அப்சல் குருவுக்குக் கருணை கிடைத்தால், அது ஜனநாயக மற்றும் முற்போக்கு இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றியாக அமையும் - சேக் அப்துல் ராஷித்

நேர்காணல்: அர்பித் பராஸ்கர், தெகல்கா இதழின் முதன்மைச் செய்தியாளர்

தமிழில் : சொ பிரபாகரன்

ShiekhAbdul_Rashidகுப்வாரா மாவட்டம் லங்கேட் தொகுதியைச் சார்ந்த ஜம்மு காஷ்மீர் சட்டசபை உறுப்பினர் இன்ஜீனியர் சேக் அப்துல் ராஷித் மட்டும்தான், அரசு தரும் பாதுகாப்பு வலையைப் பயன்படுத்தாத, ஒரே அரசியல்வாதியாக இருக்கக்கூடும். அவர் 2008ம் வருட தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக, தனது அரசு வேலையை உதறிவிட்டு, தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மையான ஓட்டுவித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எந்த அரசியல் கட்சியிலும் சேர மறுத்ததுதான், தான் இவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாய் அமைந்தது என்று அவர் கூறுகிறார். பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்குத்தண்டனை பெற்ற அப்சல் குருவுக்குக் கருணை கேட்டு செப்டம்பர் 1ம் தேதி காஷ்மீர் மாநில அவையில் சர்சைக்குரிய தீர்மானத்தை கொணர்ந்தார். 

அவர் அர்பித் பராஸ்கருக்கு அளித்த பேட்டியில், இந்த தீர்மானத்தைப் பற்றியும் அத்தீர்மானம் எப்படி காஷ்மீர் மக்களுக்கு முக்கியமானது என்பது பற்றியும் கூறியுள்ளார். அப்பேட்டியில் இருந்து எடுக்கப்பட்டவை கீழே தரப்பட்டுள்ளது:

நீங்கள் அந்தத் தீர்மானத்தை ஏன் மாநில அவையில் கொண்டு வந்தீர்கள்?

வாழும் உரிமை என்பது மனிதனுக்கு உள்ள அனைத்து உரிமைகளிலும் பிரதானமானது என்பதினால்தான் இத்தீர்மானத்தைக் கொண்டு வந்தேன். தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட ஒருவரைத் தூக்கிலிடுவதற்கு, எந்த அவசியமும் இல்லை. அவர் திருந்துவதற்கு, ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களுக்குக் கருணை அளிப்பதற்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன், நீங்கள் கொண்டு வந்துள்ள இந்தத் தீர்மானம், எந்த விதத்திலாவது தொடர்பு உடையதாக உள்ளதா?

இல்லை. நான் பல மாதங்களுக்கு முன்னிருந்தே இத்தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டுமென திட்டமிட்டு இருந்தேன். இத்தீர்மானத்திற்கான எனது மனு ஆகஸ்டு 29ம் தேதியே சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அதாவது தமிழ்நாடு சட்டசபை தனது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு சில தினங்களுக்கு முன்னரே, எனது தீர்மானம் சமர்பிக்கப்பட்டு விட்டது. ஆனால் அது செப்டம்பர் ஒன்றாம் தேதி நிறைவேற்றப்பட்டது, வெறுமனே தற்செயலாக நடந்த சம்பவம்தான். 

அப்சல் குருவின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு உச்சநீதி மன்றம்தான் தண்டனை அளித்துள்ளது. இருப்பினும் நீங்கள் ஏன் அவர் தூக்கிலிடப்படக் கூடாது என்று நினைக்கிறீர்கள்?

நானும் சட்டத்தை மதிப்பவன்தான். நானும் பாராளுமன்றம் தாக்கப்பட்டத்தைக் கண்டித்தேன். அத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தின் மீது ஆழமான அனுதாபம் கொண்டுள்ளேன். இருப்பினும் இந்தக் குறிப்பிட்ட விசயத்தில், காஷ்மீர் மக்களிடம் வேறு வித்தியாசமான உணர்வுப்பூர்வமான முறையீடு உள்ளது. அவர்களைப் பொருத்தவரை, அரசு கட்டவிழ்த்து விட்ட வன்முறைக்கு எதிராகப் போராட, தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உத்தமமான மனிதர் அப்சல் குரு. மக்கள் அவர் எதற்காக நின்றார் என்பதைத்தான் பார்க்கிறார்கள். அதற்காக அவர் தண்டனையே இல்லாமல் தப்பித்து விட வேண்டுமென அவர்கள் நினைக்கவில்லை. ஆமாம், அவர் குற்றவாளிதான். யாரும் வன்முறையையும் கொலைபாதகத்தையும் மன்னித்துவிட முடியாது. ஆனால் அவரைத் தூக்கிலிடுவது, காஷ்மீரிகளிடம் தவறான சமிக்ஞையையே கொண்டு செல்லும். அரசு கட்டவிழ்த்துவிட்ட வன்முறைக்கு எதிராக வன்முறையைக் கையிலெடுக்க நேர்ந்தவர் அவரென நம்பும் காஷ்மீரிகளின் உணர்வுகளை இந்தியா மதிக்கவில்லை என்றே, அவர் தூக்கிலிடப்பட்டால் எடுத்துக் கொள்ளப்படும். மக்கள் அவர் வாழ அனுமதிக்கப்பட வேண்டுமெனவும், அவருக்குத் தானாகவே சீர்திருந்த வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டுமென விரும்புகிறார்கள். 

நீங்கள் மதிக்கும் சட்டம்தான் அப்சல் குருவுக்கு மரணதண்டனையை விதித்துள்ளது.

மரண தண்டனை விதிக்கும் அந்த ஷரத்தைச் சீர்திருத்த வேண்டிய உடனடி தேவையுள்ளது. கொலைக்குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டவருக்குச் சாவுதான் தண்டனையாக இருக்க வேண்டும் என்று கூறுவது சரியல்ல. பல நாடுகளில் இருந்து இதற்கான உதாரணங்களை எடுத்துக் கூற முடியும். இந்தியாவிலுள்ள அரசியல்வாதிகளும் இது சம்பந்தமாக பேசியுள்ளார்கள். அப்சல் குரு வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டால், காஷ்மீர் மக்களின் இதயத்தை வெல்ல முடியும். அப்படிச் செய்வதுதான் முற்போக்கான நடவடிக்கையாக அமைவதுடன், அதுதான் ஜனநாயக மற்றும் முற்போக்குச் சக்திகளின் வெற்றியாக அமையும். இப்படிச் செய்வதுதான் சகிப்புத்தன்மைக்கும், சகோதரத்துவத்துக்கும் அடையாளமாக இருக்க முடியும். 

அப்சல் குருவின் கருணை மனு ஏன் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டது?

பல வழிகளில் இந்த வழக்கு, மக்பூத் பட்(1984ல் நடந்த)டின் வழக்கு நடந்து, அவர் தூக்கிலிடப்பட்டதை, ஒத்து இருக்கிறது. நாங்கள் அமைதிக்காக ஏங்கிக் கொண்டிருந்தபோது, மக்பூத் பட்டின் தூக்கு, அதற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அத்தூக்கு, இந்த அரசு தனக்கு எதிரான எந்தவித கருத்து வேற்றுமையையும் அனுமதிக்காது என்ற சமிக்ஞையைத்தான் காஷ்மீர் இளைஞர்களிடம் ஏற்படுத்தியது. பாதுகாப்புப் படைகளின் வன்முறையை எதிர்க்க, எந்த வழிமுறையும் இல்லாததைக் கண்ட அப்பாவி காஷ்மீர் இளைஞர்கள், எளிதாக தேசவிரோத சக்திகளால், தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதற்கு, ஈர்க்கப்படுகிறார்கள். இதைக் கண்டிப்பாகக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். கூடவே இன்னொரு விசயமும் உள்ளது. யாரையும் நேரடியாக கொல்வதில் அப்சல் குரு ஈடுபடவில்லை என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. ஆகவேதான் அவரை மன்னிக்க வேண்டும் என்ற உணர்வு வலுவாக உள்ளது. 

அப்சல் குரு தூக்கிலிடப்பட்டால், இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படலாம் என ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள்?

இங்கே (காஷ்மீர்) நடப்பவற்றைப் பார்த்து ஏற்கனவே காஷ்மீரிய இளைஞர்கள் வெறுத்துப் போய் உள்ளார்கள். இங்கே அரசாங்கம் மிக மோசமாக நடக்கிறது. எந்த வேலைவாய்ப்பும் கிடையாது. காஷ்மீர் அரசு போலீசால் நடத்தப்படுகிறது. அப்சல் குருவின் மரணதண்டனைக்கு எதிராக காஷ்மீர் தேசியம் தழுவிய அனுதாபம் உள்ளது. இது இந்தியாவிலுள்ள காஷ்மீரி மக்களின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இது சரியாகக் கையாளப்படா விட்டால், மாநில அரசுக்கும் இந்திய அரசுக்கும் பல அச்சந்தரும விளைவுகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் இதிலிருந்து சம்பவிக்கும். 

இந்தியாவில் அப்சலைத் தூக்கிலிட வேண்டுமென்ற மனநிலைதான் ஜனரஞ்சகமாக உள்ளது. பெரும் பான்மையான அரசியல்கட்சிகள் அவரைத் தூக்கிலிட வேண்டுமென கோருகின்றன. அவர்கள் உங்களது தீர்மானத்தை ஆதரிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?

இந்திய மக்கள் எங்கள் நிலையைப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் அரசியல்வாதிகள் அவர்கைளத் திசை திருப்பி விடுகிறார்கள். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை பெற்றுள்ள மூன்று இலங்கைத் தமிழர்களுக்கு கருணை அளிக்க வேண்டுமென்ற தமிழ்நாடு சட்டசபை தீர்மானத்திலுள்ள உணர்வுகளை காஷ்மீர் மக்கள் உணர்ந்து கொண்டுள்ளதைப் போல, அங்குள்ள மக்களும் எங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்வார்கள்தான். சொல்லப் போனால் பெரும்பான்மையான இந்தியர்கள் இந்த உணர்வுகளைப் புரிந்து கொண்டுதான் உள்ளார்கள். இதில் அரசியல்வாதிகள் சொல்வதுதான் பெரும் கபடத்தனம். ஏதோ சில விநோதமான காரணங்களுக்காக‌, காஷ்மீர் என்று வந்து விட்டால் அவர்களது மனிதாபிமானம் எல்லாம் வற்றி விடுகிறது. ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்பது எனக்கும் பிடிபடவில்லை. பிறகு அவர்கள் எப்படித்தான் காஷ்மீர் இந்தியாவிலிருந்த பிரிக்கவே முடியாத பகுதி என்று பேச முடிகிறதோ? மனிதாபிமான உரிமைக்காகப் பேசியதால், எப்படி காஷ்மீரிகளைத் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்த முடியும்? நான் இன்னும் பாரதிய ஜனதா கட்சியுடன் பேசவில்லை. இருப்பினும் என் மாநிலத்திலுள்ள பாரதிய ஜனதா கட்சியினருடன் பேசி, அவர்களைச் சமாதானப்படுத்தி சம்மதிக்க வைப்பேன். அவர்கள் என்னைப் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். 

இதுவரை எந்தெந்த அரசியல்கட்சிகளுடன் பேசியுள்ளீர்கள்? உங்களது தீர்மானத்திற்கு அவர்கள் ஆதரவு அளித்தார்களா?

நான் மக்கள் ஜனநாயக கட்சியைச் சார்ந்தவர்களிடம் பேசினேன். அவர்கள் எனது தீர்மானத்தை ஆதரிப்பதாகச் சொன்னார்கள். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, நேசனல் கான்பரன்ஸ் போன்ற கட்சிகளுடன் இனிமேல்தான் பேச வேண்டும். 

முதல் மந்திரி ஒமர் அப்துல்லா தனது டிவிட்டரில் இந்த பிரச்சினை பற்றி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் இந்தப் பிரச்சினையில் உங்களை ஆதரிப்பார் என்று கருதுகிறீர்களா?

அவர் என்னை ஆதரித்தாக வேண்டும். எனக்கு தெரிந்தத் வரைக்கும் இந்த மாதிரியான நடவடிக்கைக்கு அவர் தனது ஆதரவைத் தெரிவித்து வருவதாகவே நான் கருதுகிறேன். அவரது டிவிட்டரில் எப்படி இந்தியாவிலுள்ள சிவில் சமூகமும் அரசியல்வாதிகளும் காஷ்மீர் சம்பந்தமான பிரச்சினைகள் என்று வரும்போது தங்களது தொனியை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதையும் அவர் மறைமுகமாகச் சுட்டி காண்பித்துள்ளார். 

குரியத் தலைவர்களின் நிலைபாடு என்ன?

குரியத்திலுள்ள (பிரிவினைவாதிகளும், மிதவாதிகளும்) அனைவரும், அப்சல் குருவுக்குக் கருணை காட்டவேண்டும் என்ற எனது அழைப்புக்கு ஆதரவளித்து உள்ளார்கள். இருப்பினும் அவர்களுக்கு என்று அவர்களது சொந்தச் செயல்திட்டம் உள்ளது. ஒரு வகையில் சொல்லப்போனால், அவர்கள் காஷ்மீர் மக்களின் குரலை ஒன்றிணைக்க வேண்டுமென கருதினால், இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பது தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இருப்பினும் அவர்கள் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்கள் கிடையாது. ஆகவே சட்டசபை தீர்மானம் குறித்து அவர்கள் கருத்து ஏதும் சொல்ல வேண்டியதில்லை.

(மூலம்: http://tehelka.com/story_main50.asp?filename=Ws060911Parliament.asp)

Pin It