கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

"மொத்த தேசிய உற்பத்தி என்பது எப்படி ஏமாற்றும் தன்மை கொண்டது என்பது குறித்து நானும் க்ளேடினும் வெளிப்படையாக பேசிக் கொள்வோம். பெரும்பாலான மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி இருந்தாலும், ஒரே ஒருவர் லாபமடைந்தாலும் கூட நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வளர்சியடையக்கூடும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவார்கள், ஏழைகள் மேலும் எழைகளாவார்கள். ஆனால் புள்ளி விவரங்கள் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததாக காட்டும்".

"இரண்டு முக்கியமான நோக்கங்களை அடிப்படையாக கொண்டு நான் செயலாற்ற வேண்டுமென்றாள் அவள். முதலாவது, நாடுகளுக்கு மிகப்பெரிய அளவிற்கு கடன் வழங்கி அந்த பணத்தை பெரும் கட்டுமான திட்டங்கள் மூலம் மெயின் பெக்டெல் ஹாலிபர்டன் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் கைப்பற்றி திரும்பவும் அமெரிக்காவிற்கு கொண்டு வருவதை நியாயப்படுத்த வேண்டும். இரண்டாவது, கடன் வாங்கிய நாடுகளை போண்டியாக்குவதற்க்கு நான் வேலை செய்ய வேண்டும் (அதாவது மெயினுக்கும் மற்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்த பிறகுதான்) அப்படி அவற்றை ஓட்டாண்டி ஆக்கினால்தான் அவை எப்போதும் கடன்காரர்களுக்கு கட்டுப்பட்டு கிடக்கும். ராணுவதளங்களோ, எண்ணெய் போன்ற இயற்கை வளங்களோ, அய்.நா. சபையில் ஒட்டுக்களோ தேவைப்படும் போது இந்த கடன் வலையில் விழுந்துவிட்ட நாடுகளால் மறுக்க முடியாது".

"எல்லா புதிய மின் நிலையங்களும், விநியோக வசதிகளும் நிர்மாணிக்கப்பட்ட பிறகு இந்த நாட்டின் பொருளாதாரம் காளான் போல திடீரென்று வளர்ந்துவிடும் என்று நம்பச்செய்யும் வகையில் நீ பொருளாதார முன்னறிவிப்புகள் செய்ய வேண்டும் ".

"சில நேரங்களில் ஒரு நாட்டிற்க்கு நவீன மின் உற்பத்தி கருவிகள் அமைக்க கடன் வழங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருக்கும். அந்த நேரங்களில் இந்த கடனால் நல்ல பொருளாதார வளர்ச்சி ஏற்ப்படும் என்று நிருபித்து காட்டுவது என் பொறுப்பாகும். இதன் பொருள் பொருளாதார வளர்ச்சிக்காகத்தான் கடன் வழங்கப்படுகிறது என்று நம்பச்செய்வதுதான். மொத்த தேசிய உற்பத்தியில் மிக அதிக அளவு வளர்ச்சியை காட்டும் திட்டமே அங்கீகரிக்கப்படும். ஒரு வேலை ஒரே ஒரு திட்டம்தான் பரிசீலனையில் உள்ளது என்றால் அந்த திட்டத்தின் காரணமாக நாட்டின் உற்பத்தி உச்சகட்ட வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்று நான் நிருபித்து காட்ட வேண்டியிருக்கும். .

- ஜான் பெர்கின்ஸ் - 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்'

koodankulam_371இந்தியாவில் 40 லட்சம் கோடி ரூபாய்கள் அளவிற்கு 60-லிருந்து 70 அணு உலைகள் வரை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொகை அமெரிக்க, ரஷ்ய, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடனாக தரவிருக்கின்றன. தொழிற்நுட்பங்கள், கட்டுமானங்கள் எல்லாமே இவர்கள் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு சொந்தமானதுதான். கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான போராட்டம் வெற்றியடைந்தால் இந்த உலக ஏகாதிபத்தியங்கள் 40 லட்சம் கோடி பெறுமானமுள்ள வர்த்தகத்தை இழக்கும். இந்திய அரசு கூறும் வளர்ச்சி யாருக்கானது? ஏன் மக்களுக்கு, நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக இருந்தாலும் இந்தத் திட்டங்களை நிறைவேற்ற இந்த அரசு முனைப்புடன் நிற்கிறது? இவைகள் குறித்த விரிவான பார்வையே இந்த கட்டுரை

இன்றைக்கு மக்களின் மீது பல வழிகளில் அடக்குமுறைகள் ஏவப்பட்டு வருகின்றன. இந்த அடக்குமுறைகள் மக்களின் குரல்வளையை நெரித்து அவர்களின் உரிமைகளைப் பறித்து வெறும் நடைபிணங்களாக உலவவிடுகிறது. மக்களின் மீது ஏவப்படும் அனைத்து ஒடுக்குமுறைகளையும் இன்று முன்னின்று நடத்துவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளாக இருப்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விடயமாகும். இந்த அரசப் பயங்கரவாதமானது சகல விதமான அதிகாரங்களையும் அடக்குமுறை சாதனங்களையும், பலமான கூலிப்படையையும் வைத்துக்கொண்டு மக்களை ஒடுக்கி வருகிறது. மக்களை ஒடுக்கவும் முதலாளிகளின் பணப்பைகளை நிறைக்கவும் அரசு இன்று கையில் எடுத்திருக்கும் வழிதான் தேசிய வளர்ச்சி என்னும் முழக்கம்.

இந்த ஒடுக்குமுறை அரசு அதன் வல்லரசிய கனவுகளின்பால் மோகம் கொண்டு, மக்களை, மக்கள் கோரிக்கைகளை நசுக்கி வருவதற்கு இந்த 'வளர்ச்சி' முழக்கம்தான் முன்னணியில் நின்று அவர்களுக்கு உதவி செய்து வருகிறது. ஆனால் இந்த வளர்ச்சி மக்களுக்காக என்று தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. மக்களிடையே இந்த வளர்ச்சி வெறியூட்டல் தொடர்ந்து நடைபெறுவதும், இந்தத் தோற்றத்தை துணைகொண்டு அரசு நடத்தும் ஒடுக்குமுறையும் ஒரு கட்டத்தில் வளர்ச்சி பயங்கரவாதமாக உருவெடுக்கிறது.

வளரும் நாடுகளை பொருளாதார ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக, அரசியல் ரீதியாக, சமுக ரீதியாக வளர்ந்த நாடுகளின் அடிமைகளாக மாற்றுவதற்கு இந்த வளர்ச்சி முழக்கங்களே முன்னின்று உதவுகிறது. உலகமயமாக்கல், தாரளமயமாக்கல் என்னும் பெயரிலும் பன்னாட்டு நிறுவனங்கள், அந்நிய மூலதனம் என்னும் வடிவிலும் ஒரு நாட்டினுள் நுழைந்து அந்த நாட்டினுள் உள்ள மூல வளங்கள், இயற்கை வளங்கள், வாழ்வாதாரங்கள், நீர் நிலைகள் மற்றும் கனிம வளங்கள் ஆகிய அனைத்தையும் விழுங்கத் துவங்குகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கும் சுரண்டுவதற்கும் இந்த அரசு அனைத்து உதவிகளையும் முன்னின்று செய்து தருகின்றது. அந்தத் திட்டங்களை மக்களிடம் தேசிய வளர்ச்சிக்கான திட்டங்கள் என்று பிரச்சாரமும் செய்கிறது. அணைகள், அணு மின் நிலையங்கள், துறைமுகங்கள், பாலங்கள், சாலைகள் இன்னும் பல பெயரில் அறிவிக்கப்படும் வளர்ச்சித் திட்டங்கள் 'மக்களுக்காக' என்று சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் அவை பன்னாட்டு நிறுவங்களின் வசதிக்காகவே அமைக்கப்படுகிறது. ஆனால் பறிபோவது என்னவோ மக்களின் சொத்துக்கள்தான். இன்னொரு பக்கம் செய்தித் தாள்களும், தொலைக்காட்சிகளும், கருத்து பரப்புவோர்களும், அறிவு ஜீவிகளும் அரசின் ஊதுகுழல்களாக இந்த வளர்ச்சி பற்றி மிகை கூற்றுகளை மக்களிடையே பரப்பவே, வேகமாய் வளர்ச்சி மக்கள் மனதை ஆட்கொள்கிறது. இயற்கையாய் இந்த வளர்ச்சி மக்களுக்கான வளர்ச்சியாய் இல்லாமல் போவதோடு, இந்த வளர்ச்சி மக்களுக்கு எதிரானதாகவும் மாறுகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக தன் நாட்டு மக்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரங்கள் குறித்த பாதுகாப்பு, இயற்கை வளங்கள், கனிம வளங்கள் மற்றும் கடல் வளங்கள் குறித்த பாதுகாப்பு அனைத்தையும், ஏன், நாட்டின் மொத்த பாதுகாப்பையே பலி கொடுப்பதுதான் மக்கள் விரோத அரசுகள் வந்தடையும் நிலை. இந்த அரசுகளை, அரசின் பாதகத் திட்டங்களை மக்கள் எதிர்க்கும்போது, அரசு மக்களின் மீது பயங்கரவாதத்தையும், அடக்குமுறைகளையும் ஏவுகின்றது. இந்த அரசப் பயங்கரவாதம் வளர்ச்சி என்ற போர்வையில் மக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பது, மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றுவது, மக்களின் சமுக, அரசியல் வாழ்வினை சிதைப்பது, தொடர்ச்சியாக இயற்கை வளங்களை சூறையாடுவது, சுற்றுப்புற சூழலை நாசமாக்குவது, மக்களும் மற்ற உயிரினங்களும் வாழ முடியாத ஒரு சூழலை படைப்பது ஆகிய அனைத்து நாச வேலைகளையும் செய்கிறது. இந்த வளர்ச்சிப் பயங்கரவாதம் தன் கண் முன்னே இருக்கும் சகலத்தையும் நாசம் செய்கிறது.

உலக அளவில் இன்று வளர்ந்து நிற்கும் நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் தங்களது காலனி நாடுகளை நீண்டகாலமாக சுரண்டியதன் மூலமாகவே தங்களை வளப்படுத்திகொண்டனர். அவர்கள் பெற்றிருக்கக்கூடிய வளர்ச்சியினை தக்க வைத்துக் கொள்வதற்காக அவர்களது ஏக ஆதிக்கத்தை தொடர்ந்து வலுப்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. நவீன காலனியாதிக்கம் என்னும் வடிவம்தான் இன்றைக்கு அவர்களின் சுரண்டலுக்கான வடிவமாக உள்ளது. தொழில்நுட்பம், வர்த்தகம், உலகில் உள்ள மூல வளங்களை கையகப்படுத்துதல், ராணுவ ஆற்றல், விஞ்ஞானம் ஆகியவற்றில் விஞ்சி நிற்கும் இந்த முன்னேறிய நாடுகள் மற்ற நாடுகள் வளர்வதை விரும்புவதே இல்லை. நவீன காலனியமயமாக்கல் மற்றும் ஏகபோக வர்த்தக ஆதிக்கத்தின் மூலமாக வளரும் மற்றும் ஏழை நாடுகளின் பொருளாதாரத்தை முழுமையாக ஆக்கிரமித்துவிடுகின்றன. இவர்களது முழுமையான ஆதிக்கத்தினுள் வந்த பின்னர் இந்த வளரும் மற்றும் ஏழை நாடுகள் அவர்கள் சொல்வதை மட்டும் செய்யும் அடிமைகளாக மாற்றப்படுகின்றனர். இந்த அளவுக்கு வளரும் மற்றும் ஏழை நாடுகள் அடிமைப்படுவதற்கு மூல காரணமாக இருப்பது இந்த வளர்ச்சித் திட்டங்களே ஆகும்.

வளர்ச்சித் திட்டங்கள் குறித்த‌ நம்பிக்கையை மக்களிடம் ஊட்டுவதே இதில் முக்கியமான பணியாகும். அதற்கு அரசு எடுத்துக் கொள்ளும் கவனம் அதிகமாக இருக்கும். "இந்தியா வளர்கிறது", "தேசம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது", "இந்தியா 2020-இல் வல்லரசு " போன்ற முழக்கங்கள் அதற்குப் பெரிதும் துணை புரிகின்றன. இது போன்ற முழக்கங்களால் போதையேற்றப்பட்ட மக்கள் தங்களுடைய நிலைகளைப் பற்றி கவலைப்படாமல் ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும், பள்ளிகளிலும் சொல்லித் தருவதையும், அறிவாளிகள் என்று நம்பப்படுவோர் சொல்லுவதையும் உண்மை என்று நம்பும் வண்ணம் பழக்கப்படுத்தபடுகின்றனர். தேசம் வேண்டுமா வேண்டாமா என்று கேள்வி எழுந்தால் இந்த கேள்விக்கு இரண்டு பதில் இருக்க முடியாது. ஆனால் இந்த வளர்ச்சி யாருக்கானது என்பதுதான் நம்முடைய கேள்வி. இந்த வளர்ச்சித் திட்டங்கள் பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் அவர்களது தரகர்களுக்கான வளர்ச்சியா ? அல்லது பசியால் பசியால் மடிந்து கொண்டும், கல்வியற்றும், சுகாதாரமற்றும், வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிஞ்சித்தும் இல்லாமல் வாழும் பெரும்பான்மை மக்களுக்கான வளர்ச்சியா? மக்களுக்கான வளர்ச்சி இல்லை என்பதை நாம் உறுதியாகக் கூறிவிட முடியும். ஏனென்றால் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பது ஆளும் வர்க்கத்தின், அதன் நலன்களைப் போற்றும் சில விஞ்ஞானிகளின், தனி மனிதர்களின் கனவாக இருக்கலாம். ஆனால் வறுமையில் உழலும் கோடிக்கணக்கான ஏழை மக்களின் கனவாக ஒருபோதும் இருக்க முடியாது.

காளான்கள் போல நாடெங்கும் முளைக்கும் அணு மின் நிலையங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழிற்பூங்காக்கள் அடிப்படை, அத்தியாவசியமான தொழிலான விவசாயத் தொழிலை முற்றிலுமாக நசித்து வருவதை நாம் பார்க்கின்றோம். இது கிராமங்களில் சொந்த நிலங்களில் தொழில் செய்த மக்களை அவர்களது நிலங்களில் இருந்து வெளியேற்றி நிறுவனங்களில் கூலி வேலை செய்பவர்களாக மாற்றி விட்டிருக்கிறது. ஏற்கனவே விவசாயக் கூலிகளாக இருந்தவர்களுக்கு இந்த தொழிற்பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சற்றே ஆறுதலாக இருப்பதாக உணர்கிறார்கள். ஆனால் இந்தத் தொழிற்சாலைகள் விவசாய நிலங்கள், நீராதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழலை கடும் பாதிப்புக்கு உள்ளாக்கிய பின்னர் அவர்களின் வாழ்விடங்கள் நாசமாக்கபட்டுவிட்டன என்பதை உணரும்போது அவர்களால் ஏதும் செய்ய இயலாமல் இருக்கும் என்பதே உண்மை. அவர்கள் இந்த நிலையில் இருப்பதைத்தான் அரசும் விரும்புகிறது.

நிலங்களில் இருந்து விவசாயிகள் வெளியேற்றப்பட்டபின் கைவிடப்பட்ட அந்த நிலங்கள் மெல்ல பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களால் கைப்பற்றப்படுகின்றன. ஆபத்து முழுவதும் வந்த பின்னர்தான் தங்களிடம் மிஞ்சி இருந்த சிறிதளவு உரிமைகளும் பிடுங்கப்பட்டு ஏதுமற்ற நிலையில் தங்கள் இருப்பதை மக்கள் உணர்கின்றனர். இன்னொரு பக்கம் கனிம வளம், கடல் வளம், நீர் வளம் மிகுந்து இருக்கும் பகுதிகள் வெளிப்படையாகவே பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்படுவதுடன், அந்த பெரும் நிலங்களில் பூர்வீகமாக வாழும் மக்களை வெளியேற்றுவதை அரசே முன்னின்று நடத்துகிறது. மக்கள் எதிர்த்துப் போராடினால் ராணுவத்தைக் கூட பயன்படுத்தி மக்களை ஒடுக்கி விட்டு நிலத்தை கையகப்படுத்துகிறது. இந்த நாட்டின் மக்களுக்குச் சொந்தமான அனைத்து வளங்களையும் இரக்கமற்ற முறையில் சூறையாடுவதுடன், அதனை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதும் இவர்களுக்குக் கிடைக்கும் தரகு மற்றும் லஞ்ச பணத்திற்காக என்பதுதான் கொடுமை. இந்த வளர்ச்சி முழக்கங்களில் முக்கிய பங்கு வகிக்கும் இன்னொரு விடயம்தான் ஒரு நாட்டின் உள்கட்டுமானமாகும்.

"இந்தத் திட்டங்கள் ஒப்பந்தக்காரர்களுக்கு மிக அதிகம் லாபம் பெற்றுத் தரக்கூடியவை. கடன் பெறும் நாட்டிலுள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்கார குடும்பங்களுக்கு மேலும் செல்வத்தை அள்ளித் தரக்கூடியவை. அதே நேரத்தில் அந்த நாடு தற்சார்பை இழந்து நம்மை சார்ந்து இருக்கும்படி செய்துவிடக்கூடியது என்ற விடயம் வெளியே சொல்லப்படுவதே இல்லை. இப்படி நாடுகள் அமெரிக்காவை அண்டியிருக்கச் செய்து அதன் மூலம் அவற்றின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதுதான் இத்திட்டங்களின் அடிப்படை நோக்கம் என்ற உண்மை வெளிவருவதே இல்லை. எவ்வள்ளவுக்கெவ்வளவு கடன் அதிகமாக உள்ளதோ அவ்வளக்கவ்வளவு நல்லது. ஆனால் ஏழ்மையில் வாடும் மக்களுக்கு அளிக்கப்படும் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற விடயங்கள்தான் இக்கடன்களை கட்ட பலி கொடுக்கப்படும் என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது".

-ஜான் பெர்கின்ஸ்-ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

உள்கட்டுமானம் என்பது ஒரு நாட்டின் இன்றியமையாத தேவையாகும். ஆனால் அதற்கான திட்டமிடுதல்கள் மக்கள் நலன்களுக்காக இயற்றப்படுவது இல்லை என்பதுதான் விடயம். ஒரு சில குடும்பங்கள் அல்லது ஒரு சில நபர்கள் லாபம் அடைவதற்காக திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இந்தியா எப்படிப்பட்ட நாடு என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். இந்திய துணைக்கண்டத்தில் அடைபட்டு கிடக்கும் பல தேசங்கள் என்ன நிலையில் இருக்கிறது என்றும் உங்களுக்குத் தெரியும்.

நாட்டில் பெரும் அணைகள் கட்டப்படுகின்றன? ஆனால் விவசாயத்திற்கு, குடிப்பதற்கு தண்ணீர் கிடைப்பதில்லை. அணு மின் நிலையங்கள், அனல் மின் நிலையங்கள் கட்டப்படுகின்றன. ஆனால் வீடுகளில் மின்சாரம் இருப்பதில்லை. பெரும் தொழிற்சாலைகள் கட்டப்படுகின்றன. ஆனால் வேலை இல்லாதோர் கோடிக்கணக்கில் இருக்கின்றனர். மிகப்பெரிய சாலைகள் போடப்படுகின்றன. ஆனால் நாம் என்றோ ஒரு நாள்தான் அவற்றில் பயணிக்கிறோம். சுற்றுச்சூழல் நாசமாக்கப்படுகின்றன. நாம் பல நோய்களை பெற்றுக் கொள்கிறோம். கல்வி தனியார் மயமாக்கப்படுகின்றது. ஒரு சாரர் கல்விச் சுமையினால் கடனாளிகளாகவும் பெரும்பான்மையினருக்கு கல்வி எட்டாததாகவும் இருக்கிறது. கல்வி இல்லை, சுகாதாரம் இல்லை, நல்ல சுற்றுச்சூழல் இல்லை, வேலை இல்லை, மின்சாரம் இல்லை, நல்ல தண்ணீர் இல்லை, விவசாயம் இல்லை. மேலும் மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் நாம் வளர்கிறோம். இந்த வளர்ச்சி பயங்கரவாதம் நம்மை கொல்வதைக் காட்டிலும் வேறு எதுவும் நம்மை இப்படி கொல்வதில்லை.

இந்த நாட்டில் ஒரு சில பணக்காரர்கள் சுகபோகமாக வாழ்வதற்காக நாம் அனைவரும் பலியிடப்படுகிறோம். நமது வாழ்வில் வளர்ச்சி என்பதை என்றாவது கண்டிருக்கிறோமா? ஆனால் இந்த நாட்டில் ஒரு சில பணக்காரர்கள் பல நூறு கோடிகளில் வீடு கட்டுவதையும், பல லட்சக்கணக்கில் மின்சார கட்டணம் கட்டுவதையும் பார்க்கிறோம். அவர்கள் வளர்ச்சி பெற நாம் பலியிடப்படுகிறோம். அவர்களது வளர்ச்சி நமது வீழ்ச்சியிலிருந்து துவங்குகிறது. இந்த வளர்ச்சி வெறிதான் மக்களுடைய எல்லா நலனையும் பலியிடுகிறது. இவர்களின் வளர்ச்சிக்காகத்தான் இந்த அரசு பாடுபடுகிறது. அரசின் உயிர், உடல், இயக்கம் அனைத்தும் அது சார்ந்திருக்கும் வர்க்கத்தின் நலனுக்காகவே இயங்குகிறது. அதன் ராணுவம், காவல்துறை ஆயுதபலம் கொண்டு இந்த வளர்ச்சி பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் மக்களை கொன்றுபோட என்றுமே அது தயங்கியது இல்லை என்பது வெட்ட வெளிச்சம். இந்த அதிகார வர்க்கத்தின் வளர்ச்சிக்காக இந்திய அரசு பலியிட்டுள்ள மக்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

பச்சை வேட்டை என்ற பெயரில் காடுகளில் வாழும் பழங்குடி மக்களை வெளியேற்றிவிட்டு வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு கனிமங்களை கொள்ளையடிப்பதற்கான உரிமையும், நந்திகிராம், சிங்குரில் விவசாய மக்களை வெளியேற்றிவிட்டு டாட்டா நிறுவனத்திற்கு நிலங்களை கொடுக்க முயற்சி செய்ததும், கடல் மேலாண்மை திட்டத்தைப் போட்டு ஆழ்கடலை தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கத் திட்டமிட்டதும், நொய்டாவில் விவசாய நிலங்களை சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் பறித்தது, தமிழ்நாட்டின் கூடங்குளம், மேற்கு வங்க ஹரிபுரிலும், மகாராஷ்டிரா - ஜைடாபுரிலும் அணு மின் நிலையங்கள் அமைத்து அந்த பகுதிகளை நாசமாக்க முயற்சி செய்ததும் இந்திய அரசின் அப்பட்டமான சுயநலப்போக்கினை வெளிப்படுத்துகிறது. இந்த திட்டங்களுக்கும் இன்னும் பல மக்கள் விரோத திட்டங்களுக்கும் எதிராக மக்கள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவித்தும், போராடியும் வருகின்றனர். அனைத்து நாசகார திட்டங்களையும் அரசு, வளர்ச்சி என்கிற போர்வையில்தான் நிகழ்த்தி வருகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இந்திய அரசிடம் நல்ல திட்டங்களும் இல்லை, பொருளாதாரமும் இல்லை, தொழில்நுட்பமும் இல்லை, நாட்டுக்கு நல்லது செய்யும் அறிவுசார் சமூகமும் இல்லை. ஆனால் வல்லரசாக வேண்டும். இன்றைய நிலையோ அரசை நடத்த பெரும் நிறுவனங்களின் ஆதரவைப் பெற வேண்டும். அந்த நிறுவனங்கள் லாபம் அடையும் வகையில் திட்டங்கள் தீட்ட வேண்டும். அந்த திட்டங்களுக்கு உதவி பெற அமெரிக்காவையோ உலகவங்கியையோ, பன்னாட்டு நிதியத்தையோ வேறு எந்த நாட்டையோ கால் பிடித்து கெஞ்சவேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் தன பெரிய முதலை வாயினை அகல திறந்து கொண்டு காத்திருக்கும். அவர்கள் கடனை அள்ளி வீசுவார்கள். கடனை மட்டுமல்ல பலவிதமான ஒப்பந்தங்களையும் அதனோடு வீசுவார்கள். இந்திய அரசு அதனை கவனமாக பிடித்துக் கொள்ளும். பின்னர் அயல் நாட்டு அறிஞர்கள் (பொருளாதார அடியாட்கள்) திட்டங்களை அள்ளி வீசுவார்கள். இந்தத் திட்டங்களால் நாடு அபார வளர்ச்சி பெறும் என்று நாடு முழுவதும் செய்தி போகும். அவர்கள் கடன் கொடுப்பார்கள். தொழில்நுட்ப உதவி செய்வார்கள், கட்டுமானப் பணிகளை ஏற்று நடத்துவார்கள். நீங்கள் அவர்களுக்குத் தரவேண்டிய கட்டணங்களை அந்தக் கடனிலேயே கழித்து கொள்வார்கள். இறுதியில் கடன் இருக்கும்; அதற்கான வட்டி இருக்கும்; அது மக்களின் தலையிலே விழும்.

koodankulam_360இன்னொரு பக்கம் பல பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் பெறும். அதோடு இணைந்து பல உள்நாட்டு நிறுவனங்களும் லாபம் பெறும். இந்திய அரசு தவறாமல் அதன் தரகு, லஞ்சப் பணத்தை பெற்றுக்கொள்ளும். அந்த திட்டங்களின் பயனும் மக்களைச் சென்று அடையாமல் சில தனியார் நிறுவனங்களைச் சென்று அடையும். ஆனால் கடன் சுமை மட்டும் இந்த நாட்டின் ஏழை எளிய மக்கள் மீது சுமத்தப்படும். வரிகள் ஏற்றப்படும், பேருந்து கட்டணம், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், உணவுப் பொருட்கள், மருந்து மற்றும் அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தும் விலை ஏறிவிடும். மதிப்பிற்குரிய இந்த பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுக்கு பல வகையில் வரிச்சலுகை, சிறப்புச் சலுகை இன்னும் பல பெயர்களில் சலுகைகள் வழங்கப்படும். ஆனால் மக்கள் மீது அவர்கள் தலையின் மீது பாரத்தின் மேல் பாரமாக சுமத்தப்பட்டிருக்கும். இது வளர்ச்சியல்ல; இது அடித்தட்டு மக்கள் மீது ஏவிவிடப்படும் பயங்கரவாதமாகும். இந்த பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட, இன்று மக்கள் பல பகுதிகளில் நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவு மற்றும் பங்கேற்பினை நாம் தயங்காமல் வழங்க வேண்டும்.

கல்வியறிவு இல்லாமல் பல நூற்றாண்டு காலமாக நாம் ஒடுக்கப்பட்டு வந்தோம். இன்று இந்தியாவில் 30% மக்கள் கல்வியறிவு பெறாமல் இருக்கின்றனர். அதாவது 33 கோடி மக்கள். 40% மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். அதாவது 44 கோடி மக்கள். 50% மக்கள் சுகாதார வசதியற்று இருக்கிறார்கள் அதாவது 55 கோடி மக்கள். இதுதான் வளர்ச்சியா? மக்களுக்கான வளர்ச்சி நமக்கு வேண்டுமென்றால் சில விடயங்களை நாம் கவனிக்க வேண்டும். நாம் அரசியல் வேண்டாம் என்கிறோம். பணக்கார வர்க்கம் ஆட்சியில் அமர்கிறது. நாம் அமைதியாக வாழ விரும்புகின்றோம், இந்த அதிகார வர்க்கம் நம் வாழ்கையில் புயல் வீசும் வண்ணம் பார்த்துக் கொள்கிறது. நாம் அணியாய் திரள வேண்டாம் என்று நினைக்கிறோம், ஆளும் வர்க்கம் நமக்கு எதிராக அணியாய் திரண்டு நிற்கிறது. நாம் எந்தப் பக்கம் திரும்பினாலும் நமக்கெதிரான ஆற்றலாய் இந்த அரச பயங்கரவாதிகளும், ஆளும் வர்க்கமும் தான் நிற்கின்றன‌.

நாம் கடந்த காலத்தில் தவறுகள் பல இழைத்திருந்தோம். அடக்குமுறைகள் நடக்கும்போது எதிர்க்காதிருந்தோம், பேசாதிருந்தோம், பயந்திருந்தோம், பலமற்று இருந்தோம். இன்று நிலைமைகள் மாறி இருக்கின்றன. இன்று நாம் பயந்தவர்களாய் இல்லை. மக்கள் சக்தியின் பலம் என்ன என்பதை உணர்ந்திருக்கிறோம். வீறு கொண்டு போராடுகிறோம். தெளிவு பெற்று இருக்கிறோம். நீண்ட நாட்களாக வளர்ச்சியின் பெயராலும் இன்னும் பலவற்றின் பெயராலும் இந்த அரசு நம்மை ஏமாற்றி வந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு விட்டோம். அது எப்படியெல்லாம் ஏமாற்றும், சூழ்ச்சி செய்யும், பிரித்து ஆளும் என்று கூட நாம் இன்று தெரிந்து வைத்திருக்கிறோம். இன்னும் செய்ய வேண்டியது என்னவென்றால் அரசியலை கற்கவும், அணி திரளவும், அரசினை எதிர்த்துப் போராடவும் தெரிந்து கொள்வது மட்டும்தான்.

இந்த அரசு தன்னுடைய வளர்ச்சி வெறியூட்டல்களாலும், அமைப்பு பலத்தாலும் கடுமையான பொய்ப் பிரச்சாரத்தை மக்களிடையே நடத்தி வருகிறது. மேலும் அரசப் பயங்கரவாதத்தையும் ஏவி வருகிறது. இந்த அரசப் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடாமல் அதனை ஒழிக்க முடியாது. போராட்ட காலத்தில், களத்தில், நம்மையே அதாவது போராடுபவர்களையே பயங்கரவாதிகள் என்று இந்த ஆளும் வர்க்கம் முத்திரை குத்தும், தூற்றும், மிரட்டும். ஆனால் நாம் தெரிந்துதான் வைத்திருக்கிறோம் இந்த அரசின் புரட்டுகளை, சூழ்ச்சிகளை, பொய்களை. இதற்கு நாம் பலியாகப் போவதில்லை. இந்த அரச பயங்கரவாதத்திற்கு எதிராக முன் எப்போதும் இல்லாத அளவில் நாம் தொடர்ந்து இன்னும் கடுமையாகப் போராடத்தான் போகிறோம். இந்தப் போரில் வென்று மக்களுக்கான உண்மையான வளர்ச்சியை வெல்வோம். அணு உலைக்கு எதிரான போராட்டத்தை ஆதரிப்போம், பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அரசினை எதிர்ப்போம், மரணதண்டனைக்கு எதிராகப் போராடுவோம், ஈழப்போராட்டத்தை ஆதரிப்போம், ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து போராட்டங்களையும் ஆதரிப்போம். போராடும் மக்களின் பக்கம் நின்று போராடுவோம்.

- தமிழ்க்குமரன் (tamizh_kumaran@yahoo.com)