ஒரு சொல்லின் தொடக்கத்தில் அ என்ற எழுத்தைச் சேர்த்தால் அந்தச் சொல்லுக்கு நேர் எதிரான பொருள் கிடைக்கும். சுத்தம் என்பதற்கு முன் அ சேர்த்தால் அது அசுத்தம் என்றாகிவிடும். நியாயம் என்ற சொல் அ சேர்ந்து அநியாயம் என மாறிவிடும். திமுக என்பதற்கு முன்னால் அ சேர்த்துக்கொண்டதாலோ என்னவோ திமுக ஆட்சியில் நடந்த சில நல்ல விசயங்களை அழிக்கிறது அதிமுக அரசு. புதிய தலைமைச் செயலகம் மூடல், சமச்சீர் கல்விக்கு முட்டுக்கட்டை, செம்மொழித் தமிழாய்வு மையத்தின் புத்தகங்கள் கடத்தல், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை புலம் பெயரச் செய்யும் முடிவு, மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கம்...
கட்சிப் பெயரில் அண்ணாவை இணைத்துக்கொண்டு அண்ணா அணிவித்த கொள்கை ஆடைகளைக் கழற்றிப் போடுகிறது அதிமுக தலைமை. அண்ணாவின் பல அரசியல் நிலைபாடுகளோடு முரண்பட்டவர்களும் கூட, திமுக ஒரு இயக்கமாகப் புறப்பட்டபோது அவர் தொடங்கிய ஒரு ஆக்கப்பூர்வமான செயலைப் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள். திமுக சார்பில் ஊர் ஊருக்கு வாசகசாலை அமைத்த செயல்தான் அது. கட்சிவேறுபாடின்றி எல்லோரும் அந்த மன்றங்களுக்குள் நுழைந்து படிக்க முடிந்தது. அரசியல் விவாதங்களில் ஈடுபட முடிந்தது. புத்தகங்களைப் படிக்கச் சொல்லி தமது உரைகளில் மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பதை அண்ணா ஒரு கடமையாகவே செய்துவந்தார். கல்வியறிவுக்கும் மக்களுக்கும் இடையே வர்ணச்சுவர் எழுப்பப்பட்ட சமுதாயத்தில், எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரிந்தவர்களுக்குப் பத்திரிகைகளும் புத்தகங்களும் வாசிக்கக் கிடைத்தது என்பது ஒரு முக்கியமான பண்பாட்டு மலர்ச்சி. (பிற்காலத்தில் அந்த மன்றங்கள் வெறும் தலைமை வழிபாட்டுக் கூடங்களாக மாறிப்போனது ஒரு வீழ்ச்சி.)
அந்த அண்ணாவின் பெயர் தாங்கி, அவரது நூற்றாண்டில் அமைக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த நூலகத்தை இடித்து மாற்ற அவரது பெயரிலேயே இருக்கும் கட்சியின் ஆட்சி முடிவு செய்திருப்பது வேடிக்கையான வக்கிரம்தான். தமிழ் மக்கள் அனைவரும் புத்தகக் கடல் நீந்தி அறிவுக் கரை சேர வேண்டும் என்ற அவரது கனவை மூழ்கடிக்கத் துடிக்கிறவர்களுக்குத்தான் இந்த முடிவு மகிழ்ச்சியளிக்கும்.
அரசின் இந்த முடிவு பற்றிச் சிந்திக்கிறபோது, உலகின் பல பகுதிகளில் நூலகங்கள் தாக்கப்பட்ட நிகழ்வுகள் சில நினைவுக்கு வருகின்றன.
முதலில் சில அண்மைக்காலப் பதிவுகளைப் பார்க்கலாம். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கை ஓங்கியபோது அவர்கள், தொன்மைக் கால மக்களின் நாகரிகத்தோடு இணைந்த ஆப்கன் மண்ணில், பல நாட்டு ஆய்வாளர்களின் நேசிப்புக்கும் வாசிப்புக்கும் உரியதாக இருந்த நூலகங்களை 1998ல் தரைமட்டமாக்கினர்.
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இன்றும் அணையாமல் எரிந்துகொண்டிருப்பது, இலங்கையின் புகழ்பெற்ற நூலகத்திற்கு 30 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட தீ. 1933ல் கட்டப்படத் தொடங்கி, படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, 1981ல் கிட்டத்தட்ட ஒரு லட்சம் புத்தகங்களோடு ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாக விளங்கிய யாழ் பொது நூலகத்தை ராணுவத்தினரும் காவல்துறையினரும் சிங்கள இனவெறிக் கும்பலுமாகச் சேர்ந்து சூறையாடி, நெருப்புக்கு இரையாக்கினர்.
1990ல் குவைத் நாட்டிற்குள் ஊடுருவிய இராக் ராணுவம் அங்கிருந்த நூலகங்களை சேதப்படுத்தியது. இப்படியொரு காரணத்திற்காகவே காத்துக்கொண்டிருந்த அமெரிக்க அரசு, இல்லாத அணுகுண்டுகளை அழிப்பதென்ற பெயரில் இராக்கிற்குள் புகுந்து படுகொலைகளை நடத்தியதோடு, உலகப் புகழ்பெற்ற பாக்தாத் நூலகத்தின் மீது 2003ல் குண்டுவீசி அழித்தது. அங்கிருந்த புத்தகங்கள் அமெரிக்க அரசுக்கு அறிவுக்குண்டுகளாகத் தெரிந்தன போலும்.
நூலகங்களை அழிக்கிற வன்மம் நூலகங்கள் பரிணமித்த காலத்திலேயே தொடங்கிவிட்டது எனலாம். கி.பி. 48ம் ஆண்டில் ஜூலியஸ் சீசரால் தெரியாத்தனமாக அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் எகிப்து நாட்டு அலெக்ஸாண்டிரியா நூலகம், தொன்மைக்கால சிரியாவில் பேரரசன் ஜோவியன் ஆணைப்படி கி.பி. 364ல் எரிக்கப்பட்ட ஆன்டியோக் நூலகம், அக்கால பெர்சியாவில் (இன்றைய ஈரான்) கி.பி. 651ல் அரபு ஆக்கிரமிப்பாளர்களால் புத்தகங்கள் யூப்ரோடஸ் நதியில் வீசப்பட்டு அழிக்கப்பட்ட செசிபோன் நூலகம், 1154ல் துருக்கிய ஆக்கிரமிப்பாளர்களால் எரிக்கப்பட்ட பெர்சியாவின் நிஷாபுர் நூலகம், 1258ல் பாக்தாத் நகரில் ஊடுருவிய மங்கோலியப் படையினரால் ஆற்றில் புத்தகங்கள் வீசப்பட்ட ஞான இல்லம் நூலகம், 1499ல் ஸ்பெயின் சர்வாதிகாரியின் ராணுவத்தால் அழிக்கப்பட்ட கிரெனடா நாட்டு மதரஸா நூலகம், 1558ல் அன்றைய இங்கிலாந்து அரண்மனை அதிகாரிகளால் அழிக்கப்பட்ட கிளாஸ்னி கல்லூரி நூலகம், 1646ல் வேல்ஸ் பகுதியில் இங்கிலாந்து உள்நாட்டுப் போரின்போது நாடாளுமன்றப் படையினரால் அழிக்கப்பட்ட வொர்சஸ்டர் நூலகம், 1887ல் பிரிட்டிஷ் ராணுவத்தினரால் தீக்கிரையாக்கப்பட்ட பர்மா ராயல் நூலகம், 1914ல் பெல்ஜியம் நாட்டில் புகுந்த ஜெர்மானிய ஆக்கிரமிப்புப் படையினரால் சாம்பலாக்கப்பட்ட லியூவென் கத்தோலிக்க நூலகம், இரண்டாம் உலகப் போர் காலத்தில் சீனாவின் பல ஊர்களிலும் ஜப்பான் படைகளால் அழிக்கப்பட்ட நூலகங்கள், 1941ல் யுகோஸ்லாவியா நாட்டில் குண்டு மழை பொழிந்த ஹிட்லரின் நாஜிப்படையினரால் தரைமட்டமாக்கப்பட்ட செர்பியா தேசிய நூலகம், 1844ல் போலந்து நாட்டில் நாஜிப்படையினரால் எரியூட்டப்பட்ட ஜலூஸ்கி நூலகம், 1992ல் போஸ்னியா நாட்டில் செர்பிய ராணுவத்தால் அழிக்கப்பட்ட போஸ்னியா பல்கலைக்கழக நூலகம்... என்று அழிக்கப்பட்ட நூலகங்கள் ஒரு பெரிய புத்தகமாக எழுதக்கூடிய அளவுக்கு விரிகின்றன.
இந்தியாவிலும், உலக அறிஞர்களை ஈர்த்துவந்த நாளந்தா பல்கலைக்கழக நூலகம் அழிக்கப்பட்ட கதை உண்டு. அந்தப் பல்கலைக்கழகம் புத்தரின் சமத்துவச் சிந்தனைகளோடு தழைத்திருந்தபோது, அதன் அடையாளங்களை அன்றைய மனுவாதிகள் தங்களுக்கே உரிய திரைமறைவுக் கைங்கர்யங்களால் பெருமளவுக்கு அழித்துவைத்திருக்க, அதை முற்றிலுமாக ஒழிப்பதை 1191ல் படையெடுத்த பாக்தியார் கில்ஜி படையினர் முடித்துவைத்தனர்.
தமிழ் மண்ணிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மூடத்தனங்களுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் எதிராக எழுதப்பட்ட ஏடுகளை அழித்தொழித்துவிட்டு, ஆற்று வெள்ளத்தில் போட்டதாகவும் எதிர்த்துவந்த ஏடுகளை மட்டும் எடுத்துக்கொண்டதாகவும், பொற்றாமரைக் குளத்து சங்கப் பலகையின் மீது வைத்து, நீரில் மூழ்காத ஏடுகள் மட்டுமே தரமானவை என ஏற்றுக்கொண்டதாகவும் கதை புனையப்பட்டது நமக்குத் தெரிந்ததுதானே...
அந்த நூலகங்களும் நூல்களும் இவ்வாறு தாக்கப்பட்டதன் நோக்கம் ஒன்றுதான்: ஆதிக்கவாதிகளாகக் கிளம்பிய சக்திகள் மக்களிடையே மாற்றுச் சிந்தனையையும் போராடும் குணத்தையும் வளர்க்கக்கூடிய புத்தகப் பயிர்களை விட்டுவைக்க விரும்பவில்லை.
தமிழகத்தில் இன்று நடப்பதை இந்த நிகழ்வுகளோடு ஒப்பிட முடியுமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. இப்போது - செம்மொழித் தமிழாய்வு நூலகம் எரிக்கப்படவில்லை, தகர்க்கப்படவில்லை. ஆனால் நெருப்பின்றி, குண்டுகளின்றி நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில், அரிய புத்தகங்கள் எல்லாம் எடைக்குப் போடப்படும் பழைய தாள்கள் போன்று கட்டிக் கடத்தப்பட்டுவிட்டனவே!
அண்ணா நூலகத்திற்குத் தீ வைக்கப்படவில்லை, புல்டோசர்கள் அனுப்பப்படவில்லை. ஆனால் நூலகத்தை இடம் மாற்றப்போவதாக ஒரு நாடகம் அறிவிக்கப்படுகிறதே! புதிய இடத்தில் ஒரு அறிவுசார் பூங்கா அமைக்கப்பட இருப்பதாகவும் அங்கே இந்த நூலகம் இருப்பதே பொருத்தம் என்றும் கதைக்கப்படுகிறது. மக்களின் கோபத்தை மடைமாற்ற, கோட்டூர்புரம் கட்டடம் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையாக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. அதுதான் உண்மை நோக்கமெனில், ஏற்கெனவே சவலைப் பிள்ளையாக இருக்கிற எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையை வலுப்படுத்தி நவீன வசதிகளுடன் மேம்படுத்த வேண்டியதுதானே? சிறப்பு மருத்துவமனையை இயற்கைச் சூழல் அமைந்த வேறொரு இடத்தில் ஏற்படுத்த வேண்டியதுதானே?
நூலகம் தற்போதுள்ள இடத்தைச் சுற்றி அண்ணா பல்கலைக்கழகம், இந்திய தொழில்நுட்பக் கல்லூரி, கணித ஆய்வு நிறுவனம், எம்.எஸ். சுவாமிநாதன் வேளான் ஆராய்ச்சி மையம், மத்திய தொழிற்பயிற்சிக் கல்லூரி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பல கலைக்கல்லூரிகள், புற்று நோய் ஆய்வு மையம், தோல் ஆராய்ச்சி மையம், பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் மையம் என ஒரு பெரும் கல்வி நகரமாகவே இருக்கிறது. அதெல்லாம் அறிவுசார் அமைப்புகளாக அம்மையார் அரசின் கண்களுக்குத் தெரியவில்லையா?
உண்மையில் இது ஒரு அரசியல் பகையுணர்ச்சி. அறிவுத்தளத்தில் இயங்கிடும் பலரும் குறிப்பிடுவது போல இது ஒரு பண்பாட்டுத் தாக்குதலின் தொடர்ச்சி. அனைவருக்கும் ஞானம் என்ற லட்சியப் பயணத்தைப் பாதியில் முறிக்கும் சூழ்ச்சி. சம்புகன் தலையறுத்த வாளின் நீட்சி.
அந்த நீட்சியை முறிக்கும் ஆற்றல் மக்களிடம்தான் இருக்கிறது. மக்களின் போராட்டங்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பாதுகாப்பதோடு நில்லாமல், தமிழகத்தின் அனைத்து நூலகங்களையும் வலுப்படுத்தட்டும். கிராமங்களில் பூட்டியே கிடக்கும் நூலகக் கதவுகளின் பூட்டுகளை உடைக்கட்டும்.