மதுரை மாவட்டம், நத்தம் தாலுக்காவில் அமைந்துள்ள பரளி புதூர் பஞ்சாயத்தைச் சார்ந்த தலித் மக்கள் வாழும் பகுதிகளில், இந்திரா காலனியில் பிப்ரவரி 13, 2011ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வீடுகள் அடித்து நொறுக்கப்பட்ட செய்தியையும், வீடுகள் எரிக்கப்பட்டதையும் ஆய்வு செய்யவும், இச் சம்பவத்தின் மூல காரணங்களை அறிந்து இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆலோசனையாக முன் வைப்பது என்ற நிலையிலும், மனித உரிமை மீறல்கள் தடுத்து நிறுத்தப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் நோக்கத்தோடும் ஒரு குழுவினை அமைத்து பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்வது என முடிவு செய்யப்பட்டது.

இம் முயற்சியில் பல்வேறு மனித உரிமை அமைப்பைச் சார்ந்த சமூக ஆர்வலர்களும், மனித உரிமையாளர்களும் பங்கேற்றனர். குடியுரிமை பாதுகாப்பு நடுவம் சார்பில் இந்த பகுதிகளை பார்வையிடவும், மக்களைச் சந்திக்கவும் ஒருங்கிணைப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இக்குழுவில்,

பேராசிரியர் சரசுவதி, மக்கள் சிவில் உரிமை கழகம்

வழக்கறிஞர் பானுமதி, தமிழக மக்கள் உரிமை பேரவை

வழக்கறிஞர் கேசவன், குடியுரிமை பாதுகாப்பு நடுவம்

ஆசிரியர் இராமசாமி, குடியுரிமை பாதுகாப்பு நடுவம்

விஞ்ஞானி கோபால், குடியுரிமை பாதுகாப்பு நடுவம்

விரிவுரையாளர் பிரசன்னா

வழக்கறிஞர் ரஜினிகாந்த், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி

திரு. ஆபிரகாம், சமூக ஆர்வலர் ஆகியோர் பங்கு பெற்றனர்.

சட்டக்கல்லூரி மாணவர்கள் ஜகன் மற்றும் கார்த்தி ஆகியோர் இக்குழுவினருடன் இணைந்து செயல்பட்டனர். இக்குழு மார்ச்சு 14 மற்றும் 15 தேதிகளில் இந்திரா காலனி, அம்பேத்கர் நகர், பரளி புதூர் கிராமம் ஆகிய பகுதிகளுக்கு சென்று மக்களை நேரில் கண்டு தகவல்களைச் சேகரித்தது. அதிகாரிகள் தரப்பில் நத்தம் துணை ஆய்வாளர் கருணாகரன், உதவி காவல் துறை கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோரை சந்தித்துப் பேசினர்.

பின்புலம்

பரளி புதூர் பஞ்சாயத்து சுற்றிலும் 7 கிராமங்களில் முத்தரையர்கள் அதிகமாக வாழ்கின்றனர். இப்பஞ்சாயத்து வரம்பிற்குள் பரளி புதூர், கொடுக்கம்பட்டி, தேக்கம்பட்டி, அலகாபுரி, எம்.ஜி.ஆர். நகர், புதூர் என்ற 7 கிராமங்களும், அம்பேத்கர் நகர், இந்திரா காலனி, சின்ன கலசம்பட்டி, வத்திப்பட்டி என்ற தலித் வாழும் பகுதிகளும் அடங்கியுள்ளன.

படித்த இளைஞர்களும், வெளியூர்களில் சென்று பணிபுரியும் தலித் இளைஞர்களும் எண்ணிக்கையில் அதிகம். தலித் குடும்பத்தினரிடையே அனைவரும் (பெரும்பாலானோர்கள்) குறுநில உரிமையாளர்களாக உள்ளனர். முத்தரையர் தரப்பில் வளர்ச்சி என்பது நிலம் சார்ந்த வாழ்நிலையுடன் இணைந்தே உள்ளது. இங்கு படித்த இளைஞர்கள் தலித் இளைஞர்களைவிட குறைவாகவே காணப்படுகின்றனர்.

இரு தரப்பினரிடையேயும், ஒரு தரப்பினரைச் சார்ந்து மற்றவர்கள் இருக்கும்படியான நிலைமை காணப்படுகின்றது. தலித்துகள், முத்தரையர்கள் நிலங்களில் கூலிக்கு அமர்த்துவது முத்தரையர் தலித்துகளில் கூலிக்குச் செல்வதும், என்ற நிலைமை இங்கு நிலவுகிறது. இருவருக்கும் இடையில் சாமி வழிபாட்டில் பிரிந்தும், இணைந்தும் காணப்படும் நிலைமை இங்கு நிலவுகிறது. தலித்துகளின் கடவுளான கள்ளம்பட்டி கருப்பசாமியை தலித் பகுதியில் உள்ள கோயிலுக்கு, சாமி கண் திறப்பு நடத்தி கொணர்ந்து நிறுத்தும் பொறுப்பும், திரும்பவும் கோயில் விழா முடிந்த பின்பு சாமி சிலையை திரும்ப எடுத்துச் செல்லும் பொறுப்பும் முத்தரையர் சாதியினரின் பொறுப்பாகும். தலித்துகள் பகுதியில் உள்ள ஆதி திராவிடர் துவக்கப்பள்ளியில் சென்றுதான் முத்தரையர்கள் படிக்கிறார்கள் என்ற சமூக சூழ்நிலையும் நிலவுகிறது. ஆனால், முத்தரையர்களின் கடவுளாக கருதப்படும் முத்தாலம்மன் கோயில் விழாவில் தலித்துகள் பறையடிக்க அழைக்கப்படுவதை தவிர வேற உறவு ஏதும் இல்லை.

சமீபத்தில் முத்தரையர் சங்கங்களின் செயல்பாடுகளும் அதில் பங்கேற்கும் இளைஞர்களும் முத்தரையர்களின் ஆதிக்க உணர்வை ஊட்டி வளர்ப்பதாக உள்ளது. தலித்துகள் அரசு வேலைகளில் பணி புரிவது, நகர்ப்புற வேலைகளுக்குச் செல்வது, நிலங்களை சொந்தமாக வைத்தி ருப்பது, படித்த இளைஞர்கள் அதிகமாக உள்ளது என்பன போன்றவை தலித்துகளின் சுயமரியாதையை நிலைநாட்டும் கருவியாக அமைந்துள்ளது. தலித்துகளின் சுய மரியாதைக் கான அழுத்தம், சாதி படி நிலையில் மேல் மட்டத்தில் உள்ள முத்தரையர்களின் ஆதிக்க மனோநிலையை கேள்விக்குட் படுத்தியுள்ளது. இதே காலகட்டத்தில் முத்தரையர் சாதி சங்கங்களின் ஒருங்கிணைப்பு இந்த ஆதிக்க மனோநிலையை திடப்படுத்தியுள்ளது.

தலித் தரப்பினரிடம் சேகரித்த தகவல்கள்

இக்குழுவினர் தலித்துகள் வாழும் அம்பேத்கர் நகர், இந்திரா காலனி, வத்திப்பட்டி ஆகிய பகுதிகளைச் சென்று அவர்களுடைய தரப்பிலிருந்து செய்திகளைச் சேகரித்தனர். பரளிபுதூர் கிராமத்தில் தலித் காலனியில் 84 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் சம்பவம் நடந்த அன்று 1000க்கு மேற்பட்ட முத்தரையர்கள் 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்திருந்தனர் என்றும் அவர்கள் கம்பு, கட்டை, இரும்புக் கம்பி, கடப்பாரை, பெட்ரோல் தீப்பந்தங்களுடன் வந்ததாகவும் அவர்கள் காலனியில் நுழைந்து தாக்குதலைத் தொடங்கினர் என்றும் உடனடியாக டிரான்ஸ்பார்மர் அணைக்கப் பட்டது என்றும் காலனியில் நுழைந்த முத்தரையர்கள் தலித்துகளைச் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாகவும் இக்குழுவினரிடம் அவர்கள் குறிப்பிட்டனர். வீடுகள்மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியதாகவும், மூடியிருந்த வீடுகளைக் கடப்பாரை, இரும்புக் கம்பி வைத்து இடித்துத் தாக்கித் திறக்க முயன்றதாகவும் சில வீடுகளில் சன்னல்களை இடித்துத் உடைத்ததாகவும் குறிப்பிட்டனர்.

வீட்டுக்குள் நுழைந்து சாமான்களை வெளியில் எடுத்து போட்டுக் கொளுத்தியதாகவும் ஓடுகள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் இக்குழுவினரிடம் அவர்கள் தெரிவித்தனர். போஸ் என்ற கண் பார்வையற்றவர் வீட்டின்முன் இருந்த அவருக்குச் சொந்தமான கடை முழுவதும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாகவும் அவரது தங்கை குறிப்பிட்டார். மேலும் வீட்டில் புகைமூட்டம் அதிகரித்து வந்ததையடுத்து போஸ் வெளியே வர முயன்றபோது கையில் தீ காயம் ஆனதாக அவரது தங்கை இக்குழுவினரிடம் தெரிவித்தார். அவரது வீடு மற்றும் மளிகைக் கடை சாமான்கள் ஒன்றரை இலட்சம் மதிப்புள்ளவையும் சேதமாயின என்றும் இக்குழு கேட்டறிந்தது. மேலும் அங்கு ஒரு வயதான தாய் தன் நகை பணத்தை வைத்து சிறு கோயில் கட்டியிருப்பதாக இக்குழுவினரிடம் காண்பித்தார். அவரது வீடு முழுமையாக இடித்து பொருள்கள் முழுவதும் எரித்துப் போடப்பட்டுள்ளன. நைனார் என்பவரின் வீடு முழுவதும் எரிக்கப்பட்டுள்ளது. இங்கு முற்றிலுமாக எரிந்துகிடந்த இருசக்கர வாகனங்கள் அவ்வீடுகளின் முன் கிடப்பதை இக்குழுவினர் நேரில் கண்டனர். முற்றிலுமாக எரிக்கப்பட்ட பீரோ, கட்டில், மின் விசிறி ஆகியவை எரிந்த வீடுகளின் முன் கிடப்பதையும், குழந்தைகளும், பெண்களும் மட்டுமே அங்கு இருந்தனர் என்பதையும் இக்குழுவினர் கண்டனர்.

சம்பவம் நடந்த ஒரு மாத காலத்திற்கு பின்பும், ஆண்கள் வீட்டிற்கு வர பயந்து, சுற்றி உள்ள காட்டுப் பகுதிகளில் தங்கி உள்ளனர் என்று பெண்கள் இக்குழுவினரிடம் குறிப்பிட்டனர். இவர்களின் தேவைக்காக பொருள்கள் தனி உணவுப் பொருள் பங்கீட்டு கடைகளின் மூலம் அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக இப்பெண்கள் இக்குழுவினரிடம் தெரிவித்தனர். எரிக்கப்பட்ட வீடுகளின் ஓடுகள் சில இடங்களில் மாற்றப் பட்டுள்ளன. தாக்குதலின் போது இதில் ஈடுபட்ட முத்தரையர்கள் பெண்களை மானபங்கப்படுத்தியதாகவும், குழந்தை களை ஆணா, பெண்ணா என அறிய ஆடைகளை கழற்றி பார்த்ததாகவும் தலித் தரப்பில் இக் குழுவினரிடம் கூறினர். பெண் குழந்தையாக இருந்தால் அது நமக்கு, ஆண் குழந்தையாக இருந்தால் அது திருமாவுக்கு போகும்” என்று கூறி குழந்தைகளை விரட்டி தேடியுள்ளனர். ஒரு தலித் பெண் தனது கைக்குழுந்தை (ஆண்) யை புடவையில் மறைத்து ஓடி ஒளிந்ததாக இக்குழுவினரிடம் தெரிவித்தார். அம்பேத்கர் நகரில் மூன்று வீடுகள் எரித்து, ஓடுகள் முழுமையாக உடைக்கப்பட்டுள்ளன. ஒருவர் வீட்டை உடைத்து ரூ. 20,000/- பணமும், 7.2 சவரன் நகையும் கொள்ளையடிக்கப் பட்டுள்ளன என்று தலித் தரப்பில் இக்குழுவினர் செய்தியை சேகரித்தனர்.

முத்தரையர் தரப்பினர் முன் வைத்த தகவல்கள்

இக் குழுவினர் முத்தரையர் தரப்பினரை சந்தித்து விவரங்களை சேகரித்தனர். தலித் தரப்பைச் சார்ந்த காசி என்பவரின் வீட்டு திருமண நிகழ்வுக்காக விடுதலை சிறுத்தைகள் கொடியும், திமுக கொடியும் சம்பவம் நிகழ்ந்த தினத்திற்கு 1 வாரம் முன்பு கட்டப்பட்டது. பொதுவாக 2, 3 நாள்களில் மட்டுமே கட்டப்படும் இத் தோரணங்கள் தற்போது 1 வாரம் நீடித்திருந்தது. இதனை முத்தரையர் தரப்பைச் சார்ந்த 2 இளைஞர்கள் அறுத்து விட்டதாகவும், அதனைக் கண்ட தலித் இளைஞர்கள் அவர்கள் மீது கல்லெறிந்து தாக்கியதில் ஒருவருக்கு காயம் பட்டதாகவும், அமாவாசை என்ற முத்தரையர் பிரிவைச் சார்ந்த ஒரு பெரியவர் இக்குழுவி னரிடம் குறிப்பிட்டார். அதற்கு மறுதினம் முத்தரையர் தரப்பில் முத்தரையர் சங்கக் கொடியை நீர்தேக்கத் தொட்டியின் மீது கட்டி விடுகின்றனர். இந்தப் போட்டி மனநிலை பிரச்சினை உருவாக்கக் கூடும் என்று கருதி, கொடியை அகற்றிவிட முடிவு செய்யப்பட்டது.

தலித் தரப்பில் இருந்து கொடியை அகற்ற பஞ்சு என்ற தலித் பஞ்சாயத்து உறுப்பினர் நீர் தேக்கத் தொட்டியில் ஏறியபோது, முத்தரையர் சங்க கொடியில் செருப்பு தொங்கவிடப்பட்டதைக் கண்டு அதனை அகற்ற முயன்றார். முத்தரையர் தரப்பினர் அவர்கள் சங்கக்கொடியில் செருப்பு மாட்டப்பட்டதைக் கண்டவுடன் அதனை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர் அருகிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் தமது கொடி அவமானப்படுத்தப் பட்டுவிட்டதாக கைப்பேசி மூலமாகச் செய்தியைப் பரப்பினர். தாக்குதலில் ஈடுபட்டவர்களில் உள்ளூரில் இருந்தவர்களில் 6 பேரைத்தவிர மற்றவர்கள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் என அமாவாசை இக் குழுவினரிடம் தெரிவித்தார். தலித்துகளிடமும் முத்தரையர்களிடமும் நிலம் இருப்பதாகவும் ஒப்பீட்டளவில் தலித்துகள் சற்று உயர்நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார். முத்தரையர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையில் கடந்த 30 ஆண்டுகளாக எந்தவொரு சாதிப் பிரச்சினையும் இருந்ததில்லை என்றும் இரண்டு கலப்புத் திருமணங்கள் (ஒன்று 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. மற்றொன்று 2008-ல் நடந்தது.) என்றும் அதில் தலித்துகள் முத்தரையர் பெண்ணை மணந்து இதே தலித்துகள் வாழும் பகுதியில் இருப்பதாகவும் இரு குடும்பங்களுக்கிடையே போக்குவரத்து இல்லை என்றும், கலப்புத் திருமணம் காரணமாகக்கூட மோதல் நிகழ்ந்தது இல்லை என்றும் இக்குழுவினரிடம் அவர் குறிப்பிட்டார்.

இரு சமூகத்தினருக்கும் கள்ளம்பட்டி கருப்புசாமி தெய்வ வழிபாட்டில் சாமி சிலை கண்திறந்தபின் தலித்துகள் வாழும் பகுதியில் உள்ள கோவிலுக்கு கொண்டு சேர்த்து தலித்துகள் விழா முடிந்தபின்பு சாமி சிலையை மீண்டும் தமது பகுதிக்கு கொண்டுவரும் பொறுப்பு வழமையாக முத்தரையர்களுடைய தாகவே இருந்துள்ளது. தலித் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட இச் செய்தியை முத்தரப்பினர் தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இப்பகுதியிலுள்ள தொடக்கப்பள்ளி தலித்துகள் வாழும் இடத்திலேயே இருப்பதாகவும் அங்குதான் கல்வி கற்க முத்தரையர்களின் குழந்தைகளும் செல்கின்றனர் என்றும் இருதரப்பினரிடையே அமைதியை ஏற்படுத்த அமைதிக்குழு ஒன்று உருவாக்கப்படவேண்டுமென்றும் இக்குழுவினரிடம் அவர் குறிப்பிட்டார்.

காவல்துறையினரின் கூற்று:

இக்குழுவினர் காவல்துறை நத்தம் உதவி ஆய்வாளர் கருணாகரன் அவர்களையும், தற்போதைய திண்டுக்கல் உதவி கண்காணிப்பாளர் கணேசன் அவர்களையும் சந்தித்து தகவல்களை சேகரித்து அறிந்தனர். உதவி ஆய்வாளர் கருணாகரன், இக்குழுவினரிடம் 1000க்கும் மேற்பட்ட முத்தரையர்கள் அருகில் இருந்த கிராமங்களில் இருந்து, இரு சக்கர வாகனங்கள், கார்கள், வேன்களில் திரண்டு வந்தனர் என்றும், சாலை போக்குவரத்திற்கு தடையாக முழுமையாக வழி மறித்தனர் என்றும், சம்பவம் 7.30 மணிக்கு நடந்த தாகவும், அச்சமயம் காவல்துறையினர் 8 பேர் மட்டுமே இருந்ததாகவும் குறிப்பிட்டார். DSP, SP மற்றும் அதிகப் படியான காவல் படையினர் சுமார் இரவு 11.00 மணிக்கு வந்து சேர்ந்தனர் என்றும், அதற்கு முன் தலித்துகள் மீதான தாக்குதல் நடந்து விட்டதாகவும் குறிப்பிட்டார். இரவு 00.30 மணிக்கு நத்தம் அருகில் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டவர்களை தடியால் அடித்து கலைத்து அனுப்பியதாகவும், அன்றிரவே தாக்குதலில் ஈடுபட்ட 70க்கும் மேற்பட்ட முத்தரையர்களை கைது செய்ததாகவும் அவர் இக்குழுவினரிடம் தெரிவித்தார்.

உள்ளூரில் இருந்து தாக்குதலில் பங்கேற்ற 5, 6 நபர்கள் கைது செய்யப்படாமல் வெளியில் உலவி வருகின்றனரே என்று தலித்துகள் முன் வைத்த கேள்வியை தொடுத்த போது, அவர்கள் பெயர் குறிப்பிடப்பட்டால் நடவடிக்கை எடுப்பதாக இக் குழுவினரிடம் அவர் உறுதி கூறினார். உதவி கண்காணிப்பாளர் கணேசன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடும் என காரணம் காட்டி உள்ளூர் தலித் மீதான தாக்குதலை நடத்திய முத்தரையர் தரப்பினர்களை கைது செய்யாமல் தவிர்ப்பது முறையாகாது என்று இக்குழுவினர் காவல் துறை உதவி கண்காணிப்பாளரிடம் தமது கருத்தை முன் வைத்தனர்.

முடிவுகள்

1. தலித்துகள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் முன் கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக இக்குழு கருதுகிறது.

2. இத்தாக்குதலில் 12 வீடுகள் முழுமையாகவும், 70க்கும் மேற்பட்ட வீடுகளில் பொருள்கள் முழுமையாகவும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. போஸ் என்ற கண் பார்வையற்றவரின் வீடு, கடை, (ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பொருட் சேதம், எரித்து நாசமாக்கப்பட்டது. தலித் பகுதியில் உள்ள மூன்று கடைகளும் முழுமையாக எரிக்கப்பட்டுள்ளன.

3. 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் (இரு சக்கர வாகனங்கள்) எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன.

4. தாக்குதலில் ஈடுபட்ட முத்தரையர்கள் குழந்தைகளை ஆணா, பெண்ணா என இனம் பிரித்து பார்க்க அவர்களின் ஆடைகளை களைந்து பார்த்துள்ளனர்.

5. தாக்குதலில் சிக்கிய தலித் பெண்மணி ஒருவர் தனது ஆண் குழந்தையை காப்பாற்ற சேலையில் மறைத்து தப்ப வேண்டியிருந்தது என்பது இக்குழுவினருக்கு அதிர்ச்சிகரமான செய்தியாகவும் உள்ளது.

6. தாக்குதலுக்கு வந்தவர்கள் பெட்ரோல், கடப்பாரை, இரும்புக் கம்பியை எடுத்து வந்தனர் என்பதும், 70க்கும் மேற்பட்ட வீடுகளில் பொருள்கள் முழுமையாக எரிக்கப்பட்டன என்பதும், தாக்குதல் 8.00 மணி முதல் 10.30 மணி வரை 2.5 மணி நேரம் தொடர்ந்து நீடித்துள்ளது என்பதும், தாக்குதல் நடத்தப்பட்ட சமயம் டிரான்ஸ்ஃபார்மர் அணைத்து வைக்கப்பட்டது என்பதும், தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முன்கூட்டியே திட்டமிட்ட ஒன்று என்பதை வெளிப்படுத்துகிறது.

7. முத்தரையர் தரப்பில் உள்ளூரைச் சார்ந்த 5-6 நபர்கள் மட்டுமே பங்கு பெற்றதாகவும், மற்றவர்கள் சுற்றியுள்ள கிராமங்களிலும் இருந்து அணி திரண்டு வந்ததாகவும் முத்தரையர் தரப்பில் இக்குழுவினரிடம் முன்வைத்தனர்.

8. உள்ளூரைச் சார்ந்த கருப்பண்ணன் தவிர வேறு எவரும் தாக்குதலுக்காக கைது செய்யப்படாதது. தலித்துகளிடையே பாதுகாப்பற்ற மனநிலையை ஏற்படுத்தியுள்ளது.

9. தாக்குதலில் ஈடுபட்ட முத்தரையர்கள், தலித்து களிடையே ஒரு சலவையாளருடைய வண்டியை தாக்கவோ, சேதம் விளைவிக்கவோ, செய்யவில்லை. இது தவிர முடி திருத்துபவர் வீடு (மேல் நிலை தொட்டிக்கு அருகாமையில் உள்ள) தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவில்லை என்பதும் இது திட்டமிட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துகிறது.

10. தாக்குதல் நடத்தப்படுவதற்கான உடனடி காரணம், முத்தரையர் சாதி சங்க கொடியின் மீது செருப்பு அணி விக்கப்பட்டது தான் என்று கூறப்படும் வேளையில், அதற்கு முந்தைய தினம் நீர்தேக்கத் தொட்டி வரை கட்டப்பட்ட விடுதலை சிறுத்தைகள் மற்றும் தி.மு.க. கொடியை முத்தரையர் இனத்தைச் சார்ந்த இரு இளைஞர்கள் அறுத்துவிட முயன்றதும், அச்சமயம் முத்தரையர் இளைஞர் மீது கல்லெறியப்பட்டு அவர் காயம் பட்டதாகவும் முத்தரையர் தரப்பில் இருந்து இக் குழுவினரிடம் கூறிய தகவலின் பின்னணியில் தாக்குதலுக்கான முன் விரோதம் முத்தரையர் தரப்பில் இருந்து எழுந்துள்ளதாகவே இக்குழு கருதுகிறது.

11. முத்தரையர் சாதி சங்க தலைவரின் மகன் பரதன், தலித்துகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்ட ஒருசில தினங்களிலேயே இப்பகுதிக்கு வருகை தர காவல் துறையினர் அனுமதித்தது தலித் விரோத நடவடிக்கைகளில் காவல்துறையினர் துணை போகின்றனர் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

12. சர்வே எண் 311, என்ற நிலப்பகுதி, மற்றும் அதன் அருகாமையில் உள்ள நிலம் தற்போது முத்தரையர் தரப்பில் அமாவாசை என்பவரின் கைவசம் உள்ளது. இந்த நிலப்பகுதி முன்பு தலித்துகள் பயன்பாட்டில் இருந்த கோயில் நிலம் என்பதும், தலித்துகள் வாழ்ந்த பகுதி என்பதையும் முத்தரையர் தரப்பினர் இக் குழுவினரிடம் தெரிவித்தனர்.

13. சர்வே எண் 311, தொடர்பாக தலித் தரப்பில் கருமூஞ்சி என்பவரால் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அமாவாசை என்ற முத்தரையர் வகுப்பைச் சார்ந்தவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் 2010ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டும், வட்டாட்சியரிடம் இருந்து தலித்துகளுக்கு சார்பான அறிக்கை இருந்தபோதும், காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலப் பிரச்சினை சம்பந்தமான முன் விரோதம், இந்தத் தாக்குதலுக்கு ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று இந்த குழு கருதுகிறது. இப் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க தவறிய காவல் துறையின் அக்கறையற்ற தன்மையே தலித் மீதான இப்பெரும் தாக்குதல் ஏற்பட அடிப்படைக் காரணமாக இருந்துள்ளது.

13. தலித் மீதான தாக்குதல் 2.00 மணி நேரம் நடத்தப் பட்ட போதும் எந்தவித காவல்துறை பாதுகாப்பும் உடனடியாக அளிக்கப்படவில்லை என்பதும், DSP, SP மற்றும் அதிகப்படியான தேவையான காவல் படையினர் தாக்குதல் முடிந்த பின்னர் இரவு 11.00 மணியளவிலேயே வந்து சேர்ந்தனர் என்பதும் காவல்துறையினரின் மெத்தனப் போக்கே தலித் பகுதியினரின் பெரும் இழப்புக்கு காரணமாக இருந்துள்ளது என்று இக்குழுவினர் கருதுகின்றனர்.

Pin It