"தேர்தல் திருவிழா களையிழந்து விட்டது' இப்படிச் சொல்லும் தமிழக முதல்வர் கருணாநிதியின் கவலைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. தேர்தல் கமிஷன் என்கிற சனி புகுந்து குடைச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஞாயிறு பிறக்குமா? பிறக்காதா? என்ற கவலையில்தான் இப்படிப் புலம்புகிறார்.

ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் புதியதாக இரண்டு வில்லன்கள் முளைத்து விட்டனர். ஒன்று நீதிமன்றம். இன்னொன்று தேர்தல் ஆணையம். பிரதமராக இருந்தால் என்ன? முதல்வராக இருந்தால் என்ன? அமைச்சராக இருந்தால் என்ன? எல்லோரும் சட்டத்தின் முன் சமம்தான் என்று சொல்லுவதை விட ஒருபடி மேலே போய் எல்லோரும் எங்களுக்குக் கீழேதான் என்கிற அதிகாரத் தொனியில் உச்சநீதி மன்றம் ஆட்டிப் படைக்கிறது. ஊழல் சாம்ராஜ்யத்தை ஒழிக்க வந்த தேவதூதுவன் போல, பரிசுத்த பரமானந்தன் போல மக்கள் மத்தியில் காட்சிப்படுத்திக் கொண்டுள்ளது.

இதே பாணியில் இப்போது தேர்தல் ஆணையம் சர்வ வல்லமை பொருந்தியவர்களாக, காட்டிக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், தேர்தலை நேர்மையான முறையில் நடத்தப் போகிறார்களாம். எதற்கு இந்த பம்மாத்து. இந்த இரண்டு அமைப்புகளிடமும் நாம் கேட்பது ஒரே கேள்விதான். ஊழல் அரசியல்வாதிகளை வழக்குப் போடுவதன் மூலம் தண்டிப்பதன் மூலம் ஊழலை நீதிமன்றம் ஒழித்து விடுமா? மாபெரும் இந்த இந்திய ஆதிக்கக் கட்டமைப்பு என்பது ஊழலால் உருவானதுதானே! ஊழலால் கட்டமைக்கப்பட்ட இந்தக் கட்டமைப்பின் ஓர் அதிகார அமைப்புதானே நீதிமன்றம். நீதிமன்றம் என்பது ஊழலுக்கு அப்பாற்பட்டது என்று யாராவது சான்று கொடுக்க முடியுமா? ஆகப் பாராளுமன்றம் என்ற ஊழல் அமைப்பிற்கும், நீதிமன்றம் என்ற ஊழல் அமைப்பிற்கும் இடையில் நடக்கும் அதிகாரப் போட்டிதான் ஊழல் ஒழிப்பு என்ற கண்ணாமூச்சி விளையாட்டு.

அதேபோலத்தான் நேர்மையான முறையில் தேர்தல் நடத்துவோம் என்று தேர்தல் ஆணையம் தம்பட்டம் அடிக்கிறதே! ஒருவேளை தேர்தல் ஆணையம் நேர்மையாகக் கூடத் தேர்தல் நடத்துகிறது என்று ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

நேர்மையாக நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் கட்சி ஊழலற்ற நேர்மையான ஆட்சி நடத்தும் என்பதற்குத் தேர்தல் ஆணையத்தால் உறுதி கொடுக்க முடியுமா? அப்படி எதுவும் கொடுக்க முடியாது. இருந்த போதிலும் அரசியல்வாதிகளிடம் இருக்கும் ஏகபோக உரிமைதான் சிக்கல். அரசு எந்திரத்தை அரசியல் வாதிகள் மதிப்பதில்லை. அரசு எந்திரத்தின் ஆதங்கத்தை இனி அரசியல்வாதிகள் புரிந்து கொள்வார்கள்.

ஊழல் என்பது தனி நபர் சம்பந்தப்பட்டதோ ஒரு அமைப்பு சம்பந்தப்பட்டதோ அல்ல. அது சமூக இயங்கு தன்மையைப் பொறுத்தது. அதன் அரசியல் பொருளாதார அமைப்பு முறையைப் பொறுத்தது.

 உலக மயம், தனியார் மயம், தாராள மயம் ஆகியவற்றின் விளைவாக உருவான சீரழிந்த புதிய பொருளாதாரக் கொள்கை வேரிலிருந்து தான் ஊழல் உருவானது. கார்ப்பரேட் முதலாளிகளைப் பொறுத்தவரை ஊழல் சட்டப்பூர்வமானதுதான். மேலும் மேலும் ஊழலைச் சட்டப்பூர்வமானதாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில் ஊழலை ஒழிப்போம் என்பது எடுபடாத ஒன்று. வளர்ந்து வரும் கார்ப்பரேட் முதலாளிகளின் வாழ்வியல் நெறியைப் புரிந்து கொண்டவர்கள்தான் நம் ஊர் அரசியல்வாதிகள்.

தமிழ்நாடாக இருக்கட்டும் அல்லது பல தேசங்களை அடக்கியாளும் இந்தியாவாக இருக்கட்டும். இந்த நாடு இதில் வாழும் மக்களுக்குச் சொந்த மில்லை. உலக முதலாளிகளுக்குச் சொந்தமானது. கடலும், காடும், நீரும், நிலமும் அவர்கள் கட்டுப்பாட்டில். 1947 ஆகஸ்ட் 15லிருந்து இந்தச் சுதந்திரம் யாருக்கு? என்ற கேள்வி கேட்கப்பட்டு வந்தது. அதற்கு இப்போது குழப்பமில்லாத விடை கிடைத்துள்ளது. "உலக முதலாளிகள் அசைந்தால் தான் இந்த உலகம் அசையும்' எப்படியாவது பணம் சம்பாதிப்பது, எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் முன்னேறு முன்னேறு என்பதுதான் முதலாளிகளின் கொள்கை நெறி. இதுதான் இந்திய நெறி.

எனவே ஊழல் அமைப்பு முறையில் இருந்து கொண்டு ஊழலை ஒழிக்க முடியாது. இந்த ஊழல் அமைப்பை நிலையாகப் பாதுகாக்கவே இதுபோன்ற ஊழல் எதிர்ப்பு பயன்படும். தலையை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதில் எந்தப் பயனும் இல்லை.

Pin It