I

ழாக் தெரிதாவின் மரணத்துடன் பிரெஞ்சுக் கோட்பாட்டு மூலவர்களின் தலைமுறை இறுதிக்கு வந்துவிட்டது. அறுபதுகளின் பிரெஞ்சு இடதுசாரிக் கோட்பாட்டாளரான பெர்னார்டு ஹென்றி லெவி லிபியாவில் அமெரிக்க-மேற்கத்தியத் தலையீட்டை இன்று நேரடியாக ஆதரிக்கிறார். அவர் கடாபிக்கு எதிரான நடவடிக்கையாளர்களைச் சந்திக்க லிபியாவுக்கும் சென்று திரும்பியிருக்கிறார். ஈராக்கில் ஜோர்ஜ் புஸ்ஸின் ‘ஜனநாயக ஏற்றுமதி’யை இப்படித்தான் ஆதரித்து தனது ‘புரட்சிகர’க் கடந்த காலத்தை மறுதளித்தார் அறுபதுகளின் இடதுசாரிக் கோட்பாட்டாளரான கிறிஸ்தோபர் ஹிச்சின்ஸ். அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்த ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி, அமெரிக்கா அமைத்த 2003 ஆம் ஆண்டு ஈராக்கின் இடைக்கால நிர்வாக அரசில் அங்கம் வகித்தது.

புதிய இடதுசாரிக் கோட்பாட்டிதழான இலண்டன் ‘நியூ லெப்ட் ரிவியூ‘வின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்த காலஞ்சென்ற பிரெட் ஹாலிடே, ஈராக் பிரச்சினையில் சதாமுக்கு எதிரான நடவடிக்கையை ஆதரித்தார். இடதுசாரி கோட்பாட்டாளர்களான இங்கிலாந்தின் தாரிக் அலி மற்றும் பிரான்சின் அலைன் பதியூ போன்றவர்கள் இன்றும் லிபியாவில் அமெரிக்க-மேற்கத்தியத் தலையீட்டை எதிர்த்துக் கடுமையான நிலைபாடுகளை எடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் மரபான கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கோ அல்லது நவமார்க்சியத்தைத் தமிழில் அறிமுகப்படுத்திய, மனித உரிமை உரையாடலை இடதுசாரிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வந்த கட்சிசாரா -  இருத்தலியல் மற்றும் பின்நவீனத்துவ - மார்க்சியர்கள் இன்று இலங்கைப் பிரச்சினையில், ஈழத் தமிழ்மக்கள் சார்பான மகிந்த அரசுக்கு எதிரான - மிகவும் தேவையான - மனித உரிமை அரசியலை முன்னெடுக்க முனையாதது மட்டுமல்ல, இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளுகிறவர்களுக்கு எதிரணியில் இருப்பவர்களோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

சர்வதேசிய அரசியலில் தங்களது முன்னைய நிலைபாடுகளை மறுதளித்திருக்கும் இடதுசாரிக் கோட்பாட்டாளர்கள் ஓரு புறம். தமது முன்னைய நிலைபாடுகளை இன்று முன்னிலும் அதிகமாக வலியுறுத்தும் இடதுசாரிக் கோட்பாட்டாளர்கள் ஒரு புறம். நெருக்கடியான சூழலில் ‘நிலையற்ற’ நிலைபாடுகளை மேற்கொண்டிருக்கும் தமிழக ‘விமர்சன’ மார்க்சியர் ஒரு புறம். மகிந்த அரசில் அங்கம் வகித்தபடி இன்னும் சோசலிசம் பேசிக் கொண்டிருக்கும் இலங்கை டிராட்ஸ்க்கியரான வாசுதேவ நாணயக்கார ஒரு புறம். இந்தியப் பழங்குடி இன மக்களின் மீது ராணுவத் தாக்குதலை வரவழைத்த மேற்குவங்க மார்க்சியர்கள் ஒரு புறம். எல்லாவற்றிலும் ‘தெளிவாகவும்’ எல்லாப் பிரச்சினைகளுக்கும் ‘உறுதியாகவும்’ விஞ்ஞானபூர்வச் சோசலிஷத்தின் நோக்கில் பதில்காணத் தெரிந்தவர்களுக்கு இந்தக் கேள்விகள் எல்லாம் தேவையில்லை என்பதும் உண்மைதான். என்ன செய்வது, இன்று மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுகளை விடவும், தொகுத்துக் கொண்ட வகையிலான ‘நிலைபாடுகள்’ அல்லவா தேவையாக இருக்கிறது? 

libyan_women_600

இந்தச் சூழலில் இன்று உலக அல்லது குறிப்பிட்ட புவிசார் நிலைமையில் இடதுசாரியாக இருப்பது என்பதன் அர்த்தம்தான் என்ன?

II 

தமிழக மார்க்சியர்களுக்கு எவ்வாறு ஈழப்பிரச்சினை என்பது தமது புரட்சிகரத்தை உரசிப் பார்த்துக் கொள்வதற்கான நிலைப்புள்ளியாக இருக்கிறதோ அதுபோல உலக மார்க்சியர்களுக்கு லிபியா தமது புரட்சிகரத்தை உரசிப் பார்த்துக் கொள்வதற்கான நிலைப்புள்ளியாக இருக்கிறது. லிபியப் பிரச்சினையில், இன்றைய உலகின் எந்தப் பகுதியினதும் பிரச்சினை போலவே மூன்று காரணிகள் செயல்படுகிறது. முதலாவது காரணி லிபிய அரசு. இரண்டாவது காரணி லிபிய அரசுக்குத் தோன்றியிருக்கும் எதிர்ப்பு. மூன்றாவது காரணி லிபியாவில் ஈடுபாடு காட்டும் சர்வதேசிய அரசியல் சக்திகள். லிபியா அரசு குறித்த இடதுசாரிகளின் நிலைபாடு என்ன? இடதுசாரி அல்லது மார்க்சிய அரசுகள் என்று சொல்லப்படும் கியூபா-வெனிசுலா-நிகரகுவா ‘அரசு’களுக்கு லிபிய அதிகாரத்தைக் கொண்டிருக்கும் கடாபியின் ஆட்சியதிகாரம் குறித்து எந்த விமர்சனமோ அல்லது நிலைபாடோ இல்லை. கடாபியின் நாற்பத்தி இரண்டு ஆண்டுகால ஆட்சியின் ‘சாதனைகளை’ மட்டும் கவனமாக இவர்கள் பட்டியலிடுகிறார்கள்.

ஆட்சியாதிகாரத்தில் உள்ளவர்கள் அல்லது லிபிய அரசுக்குத் தலைமை தாங்குபவர்கள் குறித்துக் கருத்துச் சொல்வதிலிருந்து (பிடலின் வார்த்தையில் சொல்வதானால்) தம்மைத் ‘தூரப்படுத்திக் கொள்கிறார்கள்’. அரசுக்கும் அரசுக்குமான நலனின் அடிப்படையிலான உறவு சார்ந்ததாகவே இவர்களது பார்வை இருக்கிறது. இதே அளவில்தான் லிபியாவின் எதிரணியினர் குறித்துக் கருத்துச் சொல்வதிலும் இவர்கள் தமது தூரத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். ஆக, இடதுசாரி அரசுகளின் சர்வதேசீயம் என்பது, அமெரிக்க-மேற்கத்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு சர்வதேசீயம்தானேயொழிய, ஆளும் அரசு எத்தன்மையானது - அது எதேச்சாதிகாரமா அல்லது சர்வாதிகாரமா அல்லது இனக்கொலை அரசா - என்பது குறித்த சர்வதேசீயமாக இல்லை. 

அரசுசாராத இடதுசாரிக் கோட்பாட்டாளர்களின் பார்வை என்ன? அலன் பதியூ முதல் தாரிக் அலி, ஜான் பில்ஜர் என இவர்களது பார்வை கடாபி விஷயத்தில் அரசுசார்ந்த இடதுசாரிகளின் பார்வையைக் கொண்டிருக்கவில்லை. கடாபி ஒரு கொடுங்கோலன், சர்வாதிகாரி, யதேச்சாதிகாரி, சொந்த மக்களைக் கொல்பவன் என்பதில் இவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இவர்கள் அரசுசாரா இடதுசாரிகளிடமிருந்து முரண்படும் இந்த இடத்திலிருந்து, லிபிய அரசுக்கு எதிராக எழுந்திருக்கும் எதிர்ப்பின் அரசியலைப் பேசுகிறார்கள். தாரிக் அலி கடாபிக்கு எதிரான எழுச்சி மத்தியக் கிழக்கு எழுச்சிகளின் தொடர்ச்சி என்பதனை மறுப்பதில்லை. என்றாலும் மத்தியக் கிழக்கு நாடுகளின் பல்வேறு அரசுகளின் ஒடுக்குமுறைகளை நிராகரித்துவிட்டு லிபியாவில் மட்டும் தலையிடும் அமெரிக்காவின் தேர்ந்தெடுத்த முன்ஜாக்கிரதை உணர்வு (selective vigilatism) அதனது ராணுவ-அரசியல்-பொருளியில் ஆதிக்க விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகக் காண்கிறார். அலைன் பதியூ மற்றும் ஜான் பில்ஜர் போன்றவர்கள் லிபியக் கிளர்ச்சி மத்தியக் கிழக்கின் வெகுமக்கள் திரள் அரசியலின் தன்மை கொண்டது இல்லை எனவும், அமெரிக்காவினதும் பிரான்சினதும் நீண்டகாலத் திட்டத்தின் பின் அவரது ஆதரவாளர்களால் தலைமை தாங்கப்படும் கிளர்ச்சி இதுவெனவும் சொல்கிறார்கள்.

துனீசிய-எகிப்தியக் கிளர்ச்சிகள் தோன்றுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கடாபிக்கு எதிரான திட்டத்தினைப் பிரான்சும் அமெரிக்காவும் கொண்டிருந்தன என்பது இவர்களது நிலைபாடு. பிற மத்தியக் கிழக்கு வெகுமக்கள் எழுச்சிகளைப் போல ஏன் பெண்களின் பங்கெடுப்பு லிபியாவில் இல்லை என்பதனையும் அலைன் பதியூ கேட்கிறார். அவர் மீதான மிகுந்த மரியாதையுடனேயே இதனை என்னால் மறுக்க முடியும். லிபியக் கிளர்ச்சியில் பெண்களின் வீதிக் கிளர்ச்சிகளுக்கான ஆதாரங்கள் இணையமெங்கிலும் விரவிக் கிடக்கிறது. இவ்வகையில் பிற மத்தியக் கிழக்கு நாடுகளின் வெகுமக்கள் திரள் அரசியலாக எழாமல், அமெரிக்காவும் பிரான்சும் பின்னின்று தோற்றுவித்ததே இந்த எதிர்ப்பு என்கிறார்கள். இதுவன்றி லிபியக் கிளர்ச்சியாளர்கள் முன்பு அமெரிக்கா வேட்டையாடித் திரிந்த அல்கைதாவினர் எனவும் இவர்களில் ஓரு பிரிவினர் சொல்கிறார்கள். இதற்காக ஆதரமாக கிளர்ச்சியின் தலைமையினர் பலர் முன்பாக அமெரிக்க அரசு நிர்வாகத்துடன் கொண்டிருந்த தொடர்புகளையும் முன்வைக்கிறார்கள். 

‘இன்று‘, மத்தியக் கிழக்கு எழுச்சிகள் துவங்கி மூன்று மாதங்களின் பின்பு, அமெரிக்க-மேற்கத்திய அரசுகளின் வகிபாகமும் நோக்கமும் குறித்து நாம் பேசுவது வேறு, கிளர்ச்சி தோன்றுவதற்கு ‘முன்பாகவும்’, கிளர்ச்சியின் ‘ஆரம்பகாலங்களிலும்’ அமெரிக்க-மேற்கத்திய அரசுகளின் வகிபாகம் குறித்துப் பேசுவது வேறு. எகிப்தை முன்வைத்து மத்தியக் கிழக்கு நிலைமைகளைப் பொதுவாகவும், லிபியாவை முன்வைத்துக் குறிப்பாகவும் இந்தப் பிரச்சினையை நாம் அணுகுவோம். எகிப்து எழுச்சியின் குவிமையமாகவும் துவக்கமாகவும் எவரும் தாஹிரர் சதுக்க வெகுமக்கள் திரள் எழுச்சியிருந்துதான் துவங்குவார்கள். அதில் ஜனநாயகவாதிகள்,கல்வியாளர்கள்,இஸ்லாமியவாதிகள், மார்க்சியர்கள், கருத்தியல் சாரா இளைஞர்கள், தொழிலாளர்கள், வேலையற்றோர் எல்லோரும் பங்கு பெற்றார்கள். இந்த எழுச்சியில் எகிபதின் ஏப்ரல் ஆறு எனும் இயக்கமும் மிகமுக்கியமான பங்கை ஆற்றியிருக்கிறது. எழுச்சிகளின் துவக்க இயக்கமாக இதனைக் குறிப்பிடுவோரும் உண்டு.

இந்த ஏப்ரல் ஆறு இயக்கம் 2008 ஆம் ஆண்டு எல் மஹல்லா எல் குப்ரா எனும் தொழில்நகரத்தின் ஆலை ஒன்றில் தொழிலாளர் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் இயக்கம். இந்த இயக்க உறுப்பினர்களில் சிலர் அமெரிக்காவின் என்டோவ்டென்ட் பர் டெமாக்ரஸியின் பகுதியாகச் செயல்படும்,நிதி வழங்கப்படும் 'ஒட்பொர்' எனும் அமைப்பில் தொடர்புகொண்டவர்கள். அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். மத்தியக் கிழக்கின் அனைத்து நாடுகளிலும் இந்த 'ஒட்பொர்' இயக்கம் செயல்படுகிறது. இந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு மத்தியக் கிழக்கு எழுச்சிகள் அனைத்தும் அமெரிக்காவால் தூண்டப்பட்டுதுதான் எனும் கட்டுரைகள் இணையத்தில் விரவிக்கிடக்கிறது. அலைன் பதியூவோ அல்லது தாரிக் அலியோ அல்லது மத்தியக் கிழக்கு இடதுசாரிகளோ இதில் உடன்படமாட்டார்கள் என்பது திண்ணம். 

லிபியப் பிரச்சினைக்கு வருவோம். லிபியாவில் கிளர்ச்சிகளின் துவக்கம் என்ன? 2011 ஆம் ஆண்டு ஜனவரி 13 முதல் 15 வரையிலான நாட்களில் வீட்டுமனை கட்டுவதிலான தாமதத்தையும் ஊழலையும் எதிர்த்து பென்காசி நகரில் வெகுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். அதனைத் தொடர்ந்து வீட்டுமனைக் கட்டிடங்களையும் அரசாங்கக் கட்டிடங்களையும் அவர்கள் ஆக்கிரமித்தார்கள். ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் ஜமால் ஹஜ்ஜி எனும் எழுத்தாளரும் மனித உரிமையாளுரமானவர் கைது செய்யப்பட்டார். முன்பாக ஜனவரி மாதத்தின் ஆரம்பத்தில் கடாபி கூட்டிய ஒரு கூட்டத்தில் ஊடகவியலாளர்களும் நடவடிக்கையாளர்களும் ஆர்ப்பாட்டத்தைத் தூண்டினால் அதற்கு அவர்களே பொறுப்பு என மிரட்டப்பட்டார்கள். இதற்கும் முன்பாக துனீசியாவில் கிளர்ச்சி துவங்கியபோது கிளர்ச்சியாளர்களைக் கண்டித்த கடாபி பென் அலியை ஆதரித்து அறிக்கை வெளியிட்டார். கைது செய்யப்பட்ட ஜமால் ஹஜ்ஜிக்கு ஆதரவாக அம்னஸ்டி இன்டர்நேசனல் அறிக்கை வெளியிட்டது. வெகுமக்கள் அவரை விடுதலை செய்யுமாறு ஆரப்பாட்டம் நடத்தினார்கள்.

பிப்ரவரி 15 ஆம் திகதி காவல்துறைத் தலைமையகத்தில் திரண்ட அறுநூறுக்கும் மேற்பட்ட மக்கள் கடாபியின் காவல்துறையினரால் தாக்கப்பட்டார்கள். பலர் காயமடைந்தார்கள். பிறநகரங்களுக்கும் கிளர்ச்சி பரவியபோது பாதுகாப்புப் படையினரால் பலர் கொல்லப்பட்டார்கள். அதாவது ஜனவரி மாதம் துனீசியாவில் கிளர்ச்சி துவங்கிய பின்னும், அதனைத் தொடர்ந்து எகிப்தில் கிளர்ச்சி துவங்கிய பின்னும், லிபியாவில் கிளரச்சி துவங்கக் கூடாது என கடாபி எச்சரித்த பின்னும்தான் லிபியாவில் கிளர்ச்சி துவங்கியது. இந்தக் கிளர்ச்சியை கடாபியின் அன்றைய நண்பரான இத்தாலிய அரசு எதிர்த்து கடாபியை முழுமையாக ஆதரித்தது. அன்றைய நிலைவீயில் பிரான்ஸ் பிரித்தானிய மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் கடாபியின் உறவு எத்தகையதாக இருந்தது? ஆப்ரிக்க நாடுகளிலிருந்து வருகிற கறுப்பின மக்களை ஐரோப்பாவுக்கு வரமுடியாமல் தடுக்கிற ஒரு ஒப்பந்தம் அவர்களுக்கு இடையில் இருந்தது. மேற்கத்திய உளவுத்துறையினர் காவல்துறையினருக்கும் கடாபியின் நிர்வாகத்திற்கும் இது தொடர்பான உறவுகள் இருந்தன. அமெரிக்க ஆய்வு நிறுவனங்களும் விளம்பர நிறுவனங்களும் கடாபிக்காகச் செயல்பட்டன.

வரலாற்றின் இறுதியை அறிவித்த பிரான்சிஸ் புகுயேமா உள்பட அமெரிக்க-மேற்கத்தியக் கல்வியாளர்கள் லிபியா சென்று வந்தார்கள். பிரான்ஸ் பிரித்தானிய எண்ணெய்க் கம்பெனிகள் லிபியாவில் செயல்பட்டன. விக்கிலீக்ஸ் அறிக்கைகளை வாசிப்பவர்கள் உலக நாடுகளில் எங்கும் எவ்வாறு அமெரிக்க தூதரகங்கள் உளவு நிறுவனங்களாகவும் செயல்பட்டன என்பதை ஒருவர் சாதாரணமாக அறிய முடியும். பிரகாஷ் காரத் குறித்த எச்சரிக்கையைக் கூட அவர்கள் பதிவு செய்து வைத்திருந்தார்கள். கடாபியுடன் கடாபி மகனுடன் அமெரிக்க-மேற்கத்திய அரசுத் தலைவர்கள் சந்தித்தார்கள். இத்தகைய சந்திப்புக்களை அவர்கள் எல்லா மட்டத்திலும் மேற்கொண்டிருக்க செய்வார்கள். தமக்கு இயையபான சந்தர்ப்பங்கள் எழுகிறபோது அதந்தத் தொடர்புகளை அவர்கள்  பாவிக்கவே செய்வார்கள்.

கடந்த பத்தாண்டுகளில் கடாபியின் அரசு மட்டத்திலும் பல்வேறு மட்டங்களிலும் இந்த உறவுகளை அமெரிக்க-மேற்கத்திய நிறுவனங்கள் கொண்டிருக்கவே செய்தன. இந்த நிலைமை அமெரிக்காவுடனும்-மேற்கத்திய நாடுகளுடனும் தொடர்பு கொண்ட அனைத்து நாடுகளுக்கும் நேரும். பிரச்சினை என்னவென்றால் இது முன்பின்னாக நேரும் என்பதும், அவர்களுக்கான தருணம் வாய்க்கும்போது நேரும் என்பதும்தான். கடாபியுடன் எந்த அளவுக்கு அமெரிக்காவுக்கும் மேற்குக்கும் உறவு இருந்ததோ அதே அளவிலான உறவுகள் அவர்களுக்கு லிபிய ராணுவத்திலிருந்து வெளியேறிய தளபதிகளுடனும் இருந்திருக்க முடியும். பிடல் சொல்கிற மாதிரி ஜோர்ஜ் புஸ் கடாபிக்கு துரோகமிழைத்துவிட்டார். அமெரிக்க ராணுவத்தின் ஒத்துழைப்பும் லிபியாவுக்கு இருந்து வந்தது என்பதனை நாம் நினைவில் வைத்திருப்பது நல்லது. ராஜிய உறவுகளை முறித்தபோது முறித்துக் கொள்வதாகவும் ஒபாமா அறிவித்தார். 

லிபியாவில் மட்டும் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் மனிதாபிமானத் தலையீடு நடத்தக் காரணம் அதனது எண்ணெய்வளம்தான் என்பதில் சந்தேகமில்லை. சிரியா தவிர்த்த சவுதிஅரேபியா துனீசியா எகிப்து யேமான் பஹ்ரைன் என எண்ணெய்வள நாடுகள் அனைத்திலும் அமெரிக்க-மேற்கத்திய ஆதரவு அரசுகள்தான் இருக்கின்றன. இதுவன்றி கடாபியை அவர்கள் தேர்ந்து கொள்ள பிறிதொரு ‘தார்மீக’க் காரணம், கடாபி தனது சொந்த மக்கள் மீது விமானத்தாக்குதலை நடத்தினார், கரப்பான் பூச்சிகளை எலிகளை ஒழிக்க முனைந்தார், கடாபியின் மகன் லிபியா இரத்தக்கடலாகும் எனக் கர்ஜித்தார் என்பதுதான். கடாபி இதனையெல்லாம் செய்யவில்லை என எவரும் சொல்ல முடியாது. கடாபி விமானத் தாக்குதல் நடத்தவில்லை எனச் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரே நாடு ரஸ்யா. ஆனால் அந்த நாடு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இரத்து அதிகாரம் கொண்டிருந்தும், விமானப் பறத்தலற்ற பிரதேசத் தீர்மானததிற்கு தன்னைத் தூரப்படுத்திக் கொண்டது.

நடக்காத ஒரு தாக்குதலுக்கு எதிராக எதற்காகத் தடை என ரஸ்யா சாதாரணமாகக் கேட்டிருக்கலாம். அதனிடம் இருக்கும் ஆதாரங்களை ரஸ்யா கையளித்திருக்கலாமே? மாறாக லிபியாவில் வாழும் வெகுமக்கள் தம்மீதான விமானத் தாக்குதல்களைச் சொன்னார்கள். அதிகார மட்டத்தில் ஒன்றும் அரசியல் மட்டத்தில் ஒன்றும் பேசிக் கொண்டிருக்கும் ரஸ்யாவை ஒருவர் நம்புவதா அல்லது லிபிய மக்களை நம்புவதா? பாதிக்கப்பட்டவர்கள் லிபிய மக்கள்தான். அதற்கு எதிராகத்தான் அவர்கள் கிளர்ந்தார்கள். துனீசியா மற்றும் எகிப்துக் கிளர்ச்சிகளின் பகுதியாகவே அவர்கள் திரண்டார்கள். கடாபி ஜனவரி மாதம் மத்தியிலேயே தனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் கூடாது என அவர்களை எச்சரித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம், விமானப் பறத்தலற்ற பிரதேசம் ஏற்படுத்துவதற்கான தாக்குதல், கத்தார் நாடு ஏப்ரல் மாத ஆரம்பத்தில் லிபியக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் கொடுத்திருப்பது, பிரித்தானியா தொலைத்தொடர்புக் கருவிகளைக் கொடுத்திருப்பது எல்லாமும் அதன் பிறகு நடந்தவை. இதனது தர்க்கமுறையாக ஆட்சி மாற்றத்தினை - ரெஜிம் சேஞ்ச் -  வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானத்திற்கு அப்பாலும் செல்வோம், ஆயுதமும் தருவோம் என அமெரிக்காவும் மேற்கத்திய உலகமும் சொல்வது என எல்லாமும் அதனது தொடர்ச்சியாக நடந்து வரும் சம்பவங்கள். ஜனவரி ஆரம்பத்தில் துவங்கிய மத்தியக் கிழக்கு எழுச்சிகளின் தொடர்ச்சியாகத் தன்னெழுச்சியாக எழுந்த லிபியக் கிளர்ச்சியை பிப்ரவரி இறுதியிலிருந்து தமது ஆதிக்க நோக்கத்திற்கு அமெரிக்காவும்-மேற்குலகும் கடத்தியிருக்கின்றன என்பதுதான் நிஜம். 

இப்போது அமெரிக்க-மேற்கத்தியத் தாக்குதலைக் கண்டிக்கிற நாடுகளான சீனா ரஸ்யா பிரேசில் இந்தியா தென் ஆப்ரிக்கா போன்ற ஒரு கூட்டமைப்பைக் கொண்டிருக்கிற நாடுகள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தன? விமானப் பறத்தலற்ற ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, கடாபி திரிபோலில் ரஸ்ய சீன இந்திய நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். மேற்கத்திய எண்ணெய்க் கம்பெனிகளின் ஒப்பந்தங்களை இவர்களுக்குத் தருகிறேன் என அவர் உறுதியளித்தார். ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானத்திலிருந்து அவர்கள் தம்மைத் தூரப்படுத்திக் கொண்டார்கள். சீனாவின் இன்றைய மிகப்பெரும் எண்ணெய் இறக்குமதிகளை அது சவுதி அரேபியா, பெஹ்ரைன், யேமான், ஈரான் போன்ற நாடுகளில் இருந்துபெறுகிறது. சீனாவோ ரஸ்யாவோ இந்தியாவோ பிரேசிலோ, லிபியா பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கின்றன. ஏன் இவைகள் பெஹ்ரைனிலும் யேமானிலும் நடந்து கொண்டிருக்கும் அரசுப்படுகொலைகள் பற்றிப் பேசவில்லை? ஏன் கம்யூனிச நாடு எனப் பீத்திக்கொள்கிற சினா தனது ஏற்றுமதியாளர்களான பெஹ்ரைன் பற்றியும் யேமான் பற்றியும் பேசவில்லை?

சீனாவினதும் இந்தியாவினதும் தலையிடாக் கொள்கை என்பது வெறும் பம்மாத்து அரசியல். இனக்கொலைகளைப் புரிவதற்கு நேரடியிலாக இலங்கைக்கு ஆயதம் விற்பார்களாம், அது தலையீடு இல்லையாம், நடைமுறையில் இவர்களது எதிர்ப்புக்களுக்கும் இவர்களது பேச்சுக்களுக்கும் எந்தவிதமான அரசியல் தார்மீகத் தன்மைகளும் இல்லை. பெறுமதிகளும் இல்லை. சீனா திபெத்தைக் காவு கொள்ளும்பொது அமெரிக்கா காணாமல் விட்டால் சரி. செச்சினியாவைச ரஸ்யா காவு கொள்கிறபோது அமெரிக்கா காணாமல் விட்டால் சரி. இதுதான் இவர்களது சர்வதேசிய அரசியல். இவர்களுக்கு இருக்கிற இரத்து அதிகாரத்துக்கு எல்லாம் எதுவிதமான அர்த்தம் இருக்க முடியும்? ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இஸ்ரேல் குடியிருப்புக்களை அமைக்கக் கூடாது எனப் பெரும்பான்மையோர் தீர்மானம் நிறைவேற்ற முனைந்தபோது அமெரிக்கா தனது இரத்து அதிகாரத்தைப் பாவித்து இஸ்ரேலைக் காத்தது.

libya_600

இப்போது கத்தித் தீர்க்கிற சீனாவும் ரஸ்யாவும் ஏன் தமது இரத்து அதிகாரத்தைப் பாவித்து லிபியாவைப் பாதுகாத்து, அங்கு ஒரு சமாதானத்தீர்வு வருகிற மாதிரியிலான முயற்சி எடுக்கக் கூடாது? உலகின் வளங்களைக் கொள்ளையடிப்பதில்தான் இன்றைய உலகு ஒரு பல்துருவ உலகாக இருக்கிறது. அறம், சர்வதேசீயம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பொறுப்புணர்வு என எதுவிதமான மாண்புகளும் இன்றைய பல்துருவ அரசியலில் இல்லை. சீனா ரஸ்யா கியூபா வெனிசுலா உள்பட, அமெரிக்க-மேற்கத்திய நாடுகள் அனைத்திலும் இன்று செயல்படுவது அவரவர் தேசிய நலன்சார்ந்த அரசியல்தானேயல்லாது, கருத்தியல் அல்லது அறமதிப்பீடுகள் சார்ந்த அரசியல் இல்லை. ஹங்கேரி யுகோஸ்லாவியப் படையெடுப்பு என கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அரச ஆதரவு. பிற்பாடு கம்யூனிஸ்ட்டுகளையும் இடதுசாரிகளையும் கொன்றொழித்த கொடுங்கோலன் பினோசோவை ஆதரித்த மாவோ அதனை புதைகுழிக்கு அனுப்பினார். அந்தச் சிலி நாடுதான் இலங்கை மனித உரிமைப் பிரச்சினையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. 

இந்தச் சூழலில் இன்று உலக அல்லது குறிப்பிட்ட புவிசார் நிலைமையில் இடதுசாரியாக இருப்பது என்பதன் அர்த்தம்தான் என்ன? 

III 

தமிழ்ச் சூழலில் வாசிப்பின் அல்லது மொழிபெயர்ப்பின் அரசியல் குறித்து நாம் பேசவேண்டியிருக்கிறது. நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கான தேடலில், கேள்விகளுக்கான விடைகளைக் கண்டடைவதில்தான் எமது வாசிப்பும் மொழிபெயர்ப்பும் தடம் தேர்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் எழுதப்பட்ட மொழியாக்கப்பட்ட தத்துவ-பொருளியல்-அரசியல் நூல்களை மட்டுமே நாம் ஒரு பறவைப் பார்வையில் நோக்குவோம். ஈழப் போராட்டம் உக்கிரம் பெற்ற எழுபதுகளின் இறதியிலும் எண்பதுகளிலும்தான் உலகின் தேசிய விடுதலைப் போராட்டம் சார்ந்த எழுத்துக்கள் தமிழில் வெளிவரத்துவங்கின. சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ, ஜெனரல் கியாப், மாவோ, பெனான், காப்ரல் போன்ற புரட்சியாளர்களின் நூல்கள் வெளியாகின. மரபான கம்யூனிஸ்ட் கட்சிகளின் கருத்தியல் போதாமை எனும் வெற்றிடத்தில்தான் கிராம்ஸி, சார்த்தர், ரோஸா லக்ஸம்பர்க் போன்றோரின் நூல்கள் வெளியாகின. அயர்லாந்து, குர்திஸ்தான் குறித்த நூல்களும் வந்தன. இவை அனைத்தையும் விமர்சித்துக் கொண்டுதான் பின்நவீனத்துவம் அடையாள அரசியலையும் வித்தியாச அரசியலையும் பேசியது. மார்க்சியம்-தேசியம்-தலித்தியம் எனும் சிந்தனைப் போக்குகளுக்கிடையிலான உரசல் உச்சம் பெற்றது. அம்பேத்கார் பெரியார் குறித்த மறுவாசிப்புக்கள் வந்தன.

ஆயுத விடுதலைப்போராட்டமான ஈழவிடுதலைப் போராட்டம் தமிழ்ச் சிந்தனையில் ஒரு மிகப்பெரும் நிகழ்வு. தேசியம் தன்னளவில் சுவீகரித்துக் கொள்ள வேண்டிய தலித்திய,வித்தியாச அரசியல் போன்றவற்றை முன்வைத்த விவாதங்கள் வந்தன. ஓற்றைத்துருவ உலகு-பல்துருவ உலகு எனும் வேறுபட்ட பார்வைகள் தமிழுக்குள் வந்தன. கட்சிசாரா மார்க்சியர்கள் பேசிவந்த மனித உரிமை அரசியல் இப்போது சிக்கலாகியது. ராஜீவ்காந்தி படுகொலையை முன்வைத்து மரணதண்டனைக்கு எதிரான இயக்கம் எழுந்தது போல, முள்ளிவாய்க்கால் படுகொலையை முன்வைத்து மகிந்தாவுக்கு எதிரான வலிமையான மனித உரிமை அரசியல் தமிழ்நிலத்தில் உருவாகவில்லை.

இந்திய உபகண்டத்தின் குறிப்பான இஸ்லாம் மற்றும் தலித்திய அரசியலை தேசியம் கவனத்தில் கொள்ளவில்லை எனும் விமரசனம் எழுந்தது. இதே சூழலில்தான் மனிதாபிமான ஏகாதிபத்தியம் தொடர்பான விவாதங்களும் நூல்களும் தமிழ்மொழிக்குள் வருகிறது. தேசிய விடுதலைப் போராட்டமும் மனிதாபமான ஏகாதிபத்தியமும் குறித்த ஒரு கோட்பாட்டுப்பார்வை இப்போது உருவாகிறது. இந்தப் பார்வை இன்றைய தமிழகச் சூழலில் மரபுசார் கம்யூனிஸ்ட்டுகளின் பார்வையாக, கட்சிசாரா ‘விமர்சன’ மாரக்சியர்களின் பார்வையாக ஆகிறது. இந்த ஒற்றைப் பார்வையை ஏற்பதில் இவர்களுக்கிடையில் வித்தியாம் இல்லாதது போலவே, இலங்கை தொடர்பாகவும் மௌனத்தை ஏற்பதிலும், நடைமுறையில் மகிந்த ஆதரவு அரசியல் செயல்பாட்டாளர்களுடன் ஒப்புதலைக் கொண்டிருப்பதிலும்; ஆட்சேபனையிருக்கவில்லை. இந்தச் சூழ்நிலைமையில்தான் மனிதாபினமான ஏகாதிபத்தியம் பற்றி, எகிப்திய எழுச்சி மற்றும் லிபியப் பிரச்சினை பற்றித் தமிழில் பேசுகிறோம். 

இலங்கையின் மனித உரிமை விவாதங்களில் ஏன் கியூபா அதற்கு ஆதரவான நிலைபாடு எடுத்தது என்பதனைக் குறித்து இவர்களது பார்வை என்ன? கியூப விடுதலையைக் கொண்டாடுகிற இடதுசாரிக் கட்சியினது பார்வை எவ்வாறாக இருக்கிறது? மூன்றாம் உலக நாட்டில் மனித உரிமை அரசியலை முன்வைத்து ஏகாதிபத்தியம் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக கியூபா அந்த நிலைபாடு எடுத்தது. அப்புறம் இந்தத் தர்க்கம் இப்படியாகப் போகும் : ஒரு நாட்டில் இதனை நாம் ஒப்புக்கொண்டால் எல்லா மூன்றாம் உலக நாடுகளிலும் அமெரிக்கா தலையிடும் வாய்ப்பு உருவாகிவிடும். அமெரிக்கத் தலையீட்டை முன்வைத்து மூன்றாம் உலக நாடுகளின் கொடுங்கோலர்களையும் சர்வாதிகாரிகளையும் காப்பாற்றலாம்.

இதுதான் சர்வதேசீயக் கடமை என்றால் அங்கு போரடிக் கொண்டிருக்கும், ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும், இனக்கொலைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் மக்களுக்கான உங்களது பொறுப்புணர்வு என்ன? மூன்றாம் உலகின் ஆட்சியாளர்கள் இனக்கொலை புரிபவர்களாக, பாரம்பர்ய ஆட்சியைத் திணிப்பவர்களாக, சர்வாதிகாரிகளாக இருக்க அமெரிக்காவும்-மேற்கத்திய நாடுகளும்தான் காரணமா? இலங்கையின் முழு சிவில் சமூகமும் ராணுவமயப்படுத்தப்பட்டதாக சிங்கள பௌத்த இனவிஷமேறியதாக இருக்க ஏகாதிபத்தியமா காரணம்? காலனியாதிக்கம் இதில் பகுதியளவு பாத்திரம் வகிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் காலனியாதிக்கத்திலிருந்து அரசியல் விடுதலை பெற்று அரைநூற்றாண்டுகளின் பின்னும் காலனியாதிக்கத்தையும் ஏகாதிபத்தியத்தையும் உள்நாட்டு ஒடுக்குமுறைக்கான காரணமாகச் சொல்லிக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. 

ஏகாதிபத்தியம் எனும் பூச்சாண்டியைக் காட்டி உள்நாட்டில் இன்று சிறுபான்மையினை மக்களைக் கொலை செய்து வருகிறார்கள் மூன்றாம் உலகின் அரசினர். சகலவிதமான விமர்சனங்களினோடும் -  தலித்தியம் இஸ்லாம் மலையகத் தமிழர் எனும் பிரச்சினைகளோடு - ஒரு வலிமையான எதிர்ப்பியக்கத்தைக் கட்ட வேண்டிய தேவை ஈழமண்ணில் இருக்கிறது. இதற்கான படிப்பினைகளை எகிப்திய-லிபியப் பிரச்சினை கொண்டிருக்கிறது. மத்தியக் கிழக்கு எழுச்சி வெகுமக்கள் திரள் பாதை. ஈழத்தில் அன்றும் இன்றும் வெகுமக்கள் திரள் பாதை என்பது முயற்சித்துப் பார்க்கப்படவே இல்லை. இதைப் போன்றே மனிதாபிமான ஏகாதிபத்தியத்தை, அதனது தலையீட்டைத் தடுத்து நிறுத்தக் கூடிய ஒரே வல்லமை கொண்டதாக இந்த வெகுமக்கள் பாதையே இருக்கும். எந்தக் குறிப்பிட்ட அரசையும் முழுமையாகச் சார்ந்து நின்று இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. முன்னெடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.

தமது பொருளியல் மற்றும் அதிகார நலன் சார்ந்து மட்டுமே செயல்படுகிற அரசுகளைக் கொண்ட பல்துருவ உலகுதான் இது. அரசுகளை நிச்சயமாக இன்று கருத்தியல் வழிநடத்தவில்லை. இதனது அர்த்தம் ஒரு விடுதலை அரசியல் கருத்தியலைக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பது அல்ல. மாறாக தமது அரசியல்-அறமதிப்பீடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் வெகுமக்கள் திரள் அரசியல் மட்டுமே ஒரு அரசை அதனது அதிகாரங்களை மட்டுப்படுத்தச் செய்ய முடியும். தத்தமது நலன்சார் அரசியல் கொண்ட உலக அரசுகள் அந்த நிலைமையிலேயெ அந்த மக்களைப் பொருட்படுத்தும். அப்போது அத்தகைய நலன்சார் அரசுகளின் தலையீடு வெகுமக்கள் திரள் அரசியலின் திசைவழியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது. 

போராடும் மக்கள், ஒடுக்குமுறை அரசு, இந்த முரண் முற்றும்போது தலையிடும் பிறநாடுகள் எனும் வரிசையில் வெகுமக்கள் திரள் அரசியலுக்குத்தான் நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஈழப் பிரச்சினையில் இன்று அழுத்தம் தரவேண்டியது ஏகாதிபத்திய மனிதாபிமானத் தலையீட்டின் ஆபத்தைக் குறித்து இல்லை. அத்தகைய ஆபத்தும் இன்று இல்லை. இன்று ஐக்கிய நாடுகள் சபையினாலும் பிற  மனித உரிமை அமைப்புக்களாலும் முன்னெடுக்கப்படும் மனித உரிமை அரசியல் மகிந்த ராஜபக்சே அரசின் மீதான வலிமையான அழுத்த அரசியலாக இருக்கும். வெகுமக்கள் திரள் அரசியலையும் அதனது முக்கியத்துவத்தினையும் அதனது போராட்டத்தினையும் திரும்பத்திரும்ப வலியுறுத்த நேர்வதினாலேயே, ஏகாதிபத்திய மனிதாபிமானம் எனும் மூன்றாம் கட்டப் பிரச்சினையை முன்வைத்து கிளர்ச்சி அரசியலைப் பின்தள்ள வேண்டாம் எனவே எனது எழுத்துக்களில் நான் வலியுறுத்துகிறேன். 

தமிழ்ச் சூழலில் ஏகாதிபத்திய மனிதாபிமானம் எனும் கருத்துருவத்தை வைத்து இந்த எதிர்செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாலேயே, எல்லாப் பிரச்சினைகளையும் ஏகாதிபத்தியம் சதி செய்து தூண்டிவிடுகிறது எனும் பார்வையினை மேற்கொள்வதாலேயே நான் ஏகாதிபத்தியம் இந்தப் பிரச்சினையைத் தூண்டவில்லை என்பதனையும், அது முழு மத்தியக் கிழக்கு மக்களினது எழுச்சியின் பகுதியாகவே தோன்றியது என்பதனையும் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறேன். மற்றபடி லிபியாவில் ‘இன்று’ ஏகாதிபத்தியம் தனது ஆதிபத்தியத்திற்காகவே தலையிட்டிருக்கிறது என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் செயல்பாட்டில் இன்று வரை இந்த ஆபத்து இல்லை. இந்த ஆபத்து இந்து சமுத்திரத்தில் நுழைவதனைத் தடுப்பதற்கான அரசியல் மகிந்த அரசின் இனப்படுகொலைக்கு எதிரான வலிமையான மாற்று அரசியலை எவ்வாறு கட்டப்போகிறோம் என்பதில்தான் பொதிந்திருக்கிறது. கிளர்ச்சி அரசியலை முதன்மைப்படுத்துவதன் மூலம் இதனை நாம் சாதிக்க முடியும். இதனைத் தான் தமிழ்ச் சூழலில் இன்று இடதுசாரி நிலைபாடு எனவும் சொல்ல முடியும் எனக் கருதுகிறேன். 

- யமுனா ராஜேந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It