மேல் தட்டு வர்க்கத்தினரால் ஒடுக்கப்பட்ட மக்களாக அறியப்பட்ட கணியான் இன மக்கள் எண்ணிக்கையில் குறைவு என்பதால் அவர்களின் குரல்கள் கேட்காமலேயே போய்விட்டது.

ஒரே சாதிகளுக்குள்ளேயே பொருளாதாரத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிரிந்து கிடந்த சமூகத்தில் ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களது அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற ஏதாவது ஒரு தலைவனை இனம் கண்டு கொள்கிறார்கள் அல்லது யாராவது ஒருவர் தன் சமூகம் மீதான இழிவு நிலையைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் போராடுவது என முடிவெடுத்து புறப்படும்பொழுது அவர் பின்னால் அந்த சமூகத்து மக்கள் அணி திரண்டு போராடி வெற்றி பெற்றிருக்கிறார்க‌ள்.

நாடார் சாதிக்கென்று ஒரு வைகுண்டசாமி, ஈழவர்களுக்கென்று ஒரு நாராயணகுரு, பறையர் இனத்துக்கென்று ஒரு வேத மாணிக்கம், புலையர் இனத்துக்கென்று அய்யன்காளி இப்படி எல்லா சாதிகளுக்குள் ஏதாவது ஒரு தலைவன் இருந்து அவர்களின் குரல்களை உரக்க ஒலிக்கச் செய்தார்கள்.

அடிமைப்பட்டுக் கிடக்கும் கணியான் சமூகத்துக்கென்று ஒரு சிறந்த தலைவனையோ ஒரு சங்கத்தையோ கணியான் சமூகம் கண்டதில்லை. காரணம் இந்த கணியான் சமூகத்து மக்கள் ஒரு குழுவாகவோ அல்லது ஒரு தலைவனின் கீழ் வாழும் மக்களாகவோ வாழ்ந்ததில்லை.

பார்ப்பன‌ர்கள், நாயர்கள், சூத்திரர்கள், நில்வுடமை கொண்ட மேல் சாதி ஆகியோரிடம் கணியான் இன மக்கள் அடிமைகளாக வேலைக்கு அமர்த்தப்பட்டு அவர்கள் வாழும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். இப்படியாக கணியான் இன மக்கள் வெவ்வேறு ஊர்களுக்குப் பிரிந்து போயினர்.

அடிமைகளாக வேலைக்கமர்த்திய பார்ப்பன‌ர்களும், நாயர்களும், சூத்திரர்களும் அவர்களை சேரிகளிலும் கால‌னிகளிலும் தங்க வைத்தனர். அதிக பட்சமாக ஐந்து அல்லது ஆறு பேர்கள் மட்டுமே ஒரு இடத்தில் அமர்த்தப்பட்டனர். பின்னர் ஒருசிலர் அவர்களோடு வந்து சேர்ந்து அவர்கள் உறவுக்காரர்களாக மாறியிருந்தனர்.

 குமரிமாவட்டத்தில் விளவங்கோடு மற்றும் கல்குளம் தாலுகாக்களிலுள்ள பல்வேறு ஊர்களான திற்பரப்பு, இட்டகவேலி, அரகநாடு, உத்திரம்கோடு, அண்டுகோடு, சேக்கல், கடையாலுமூடு, அருமனை, கரையன்குளம், தேங்காப்பட்டினம், பாலோடு, உதச்சிக்கோட்டை, பருத்தியடப்பு, அஞ்சுகண்ணுகலுங்கு, மூவோட்டுகோணம், இளஞ்சிறை போன்ற ஊர்களில் அடிமைகளாக வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள்.

எண்ணிக்கையில் குறைந்து பல்வேறு ஊர்களில் வசித்தாலும் தங்களது அடிமைத்தனத்தை எதிர்த்து ஒரு குரல் கூட பதிவு செய்யவில்லை. தலித் மக்கள் என்னென்ன தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்தார்களோ அதையே கணியான் சாதி மக்களும் அனுபவித்தார்கள்.

கணியான் சாதி மக்கள் பல்வேறு ஊர்களில் அதிக எண்ணிக்கையில்லாமல் பிரிந்து கிடந்தது இவர்களது இனக்குரல்கள் பதிவு செய்யாமல் போனதற்கு ஒரு காரணமாக அமைந்தது.

பழங்காலம் தொட்டே பார்ப்பன‌ர், நாயர், சூத்திரர், நாடார், பறையர் மற்றும் புலையர் சமூகத்தினரால் கணியான் என்று அழைக்கப்பட்டு வருகின்ற இந்த சாதிக்காரர்களை தற்பொழுதுள்ள பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களும், சாதிசான்றிதழ் தரும் தாசில்தார்களும், ஆர்.டி.ஓக்களும் கணியான் சாதி என்று ஏற்றுக்கொள்வதில்லை.

கணியான் சாதி என்று நன்றாக தெரிந்திருந்தும் இவர்களை சாம்பவ்ர் இனமென்றும் புலயர் இனமென்றும் நாடார் இனமென்றும் தங்களது விருப்பம்போல பள்ளிக்கூட டி.சி களில் பதிவு செய்து விடுகிறார்கள். சில தலைமை ஆசிரியர்கள் உள்ளதை உள்ளபடியே கணியான் சாதி என்று குறிப்பிட்டிருப்பதும் ந‌ட‌ந்திருக்கிற‌து.

கணியான் சாதிச்சான்றிதழ் கேட்டு தாசில்தாருக்கும் ஆர்.டி.ஓ அலுவலகத்திலும் விண்ணப்பித்தால் நீ கணியான் தான் என்பதற்கு என்ன ஆதாரம்? ஏதாவது ஆதாரம் இருந்தால் கொண்டு வா என்று கேள்வி கேட்டு சான்றிதழ் தர மறுத்து திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.

கணியான் சாதிக்காரன் என்று ஆவணங்கள் சமர்ப்பித்தாலோ அதை வாங்கி வைத்துக்கொண்டு விசாரணை என்ற பெயரில் நாட்களை நகர்த்திவிட்டு சாதிச்சான்றிதழ் தருவதில்லை. 2006 ல் கணியான் சாதிச்சான்றிதழ் கேட்டு உரிய ஆவணங்களோடு தக்கலை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்தும் இன்றுவரை கணியான் சாதிச்சான்றிதழ் தர மறுக்கிறார்கள் உயர் அதிகாரிகள். மேலும் குமரிமாவட்டத்திலேயே கணியான் இன மக்கள் இல்லை என்று அதிகாரிகள் கூறிவருவது இந்த சமூகத்து மக்களிடையே பெரும் வேதனை தரும் விஷயமாக உள்ளது.

மேற்படிப்பு படிக்க சாதிச்சான்றிதழ் உடனடியாக தேவைப்படுவதால் அவர்கள் எழுதித்தரும் சாம்பவர் என்ற சாதி சான்றிதழோடு நகர்ந்துவிடுகிறார்கள் கணியான் இன மக்கள். இங்கும் இவர்களது குரல் ஒலிக்கப்படாமலேயே போய்விட்டது.

குமரி மாவட்ட கணியான் இன மக்களின் பூர்வீகம் தான் என்ன அன்று ஆராய்ந்தால் அது ஒரு பெருங்கதையாகவே இருக்கிறது. இவர்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலிருந்து பிரிந்து குமரிமாவட்டத்தில் அடிமைகளாக குடியேறியவர்களாகவே தெரிகிறது.

மேல்தட்டு வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தபோதிலும் நல்ல கலைஆர்வம் உடையவர்களாகவே இருந்தனர். இந்த சாதியினரில் பலர் இன்றும் கணியான் கூத்து ஆடும் ஆட்டக்கலைஞர்களாக இருந்து வருகிறார்கள்.

குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் கணியான் ஆட்டம் அல்லது கணியான் கூத்து என்னும் கிராமியக்கலை கோயில் விழாக்களில் தொன்று தொட்டு நிகழ்ந்து வரும் ஒரு நிகழ்ச்சியாகும்.

கதையைப் பாடலாக இசையோடு இருவர் பாடுவார்கள். இவர்களை அண்ணாவி என்பார்கள். பாட்டுடன் விளக்கவுரையும் இடையிடையே கலந்து வரும். தப்பட்டை அடியும், தாளமேளங்களும் கேட்போரை பரவசமடையச் செய்யும். இவ்விதமாக அந்தப் பாட்டுக்கு ஏற்றார்போல இருவர் தப்பட்டைத் தாளம் அடிக்க - பெண் வேடமிட்ட இருவர் அவைகளுக்கிசைந்தாற்போல் அழகாக வளைந்து, நெளிந்து, குழைந்து, குதித்து, சுழன்று ஆடி ஓடி அமர்க்களப்படுத்துவார்கள்.

பாட்டும் ஆட்டமும் மிகவும் உச்சகட்டத்தில் இருக்கும் பொழுது கோவிலில் பூஜை நடக்கும். அவ்வேளையில் சுவாமியானவர் பக்தர் ஒருவர்மேல் இறங்குவார். அதனால் அவர் அருள் வந்து ஆவேசமுடன் ஆடுவார். அவ்வேளையில் வேண்டியவர்க்கு வேண்டும் வரமளித்துப் பின் விலகிவிடுவார். சிறிது நேரத்தில் கதையும் முடிவுறும். இதுதான் கணியான் கூத்து.

இந்தக் கூத்தை நிகழ்த்தும் கலைஞர்கள் இப்போது நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் இரண்டு மூன்று ஊர்களிலேயே உள்ளனர். அதுவும் விரல் விட்டு எண்ணும் அளவில் முப்பது நாற்பது கலைஞர்களே உள்ளனர். இக்கலைஞர்களின் வாழ்வுக்குப் பின்னர் இனிவரும் காலங்களில் இக்கலையானது இருக்குமா என்பது சந்தேகமே.

குமரி மாவட்டத்தில் திற்ப்பரப்பு அருகிலுள்ள சேக்கல் எனும் ஊரில் குடிசை வீட்டில் வாழும் பொன்னையன் என்பவர் கணியான் கூத்து ஆடும் கலைஞராக இருந்தவர். தற்ப்பொழுதுள்ள இளைஞர்களுக்கு கணியான் கூத்து கற்றுத் தருவதாகச் சொன்னாலும் யாரும் கற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அவரது குடிசை வீட்டுக்குச் சென்று கணியான் கூத்து பற்றி விசாரித்ததும் தன் இயல்பு நிலை மறந்து ஆடிப்பாடிய காட்சி இன்னமும் நினைவை விட்டு நீங்காமலேயே இருக்கிறது.

இது தவிர மந்திரவாதம் தெரிந்த மந்திரவாதிகளாகவும், பேய் விரட்டுபவர்களாகவும், கூடு விட்டு கூடு பாய்பவர்களாகவும் கோவில் பூசாரிகளாகவும் இருந்து வருகின்றனர். நலிந்த சமூகம் என்பதால் நாடார் இன மக்களோடு நல்ல நட்புறவு கொண்டு அவர்களிடமிருந்து பனைமரத்து ஓலைகளை வாங்கி பாய், அரிப்பெட்டி, கடவம் போன்றவற்றை முடைந்து ஜீவனம் கழிக்கின்றன‌ர்.

வயிற்றுப்பசி போக்க சாம்பவர் இனத்தோடு இணைந்து வயல்களில் நாற்று நடுவது, களை பறிப்பது போன்ற தொழில்களை கற்று வயல்களில் வேலை செய்யும் கூலிகளாகவும் இருந்து வருகிறார்கள். வயிற்றுப்பிழைப்பிற்க்கென்று வயலில் வேலை செய்யச் சென்றதால் கணியான் இனம் என்று அடையாளம் காணப்படாமல் சாம்பவர் இனம் என்று சாதிச்சான்றிதழ் தருவது எந்த விதத்தில் நியாயம்?

கணியான் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கும் அதிகாரிகளுக்கு குமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் அருகிலுள்ள கணியான்கோணம் எனும் ஊரிலுள்ள கோவிலில் (தற்பொழுது இட்டகவேலி முடிப்புரை) இன்றும் கணியான் சமூகத்து மக்கள் தான் கோவில் பூசாரிகளாக இருந்து வருகிறார்கள் என்பது தான் ஆதாரமாக இருக்கிறது.

அந்த கோவில் அமைந்த கதை படுசுவாராசியமானது. தீண்டத்தகாதவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட கணியான் இன மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தெய்வமே மறுவடிவம் பூண்டு ஒரு நாயர் வீட்டில் மகளாகப் பிறந்ததாக சொல்வதுண்டு.

இட்டகவேலி ஊரில் ஒரு நாயர் மாடுகள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு குழந்தைகள் இல்லாமலிருந்தது. அவரது சகோதரிக்கு பிறந்த குழந்தையை தான் வளர்ப்பதாகக் கூறி இட்டகவேலிக்கு அழைத்து வந்தார். பெண்குழந்தை நல்ல ஐஸ்வர்யம் கொண்டவளாகவும் தொட்டதெல்லாம் துலங்கும் என்றும் பெண்குழந்தைமீது அதிக பாசம் வைத்திருந்தார் நாயர்.

ஒவ்வொரு முறையும் சந்தைக்கு மாடு வியாபாரத்துக்கு போகும்போதெல்லாம் அந்த பெண்குழந்தையை எதிரே வரச்சொல்லியும் அந்த குழந்தையின் கையால் சாட்டை கம்பை வாங்கி சந்தைக்குச் சென்றால் அன்றைக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றும் எதிர்பார்த்தார். அவர் எதிர்பார்த்ததுபோல் நடந்ததால் அந்த குழந்தை மீது அதிக பாசம் வைத்திருந்தார் நாயர்.

அந்த பெண்குழந்தை மீது நாயர் அளவு கடந்த பாசம் வைத்திருப்பதைப் பொறுக்க முடியாத நாயரின் மனைவி அவள் மீது பழி சுமத்தி அவளை அந்த வீட்டை விட்டே துரத்த கங்கணம் கட்டுகிறாள்.

அது தீண்டாமை தலை தூக்கியிருந்த நேரம். நாயர் இனத்திலிருந்து கணியான் சாதியினர் 64 அடி தள்ளி நிற்க வேண்டும். பொது இடங்கள், சந்தைகள், நீர்நிலைகள், கோவில்கள், நீதிமன்றங்கள், கல்விக்கூடங்கள், அதிகார பீடங்கள் ஆகியவற்றை கணியான்கள் பயன்படுத்தக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் நிறைந்த காலம்.

ஒரு அந்தி சாயும் நேரத்தில் நாயரின் மனைவி தேங்காய் சிரட்டையின் கண்களை துளையிட்டு அந்த பெண்ணிடம் கொடுத்து அருகிலுள்ள கணியான் வீட்டிலிருந்து தீ கங்குகள் வாங்கிவரச்சொன்னாள். அந்த பெண் அதுபோல் கணியான் வீட்டிற்க்குச் சென்று தூர‌ நின்றபடி தீ கங்கு கேட்டிருக்கிறாள்.

தேங்காய் சிரட்டையில் தீ கங்குகள் வைத்து கொடுத்திருக்கிறார்கள் கணியான் வீட்டார். கையில் தீ கங்குகளை தாங்கியபடி வந்தபோது தீ அவள் கைகளை சுட்டிருக்கிறது. தீ சுடாமலிருக்க கைகளை நாவால் நக்கி எச்சில் பரப்பினாள்.

அம்மியில் அரைத்துக்கொண்டிருந்த நாயரின் மனைவி ஒடிச்சென்று அவள் கைகளைப் பிடித்தபோது அவள் கையில் ஒட்டியிருந்த மசாலா அந்த பெண்ணின் கை விரல்கள் மீது படுகிறது.

ஏன் கையை நக்கியபடி வந்தாய் நீ அந்த கணியான் வீட்டிலிருந்து மாட்டுக்கறி வாங்கி தின்றிருப்பாய் என்று அவள் மீது பழி போடுகிறாள். அந்த பெண் எவ்வளவு சொல்லியும் நம்பாமல் அவள் கணியான் வீட்டிலிருந்து மாட்டுக்கறி வாங்கி தின்றாள் என்று நாயரிடம் புகார் சொன்னாள் நாயரின் மனைவி.

நாயருக்கு கோபம் வந்தது. இதுநாள் வரை பாசம் வைத்திருந்த அந்தப்பெண் ஒரு கணியான் வீட்டிலிருந்து மாட்டுக்கறி வாங்கித் தின்றாள் என்ற ஒரே காரணத்திற்க்காக அவளை பிரம்பால் அடிக்கிறார் நாயர்.

தன் மீது அபாண்டமாக பழி சுமத்தி அடிக்கவும் செய்கிறார்களே என்று பயத்தில் வீட்டை விட்டு ஓடி பக்கத்திலிருந்த ஒரு காவில் மறைந்துகொள்கிறாள் அந்தப்பெண்.

நள்ளிரவு யாருமற்றதொரு காவில் தனியாக பயந்தபடியே இருந்தாள் அந்தப்பெண். இரவு ஒரு மணியிருக்கும் கணியான் சமூகத்தைச்சேர்ந்த மாதுகணியான் என்பவர் மந்திரவாதத்திற்குச் சென்று விட்டு வீடு திரும்பியபோது காவில் ஒரு குழந்தை தனிமையில் அழுதுகொண்டு இருப்பதைக் காண்கிறார்.

குழந்தை பக்கத்து வீட்டு நாயரின் மரும‌கள் என்பதை அறிந்து வாம்மா உன்னை நாயர் வீட்டில் கொண்டு விடுகிறேன் என்று அழைக்கிறார். குழந்தை அங்கு போகமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. குழந்தை தனக்கு பசிக்கிறது ஏதாவது சாப்பிடக்கொடுங்கள் என்று கேட்கிறது.

கணியான் சமுதாயத்தோடு தீட்டு வைத்திருக்கும் சூழ்நிலையில் குழந்தை பசிக்கிறது என்று கேட்கிறதே என்ன செய்வது என்று யோசிக்கிறார் மாதுகணியான். மந்திரவாதத்திற்கு சென்று திரும்பியபோது கையில் இருக்கும் (இளநீர்) பொரியும், பச்சரிசியும் கமுகம்பூவும் இருந்திருக்கிறது. அதை உண்ணக்கொடுக்கிறார். அந்த பெண்குழந்தையும் பசியாற சாப்பிடுகிறது.

அன்றிரவு அந்த குழந்தை மாதுகணியான் வீட்டில் தங்குகிறது. மறுநாள் காலை குழந்தையின் தாயாருக்கு தகவல் தரப்படுகிறது. பெண்குழந்தையின் தாயாரும் பாட்டியும் குழந்தையை அழைத்துச்செல்ல வருகிறார்கள். குழந்தைக்கு கணியான் வீட்டில் தீட்டு பட்டிருக்கிறது எனவே பக்கத்திலிருந்த குளத்தில் குளித்துவிட்டு செல்லலாமென்று குளக்கரைக்கு போகிறார்கள்.

முதலில் பெண்குழந்தை குளத்தில் இறங்குகிறது. இறங்கிய குழந்தையைப் பிறகு காணவில்லை. குழந்தை தண்ணீரில் மூழ்கியிருக்குமோ என்று குழந்தையின் தாயாரும் குளத்தில் குதிக்கிறாள். கொஞ்ச நேரத்தில் இருவரையும் காணவில்லையென்று குழந்தையின் பாட்டியும் குளத்தில் குதிக்கிறாள்.

மூவரையும் காணாமல் போகவே அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பார்கள் என்ற செய்தி நாயர் குடும்பத்திற்குத் தெரியப்படுத்தப்படுகிறது. எல்லோரும் குளத்தில் இறங்கித் தேடுகிறார்கள். அவர்கள் கையில் பிணங்கள் கிடைக்கவில்லை. பிறகு குளத்துத் தண்ணீர் முழுவதையும் திறந்துவிட்டு தேடிப்பார்த்தார்கள். தண்ணீர் முழுவதுமாக வற்றிய பிறகும் பிணங்கள் கிடைக்கவே இல்லை.

எட்டாவது நாள் பக்கத்திலிருந்த ஒரு குளத்தில் பாக்கு அளவில் மூன்று முடிக்கட்டுகள் தண்ணீரில் மிதந்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறது. அந்த வழியாகச் சென்ற ஒருவர் அந்த முடிக்கட்டுகளை எடுக்க இறங்கியிருக்கிறார். முடிக்கட்டுகள் திடீரென்று தண்ணீருக்குள் மூழ்கி மறைந்திருக்கிறது.

குளத்தில் முடிக்கட்டுகள் மிதக்கும் விஷயம் ஊரெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டது. எல்லோரும் குளத்திற்க்குள் நடக்கும் அதிசயத்தைப்பார்த்து அசந்துபோய் நின்றனர். இந்த தகவல் ஒரு ஜோசியருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. ஜோசியர் வந்து பார்த்தபோது முடிக்கட்டுகள் குளத்தில் நீந்துவது குளத்தில் குதித்த அந்த மூன்று பெண்களும்தான் என்பதை உணர்ந்தார்.

இந்த முடிக்கட்டுகள் யார் கைக்கும் சிக்காது இதை கணியான்கள் வந்து பிடித்தால் அவர்கள் கைக்கு சிக்கும் என்று தெரியப்படுத்தவே கணியான்கள் வரவழைக்கப்பட்டார்கள். கணியான்கள் ஒரு முறம் எடுத்துவந்து குளத்தில் இறங்கியபோது அந்த முறத்தில் வந்து ஒதுங்கியிருக்கிறது அந்த முடிக்கட்டுகள்.

கணியான்கள் அதை சாதாரண நிகழ்வாகக் கருதாமல் தெய்வீகச்செயலாகவே கருதி தங்களது இனத்தின் மீது மேல்தட்டு வர்க்கத்தின் தீண்டாமை எனும் பேயை விரட்ட தெய்வமே நேரில் வந்து பிறந்ததாய்க் கருதி அந்த முடிக்கட்டுகளை எடுத்து வந்து காவின் அருகில் பலமான மரப்பெட்டியில் வைத்து பூட்டி பூஜை செய்து இன்று அது இட்டகவேலி முடிப்புரை கோவிலாக மாறியிருக்கிறது.

அந்த கோவிலில் பர‌ம்பரை பரம்பரையாக இன்றும் கணியான் சாதியில் பிறந்தவர்களே பூசாரிகளாக நியமிக்கப்பட்டு பூஜை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை இடர்பாடுகளுக்கிடையிலும் இவர்களது குரல்கள் இன்னும் ஒலிக்கப்படாமலேயே இருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம். இனியாவது இவர்களது குரல்கள் ஒலிக்கப்படுமா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.

- ஐரேனிபுரம் பால்ராசய்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It