ரஜினியைப் பத்தி சி.பி.எஸ்.ஸி.யில் பாடம் நடத்துகிறார்களாமே....

Rajiniஎப்போதோ சொல்லிக் கொடுக்க வேண்டியது. இப்போதாவது புத்தி வந்ததே என்று சந்தோஷப்படுங்கள்! முரண்பாடு என்ன தெரியுமா? பில்கேட்சை இளைய தலைமுறையின் கனவு நாயகனாகக் கட்டமைக்கிறவர்கள், ரஜினி விசயத்தில் முகம் சுழிக்கும் கொடுமை. ஊரை அடித்து உலையில் போடுவது எப்படி? என கற்றுக் கொடுப்பதுதான் இப்போதையக் கல்வி முறை. அப்படிப்பட்ட கல்விக்கு ரஜினி மட்டுமல்ல; அர்சத் மேத்தா, அம்பானி தொடங்கி நம்ம ஊரு ஆட்டோ சங்கர் வரை பாடம் நடத்துவதுதான் முறையானது.

நமக்கு வேறொரு சந்தேகம்: சில மாதங்களுக்கு முன் சென்னையில் பஸ் டிக்கெட்டை சொந்தமாகவே அச்சடித்துக் கொண்டு பயணிகளிடம் வசூல் செய்தார் ஒரு மோசடி கண்டக்டர். அவர் இப்போது புழல் சிறையில்... கொடுத்த டிக்கெட்டையே திரும்பவும் வாங்கி அடுத்தப் பயணிக்குக் கொடுத்து காசு பார்த்து மாட்டிக் கொண்ட பெங்களூரு கண்டக்டரோ சி.பி.எஸ்.சி. பாடப்புத்தகத்தில்... ஏன் இந்தப் பாரபட்சம்?

உத்தப்புரத்தின் தீண்டாமைச் சுவர் இடித்து நொறுக்கப்பட்டு விட்டதே....

நம்பவே முடியலீங்க.

“சாதியைக் கட்டிக்காத்த ஒரு சுவர் நாம் வாழும் காலத்தில், அதுவும் நம் கண் முன்பே இடித்துத் தரை மட்டமாக்கப்பட்ட காட்சியையா?”

சேச்சே...

“ஆதிக்கச் சாதியினரின் மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அடிபணிந்து போகாமல் கடைசி வரை கலைஞர் உறுதியாய் நின்றதைச் சொல்கிறீர்களா?”

அதுவும் இல்லையப்பா...

“அப்படியானால் வேறு என்ன?”

“திருவரங்கம் கருவறையிலும், சிதம்பரம் நடராசன் சன்னதியிலும் பார்வையாளர்களாக நின்று தீட்சிதர்களோடு சமூக நல்லிணக்கம் காத்த சி.பி.எம்., உத்தப்புரத்தில் திடீர் பிள்ளையார்போல் திடீர் சாதி எதிர்ப்புப் போராளியாக அவதாரமெடுத்த அதிசயத்தை சத்தியமாக நம்பவே முடியவில்லை.”

தேசத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக மக்கள் சில சங்கடங்களைத் தாங்கிக் கொள்ள முன்வர வேண்டும் என்கிறாரே ப. சிதம்பரம்...

காங்கிரஸ்காரனாக இருந்து கொண்டே அக்கட்சியைக் கல்லறைக்கு அனுப்பும் தனது சதித்திட்டத்தை பச்சையாக எப்படிச் சொல்வார்? அதுதான் ’தேசநலன் அது, இது என்று சுற்றி வளைத்து பூடகமாகச் சொல்கிறார் ப.சி. “காங்கிரசை ஒழித்துக் கட்டுவதுதான் என்னுடைய முதல் வேலை” எனச் சூளுரைத்தார் தந்தை பெரியார். தன் காலத்தில் தமிழ் நாட்டுக்குள் அதைச் சாதிக்கவும் செய்தார்.

தொடர்ந்து அகில இந்திய அளவில் ஒழிப்பு வேலை செய்து அதைô பாடையில் தூக்கி வைக்க வேண்டிய வீரமணி, கலைஞர் வகையறாக்கள் அக்கட்சியைப் பல்லக்கில் தூக்கிச் சுமக்கின்றார்கள். இந்தக் கொடுமையை காணச் சகியா சிதம்பரம் பெரியார் பணி முடிப்பது ஒரு தமிழன் என்ற முறையில் தன் தோள்மேல் விழுந்த கடமையென கிளம்பியிருக்கிறார்.

பெரியார் தொண்டராக இல்லாவிட்டால் என்ன? கதர் சட்டை அணிந்த ஒரு கறுப்புச் சட்டையாக அவரைக் கொண்டாட வேண்டியது நமது கடமை. சொத்தை அடமானம் வைத்தால்தான் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்க முடியும் என்ற நிலைக்கு நம்மை கொண்டு போனாலும் அவர் நம்மாளுதான்... நாம அவர் பக்கம்தான். தேச நலனுக்காக இந்தச் சங்கடத்தை தாங்கிக் கொள்வோம்.

இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுப்பதில் தப்பில்லை என்று விஜயகாந்த் சொல்கிறாரே...

உளறி விட்டார் என்று சொல்ல வழியில்லை. பேசியிருப்பது பகல் நேரத்தில் என்பதால். ஒருவேளை புலிகளுக்கு ஆதரவாகக்கூட கேப்டன் இப்படிச் சொல்லியிருக்கக்கூடும். கார்கில் போரில் கைலாயம் போன இராணுவத்துக்குச் சவப்பெட்டி வாங்குனதுக்கே கமிஷன் அடிச்ச பெருச்சாளிங்க நம்மாளுங்க...! ஆயுத பேரத்துல கை சும்மாவா இருந்திருக்கும்?

அதை எடுத்துக்கிட்டு சண்டைக்குப் போறதைவிட சிவகாசியிலிருந்து லெட்சுமி வெடி, தௌசன்ட் வாலா வாங்கி, வன்னிக் காட்டுக்குப் போவதே புத்திசாலித்தனம். பாதுகாப்பும் கூட. இப்போது புரிகிறதா?

சிங்களனை உதை வாங்க வைக்கவே ஆயுதம் கொடுக்கச் சொல்கிறார் நம்ம கேப்டன். இந்தப் போர் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாமல் ’குடிகாரன் ’உளறுவாயன் என்றெல்லாம் அவதூறுகளை அள்ளி வீசக்கூடாது.

Pin It