறார்கள்.

பாரம்பர்யப் பெருமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் இவர்களிடம் இல்லை என்று வேதனைப்படுகிறார் பார்ப்பன சங்கத் தலைவர் நாராயணன். இது ஒரு தடை என்று கூறும் நாராயணன், உ.பி.யைப் போல் தலித்துகள் இங்கே ஒரே தலைமையின் கீழ் அணி திரளவில்லை. அவர்கள் பிளவுபட்டுக் கிடக்கிறார்கள். இது இரண்டாவது தடை என்கிறார். தமிழ்நாட்டில் தலித்துகளை ஓரணிக்கு கொண்டு வரும் முயற்சிகளில் மாயாவதி ஈடுபட வேண்டும்” என்றும் வலியுறுத்துகிறார்.

“தமிழ்நாட்டு கிராமங்களில் - பார்ப்பனர்கள் இல்லை; நகரங்களுக்கு வந்துவிட்டார்கள். பார்ப்பனரல்லாதார் எதிர்ப்பு இயக்கத்தின் காரணமாக - தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் பூனே, நாக்பூர், டெல்லி போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள்” என்றார் நாராயணன்.

(உ.பி.யைப் போல் தமிழ் நாட்டிலும் பார்ப்பன தலித் கூட்டணிக்கு ஏங்கி நிற்கும் பார்ப்பனர்களின் பேராசை நிறைவேறப் போவதில்லை; தமிழ்நாடு உ.பி.யும் இல்லை! - ஆர்)

Pin It