சிந்து கங்கை ஆறுகளின் நிலப்பரப்பில், அம்மண்ணின் முதுகுடியினரால் உருவாக்கப் பெற்ற ஒரு நாகரிகம், ஆரியர் வருகைக்குப்பின் சரிவினைச் சந்தித்தது. அங்கு வந்தேறிகளான ஆரிய இனத்தவர் மத்திய ஆசியாவிலிருந்து, ஹைபர் கணவாய் வழியாகப் பல்வேறு தொகுதியினராய் அந்த வளமான பகுதிக்குத் தங்கள் ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு நாடோடிகளாய் வந்து சேர்ந்தனர்.
 
மண்ணின் வளத்தையும் அங்குள்ள மக்களின் அமைதி வாழ்வையும் கண்μற்ஷீ ஆரியர்கள் அங்கேயே, நிலை கொண்டு வாழத் தலைப்பட்டனர். தென்பாலுள்ள தொல் தமிழ் முதுகுடியினரின் ஒரு கிளையினரே அங்குள்ள பூர்வீகக்குடிகள் என்பது வரலாற்று ஆசிரியர் பலரின் கணிப்பாகும். அவர்களிடம் இருந்து தங்களுக்குத் தேவைப்பட்ட உதவிகளையும் செய்திகளையும் பெற்ற பின்னர் அவர்களை அங்கிருந்து தங்கள் வல்லாண்மையினால் ஆரியர்கள் அப்புறப்படுத்தினர். எஞ்சிநின்றோரை அடிமைகளாகப் பயன்படுத்தவும் தவறவில்லை.

கால ஓட்டத்தில் அங்குக் காலூன்றி வாழ்ந்த ஆரியர்கள் தங்கள் கலாச்சாரத்தையும் உரிமையினரையும் காத்துக் கொள்ளும் வண்ணம், பேராண்மையினரையும் அரசினையும் வளர்முகப்படுத்தினர். மண்ணின் வளத்தால் ஆரிய மக்கள் வாழ்வும் மலர்ச்சி பெற்றது. பொலிவுடைய இப்புது வாழ்வை மேலுஞ் செழுமைப்படுதும் நோக்கில் தங்கள் மொழியையும் புத்தாக்கம் செய்தனர். அதனால் அவர்கள் மொழி சமஸ்கிருதம் எனப் பெயர் பெற்றது. தங்கள் வாழ்வியல் கோட்பாடுகளை அம்மொழியில் பதிவு செய்யத் தொடங்கினர். பலநூறு ஆண்டுகளாக நடந்தேறிய அப்பகுதிகள் நான்கு வேதங்களாக (ருக், யசுர், சாமம், அதர்வணம்) உருவெடுத்தன. பாரதம், இராமாயணம் ஆகிய இதிகாச புராணங்களும் பிறப்பெடுத்தன. அவற்றில் பாரதம் ஆயிரக்கணக்கான கிளைக்கதைகளோடு ஆரியர்களின் வாழ்வியல் நெறி முறையினையும் ஆரிய தர்மத்தையும் ஆங்காங்கே சொல்லிச் செல்கிறது.
 
நான்கு வேதங்களை அடிப்படையாகக் கொண்டும் பாரதக் கதையின் அறக் கோட்பாட்டிற்கு இலக்கணம் போன்றும் நீதி சாத்திரங்கள் தவமுனிவர்களால் படைக்கப் பெற்றன. அந்த வழியில் ஆக்கம் பெற்ற முதல் சாத்திர நூல், தரும சூத்திரம் எனப் பெயர் பெற்றது.
 
ஆரியர் அல்லாத பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டு வாழ்கின்ற நிலையில் ஆரியர் மேற்கொள்ள வேண்டிய ஒழுகலாற்றையும் இனத்தூய்மையையும் மேலாண்மையினையும் கட்டிக்காக்கும் நோக்கில் ஆக்கப் பெற்றதே இத்தரும சூத்திரம். கிறிஸ்து பிறப்பதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப் பெற்று வந்த இச்சூத்திரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் பல்வேறு இடைச் செருகல்களோடு நிறைவடைந்ததாய் ஆய்வாளர்கள் கணக்கிடுகின்றனர்.

வேதங்களைப் போலவே நால்வகையான வருண தர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் போக்கு இதனில் முதன்மைப் பெற்றுள்ளது. வர்ண பேதத்தையே தலையாய தர்மமாக இந்நூல் போதிக்கத் தவறவில்லை. சட்டம், ஒழுங்கு, அரச நீதி போன்றவற்றை எடுத்தோதும் இச்சூத்திரம் குறிப்பாகப் பார்ப்பன‌ மக்களின் கடமைகளையும் ஒழுகலாற்றையும் எடுத்தியம்புவதாகும். பிற மக்களின் பழக்க வழக்கங்களை வெகு குறைவாகவே இந்நூல் கூறுகிறது.
 
முதலில் பாஞ்சால நாட்டிற்காக எழுதப் பெற்ற இத்தரும சூத்திரம் பின்னர் வடபுலத்தின் ஆரியவர்த்தம் எங்கும் பரவியது. தரும சூத்திரம் உணர்த்தும் தருமம் உலகளாவியப் பார்வையோ எக்காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் ஏற்புடையதாகவோ அமையவில்லை என்பது ஆய்வாளர் கணிப்பு.

தரும சூத்திரத்திற்குக் காலத்தால் பிற்பட்டுத் தோன்றியது மனு தருமசாத்திரம். மனு, தருமசாத்திரத்தின் தொடக்க உரையில், ‘பிரம்ம தேவன் தன் காதுகளில் ஓதியது’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆயினும், ஒருவர் பின் ஒருவராக ஏழுமனுக்களால் எழுதப்பெற்றவை இத்தரும சாத்திரம் என்றும் இடைச்செருகல்கள் மலிந்து கி.பி. 200 ஆம் ஆண்டில் இன்றைக்குக் காண கிடைக்கும் வடிவங்கொண்டது என்றும் அந்நூல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இடைச்செருகல்களோடு முன்னுக்குப்பின் முரண்பட்ட கருத்துக்கள் நிறைந்து கிடைப்பதையும் ஆய்வு நோக்கர்கள் கண்டுணர செய்துள்ளனர்.

ஆயினும் ஆரிய தர்மத்தைக் கூறும் நூல்களில் மிகவும் பெருமைக்குரியது மனுதரும சாத்திரம் என்று தத்துவ விற்பன்னர்கள் பாராட்டியுள்ளனர். மனித வாழ்வியலின் பல்வேறு கூறுகளையும் கடமைகளையும் உணர்த்துவதோடு அன்றாட ஒழுகலாறுகளையும் ஆசார அனுட்டானங்களையும் எடுத்தோதுகின்றது இச்சாத்திரம். தருமசூத்திரம் போலவே தரும சாத்திரமும் வருண பேதத்தை மையமாகக் கொண்டு ஆக்கம் பெற்றதேயாகும். ‘கடவுள் இந்த உலகைப் படைத்ததோடு உயிரினங்களையும் படைத்தார். பல்வேறு சாதியினருக்குரிய ஒழுகலாற்றையும் தொழில்களையும் அக்கடவுளே வரையறை செய்தார்’ (மனு 1-87) என்று மனு குறிப்பிட்டிருந்தல் அவர்தம் மானுடப் பார்வையைப் புலப்படுத்திவிடுகிறது.
 
பார்ப்பன‌ர்களே முதலில் தோன்றியவர்கள் என்றும் அவர்களே உயர்ந்தவர்கள் என்றும் அவர்களே பிரம்மத்தை அறிந்தவர்கள் என்றும் விளக்கமாக இம்மனு தரும சாத்திரம் உரை செய்கிறது. மண்ணும் அனைத்திற்கும் பார்ப்பன‌ர்களே தலைவர்கள் (மனு 193) என்று மனு கூறுவதைப் பார்க்கிற பொழுது, பார்ப்பன‌ரால் பார்ப்பன‌ர்களுக்காக எழுதப்பெற்றது. இந்நூல் என்று கூறினால் அது மிகையாகாது. “பார்ப்பன‌னின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்ற முடிவோடு மனு இத்தரும சாத்திரத்தை எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது” என்று இந்தியத் தத்துவத்தின் வித்தகர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் கூறியிருப்பது ஈண்டு எண்ணத்தக்கது (S.Radhakrishnan, .Rel igion and Society. P-145).
 
இதனால் வைதீக மதச்சார்பான பிற சாத்திரங்கள் போலவே மனுவும் அறவியல் கோட்பாடுகளை வருண தர்மத்திற்கு ஏற்ப வரையறை செய்து அவர்களின் கடமைகளையும் ஒழுகலாற்றையும் பகுத்துக் கூறுகின்றார். என்றே கொள்ள முடிகிறது.

எவ்விதக் கட்டுக் கோப்பும் இல்லாத மானிட வாழ்வை வரையறை செய்து ஒருக்கட்டுக் கோப்புக்குள் கொண்டு வரும் அரும் பணியை மனு செய்திருக்கிறார் எனக் கொள்வாரும் மனுவின் சாத்திரம் மனிதனுக்கு மருந்தாகப் பயன் செய்ய வல்லது என்று போற்றுவாரும் உளர். சமயத்திற்கும் சட்டத்திற்கும் நடுநின்று அவற்றின் தொடர்பினை இறுகச் செய்யும் ஆற்றலுடையது மனு நூல் என்று மேலே கூறப்பெற்ற தத்துவப் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் கூற்றும் ஈண்டு கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆரிய வர்த்தத்தில் வீரியமாய் விளங்கிய மனுவின் தருமசாத்திர நூல் தமிழ்நாட்டில் வந்து வாழ்வு பெற்ற வரலாற்றையும் அதன் தாக்கம் எவ்வாறு நிலை கொண்டது என்பதைக் காண்பதற்கு அடிப்படையாய்த் தமிழகத்தின் அன்றைய நிலையையும் மேலோட்டமாக வேனும் அறிதல் வேண்டும்.

வரலாற்று ஆசிரியர்களால் வரையறுத்துக் கூறமுடியாத தொல் பழங்காலம் முதல் தென்னாட்டில் வாழ்ந்து வரும் இனத்தவர் தமிழர்கள். மனித நாகரிகத்தின் முதல்படியென வரலாற்று ஆய்வாளர்களால் கணக்கிடப்படும் கற்காலத்திலேயே தென்னகம் தமிழர் தாயகமாக இருந்ததை வரலாற்று வல்லுநர்கள் பல்வேறு சான்றுகளால் நிலைநாட்டி உள்ளனர். இனக்குழுச் சமுதாயமாக வளர்ந்து வீரயுகக் காலத்தையும் தன்பால் கொண்டு பின்னர் அரசுகளையும் தென்னக மண்ணில் உருவாக்கினவர்கள் தமிழர்கள். நாட்டமைப்பு, உழவு, வாணிபம், தொழில், கல்வி என இன்ன பிறவற்றிலும் முன்னேற்றப் பாதையில் தமிழினம் நடைபெற்றதை இலக்கியம் உள்ளிட்டச் சான்றுகள் நிறுவுகின்றன.

தமிழர்கள் தங்கள் வாழ்வியல் கூறுகளில் மேம்பாடு எய்த, ஆதார சுருதியாகத் தமிழ் இயங்கிற்று. தமிழ் மண்ணின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே என்பதை உலகோர் ஏற்கும் வண்ணம் தமிழ்மொழியின் சொற்பிறப்பு, சொல்லாட்சி போன்றவை இயைந்து வழங்கின. குடும்ப வாழ்வு, தொழில், வழிபாடு, அரசு நிர்வாகம், வாணிகம், கடல் வாணிகம், கல்வி, நீதி, கலைகள், இலக்கிய ஆக்கம் போன்ற துறைகள் தோறும் வேண்டும் கலைச் சொற்களைத் தன்பால் கொண்டதாகத் தமிழ் ஓங்கி நின்றது.
 
ஏறத்தாழ கி.மு. 500 முதல் கி.பி. 200 வரையிலான காலகட்டத்தில் தமிழர் வாழ்வோடு தமிழ் மொழியும் இலக்கியங்களும் ஓர் உன்னத நிலையை எட்டின. சங்ககாலம் எனப்படும் அக்காலகட்டத்தில் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூன்று பெருநில வேந்தர்களும் பல்வேறு சிற்றரசர்களும் வள்ளல்களும் அரசுகளை இயக்கியதை அறிய முடிகிறது.

நீண்ட பரப்பினையுடைய சங்க நாளில் இடைப்பட்ட ஒரு காலகட்டத்தில் ஆரியர் ஊடுருவல் தமிழ் மண்ணில் நிகழ்ந்தது. ஏறத்தாழ கிறிஸ்து பிறப்பதற்கு முன் இரண்டு மூன்று நூற்றாண்டிற்குள் ஆரியர் தென்னகம் வந்து தமிழகத்தில் கால்பதித்தனர் எனக்கருத முடிகிறது. ஆரியர் ஹைபர் கணவாயில் நுழைந்து வந்தது போல் ஆடுமாடுகளையும் கையில் கொம்புகளை கொண்டு வரவில்லை. மாறாக, வேதங்கள், புராண இதிகாசங்கள் தருமசாத்திரங்களை உடன் கொண்டு வந்தனர். அவர்கள் வரவால் ‘தெய்வீக மொழி’ எனக் கற்பிக்கப்பட்ட ‘சமஸ்கிருதம்’ தமிழகத்தில் வாழ்வு பெறத் தொடங்கியது. வடமொழிவாணர்கள் புரோகிதர்கள் என்ற புனைவினைப் பெறத் தொடங்கினர்.
 
தமிழ் மண்ணில் வாழ்வு பெறத் தொடங்கிய ஆரியத்தார் புராண இதிகாசங்களையும் சாத்திர சம்பிரதாயங்களையும் கடைவிரித்தனர். அவற்றைக் கொள்ளுவோர் பெருகப் பெருக ஆரிய தர்மம் தமிழகத்தில் ஆழமாகவே வேர் கொள்ளத் தொடங்கியது. இறைவழிபாடு புது நெறியில் திசை திரும்பத் தொடங்கியது. அரசர் சிலரும் அவற்றிற்கு ஆட்பட்டனர். பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி, மனுநீதிச் சோழன் என்ற அரசர்களின் பெயர்களே அதனை அம்பலப்படுத்துகின்றன. வேதம் ஓதுதலும் வேள்விச் சடங்குகளும் தலையெடுத்தன. யாக குண்டங்களில் ஆதிரைகளைத் தள்ளி விட்டு அவற்றின் அவி நிலையில் இறைக்குப் படைப்பதாகக் கருதி ஆரியர்கள் தங்கள் வயிற்றை வளர்த்தனர். இதன் தாக்கமாகவே தங்கள் நடுகற்களைத் தெய்வமாக வழிபாடு செய்து வந்த தமிழர்களும் ஆடுமாடுகளைப் பலிகொடுக்கத் தொடங்கியிருத்தல் வேண்டும் என்று எண்ண முடிகிறது. புதுப்புது தெய்வங்கள் அதிகார பேதத்துடன் தமிழர்க்கு அறிமுகமாகத் தொடங்கினர்.
 
எல்லாவற்றிற்கும் மேலாக வர்ண பேதம் தமிழகத்தில் நுழையத் தொடங்கியது. அக்கால நாளில் தொழில் அடிப்படையிலும் நில அமைப்பின் அடிப்படையில் வேட்டுவர், ஆயர், உழவர், வாணிகர், பரணர், கொல்லர் போன்ற குலங்கள் நிலவியிருந்த தமிழகத்தில் வேற்றுச் சாதியினர் என்ற பாகுபாடு நிலவவில்லை. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற சாதியக் கண்ணோட்டம் நடைமுறையில் இருக்கவில்லை. சாதிய தர்மம் போதிக்கும் சாத்திரங்களோ, நூற்களோ அங்கில்லை வர்ண பேதத்தின் தாக்கத்தால் ஏற்கெனவே இருந்த குலங்கள் சாதியமாகத் தமிழகத்தில் உருவெடுக்கத் தொடங்கின.
 
ஆரியர்களோடு இறக்குமதியான வர்ண பேதம் தமிழகத்தில் கால் கொண்டதை புறநானூறு புகலும் ‘வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்’ என்ற அடி மெய்ப்பிக்கிறது. ஆரியதர்மத்தின் மக்களைப் பேதப்படுத்திப் பார்க்கும் ஆளுமை தமிழகத்தில் வேர் கொண்டது. எவ்வாறு ஆரிய தர்மம் தமிழர் வாழ்விடத்தில் வாழ்வு பெற்றதோ அது போலவே, ஆரிய தர்மத்திற்கு எதிர் நிலைகளை, தீர்த்தங்கரரின் சமணமும் புத்தரின் பௌத்தமும் வடபுலத்திலிருந்து தமிழகம் வந்துற்றன. அவற்றைப் பின் பற்றுவோரும் பெருகத் தொடங்கினர்.

சமுதாய நாட்டத்துடன் அதற்கு நல்லனவற்றை எடுத்து மொழிய வேண்டும் என்ற உள்ளக்கிடக்கை, சங்கப்புலவர்கள் போல் வள்ளுவருக்கும் இயல்பாயிருந்தது. சங்ககாலத்தின் எல்லையில் வாழ்ந்த வள்ளுவர் சங்க காலச் சமுதாய ஆக்கத்தில் கருதியதோடு சங்க இலக்கியங்களிலும் கண்ணோட்டமுடையவராகத் திகழ்ந்தார். தமிழர் தம் பண்பாட்டில் நிறைவினை ஏற்றும் குறைவினை நீக்கிச் செழுமைப்படுத்தும் நோக்கும் அவர்பால் கூர்மைப்பட்டது. மண்ணின் மணங்காட்டும் சங்க நூற்களோடு வடபுலத்திலிருந்து வந்து சேர்ந்த ஆரியதர்மம் போதிக்கும் வைதீகத்துடன், சமணம் பௌத்தம் போன்ற சமயக் கணக்கர்களின் கோட்பாடுகளையும் நெறிமுறைகளையும் நுணித்து நோக்கும் நுண்மாண் நுழை புலம் வள்ளுவருக்கு வாய்த்திருந்தது. தன் பார்வைத் தெளிவாய் அவற்றில் மானிடர்க்கு வேண்டும் ஏற்ற கருத்துகளை ஏற்புரை செய்தும் தள்ள வேண்டியவற்றைத் தள்ளியும் புதிய சமுதாயத்தின் வடிவாக்கத்திற்கு வரைபடம் போல் வள்ளுவர் வரைந்தளித்த அறிவுச்சுரங்கமே திருக்குறள்.

எப்பொருளையும் யார் கூற்றாயினும் அதன் மெய்ப்பொருள் கண்டுணர செய்த வள்ளுவர் ஆரிய தர்மத்தின் அடிக்கருத்துகளை எவ்வாறு எதிர்கொண்டார் என்பதை ஒரு சில சான்றுகளுடன் விளக்க முற்படுவதே இக்கட்டுரையின் முதல் நோக்கம். அவை ஆரிய தர்மத்தின் அடிப்படையினையும் வள்ளுவர் வளர்த்தெடுத்த அறத்தின் ஆழத்தையும் புலப்படுத்தாமல் போகாது. கல்வி, உழவுத் தொழில், கொல்லாமை ஆகிய மூன்று வாழ்வியல் தளத்தில் மட்டும் ஈண்டு ஒப்புநோக்கிப் பார்த்தலே நோக்கம். மனிதன் பெற்றுள்ள ஆறாவது அறிவினால் பெறும் கல்வியே மனித சமுதாயத்தின் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் உயர்விற்கும் அடித்தளமாக அமைந்து கிடப்பது. அறியாமை நீங்கி அறிவு வெளிச்சத்தில் மானிடன் முன்னேற்றப் பாதையில் பயணப்படுவதற்கு வழிவகுத்துக் கொடுக்கும் கல்வி குறித்து ஆரிய தர்மத்தின் ஒளியாக விளங்கும் மனுவின் கோட்பாடு என்ன என்பதை முதலில் காண்போம்.

ஆன்மாவைச் செம்மைப்படுத்தி, பிரம்மஞானத்தை அறிந்து, அதன் வாயிலாக் கடைத்தேறச் செய்வதே கல்வி என்று (மனு 2-9) பொதுவாகக் கூறினும் ஒரு குருவை நாடி அவருடன் உறைந்து வேதங்களைப் பழுதறக் கற்றலே கல்வி. வேதக்கல்வியே கல்வி எனக்கூறும் மனு, அக்கல்விகற்க முதல் மூன்று வருணத்தாருக்கே உரிமை வழங்குகின்றார். நான்காவது வருணத்தரான சூத்திரர்களும் பெண்களும் வேதம் படிக்கக் கூடாது என்பதோடு அவர்கள் வேதம் படிக்கும் இடத்தில் நின்று அதைக் கேட்கத்தானும் உரிமையற்றவர்கள்(மனு 10-199; 4-29) என்று வரையறை வகுத்திருந்தலையும் காண்கின்றோம். மேலும் பார்ப்பன‌ர்களே குருவாக அமர்ந்து, கற்பிக்கும் தகுதியுடையவர்) மனு 1-88, 89, 90) எனக் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றால் நான்காம் வருணத்தாருக்கு எழுத்தறிவும் படிப்பறிவும் ஆரிய வர்த்தத்தில் மறுக்கப்பட்ட ‘மாட்சி’யைப் பார்க்கின்றோம். திருவள்ளுவர் வாழும் உயிர்களுக்கெல்லாம் கல்வி வேண்டும் என்பதோடு, கண் போன்றது கல்வி என்கின்றார். கண்ணின் பயனே கல்வி என்றும் கல்லாதவர் கடையர் என்றும் கற்றார் எங்குச் சென்றாலும் சிறப்பெய்துவர் என்றும் நிலையான செல்வம் என்றால் அது கல்வி தான் என்றும் கல்வியால் வரும் பயனையும் வாழ்வையும் விதந்தோதுகின்றார். அனைவரும் கல்வியைப் பெற வேண்டும் என்று கூறும் திருவள்ளுவர் மண்ணைத் தோண்டத் தோண்ட நீர் பெருகி வருவது போல கற்கக் கற்க அறிவு ஒருவன்பால் பெருக்கெடுக்கும் என்று கூறுவது எண்ணிப் பார்த்து பின்பற்றுவதற்கான கருத்துரையாகப் பயன் செய்கிறது.

நவீன காலத்தில் கல்வியை அறிவியல், கலையியல் என்று இருகூறாகப் பிரித்துக் காண்பது போல் வள்ளுவர் அறிவியலுக்கு ஆதாரமான கல்வியை எண் என்றும் பிற கலைகளைப் பயிற்றும் கல்வியை எழுத்து என்றும் வகைப்படுத்துகிறார்.
 
கல்வியைப் பொதுமைப்படுத்தும் வள்ளுவர் அதன் கூறுபாட்டை நுட்பமாக ஆய்ந்து கூறியிருந்தலும் மனுவின் நோக்கிற்கும் போக்கிற்கும் முரணாக அமைந்தவை. நான்காம் வருணமென ஒதுக்கப்படும் சூத்திரர்க்கு கல்வி கூடாது என்ற மனுவின் கோட்பாட்டை முன்னர் கண்டோம்.
 
மனுவின் தருமசாத்திரம் உள்ளிட்ட வடமொழியாளர்களின் நூற்கள் கூறும் வருணக் கோட்பாடு தமிழகத்தில் ஒரே வழி வேர் கொண்ட நிலையை புறப்பாடலின், (புறநானூறு 183) “வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பாலொருவன் கற்பின் மேற்பாலொருவனும் அவன்கட்படுமே” என்ற அடிகள் மெய்ப்பிக்கின்றன. ஆயினும் மனுவின் நான்காம் வர்ணத்தவரான சூத்திரர்க்குக் கல்வி மறுப்பைத் தமிழுலகம் ஏற்கவில்லை என்பதோடு, கல்வியில் மேம்பட்ட சூத்திரரிடம் மேல் வருணத்தார் கல்வியின் பொருட்டுப் பணிந்து நிற்பர் என்று புறநானூறு கூறுவதிலிருந்து வருண பாகுபாடு ஒரோ வழித் தமிழகத்தில் நுழைந்திருத்தலைக் காண முடிந்த போதிலும் கல்வி குறித்த மனுவின் கோட்பாடு தமிழகத்தில் ஆளுமை பெற முடியவில்லை என்பதையும் அறிகின்றோம்.

புறநானூற்றுப் புலவனின் கருத்தினை அடியொற்றி, “மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதவர் கீழ்ப்பிறந்து கற்றார் அனைத்தியர் பாடு” என எழுந்தது வள்ளுவர் வாக்கு. கல்வி கற்காதவர்கள் மேல் வருணத்தில் பிறந்தவர் எனக்கூறப்பட்டலும் மேன்மையுடையவர் அல்லர். கல்வி உடையார் கீழ் வருணத்தில் பிறந்தாலும் அவர் பெற்ற கல்வியால் மேல் வருணத்தார் அவருக்கு ஈடாகார் என்ற பொருளைத் தருவது இப்பாடல். கல்வியே உயர்வு தாழ்வை நிர்ணயிக்கும் அளவு கோல் என்று வள்ளுவர் உணர்த்துவதை ஊன்றிப் பார்க்க வேண்டும். இக்குறளில் பயின்று வந்துள்ள சிறப்பு ‘உம்மைகள்’ பொருள் நிறைந்தவை. மேற்பிறந்தோர் கீழ்ப்பிறந்தார் என்பதைத் தான் ஏற்காமல் அவ்வாறு ஏற்கின்றவரை நோக்கி, ‘உங்கள் கருத்துப்படி அவ்வாறு எடுத்துக் கொண்டாலும்’ என்று கூறுவது போல் நயமாகக் கூறி கல்வியே உயர்வு தாழ்வை நிர்ணயிக்கும் அளவுகோல் என்று வள்ளுவர் உணர்த்துவதை ஊன்றிப் பார்க்க வேண்டும்.
 
பிறப்பினாலும் செய்யுந் தொழிலாலும் மானிடத்தைப் பிரித்துப் பார்க்காதவர் வள்ளுவர் அன்றோ. ‘உழுவோர் உலகத்திற்காணி’; என்று வள்ளுவர் வாயுரை நிலைநாட்டுகிறது. ஆனால் அந்த உழவுத்தொழில் செய்வோரை இழிந்தவராக மனு கணிக்கின்றார். (மனு 10- 34, 35) வேளாண்மையினை இழிதொழிலாகக் கருதும் மனு, ‘பார்ப்பன‌ சத்திரியர்கள் வாணிபம் செய்து பிழைத்த போதும் உடல் முயற்சியும் பிறர் தயவினை நாடத்தக்கதாயுள்ள விவசாயத் தொழிலை மேற்கொள்ளுதல் கூடாது’(மனு 10-83) என்று செய்யுந் தொழிலால் பேதமைப் படுத்துவதோடு உழவர் பிறரை நாடி வாழ்பவர் என்று ஏளனப்படுத்துவதையும் பார்க்க முடிகிறது. மன்னனின் செங்கோல் சிறப்பு ஓங்குவது உழவர் கால் சேற்றில் பதிந்து நிற்றலாலே என்ற புறநானூற்றுக் கருத்து வழிநின்று வள்ளுவர், “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்று குறட்பா தந்துள்ளார். வாழும் உயிர்களுக்கெல்லாம் உண்டி கொடுக்கும் உழவரே பிறன் கடைச் சென்று நில்லாத நிறைவாழ்வுடையார் என வள்ளுவர் உலகுக்குச் சொல்வதோடு மனுவிற்கும் மறுப்புரை தந்துள்ளார் என்று கொள்வது சாலப் பொருந்துவதாகும்.
 
ஆரிய தர்மம் தமிழ் நிலத்தைப் பாழடித்துவிடும் என்ற ஏக்கத்தோடும் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும் கருத்துக் கருவூலமாய் திருக்குறளைப் படைத்தளித்துவிட்டுப் போயிருக்கிறார் வள்ளுவர் என எண்ணத் தோன்றுகிறது.

- முனைவர் பி.யோகீசுவரன்

Pin It