1) உங்களிடம்
நிறைய வாய்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு வாய்களும்
ஒவ்வொரு விதமாக பேசும்.
தருணங்களுக்குத் தகுந்தவாறு
வார்த்தைகளை வடிவமைக்கும்
அவ்வாய்கள் நடத்தும்
சொல்லரங்கங்கள்
அனைத்தையும் உண்மையென
நம்பவைத்து விடுகின்றன.

எங்களின் இனிய பிரதிநிதிகளே என
நீங்கள் விளித்து அலங்கரித்த சொற்கள் தான்
உங்களுக்கு சிம்மாசனத்தை வழங்கியுள்ளது.
அதன் கீழ் கிடக்கும்
செருப்புகளாய்க்கூட மாறமுடியவில்லை
வாக்களித்தவர்களால்.
ஆறாவது முறையாக
சிம்மாசனத்தில் அமர நினைக்கும்
உங்களிடம்
நிறைய வாய்களும்
நிறைய பொய்களும் உள்ளன.
வாக்காளர்களிடம் காதுகளும்
வழக்கம் போல
வாக்களிக்க விரல்கள் மட்டுமே உள்ளன.

2) எங்கள் ஊரில்
ஒருத்தரை இன்னார் மகனென்று
அடையாளப்படுத்த
அவரின் தந்தையின் பெயரையும்
தாத்தாவின் பெயரையும் வைத்தே
கண்டுபிடித்து விடுவார்கள்.
ஆனால்
அடுத்தது மகன்
அதற்கடுத்தது பேரனென
அடையாளப்படுத்த
தயாராத்தான் இருக்கிறது
தமிழகத்தில்
முதல்வர் நாற்காலி.

3) எப்பாடு பட்டாலும்
பிற்பாடு படாவிட்டால்
கட்டாயம் உண்டு
விசாரணை கமிஷன்.

4) புலவர்களின்
புகழுரைகள்
பொற்கிழி வழங்கல்
மன்னராட்சி தான்
நடக்கிறதோ என ஐயப்பட வைத்தது
தளபதி முன்னிலையில்
நடந்த பாராட்டு விழாக்கள்!

- ப.கவிதா குமார்

Pin It