தன்னில்லா பிறரினதோ
இல்லை விலையிலோ பெற்ற
செந்நீரில் மூழ்கியெடுத்த
கொடிகளனைத்தும் மூர்க்கம்
கொண்டு பறப்பதில்லை.
சமூக அங்கீகாரமும் அடையாளமும்
தேடிச் செல்லும் எளிமை
வேடத்தின் மேல் போர்த்திக் கொண்ட
சட்டைகள் எல்லாம் சாயம்
தொலைத்து நீர்த்துப் போனவை.
இருப்போனுக்கெல்லாம் உணவை
இலவசமாக்கி ஜீவகாருண்யம் பேசி
சிந்தனை நாணங்களுக்கு
விசம் ஏற்றி வெள்ளை இரத்தம்
கொள்ளும் எவனும் பொதுவுடைமை
நிழலில் இளைப்பாறவியலாது.
இதயக் கருவறை சென்றிராத
குருதியின் எச்சத்தில் பிறந்த
மூச்சுக் காற்றின் வெற்று
வார்த்தைகளாய் வந்து விழும்
"தோழன்" "காம்ரேட்"
பின்னாட்களில் அர்த்தமிழந்த
அடையாளமாகிவிடும்.
அனைத்தும் பொதுவுடைமையென்பதில்
தனிமனித மகத்துவம் பேசப்படாது
போய்விடுமெனும்
குருட்டுச் சிந்தனையில்
பிறந்த வறட்டுச் சொற்கள்
அவரவர்க்கேற்ற சுய நல வண்ணத்தில்
ஆடை தறித்துக் கொள்ளும்.
சுய உரிமை விட்டிராது
பிறருரிமையின் கற்புக் காத்து
முதலாளி தொழிலாளி சகோதரம்
பேணுமேயொழிய பகைமை
வளர்க்கும் மாட்சி
பொருந்தியதல்ல மார்க்சீயம்.
மரணம் தவிர எதையுமே இலவசமாய்
பெற்றுக் கொள்ளாதொரு மார்க்கத்தில்
உழைப்பவனுக்கே ஊதியம் தவிர
இருப்போனுக்கு இல்லை இலவசம்.
Pin It