தெருவில் வாழும் குழந்தைகள் துணிச்சலானவர்கள். ஆனால் மிகவும் ஊறுபடத்தக்க வகையில் வாழ்ந்து வருபவர்கள். அவர்கள் பல நேரங்களில் குடிகார மற்றும் மோசமான வன்முறைத் தந்தையர்களிடமிருந்து, கொடூரமான மாற்றான் பெற்றோர்களிடமிருந்து, நெருக்கமான உறவுமுறைகளின் கட்டாயத்திலிருந்து, பட்டினியிலிருந்து, அவர்களைக் கவனிக்க முடியாத அல்லது கவனிக்க இயலாத பெற்றோரிடமிருந்து மற்றும் பயங்கரப் படுகொலைச் சூழலிருந்தும் கூட ஒடி வந்தவர்களாக இருக்கிறார்கள். சிலர் காணாமல் போனவர்கள் அல்லது கைவிடப்பட்டவர்கள் அல்லது அவர்களது பெற்றோர்கள் இறந்து போனவர்கள் அல்லது சிறையில் இருப்பவர்கள்.

அவர்கள் துணிச்சலானவர்களாக, வழக்கமாக பிற தெருக் குழந்தைகளுடன் குழுக்களாக, தெருக்களின் மோசமான வயதுவந்தவர்களின் இருண்ட உலகை எதிர்நிற்பவர்களாக இருக்கிறார்கள். சிறிய வயது வந்தவர்களைப் போல, அவர்கள் உணர்வோடு, நடைபாதைகள், பொதுப் பூங்காக்கள், தொடர்வண்டி மற்றும் பேருந்து நிலையங்கள், குப்பைமேடுகள் ஆகியவற்றின் காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கையின் மரியாதையற்ற தன்மையுடன் பெரியவர்களைப் போல வாதாடுகிறார்கள். தெருவில் அவர்கள் தங்களின் அறிவுத்திறனுடன் வாழவும் உணவைத் தேடி அடையவும் பணத்திற்காக வேலை செய்யவும் இறைஞ்சவும் தங்கள் தேவைகள் எதுவாயினும் அதற்காகப் போராடவும் மூத்த தடியர்களையும் காவல்துறையினரையும் சமாளிக்கவும் கற்றுக் கொண்டுள்ளனர். அந்த இளம் வயதில் அவர்கள் வழிபாட்டுத் தல‌ங்களிலும் போக்குவரத்து நிறுத்தங்களிலும் பிச்சையெடுக்கவும் குப்பைக் குவியல்களில் உணவுக்காக மட்டுமின்றி மறு சுழற்சிக்காக விற்கப்படக் கூடிய பல்வேறு பொருள்களுக்காவும் தேடி அலையவும் கற்றுக் கொண்டுள்ளார்கள். அவர்கள் வளர வளர, இளம் பெண்கள் பல நேரங்களில் வீடுகளிலும் சிலநேரங்களில் தற்காலிகமாக தெருவோரத்திலும் பாலியல் தொழிலில் இழுத்துவிடப்படுகிறார்கள். அதேநேரத்தில் சிறுவர்கள் குப்பைக்கூளங்கள் பொறுக்கவும் பணிமனைகளிலும் உணவு நிறுவனங்களிலும் வேலை செய்யவும் செல்கின்றனர்.

தெருவோரக் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் பெரியவர்களின் பாதுகாப்பு இருப்பதில்லை; ஏனென்றால் வழக்கமாக அவர்கள் குடும்பங்களிலிருந்து தங்கள் பாதுகாவலர்கள் இறந்ததாலோ சிறையில் இருந்ததாலோ அல்லது தொலைந்து போனவர்களாக இருந்ததாலோ ஓடிவந்தவர்களாகவோ இருக்கிறார்கள். அவர்கள் எளிதில் ஊறுபடும் நிலையில் இருக்கிறார்கள், ஏனெனில் குழந்தை வளர்வதற்கு பெற்றோர்களின் பாதுகாப்பு தேவைப்படுகிறது. தெருவில் இருக்கும் குழந்தைகளும் இளைஞர்களும் நகரத்தில் இருக்கும் தமது குடும்பங்களுடன் தொடர்பில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களும் கூட தெருவிலோ சேரியிலோ வாழ்பவர்களாக இருக்கக் கூடும். இருப்பினும், மிகுந்த வறுமை காரணமாக, இழிவுபடுத்தப்பட்டோ பொறுப்பற்ற பெற்றோர் காரணமாகவோ குழந்தைகள் தங்களைத் தாங்களே சார்ந்து வாழ்வதற்கு விடப்படுகிறார்கள். அந்தச் சிறிய வயதில் அவர்கள் தங்கள் உணவைத் தேடி அடையவும் தங்களுக்காவும் பல நேரங்களில் தங்கள் குடும்பங்களுக்காகவும் பணம் சம்பாதிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள்; அவர்கள் பிச்சை எடுக்கலாம்; குப்பைக் கூளங்கள் பொறுக்கலாம்.

தெருக் குழந்தைகள் நிகழும் கணத்தில் வாழ்கிறார்கள், முடியும்போது கிடைக்கும் மகிழ்ச்சியைப் பெறுகிறார்கள். அவர்களது பின்னணியும் அனுபவங்களும் வண்ணமயமாக இருகின்றன. (தெருக் குழந்தைகளுடன் பணியாற்றுவதில் முன்னோடியான சகோதரி சிரில் மூனி அவர்களுக்குக் கொடுத்த) வானவில் குழந்தைகள் என்ற பெயர் அவர்களுக்கு நன்கு பொருந்துகிறது. உங்களால் வானவில்லை உங்கள் உள்ளங்கைகளில் ஏந்த முடியாது. தெருவில் வாழும் குழந்தைகளும் சுதந்திர உணர்வு கொண்டவர்களே. ஒரு கதவுக்குள் அடைக்கப்படுவதை எதிர்த்து, நெருக்கமாகக் கண்காணிக்கப்படுவதை எதிர்த்து, இடையறாது அறிவுரை கூறுவதை எதிர்த்து அவர்கள் கலகம் செய்கிறார்கள். எனவே, அவர்களுக்கு அன்பு கொண்ட, அறிவார்ந்த, புரிதல் கொண்ட பெரியவர்களின் வழிகாட்டுதல் மட்டுமே தேவை. கண்டனமோ புறக்கணிப்போ இல்லாமல் வரும் ஒழுங்குக் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ள கற்றுக் கொள்கிறார்கள்.

பாதுகாப்புச் சுவர்கள்

அவர்கள் பழைய நிலைக்கு மிக விரைவாக மீண்டும் திரும்பிவிடக் கூடியவர்களாக இருக்கிறார்கள், அவர்களில் சிலர் கடுமையாக நடத்தினாலும் பதிலடி கொடுக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் எல்லா நேரங்களிலும் அவர்கள் தங்களில் ஆழமான வெறுமையைச் சுமக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுடைய வாழ்க்கையில் முக்கியமான பெரியவர்கள் அவர்களைக் கைவிட்டிருகிறார்கள். அவர்கள்
தங்களைச் சுற்றி ஒரு வெளியை உருவாக்கிக் கொண்டுள்ளதாகவும் அது அவர்கள் தெருவில் வாழும்போது அவர்களின் தற்காப்பு நோக்கத்திற்கு உதவுவதாகவும் தெரிகிறது. அவர்களுடைய அந்த வெளிக்குள் வர எளிதில் யாரையும் அனுமதிப்பதில்லை. தங்கள் தொடக்க கால எதிர்மறை அனுபவங்கள் ஏற்படுத்திய வடுக்களை சுமந்து கொண்டிருக்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் நம்பிக்கை ஏற்படும் வரை அவர்கள் அதை யாரிடமும் கூறுவதில்லை. சிலநேரங்களில் அவர்கள் வயது வந்தவர்களின் முதிர்ச்சி மற்றும் குழந்தைக்கேயுரிய மகிழ்ச்சியையும் கள்ளம்கபடமற்ற தன்மையும் கொண்ட ஒரு கலவையான தோற்றத்தைக் காட்டுகிறார்கள்.

தெருக் குழந்தைகளுக்கு மறுக்கப்படும் மற்றும் ஊறுபடத்தக்க தன்மை ஆகியவற்றால் அவர்கள் துன்புறுகிறார்கள். இவற்றில் பொறுப்புள்ள பெரியவர்களின் பாதுகாப்பு இன்மை; ஒவ்வொரு நாளும் உணவுக்காக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுவது; குப்பைக் கூளங்கள் பொறுக்குவது, பிச்சை எடுப்பது, பாலியல் தொழில் போன்ற ஆரோக்கியமற்ற வேலைகளைத் தெருக்களில் செய்வது; மிகமோசமான தூய்மைக் கேடான நிலைமைகள்; பிச்சை எடுப்பதிலிருந்தும் வேலை செய்யும் உணவகங்களிலும் போதுமான சத்துணவு கிடைக்காதது; உளவியல் ரீதியான பல சமூக அழுத்தங்கள்; உடல் ரீதியான இழிவுபடுத்தல்; பாலியல் ரீதியான் சுரண்டல் மற்றும் கடுமையான போதைபொருள் பழக்கத்துக்கு ஆளாகும் நிலை ஆகியவை அடங்கும்.

வன்முறை, வயது வந்தோரின் துரோகம், மரணம் அனைத்தையும் சந்தித்துக் கொண்டு தெருக் குழந்தைகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்குத் தன்னம்பிக்கை மட்டும் இல்லாவிட்டால் அவர்கள் செய்திருப்பதை- பிழைத்திருந்து வாழ்ந்துவருவது- செய்திருக்க முடியாது. மேலும் தெருக் குழந்தைகள் விடயத்தில் தலையிடத் திட்டமிட்டுள்ள வயது வந்தோர் தங்கள் வாழ்க்கையில் குழந்தைகளின் அந்தத் தன்னம்பிக்கையைச் சீர்குலைத்து விடக் கூடாது, மாறாக அதை முதிர்ச்சிக்கும் உணர்வுநிலையின் ஸ்திரத்தன்மைக்கும் பேணி வளர்த்துச் செல்லவேண்டும்.

பல்வேறு காரணங்களுக்காக மேலும் மேலும் குழந்தைகள் தெருவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அரசு மற்றும் அரசு சாரா செயல்பாட்டாளர்கள் ஒரு சிறிய எண்ணிக்கையில் தான் அவர்களைச் சென்றடைந்திருக்கிறார்கள். தெரு இளைஞர்கள் மற்றும் குழந்தைகளில் இரண்டு விழுக்காட்டுக்கும் குறைவாகத்தான் இளம் சிறார் காப்பகங்களில் சேர்க்கப்பட்டிருகிறார்கள், ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவாகத்தான் அனைத்து அரசு சாரா நிறுவனங்களும் சேர்ந்து அவர்களை எட்டியிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக தேசியத் தலைநகரான டெல்லியில் 50,000 தெருக் குழந்தைகள் இருக்கின்றனர். அண்மைக்கால வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றத்தில் மாநில அரசின் இளம் சிறார் காப்பகங்களில் 1200 குழந்தைகள் சேர்க்கப்படிருக்கின்றனர், மேலும் 1500 பேர் தொண்டு நிறுவனங்களில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.(ஆனால் அவற்றில் வெகு சில கூட முதன்மையான கல்வியும் ஒருங்கிணைந்த தங்குமிடங்களையும் வழங்கவில்லை.) அத்தகைய குழந்தைகளை சுதந்திரமற்ற இல்லங்களில் வைத்திருப்பதில் அரசு அணுகுமுறையில் தீவிரமான குறைபாடுகள் இருக்கின்றன. தொண்டு நிறுவன முன்மாதிரிகள் தரத்தில் ஏற்றத் தாழ்வாக இருக்கின்றன, வேறுபட்ட அணுகுமுறை கொண்டவையாக இருக்கின்றன. தகுதி வாய்ந்தவை பல நேரங்களில் மிகுந்த செலவு வைப்பவையாக இருக்கின்றன.

சர்வ சிக்ஷா அபியான் மற்றும் பிற முன்முயற்சிகள் மூலம் இந்திய அரசாங்கம் மாநில அரசுகள் மற்றும் குடிமக்கள் அமைப்புகள் போன்றவற்றுடன் சேர்ந்து நாட்டில் பெரும்பாலான குழந்தைகளை தொடக்கப்பள்ளியின் நுழைவாயிலில் கொண்டுசேர்க்க குறிப்பிடத்தக்க வகையில் விரிவாக்குவதற்கு வேலை செய்ய முடிந்தது. ஆனால் விரிவான பள்ளிகளின் வலைப்பின்னல் குழந்தைகள் வாழும் இடங்களுக்கு அருகாமையில் இருந்தும் கூட அங்கு கொண்டுவந்து சேர்க்க முடியாத அளவுக்கு பிடிவாதமான குழந்தைகள் இருக்கின்றனர். இந்தக் குழந்தைகள் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் வாழ்கிறார்கள், பள்ளியில் சேர்ந்து படிக்க இயலாத அளவுக்கு அச்சந்தரக் கூடிய தடைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் மாற்றுத்திறனாளிக் குழந்தைகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், கிராமப்புற உழைக்கும் குழந்தைகள், நகர்புறத் தெருக் குழந்தைகள் ஆகியோர் அடங்குவர்.

புதிய மூலஉத்திகள்

இந்தக் ‘கடைக்கோடி’ குழந்தைகளை நமது பள்ளிகளின் நுழைவாயில்கள் மூலமாக உள்ளே கொண்டுவந்து, அவர்களை அங்கே தக்கவைத்துக் கொள்வதற்கும் உறுதி பூண்டால், அது பள்ளிகளுக்குள் சென்று அங்கேயே தங்கியிருப்பதைத் தடுக்கும் தடைகளை அங்கீகரிக்கவும் அவற்றை அகற்றவும் கூடிய வளர்ச்சி மூல உத்திகள் தேவைப்படுகின்றன. கல்விக்கான அடிப்படை உரிமையால் உருவாக்கப்பட்ட கடப்பாடுகளைக் கருத்தில் கொண்டால் இது இன்னும் கட்டாயமாகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தக் குழந்தைகளுடன் நாங்கள் செய்யும் பணியில், குடும்பங்களில் உள்ள குழந்தைகள் பலநேரங்களில் எடுத்துக் காட்டியிராத, துணிவு, உத்வேகம், முன்முயற்சி, தற்சார்பு, அக்கறை, கனிவு பகிர்ந்து கொள்ளல் போன்ற பல ஆற்றல்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நானும் அமன் பிரதாரியில் உள்ள எனது சகாக்களும் அறிந்து கொண்டோம். பெரியவர்களின் உலகால், இந்தக் குழந்தைகள், உடல்ரீதியாக, உணர்ச்சிரீதியாக, பாலியல் ரீதியாக மிகவும் காயப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் கண்டுள்ளோம். இவர்களில் இழிவுபடுத்தும், வன்முறை குணம் கொண்ட, குடிகார அல்லது பொறுப்பற்ற பெற்றோர்கள் உள்ளிட்ட அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களும் அடங்குவர். அவர்களுடைய நம்பிக்கை கொண்ட வெளித் தோற்றங்களுக்குப் பின்னால், சில நேரங்களில் அவர்கள் ஒரு ஆழமான வெறுமையை- அவ்வப்போது அவர்களுக்குள் அடக்கப்பட்ட வன்முறையையும்- சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்று நாங்கள் கண்டறிந்தோம். ஏனென்றால் பெரியவர்கள் மிகவும் ஆழமாகவும் ஒட்டுமொத்தமாகவும் அவர்களைத் தவற விட்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்தக் காயங்களில் பல அன்பு, நம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம் குணப்படுத்தவும் சரிப்படுத்தவும் முடியக் கூடியவை என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். இந்தக் குழந்தைகளுக்கு பெரியவர்களிடமிருந்து அன்புடன் மட்டுமே வருகிற அறிவார்ந்த, புரிதல் கொண்ட வழிகாட்டுதல் தேவை என்பதை நாங்கள் காண்கிறோம். கண்டனமோ புறக்கணிப்போ இல்லாமல் வரும் போது அவர்கள் ஒழுங்கு கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ளவும், சிலநேரங்களில் வியக்கத்தக்க வகையில், கற்றுக்கொள்ளவும் கூடியவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகள் பெரியவர்களை விட மிகவும் உணர்ச்சிகரமாக, இடர்ப்பாடான சூழல்களிலிருந்து விரைவாக மீளக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதை, முன்பு இப்படித் தெருக்களில் இருந்து வந்த, இப்போது எங்கள் பாதுகாப்பில் உள்ள குழந்தைகளிடமிருந்து அறிந்து கொண்டோம். மேலும் அன்பு உண்மையிலேயே குணப்படுத்துகிறது.

நன்றி: தி இந்து நாளிதழ். அக்டோபர் 8,2011

ஹர்ஷ் மந்தர் 
தமிழில்: வெண்மணி அரிநரன்

Pin It