தன்னுடைய திரைப்படங்களைத் தானே தடை இல்லாமல் ரிலீஸ் செய்து கொள்ள வேண்டும் என்ற உன்னதமான இலட்சிய நோக்கத்திற்காக அரசியலில் குதித்திருந்தாலும், இரண்டு வருடங்களாக பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் முதல் சில இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, சான்றிதழ் போன்றவற்றை வழங்கி, அவர்களை கவுரவித்து ஊக்கப்படுத்திய பொழுது, "பரவாயில்லையே.. மாணவர்கள் மீது எவ்வளவு பாசம், திரையில் இத்தனை வருடங்கள் சம்பாதித்த கோடானுகோடி பணத்தை இவ்வாறேனும் giving back to the society செய்கிறாரே நடிகர் விஜய்" என்று நம்பி ஏமாந்து விட்டேன்!! (அதிகபட்சமாக, அவர் விளம்பரம் தேடுகிறார் என்று நினைத்தேன்)

அண்மையில் நடந்த மாணவர் பரிசளிப்பு விழாவில், நடிகர் விஜய் ஒரு பத்து நிமிடங்களுக்கு குறைவாகத் தான் பேசி இருப்பார். ஆனால், ஒரு மணிரத்னம் படத்தைப் பார்ப்பது போலவே இருந்தது, வாழைப்பழத்தில் ஏற்றப்பட்ட விஷ ஊசி போல!! மணிரத்னம் படங்களில் அவருடைய நோக்கம் எப்படி இருக்குமென்றால், ஒரு விடயத்தை அல்லது ஒரு கதாபாத்திரத்தை படம் முழுவதும் antogonist ஆகக் காண்பித்து, அதாவது பார்வையாளர்கள் அந்தக் கதாபாத்திரம் அல்லது அந்த விடயத்தை வெறுக்கும் வண்ணம் படம் முழுவதும் காண்பித்து, இறுதிக் காட்சியில் மட்டும் "நான் பொதுப்புத்தி சமூகக் கருத்துக்கு எதிராகப் படம் எடுக்கவில்லை" என்கிற வகையில் காட்சி அமைத்து தப்பித்துக் கொள்வார். இது மணிரத்னம் எப்போதும் பின்பற்றும் ஒரு கேவலமான tactics / strategy என்று கூறலாம்.vijay leoஇதற்கு அவருடைய பல படங்கள் உதாரணமாக இருந்தாலும் இரண்டு படங்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். 1. கன்னத்தில் முத்தமிட்டால் - அனைவரும் இது அறிந்ததே. ஒரு அப்பாவி ஈழத்தமிழ் குழந்தையை படம் முழுமைக்கும் பார்வையாளர்களுக்கு அக்குழந்தையின் மீது எரிச்சல் ஏற்படும்படி காண்பித்து, இறுதிக் காட்சியை மட்டும் மாற்றியமைத்து தப்பித்துக் கொள்வார். ஒரு சாதாரண பொதுப்புத்தி திரைப் பார்வையாளனுக்கு படம் முடிந்த பின்னும், இறுதிக் காட்சி அவன் மனதில் ஒட்டாது, படம் முழுவதும் அவனுக்குக் கடத்தப்பட்ட குழந்தை மீதான வன்மம் மட்டும் தான் நிலைத்திருக்கும். 2. அலைபாயுதே - பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து, தெரிந்த பிறகு வீட்டை விட்டு துரத்தப்பட்ட தம்பதியர் எவ்வாறு சீரழிகிறார்கள் என்பதை படம் முழுவதும் காண்பித்து, யாரெல்லாம் எதையெல்லாம் இழக்க நேர்கிறது என்பதைக் காண்பித்து, இறுதியில் மட்டும் இருவரும் இணைவது போல காட்சியமைத்து தப்பித்துக் கொள்வார். இதேபோலத்தான் இருந்தது நடிகர் விஜய்யின் பேச்சு.

நடிகர் விஜய்யின் விஷத்தனமான பேச்சு:

ஆரம்பமெல்லாம் நன்றாகத்தான் இருந்தது. "பிடித்த துறையைத் தேர்தெடுங்கள், பெற்றோர் ஆசிரியர் வழிகாட்டுதலைப் பயன்படுத்துங்கள், நீங்கள் எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் 100% உழைப்பைக் கொடுத்தால் வெற்றி நிச்சயம்" என்று பேசினார். பிறகு கூறுகிறார், "உங்களில் சிலருக்கு மருத்துவர், பொறியாளர், பைலட் என்று என்னவாக வேண்டும் என்கிற தெளிவான சிந்தனை இருக்கும், சிலருக்கு குழப்பம் இருக்கும், இங்கே ஏற்கனவே தலைசிறந்த மருத்துவர்கள், பொறியாளர்கள் நிறைய இருக்கிறார்கள். அதனால் நான் என்ன career advice கொடுக்க விரும்புகிறேன் என்றால், எந்தத் துறையில் டிமாண்ட் இருக்கிறதோ அதை நாம் தேர்வு செய்ய வேண்டும். இங்கே நல்ல அரசியல் தலைவர்கள் குறைவாக இருக்கிறார்கள். எனவே அரசியல் ஏன் ஒரு career choice ஆக இருக்கக் கூடாது? ஆனால் இப்போது நன்றாகப் படியுங்கள், பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்று ஒரு போடு போட்டார் பாருங்கள், நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!! அதாவது, என்ன படிக்கலாம் என்ற குழப்பம் இருந்தால், அரசியல் ஒரு career ஆக suggest செய்கிறாராம், எனவே குழப்பம் இருப்பவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம், தவெக கட்சியில் இணைந்து அரசியல் கட்சி பணியாற்றவும்... இதுதான் அவர் பேச்சுக்கு பச்சையான அர்த்தம்.

"There's no such thing as a free lunch" என்று கூறுவார்கள். இந்த மாணவர்களை 234 தொகுதிகளில் கண்டறிந்து, அவர்களைப் பத்திரமாக வாகனங்களில் சென்னைக்கு அழைத்து வந்து, தங்குமிடம் உணவு என்று சிறப்பான ஏற்பாடுகளை கட்சியின் செலவிலேயே செய்து, இந்த நிகழ்வில் பங்கேற்க வைத்து, ஊக்கத் தொகை வழங்கி, வைரம் வழங்கி, மீண்டும் ஒரு விருந்து பரிமாறப்பட்டு (அந்த மெனு வேறு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது), மீண்டும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். என்ன நோக்கத்திற்காக இவ்வளவு ஏற்பாடுகள் என்பதை அவரே அவர் வாயாலே அம்பலப்படுத்தி விட்டார்!!!

விஜய்க்கும், விஜய்க்குப் பின்னால் அவரை இயக்கும் strategistகளுக்கும் இவர்களெல்லாம் மாணவரணி, வருங்கால இளைஞர் அணி, படித்தாலும் மேற்கொண்டு படிக்காவிட்டாலும் விஜய் கட்சியின் தொகுதி வாரியாக, ஒட்டு மொத்த குடும்பம் குடும்பமாக manpower / தேர்தல் booth committee ஆட்கள், நிர்வாகிகள், volunteers. அதற்குத்தான் விஜய்யின் வாயாலேயே மணிரத்னம் சாயலில் career அட்வைஸ். அப்பாவி மாணவர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் குறிவைத்திருக்கும் இவர்களுடைய இந்த விஷத்தனமான நோக்கத்தைப் பற்றி நினைத்தாலே அவ்வளவு பயங்கரமாக இருக்கிறது.

இதே விஜய் மாணவர்களைப் பார்த்து "என்ன துறையைத் தேர்வு செய்வது என்று குழப்பமாக இருக்கிறதா, நாங்களே experts வைத்து இலவசமாக career counselling கொடுக்கிறோம். மேல் படிப்புக்கு தகுதியானவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறோம். வெளிநாடு சென்று சிறப்பான படிப்புகளை படிக்க வேண்டுமா...? அதற்கான வழிகாட்டுதல் வழங்குகிறோம், உதவி செய்கிறோம்" என்று கூறியிருந்தால், மாணவர்களின் எதிர்காலத்தின் மேல் உண்மையான அக்கறை இருக்கிறது என்று நினைத்திருக்கலாம். ஆனால், "ஆகச் சிறந்த மருத்துவர், பொறியாளர் எல்லாம் இங்கேயே நிறைய இருக்கிறார்கள், நீ ஒன்னும் புதிதாக சாதிக்க வேண்டியதில்லை, அரசியலுக்கு வா (அரசியல் தலைவர் ஆசை காட்டி)", என்று கூறுவது என்ன மாதிரியான கேடுகெட்டத்தனம்??? ஆனால் இவருடைய மகன் மட்டும் வெளிநாட்டில் படித்து பட்டம் பெற்று முடிப்பார். இந்த அப்பாவி மாணவர்களெல்லாம் அரசியலை "career option" ஆக பார்க்க வேண்டுமாம்!! விஜய்யின் இந்த ஆபத்தான பேச்சின் உள்நோக்கம் புரியாமல் "ஆஹா விஜய் அண்ணா அப்படி பேசினார் இப்படி பேசினார் அரசியல் வகுப்பெடுத்தார்" அன்று அப்பாவியாகப் பெருமை பீற்றுகிறார்கள் கலந்துகொண்ட மாணவர்களும் பெற்றோர்களும்...

ஆனால் இவ்வளவு செலவு செய்ததற்கு, அந்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் ஒவ்வொரு குடும்பம் குடும்பமாக மேடையேறி விஜய்யையும், அவரது கட்சியையும், அவர்தான் 2026இல் முதலமைச்சராக ஆக வேண்டும் என்று கூப்பாடு போட்ட விதம் பயங்கரமாக இருந்தது. இதெல்லாம் அவர்களாகவே அவர்கள் விருப்பப்படி பேசினார்களா அல்லது அவர்களின் பயணத்தின் போது, மேடையில் என்ன பேச வேண்டும் என்று பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் சில இடங்களைப் பிடித்த மாணவர்களின் திரைக் கவர்ச்சி வழிபாடே இந்த அளவில் இருக்கிறது என்றால், மற்ற மாணவர்களைப் பற்றி நினைக்கவே அச்சமாக இருக்கிறது...இவ்வளவு atrocitiesகளுக்கும் மேலாக, ஆசிரியை ஒருவர் மேடையில் ஒலிவாங்கியை கடித்துக் குதறினார். கவிதை படித்து, கவிதை பாடி, பாட்டு பாடி, அவர் போட்ட கூப்பாட்டில் எங்கே அவரே மயக்கம் போட்டு விழுந்து விடுவாரோ என்று நமக்கு பயமாக இருந்தது. நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும், விஜய்யின் மகனை விட மிகவும் இளையவர்கள், ஆனால், விஜய் அம்மாணவர்களை தம்பிஸ் தங்கைஸ் என்றும், நண்பா நண்பிஸ் என்றும், சகோதர சகோதரிகள் என்றும் address செய்கிறார். எல்லாம் காலக்கொடுமை ...ஒன்றும் சொல்வதற்கில்லை...

யார் பெரியார், அம்பேத்கர் பெயரை சேர்த்துக் கொண்டாலும் நாம் அப்படியே சிலிர்த்துப் போய் அமைதியாகி விடுகிறோம். விஜய் அவருடைய கட்சி அறிவிப்பு அறிக்கையில் முதல் வரியிலேயே தந்தை பெரியார், அம்பேத்கர் மற்றும் சில தலைவர்கள் பெயரைக் குறிப்பிட்டிருப்பார். இவர்களுடைய ஆபத்தான கேலிக்கூத்து அரசியலுக்கு எல்லாம் நம்முடைய ஒப்பற்ற வரலாற்றுத் தலைவர்களை பயன்படுத்துவதா?? இப்போதெல்லாம் இது ஒரு ட்ரெண்ட். நம் தலைவர்கள் பெயரைப் பயன்படுத்தினால் ஓரளவு safe ஆகலாம், ஓரளவு escape ஆகலாம் என்பது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு, கள்ளக்குறிச்சி என்று சில தமிழக நிகழ்வுகளுக்கு விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தாலும், எப்போதும் பத்திரிகை நண்பர்களிடம் நின்று பேட்டி கொடுக்க மாட்டார். ஏனென்றால் சமூக அரசியலில் அவருடைய மேல் மண்டை காலி என்று அவருக்கே மிக நன்றாகத் தெரியும். மற்றபடி அவருடைய டீம் handle செய்வதுதான் அவருடைய அறிக்கைகள், சமூகத் தளங்கள் மற்றும் அவர் பேசும் மேடைப் பேச்சுக்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தயாரிக்கப்பட்ட பேச்சை மிக சாமர்த்தியமாக அதன் சாரம் மாறாமல் அப்படியே டெலிவெரி செய்பவர் நடிகர் விஜய்.

இதில் விஜய் ரசிகர்கள் வேறு, சென்ற முறையே அதிக நேரம் நின்றதால் விஜய்க்கு கால் வலி வந்து விட்டதாம். யாரும் selfie எடுக்க வேண்டாம், புகைப்படத்திற்கு pose செய்ய வேண்டாம் என்று கூறினாலும் கேட்பதில்லையாம், அதனால் விஜய்க்கு கால் வலிக்குமாம், எவ்வளவு சொல்லியும் மாணவர்கள் திருந்தவில்லையாம்.... இவர்களுடைய அரசியல் லாபத்துக்காக மாணவர்களின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்திவிட்டு மாணவர்கள் திருந்தவில்லை என்று சலிக்கிறார்கள், எவ்வளவு கொழுப்பு இவர்களுக்கு??
https://tamil.filmibeat.com/news/vijay-tamilaga-vettri-kazhagam-10th-12th-students-education-scholarship-students-behavior-tvk-136397.html

"say no to drugs" என்று கூற அறவே தகுதியற்ற விஜய்:

தன்னுடைய ஒரு படம் விடாமல் புகை பிடிப்பது (அதில் ஸ்டைல் வேறு), குடிப்பது, கும்மாளம் போடுவது என்று உச்சத்தில் இருப்பவர், "say no to drugs" என்று பிரகடனம் செய்வது எவ்வகையில் நியாயம் என்று தெரியவில்லை. கடைசியாக வந்த லியோ படத்தில் கூட, அவருடைய கடந்த கால கதாபாத்திரம் என்பது யாராலும் வீழ்த்த முடியாத ஆகச் சிறந்த drug mafia அடியாள்.

விஜயின் தந்தை SAC பாவம். படத்தைப் பார்த்துவிட்டு படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-க்குப் போன் போட்டு கேட்டாராம், "தம்பி படம் நன்றாக இருக்கிறது" என்று படத்தின் சிறந்த அம்சங்களை முதலில் பாராட்டினாராம். லோகேஷும் "ஓகே சார் ஓகே சார் நன்றி சார் நன்றி சார்" என்று கேட்டுக் கொண்டிருந்தாராம். பிறகு SAC, "ஏன்ப்பா அந்த காலத்துல வில்லன் இது போன்ற தீமைகள் செய்வான், ஹீரோ வந்து தீமைகளைத் தடுத்து தர்மத்தை நிலை நாட்டுவார். ஆனால் தம்பி விஜய்யை இவ்வளவு பெரிய drugs சமூக விரோதியாக காட்டியிருக்கியேபா" என்றவுடன், "எனக்கு வேலை இருக்கிறது... அப்பறம் பேசுகிறேன்" என்று தொலைபேசி உரையாடலை உடனே துண்டித்து விட்டாராம் லோகேஷ். இந்த நிகழ்வை மிகுந்த வருத்தத்துடன் SAC ஒரு நேர்காணலில் பதிவு செய்திருப்பார். இப்பேற்பட்ட உன்னதமான சமூக பொறுப்புடைய நடிகர் விஜய்தான் இன்று மாணவர்களைப் பார்த்து "say no to temporary pleasures, say no to drugs" என்று பிரகடனப்படுத்தி, இரண்டு முறை அனைவரையும் repeat செய்ய வைக்கிறார். அதற்கும் மேல் "drugs எல்லாம் தடுப்பது அரசின் கடமை ஆனால் ஆளும் அரசு அதன் கடமையை செய்யத் தவறிவிட்டது. ஆனால் அதைப் பற்றி நான் பேசல, அதற்கான மேடை இது இல்லை" என்று அதே மணிரத்னம் ஸ்டைல் பேச்சு.

(அரசியலில் கால் பதிக்கத் துளியும் விருப்பம் இல்லாத விஜய்யை, தம்பி வா தம்பி வா என்று வலுக்கட்டாயமாக அரசியலுக்குள் இழுத்துவிட்டு, அந்த புஸ்ஸி ஆனந்தை விஜய்க்கு அறிமுகப்படுத்தி, இப்போது "என் மகன் என்னிடம் பேசாமல் இருப்பதற்கு புஸ்ஸி ஆனந்த் தான் காரணம்" என்று அனைத்து youtube சேனல்களிலும் உட்கார்ந்து கண்ணீர் ஒப்பாரி வைக்கிறார் SAC)

விஜய்க்கு மீண்டும் காதல் கடிதம் எழுதிய சீமான்:

"அன்புத் தம்பி நீ ஆஹா ஓஹோ, நீ அப்படி இப்படி" என்று மீண்டுமொரு காதல் கடிதம் இந்த மாணவர் நிகழ்வுக்குப் பிறகு தம்பி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் அண்ணன் சீமான். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை திரைக் கவர்ச்சி அரசியல்வாதிகள் என்று கூப்பாடு போட்டு, ரஜினி அரசியல் வருகையை செருப்பாலடித்து, கமல் வருகையை மட்டும் சற்று அடக்கி வாசித்து, இப்போது விஜய் அரசியல் வருகையை கொஞ்சித் தீர்க்கிறது சீமானின் அப்பட்டமான "தமிழ்சாதி" வெறி/பாசம். https://www.dinamani.com/tamilnadu/2024/Jun/28/ntk-leader-seeman-greets-tvk-leader-vijay

சீமானின் இதற்கு முந்தைய காதல் கடிதம் - https://www.maalaimalar.com/news/state/heartfelt-happy-birthday-to-anbuthalapathy-vijay-seeman-724896?infinitescroll=1

- தேன்மொழி

Pin It