கடவுள் என்ற ஒன்று இருக்கின்றதோ இல்லையோ, ஒரு சமூகம் ஒரு பொதுக்கோயிலில் வழிபடுகிறதென்றால், அம்மண்னைச் சேர்ந்த மற்ற சமூகத்தினருக்கும் உரிமையுண்டு. ஆனால், அந்த உரிமையை நிலைநாட்டும் பயனளிக்கக் கூடிய செயல்முறை எது?

பெரியார் காலத்தில் இருந்த தீண்டாமை நிலைமைக்கு ஒரு அதிரடி செயல்முறை தேவைப்பட்டது. அது தான் பலவந்தமான ஆலய நுழைவுப் போராட்டம். அதுவும் அன்று பெரும்பாலும் பார்ப்பன ஆதிக்க கோயில்களில் தான் நடைபெற்றது. அன்று தீண்டத்தகாதவர் நுழைந்து விட்டாலே கடவுள் அங்கு குடிகொள்ள மாட்டான் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து வைத்திருந்த பார்ப்பனர்களுக்கு, அந்த அதிர்ச்சி வைத்தியம் தேவைப்பட்டது. ஆலய நுழைவு நடைபெற்ற கோயில்களில் தொடர்ந்து அர்ச்சனை செய்யவேண்டிய நிலையிலிருந்த பார்ப்பனர்களால், தீண்டத்தகாதவர் என்றழைக்கப்பட்டவர்கள் நுழைந்த பின்பும் கடவுள் அங்கே தொடர்ந்து குடிகொண்டிருக்கிறார் என்பதை மறைமுகமாக ஏற்கவேண்டிய நிர்பந்தம் இருந்தது. தவறான புரிதலில் இருந்த சமூகம், விழிப்புணர்வு பெற அந்த அதிரடி நடவடிக்கை தேவைப்பட்டது.

ஆனால், இன்றய நிலை பெரும் மாற்றத்தை அடைந்துள்ளது. பெரும்பாலான கோயில்களில் அனைத்து சாதியினரும் தடையின்றி வழிபட முடிகிறது. தீண்டாமை எனும் கோரப் பற்கள் பிடுங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த இரண்டு நிலைகளும் முழுமை அடையவில்லை என்பது தான் நமது விசனம். தீண்டாமையும், கோயில் ஒதுக்கும் தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டும் கோர முகத்தைக் காட்டி நிற்கின்றன. இவற்றிற்கான விரைந்த தீர்வு வேண்டும். அந்தத் தீர்வுக்கான செயல்முறை என்னவாக இருக்க முடியும்?

பார்ப்பனரல்லாத ஆதிக்க சாதியினரும், பழந்தமிழரும் (தாழ்த்தப்பட்ட மக்களை இவ்வாறு இனி அழைக்கிறேன். தலித் என்ற தமிழல்லாத சொல்லால் அழைப்பதை ஏற்க இயலாது), பார்ப்பனியத்தின் வர்ணாசிரமக் கோட்பாட்டால் வஞ்சிக்கப்பட்ட சமூகங்கள். இப்போது சிக்கலில் உள்ள சமூகங்கள் பார்ப்பனரால் சூத்திரர் என்றழைக்கப்பட்ட நான்காம் வர்ணத்தவரும், பார்ப்பனரின் நான்கு வர்ணங்களில் அகப்படாத, Social OutCaste என்றழைக்கப்பட்ட, ஐந்தாம் வர்ணத்தவரும் (பஞ்சமர்) தான். எனவே, இப்போதுள்ள ஏற்றத் தாழ்வுக்கு இவர்கள் காரணமல்ல. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான அந்த போதிக்கப்பட்ட வேற்றுமையால், அந்தப் புரையோடிப்போன ஏற்றத் தாழ்வுகளால் உண்டான சமூக மதிப்பீடுகளால், பிளவுண்டு ஒருவிதமான சமூக அச்சத்தில் வாழும் சமூகங்கள் தான் இவை.

எனவே ஆதிக்க சாதியரிடம் உள்ள பழந்தமிழர் பற்றிய தாழ்வான எண்ணங்களை, அவை செயற்கையானவை என்பதை உணர்த்தி அகற்ற வேண்டும். அதேபோல, பழந்தமிழரிடம் வேரூன்றியுள்ள தம்மைப் பற்றிய தாழ்வான எண்ணங்களையும், அவை செயற்கையானவை என்பதை உணர்த்தி, அகற்ற வேண்டும். ஒரே மண்னைச் சேர்ந்த இம்மக்கள் ஒரே தகுதியை உடையவர்கள் தான் என்ற உண்மையை, வரலாற்று ரீதியாக உணர்த்த வேண்டும்.

தமிழகத்தின் நீண்ட வரலாற்றையும், அது கண்ட பெருமிதங்களையும், அந்தப் பெருமிதங்களில் பங்கேற்ற அனைத்து மண்ணின் மக்களையும், இந்த மண்ணின் மக்கள் பொதுவாக எதிர்கொள்ளும் அபாயங்களும், அந்த அபாயங்களை எதிர்கொள்ள இந்த மண்ணின் மக்கள் ஒன்றிணைய வேண்டிய நிர்பந்தங்களையும், அக்குவேறு ஆணி வேறாக எடுத்தியம்பினால், இம்மக்கள் விரைவில் மனமுதிர்ச்சி அடைவார்கள். ஈழத்தின் அழிவு, இந்தியாவின் துரோகம், உலகின் பாராமுகம் ஆகியவற்றின் ஆழமான உண்மைகளை முறையே விளக்கினால், தமிழருக்குள் புதிய சாதிகடந்த தோழமை உருவாகும்.

இந்த முதல்கட்ட வெற்றியை வரலாற்று மற்றும் பயிற்சி வகுப்புகள் வாயிலாக, பழந்தமிழருக்குத் தனியாகவும், ஆதிக்க சாதியினருக்கு தனியாகவும் முதல்கட்டமாக எடுத்து, அவர்களின் ஐயங்களைக் களைந்து, பிறகு இரு சாராரையும் அமர்த்தி, பொதுவான வகுப்புகள் எடுத்து, அந்த இரு சமூகத்தினரும் சக-மதிப்போடு ஒருவரையொருவர் நடத்திக்கொள்ள வகை செய்ய வேண்டும். இந்த முதல் கட்ட வெற்றிக்குப் பிறகு இருசாராரையும் கோயிலில் சம-பந்திக்கு பங்கெடுக்க வைத்து, சமூக ஒப்புரவை இயல்பாக்க வேண்டும்.

இந்த இரண்டு சமூகங்களுக்கும் உள்ள சுயகட்டுப்பாடுகளையும், பொறுப்புணர்வையும் உணர்த்தத் தவறக் கூடாது. குறிப்பாக, பழந்தமிழரின் கல்வி, பொருளாதார அந்தஸ்து உயரும்வரை, கிராமப்புறங்களில் சாதி தாண்டிய காதலைத் தவிர்க்க வேண்டி அறிவுறுத்த வேண்டும். இது ஒரு இடைக்கால ஏற்பாடு தான். பழந்தமிழரின் பொருளாதார, கல்வி அந்தஸ்து பரந்த அளவில் உயரும்போது வேற்றுமைகளும், தடைகளுமற்ற சமூதாயமாக அது இயல்பாகவே உருப்பெரும்.

இந்த செயல்முறையை ஊர்தோறும் செய்ய, கற்றறிந்த சான்றோர்கள் ஒன்றிணைந்து பேரியக்கம் ஒன்று காணவேண்டியது காலத்தின் கட்டாயம். ஈழ அழிவுப் பின்னணியில் பொதுவான விழிப்புணர்ச்சி பரப்புரைகளாவது கிராமந்தோரும் செயல்படத் தொடங்கியுள்ளன என்பது ஒரு ஆறுதலான செய்தி.

ஆனால், இதுபோன்ற அறிவார்ந்த அணுகுமுறையை விடுத்து, C.P.M. இப்போது பலவந்தமான ஆலயநுழைவுப் போராட்டங்கள் நடத்துகின்றது. அதிரடி ஆலய நிகழ்வு என்பது அந்த மக்களின் வேற்றுமையைத் தீவிரப்படுத்துமே ஒழிய இந்த சமூகங்களுக்கிடையே ஒப்புரவை ஏற்படுத்தாது. தாம் சிறுமைப் படுத்தப்பட்டதாக உணரும் ஆதிக்க சாதி, வஞ்சம் தீர்க்க எண்ணுமே ஒழிய, வழிக்கு வாராது. அதுவும், ஒவ்வொரு ஊரிலும், பழந்தமிழரைவிட ஆதிக்க சாதிகளின் மக்கள் தொகை மிகையாயிருக்கும்போது இந்தச் செயல்கள் எதிர்பார்ப்புக்கு மாறான விளைவுகளையே தரும். இவை C.P.M. உணராததா? இருக்கலாம்! ஏனென்றால், வர்க்கத்தைவிட சாதிவேற்றுமை ஆழமானது என்பதை, இந்த "வறட்டுவாதிகள்" உணர, எழுபதாண்டுகள் பிடித்தனவே! ஆனால், பெரியார் காலத்திலிருந்து இன்றுவரை இது பற்றி சட்டை செய்யாத C.P.M. இப்போது புதிதாக ஆலயக் கதவுகளைத் திறக்கக் காரணம், இவர்களின் மேற்குறிப்பிட்டது போன்ற "அபார சிந்தனைத்திறன்" மட்டுமல்ல. அவர்களின் ஆண்டாண்டுக்கால "குயுக்தி"யும் தான் காரணம்!

அந்தக் குயுக்தி எது? ஆரியம் இங்கு வந்தேறிய சிறுபான்மையினம். இங்குள்ள மண்ணின் மைந்தர்களைவிட பல நாகரிகங்களை அறிந்த இவர்கள், எதார்த்தங்களை அறிந்த "சாமர்த்தியசாலிகளாக" இருந்தனர். வெறும் தோலின் நிறத்தால் தங்களை உயர்வாக எண்ணிய இம்மக்கள், அந்தக் கற்பனை மேட்டிமையை நிலைப்படுத்திக் கொள்ளும் விழிப்புணர்வை இயல்பாகவே கொண்டிருந்தனர். எனவே, எந்த ஒரு சமூக மாற்றத்தையும் மோப்பம் பிடித்து, அதைத் தமக்குச் சாதகமாகவோ அல்லது தமது கட்டுப்பாட்டிலோ இருக்கும்படியாக, திட்டமிட்ட எதிர் நடவடிக்கைகளை கைக்கொண்டனர்.

உலகலாவிய கம்யுனிச கோட்பாடு வளரும் தன்மையை அறிந்த அவர்கள், அது தமது மேட்டிமைக்கு வேட்டு வைக்கும் கருத்தியல் என்பதால், அதைத் தாமே முன்மொழிந்து, அரவணைத்து, திரித்து, நீர்த்துப் போகும்படிச் செய்தனர். எனவே, இந்தியக் கம்யூனிஸ்டு இயக்கங்களின் தலைமைகள் அன்றிலிருந்து இன்றுவரை பார்ப்பனத் தலைமையாய் இருப்பது வியப்பானதல்ல. எனவே தான், இனங்களைப்பற்றிய தெளிவான மார்க்ஸியக் கோட்பாடுகள் இருந்தும், இன உணர்வுகளைக் கடந்த வர்க்க ஒற்றுமை என்ற "இயங்காவியலை" கார்ல்மார்க்ஸின் பேரால் "புனைந்து", இந்திய உழைக்கும் வர்க்கத்தின் மீது திணித்தனர். சிங்கள JVP ஐ ஒழிக்க சீனா உதவியதை அறிந்த பிறகும், மாவோ காலத்திலேயே திபெத் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட வரலாறு அறிந்தும், இவர்கள் உலகளாவிய வர்க்க ஒற்றுமையை, இனங்களைக் கடந்த வர்க்க ஒற்றுமையை தொடர்ந்து பீற்றிக் கொண்டிருந்தது, அறியாமையால் அல்ல! திட்டமிட்ட ஏய்ப்பு எண்ணத்தால் தான்!

பார்ப்பனீய வர்ணாசிரமக் கோட்பாட்டால் செயற்கையாக சிதைக்கப்பட்ட, தனித்துவமான, பழம்பெரும் இந்திய நிலப்பரப்பின், சாதிய வேற்றுமைகளை இவர்கள் திட்டமிட்டே குறைத்து மதிப்பிட்டு, சாதிய வேற்றுமைகளைக் களையவேண்டிய ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை நேர்மையுடன் முன்னெடுக்காமல், வர்க்க வியாக்கியானங்களையே நிகழ்த்திக் கொண்டிருந்தனர். சாதி களையப்பட்ட இந்திய வர்க்கங்கள் இன ரீதியாக ஒன்றுபட்டால் அது இரண்டு விளைவுகளைக் கொடுக்கும். முதலாவதாக, இந்தியா இன ரீதியாக பல தேசங்களாக பிளவுபட நேரிடும். இரண்டாவதாக, உண்மையான மார்க்ஸிய சமூகம் உருவாகும். இந்த இரண்டுமே பார்ப்பன, பனியா கும்பலுக்கு முற்றிலும் ஒவ்வாத விடயங்கள். இந்த இரண்டு இனங்களின் மேலாதிக்கத்திற்கும், சுரண்டலுக்கும் ஒன்றுபட்ட, "ஒற்றை" இந்தியா இன்றியமையாதது.

பனியா முற்போக்காளர் காந்தி முதல், பார்ப்பன முற்போக்காளர் பாரதி வரை இந்தக் கருத்தியல் தான், அவர்களின் அடிப்படை அரசியலை வழிநடத்தின. மார்க்ஸியப் போராளியான பகத்சிங்கை விரைந்து தூக்கிலிட, காந்தி எடுத்த ஒரு முயற்சி மட்டுமே ஆயிரம் சான்றுகளுக்கிணையானது.

இந்த "மஹாத்மாக்களின்" சிந்தனையே இப்படி என்றால், கம்யூனிச இயக்கங்களின் பார்ப்பனக் கருத்தியல் என்னவாக இருந்திருக்கும் என்பது வெள்ளிடை மலை. ஒரு வங்காளிப் பிராமணக் கம்யூனிஸ்டு தலைவர், (பெயர் நினைவில்லை) தான் முதலில் பிராமணன் பிறகுதான் கம்யூனிஸ்டு என்று பிரகடனம் செய்தது, இந்தக் கம்யூனிஸ்டுகளின் போலித்தனத்துக்கு ஒரு சான்று. இந்தப் பின்புல செய்திகளோடு தான் இப்போதய C.P.M. வழிநடத்தும் ஆலய நுழைவுப் போராட்டத்தை நாம் அணுக வேண்டும்.

தமிழகத்தைப் பொருத்தவரையில் கம்யூனிச இயக்கங்கள் அம்பலப்பட்டுள்ளன. அதிலும், ஈழ அழிப்பில் C.P.M., இந்திய ஆளும்வர்க்கத்துடன் துணை நின்றது. 60 ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிராக பெரும் தியாகங்களைச் செய்து போராடிய புலிகளை பாசிஸ சக்திகளாக புனைந்து காட்ட இந்த இயக்கம் முனைந்தது. புலிகளின் ஆட்சியில் சுயமரியாதையோடு வாழ்ந்த ஈழ உழைக்கும் மக்களை இன்று எதிரியின் முள்வேலிக்குள் வைத்த பழி C.P.M. வகையறாக்களையும் சாரும். இந்தப் புரிதல் இன்று தமிழக மக்களிடையே பரவலாக உள்ளது. எனவே கடுமையாக அப்பலப்பட்டுள்ள இந்த இயக்கம் தன்னைக் காத்துக்கொள்ள தற்போது எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைதான் ஆலய நுழைவுப் போராட்டம்.

இந்த அதிரடி ஆலய நுழைவுப் போராட்டத்தின் ஊடாக இந்த இயக்கம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கிறது. இந்த ஆலய நுழைவுப் போராட்டத்தின் வழியாக அது, பழந்தமிழரின் ஆதரவைப் பெற்று தனது சரிந்துவரும் ஆதரவைத் தடுக்க நினைக்கிறது. அதே நேரம், சமூகத்தில் பிளவை உண்டாக்கி, உறுதிப்படுத்தி, முகிழ்ந்து வரும் தமிழ்த்தேசியக் கருத்தியலை முறியடிக்க முயல்கிறது. எனவே, இந்த பார்ப்பன கம்யூனிச இயக்கங்களின் உண்மையான நோக்கம் சமூக மலர்ச்சியல்ல.

பார்ப்பன, பனியாக்களைப் போலவே இந்த பார்ப்பனக் கம்யூனிஸ்டுகள் இந்திய தேசியத்தை எப்பாடு பட்டேனும் கட்டிக் காக்க நினைக்கின்றனர். இந்தப் பிராந்தியத்தில் ஒரு தேசம் மலர்ந்தால் அது காஷ்மீர், அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து போன்ற விடுதலைக்குப் போராடும் மக்களை வலுவாகத் தூண்டிவிடும். அதை இந்தக் கம்யூனிஸ்டுகள் விருப்புவதில்லை. எனவே, ஈழ உழைக்கும் மக்கள் அங்கே சிங்களப் பாஸிஸ்டுகளால் இனப்படுகொலை செய்யப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டாலும், அந்த அழியும் மக்களுக்கு தேசம் மட்டும் மலரக் கூடாதென கங்கணம் கட்டிப் போராடுகிறது C.P.M. எனவே, அங்கு அவதியுறும் மக்களின் நிலைமைக்குக் காரணமான இந்தியாவின் செயல்களைக் கடியாமல், புலிகளே காரணமென கடுமையான பொய்ப்பிரச்சாரத்தை மேற்கொண்டன. ஆனால், அவை தமிழக மக்களிடையே எடுபடவில்லை.

C.P.M கட்சி இன்னுமொரு முறையிலும் அம்பலப்பட்டுள்ளது. அது முல்லைப் பெரியாறு. உழைக்கும் வர்க்கத்திற்கான இந்திய தேசியக் கட்சி, கேரளாவில் ஆட்சியிலிருக்கும் அந்தக் கட்சி, தமிழக உழைக்கும் வர்க்கமான உழவர்களின் நலனுக்கெதிராக பச்சையாக செயல்படுகிறது. அதைத் தட்டிக் கேட்க தமிழக C.P.M. விழையவில்லை. ஏனென்றால், தமிழக C.P.M. ஐ ஆக்கிரமித்திருப்பவர்கள் மலையாளிகளே! இந்தக் கட்சியில் பார்ப்பன, மலையாள ஆதிக்கத்தில், தமிழர்கள் அடிமைகள் போல உள்ளனர். மலையாளிகள் மலையாள தேசியத்தை விரும்பவில்லை. மலையாளிகள் அனைவரும் பச்சையான இந்திய தேசியவாதிகள். எனவே, இவர்களும் பார்ப்பனர்களும் இயல்பானக் கூட்டாளிகளாயுள்ளனர். இந்தப் புரிதல் தான் இந்திய ஆட்சியதிகாரத்தில் மலையாளிகளை, பார்ப்பனருக்கிணையான அதிகாரத்தில் வைத்திருக்கிறது. பார்ப்பனர்களைப் போலவே, மலையாளிகளும் ஒரு கடுமையான சுரண்டும் வர்க்கமே! மலையாளிகளும் ஒரு ஒடுக்கும் வர்க்கமே!

எனவே, C.P.M. என்பது வங்காள, மலையாளப் பார்ப்பனீயக் கட்சிதானே ஒழிய, அது தமிழருக்கான கட்சியல்ல. இந்தப் புரிதல் தமிழக கம்யூனிச இயக்கங்களிலுள்ள இளைஞர்களுக்கு வரவேண்டும்.

இக்கட்டுரையின் சுருக்கமான கருத்தாக, பார்ப்பனர்களால் சாதி வேற்றுமைகள் வளர்த்துவிடப் பட்டன. கடவுளின் பெயரால் அடக்குமுறைகள் மூட நம்பிக்கைகளாக பார்ப்பனர்களால் வளர்க்கப்பட்டிருந்தன. பார்ப்பனர்கள் சிறுபான்மை சமூகம். எனவே, தீண்டாமைக் கொடுமை கடுமையாக இருந்த அந்தக் காலத்தில் அதிரடி ஆலய நுழைவு பயனளித்தது.

இப்போது தீண்டாமை பெருமளவு குறைந்துள்ளது. பெரும்பான்மையான ஆலயங்களில் பழந்தமிழரின் வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. குறிப்பிடத்தகுந்த அளவு மனமாற்றம் ஆதிக்க சாதி மக்களிடையேயும் நிகழந்துள்ளது. எனவே நாம் இங்கு முன்வைத்துள்ள நெகிழ்வான அணுகுமுறைகள் மூலமே மீதமுள்ள மாற்றங்களைக் கொணர முடியும். ஈழ அழிவின் பிற்காலத்தில், சாதியத்தை ஒழிக்க வேண்டிய அவசரம் பரவலாகவும், பலராலும் உணரப்பட்டுள்ளது. நாதியற்ற தமிழினம் ஒன்றுபட வேண்டிய காலகட்டத்தில், இது போன்ற அதிரடிப் போராட்டங்கள் மக்களைப் பிளவுபடுத்த மட்டுமே உதவும். மேலும் ஆதிக்க சாதிமக்கள் பழந்தமிழரைவிட மிகையாக உள்ளதால் இது போன்ற அதிரடிப் போராட்டங்கள் எதிர்விளைவுகளைத் தான் உருவாக்கும். பார்ப்பன C.P.M. அதைத்தான் விரும்புகிறது. தமிழரைப் பிரித்தாள்வதே அதன் ஒரே நோக்கம். தமிழக C.P.ம்., வெளிமாநிலத்தவராலும், பார்ப்பனர்களாலும் நிர்வகிக்கப்படும் இயக்கம்.

சர்வதேசிய உழைக்கும் மக்களுக்கான கட்சியைச் சேர்ந்த இவர்கள், புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்தக் கொட்டும் மழையிலும் தடுப்பு முகாம்களில் சித்திரவதைக்குள்ளாகும் மக்களை விடுவிக்க முயல்வார்களா அல்லது தமிழ் மக்களைப் பிரிக்கும் பலவந்தமான ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்துவார்களா? வாரந்தோரும் பலநூறு மக்களைப் பலிவாங்கும் ஈழச்சிக்கல் முதன்மையானதா இல்லை இல்லாத கடவுளின் வெற்று இல்லத்தில் நுழைவது முதன்மையானதா? சொந்த வீடுள்ள ஈழமக்களை எதிரியின் வதை முகாமிலிருந்து விடுவித்து, அவர்களின் சொந்த வீடுகளில் நுழைய விடுவது தானே உண்மையான மார்க்ஸியர்களின் தொடர் போராட்டமாக இருக்க முடியும்?

இவ்வளவு கொடுமைகளுக்குப் பின்னரும், ஈழ மக்களுக்கு தனித் தேசம் தான் தீர்வென்ற கருத்தை வைக்காமல், கொஞ்சமும் வெட்கமில்லாமல், ஒன்றுபட்ட இலங்கைதான் தீர்வென்று கூறிக்கொண்டு, ஈழ மக்களுக்காக வெற்று நீலிக் கண்ணீர் விடும் இந்த "மகா யோக்கியக்" கட்சியினர், தமிழர் நலனில் அக்கறை உள்ளவர்கள் என்று நம்புவது, கசாப்புக் கடைக்காரனை நம்பும் ஆடுகளின் கதையாகத் தான் முடியும்.

விழித்துக் கொள்ளுமா தமிழகம்?

- முனைவர் வே.பாண்டியன்

Pin It