மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள ஜுன்னார் காட்டுப் பகுதியில் (Junnar Forest Division) சிறுத்தைகளும் மனிதர்களும் சேர்ந்து வாழக் கற்றுக் கொண்டு இருப்பதாக வனத் துறை அதிகாரி வித்யா ஆத்ரேயா (Vidya Athreya) என்பவர் 13-4-2011 அன்று புனேயில் கூறினார். சிறுத்தைகள் மனிதர்கள் வாழும் பகுதிகளில் வருவதால் 2000ஆம் ஆண்டு முதல் 2005 வது ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் 56 மனித உயிர்கள் பலியாகியுள்ளன என்றும் 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் பலியாகும் மனித உயிர்களின் எண்ணிக்கை 26 ஆகக் குறைந்து உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

leopard_360சிறுத்தைகள் இப்பொழுது வயல் வெளிகளுக்கு அடிக்கடி வருவதாகவும் அவை பசியாக இருக்கும்போது மட்டுமே மனிதர்களைத் தாக்குவதாகவும் மற்ற நேரங்களில் ஆத்திரமூட்டினால் ஒழிய அவை திருப்பித் தாக்குவது இல்லை என்றும் கிராம மக்கள் கூறியதாக அந்த அதிகாரி கூறியுள்ளார். மேலும் அச்சிறுத்தைகள் மனிதர்கள் வாழும் பகுதியில் தங்களுக்கு உணவான கால்நடைகளையும் பன்றிகளையும் தேடித்தான் வருகின்றன என்றும், அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் தங்கள் கால்நடைகளைச் சிறுத்தைகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

          புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் கேலி பேச முடியும் என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டு. முதல் ஐந்து ஆண்டுகளில் 56 மனித உயிர்களும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 26 மனித உயிர்களும் பலியானது என்ற புள்ளி விவரத்தில் இருந்து சிறுத்தைகள் மனிதர்களுடன் நட்பு கொண்டு விட்டது என்ற முடிவிற்கு வருவது மிகவும் கொடூரமான சிந்தனைப் போக்காகும். இக்கால கட்டங்களில் பலியான கால்நடைகள் உள்ளிட்ட மற்ற உயிர்கள் பலியான விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. மேலும் அக்காலகட்டங்களில் சிறுத்தைகளின் எண்ணிக்கையைப் பற்றிய விவரங்களும் இல்லை. இப்படி அரைகுறையான புள்ளி விவரங்களைக் கொண்டு சிறுத்தைகள் மனிதர்களுடன் நட்பாகி விட்டதாக ஓர் அரசு அதிகாரி கூறுவது மிகவும் வேதனைக்கு உரியது.

          உண்மை நிலைமை என்ன? சிறுத்தைகள் முதலிய காட்டு விலங்குகளுக்குத் தேவையான உணவும் நீரும் காட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தான் அவை காட்டைக் கடந்து மனிதர்கள் வாழும் பகுதிகளில் வருகின்றன. இதற்குக் காரணம் மக்கள் தொகைப் பெருக்கம் தான். மக்கட் தொகைப் பெருக்கத்தினால் விவசாய நிலங்களும் காட்டு நிலங்களும் மனிதர்களின் உறைவிடத்திற்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. காட்டு நிலங்களை ஆக்கிரமிப்பதன் மூலம் மனிதன் தான் காட்டு விலங்குகளின் வாழ்வாதாரத்தில் தலையிடுகின்றான். பின் அரைகுறையான புள்ளி விவரங்களைக் கொண்டு கொடிய விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் நட்பாகிவிட்டன என்று பிரச்சினைகளின் கூர்மையை மழுங்கடிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறான்.

          'பிரச்சினைகளின் கூர்மையை மழுங்கடிக்கும் முயற்சியா?' என்று ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம். மனிதர்களின் வாழ்வதாரத்திற்கும் விலங்குகளின் வாழ்வாதாரத்திற்கும் மோதல் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் மக்கட்தொகைப் பெருக்கம் தான். விலங்குகளின் தேவைகள் அவற்றின் எண்ணிக்கைக்கு நேர் விகிதத்தில் இருக்கும். ஆனால் மனிதர்களின் தேவையோ எண்ணிக்கைக்கு நேர்விகிதமாக மட்டுமல்லாமல் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. ஆகவே மக்கட் தொகையை அப்படியே வைத்துக் கொண்டாலும் போதாது; குறைத்துத் தான் தீர வேண்டும்; இல்லையேல் மனிதர்களும் விலங்குகளும் வாழ்வாதாரத்திற்காக மோதுவதைத் தவிர்க்க முடியாது. 

          மக்கட் தொகையைக் குறைப்பது எப்படி? சீரான வருமானம் உடைய நிரந்தர வேலையில் இருப்பவர்கள் இரு குழந்தைகளுக்கு மேல் பெறுவதில்லை என்பதையும், அவர்களுள் மிகப்பலர் ஒரு குழந்தையுடனேயே நிறுத்திக் கொள்கின்றனர் என்பதையும், நிரந்தர வருமானம் இல்லாத ஏழை மக்களும், வகை தொகை தெரியாமல் பணம் சம்பாதிக்கும் பணக்காரர்களும் தான் அதிக குழந்தைகளைப் பெறுகின்றனர் என்பதையும்  கடந்த 40 ஆண்டு கால அனுபவம் காட்டியுள்ளது. இந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு அனைத்து மக்களுக்கும் சீரான வருமானம் உடைய நிரந்தர வேலையை அளிக்க வேண்டும் என்றும் வகை தொகை தெரியாமல் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு சமூகத்தில் அறவே ஒழிக்கப்பட்டு விட்டால் மக்கட் தொகை அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது மட்டுமல்ல; காலப் போக்கில் குறைக்கவும் முடியும் என்றும் முடிவிற்கு வருவதற்கு, சராசரி அறிவிற்கும் சற்றுக் குறைவான அறிவே போதுமானது. ஆனால் அப்படிப்பட்ட முடிவிற்கு வந்தால் அதற்கு அடுத்த நடவடிக்கை முதலாளித்துவ உற்பத்தி முறையைக் காவு கொடுப்பதாகவும் அதன் பின் சோஷலிச உற்பத்தி முறையை நிர்மாணிக்க வேண்டும் என்பதாகவும் தான் இருக்க முடியும். ஏனெனில் சோஷலிச அமைப்பில் தான் அனைவருக்கும் சீரான வருமானம் கொண்ட நிரந்தர வேலையை அளிக்க முடியும்; வகை தொகை தெரியாமல் பணம் சேர்ப்பதையும் தடுக்க முடியும்.

          இப்பொழுது இருக்கின்ற முதலாளித்துவ சமூக அமைப்பில் மனிதர்களை அடிமை கொண்டு சுகம் அனுபவிக்கும் ஆதிக்க சக்திகள் அந்த சுகங்களை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. ஆகவே அவ்விதமான கருத்துகள் வெளிவருவதை ஆதிக்க சக்திகளின் அடியாளான அரசு விரும்பாது. அப்படி இருக்கும் போது ஓர் அரசு அதிகாரி உண்மையைப் பேச முடியுமா? ஆகவே அவர் கொடூரமான கேலியாக இருந்தாலும் பரவாயில்லை; ஆதிக்க சக்திகளுக்கும் அரசுக்கும் எதிரானதாக இருக்கக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வுடன் கொடிய விலங்குகள் மனிதர்களுக்கு நட்பாகி விட்டன என்று "புள்ளி விவரத்துடன்" கூறியிருக்கிறார்.

           அரசு அதிகாரியை அவருடைய "கடமை உணர்வு" கட்டிப் போடலாம். ஆனால் வாழ்க்கை முழுவதும் துயரங்களையே அனுபவித்துக் கொண்டிருக்கும் பாதிக்கப்படும் மக்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?

- இராமியா

Pin It