உயர்கல்வி வாய்ப்புகளை பெருக்கவும், கல்வி பரவலுக்கு உதவுதற்பொருட்டும், திறந்தவெளி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. - தேசிய கல்விக்கொள்கை, 1986  

ஏழ்மை காரணமாக ஏதோ ஒரு வேலையில் அமர்ந்து குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவர்கள் தம் தகுதியை உயர்த்திக்கொண்டு அரசுப் பணியில் சேர விரும்பும்போது உதவி செய்வதற்காகவே நம் நாட்டில் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் தற்பொழுது திறந்தநிலை கல்விதிட்டத்தின் மூலம் பட்டம் பெற்றிருந்தால், அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. இப்பிரச்சனையில் மாணவர்களுக்கு போதிய விளக்கம் அளிக்காமல் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் மூலம் தொடர்ந்து மாணவர்களை சேர்த்து பட்டம் வழங்கி வருவாதல் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.  

10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முடிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் நேரடியாக பட்டம் மற்றும் பட்டயம் பெற்றவர்கள் பொதுப்பணிகளில் நியமனம் மற்றும் பதவி உயர்வு பெறத் தகுதியற்றவர்கள் என 2008 -ம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழக அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் உத்தரவு (அரசாணை எண் :107) அத்தகைய பலன்களை எதிர்பார்த்து காத்திருந்தவர்களின் தலையில் இடியை இறக்கியிருக்கிறது.  

இதே தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தில் திறந்தவெளி பல்கலைக்கழக பட்டங்கள் முறையான (Regular) படிப்புக்கு இணையானது அரசு வேலை வாய்ப்புக்கு ஏற்றது என்று 08-09-2007 அன்று (அரசாணை எண் : 217) வெளியிடப்பட்டது. இப்பொழுது தமிழக அரசு உச்சநீதிமன்றம் கூறிவிட்டது என்கிற நொண்டிச்சாக்கை கூறி லட்சக்கணக்கான திறந்தவெளி பல்கலைக்கழக பட்டதாரிகளின் வயிற்றில் அடித்துவிட்டது.  

சமீபத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் (S.I.) பணிகளுக்கு 1095 பேர் தேர்வு செய்ய (ஜøலை 4, மற்றும் 5-ம் தேதிகளில்) தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுக்கு காவல்துறையில் பணிபுரிபவர்களில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. காவல்துறைக்கு மட்டும் அல்ல, இந்த பிரச்சனை எல்லா அரசு பணிகளுக்கும் திறந்தவெளி பல்கலைக்கழக பட்டதாரிகள் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படுகின்றனர். ஏற்கனவே இந்தியாவில் கல்வித்தரம் மிக மோசமான நிலையில் உள்ளது. அதற்கு ஆதாரமாக உலகதரப்பட்டியலில் ஒரு இந்திய பல்கலைக்கழகங்கள் கூட இடம்பெறவில்லை.  

இந்நிலையில் அரசாங்கம் சார்ந்த துறையே, அரசாங்கத்தின் திறந்தவெளி பல்கலைக்கழக கல்வியே அங்கீகரிக்கவில்லை என்பது “கண்ணாடி கூண்டுக்குள் நின்றுகொண்டு கல்லால் அடிப்பது போன்றதாகும்”. முறையான கல்வி பெற்றவர்கள் எல்லாம் மேதாவிகள் என்றும் அங்ஙனம் பெறாமல் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று எண்ணிநடந்துகொள்ளும் அரசுத் துறையினரின் ஆணவப்போக்கு மாற வேண்டும். சிலர் பணம் கொடுத்து பட்டம் வாங்குகிறார்கள் என்றால், அதை தடுக்க வேண்டும். மாறாக ஒட்டுமொத்தமாக அத்திட்டத்திற்கு வேட்டு வைப்பது எப்படி சரியாகும்?.  

திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டம் பெற்றவர்களை அரசு வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கக்கூடாது. திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டம் பெற்றவர்களும் முறையான கல்வி திட்டத்தில் பட்டம் பெற்றவர்களைப்போலவே போட்டி தேர்வுகள் எழுதுகின்றனர். எனவே தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் வேலை வழங்காமல் இதுவரை நிறுத்திவைக்கப்பட்டுள்ள திறந்தவெளி பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு வேலை வழங்க வேண்டும்.  

உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம்காட்டி வேலை வழங்க மறுப்பது நியாயமல்ல. நீதிமன்ற தீர்ப்புகள் சில நேரங்களில் மக்களுக்கு எதிராக அமைந்துவிடுகின்றன. சட்டமன்றத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சசனம் செய்து பேசக்கூடாது, ஆனால் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை, நீதிமன்ற தீர்ப்பு ஒன்றும் கடவுளின் தீர்ப்பு அல்ல!, என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எ.சிவபுண்ணியம் அவர்கள் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசினார். அதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்மொழி உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாது. திறந்தவெளி பல்கலைக்கழக பட்டம், ஒருவரது அறிவை வளர்த்துக் கொள்ள மட்டுமே, வேலை வழங்க அல்ல. வேலை வாய்ப்பு தேடுபவர்கள் தொலைதூர கல்வி திட்டம் அல்லது முறையான கல்லூரிக்கு சென்று பட்டம் பெறலாம் என்றார்.  

அமைச்சரின் இந்த பேச்சினால், திறந்தவெளி பல்கலைக்கழகங்கத்தில் படித்தால் அரசு வேலை வாய்ப்பு பெறலாம் என உறுதியளிக்கப்பட்டு அக்கல்வி முறையில் சேர்க்கப்பட்டு பட்டம் பெற்றவர்களின் நிலை தற்பொழுது கேள்விக்குறியாகி உள்ளது.? திறந்தவெளி பல்கலைக்கழகங்களின் பட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்க மறுப்பதால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், தற்பொழுது 2.13 லட்சம் பேர் திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் படித்து வருகின்றனர். அதனால் இந்த பட்டங்களை அங்கீகரிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் எனக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் திறந்தவெளி பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு அரசும், நீதிமன்றமும் நியாயம் சொல்லட்டும்!.  

திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் படித்த நேரடி இளங்கலை, முதுகலைப்பட்டம் செல்லும் என மேற்கு வங்க அரசு அவசர சட்டம் பிறப்பித்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் பாதிப்பிருந்து ஒரு லட்சம் பேரை காப்பாற்றி உள்ளது, அதுபோல் உடனடியாக தமிழக அரசும் அவசர சட்டம் பிறப்பித்து தமிழ்நாட்டில் 2.5 லட்சம் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டம் பெற்றவர்களை காப்பாற்ற வேண்டும் என்பது சமூக நலனில் அக்கறையுள்ளவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கல்வியாளர்களும், சமூக நலனில் அக்கறை கொண்டவர்களும், திறந்தவெளி பல்கலைக்கழகங்களின் பட்டங்கள் அரசு வேலை வாய்ப்புக்கு அங்கீகாரம் பெற்றவையாக அமைய முயற்சி செய்யவேண்டும்.  

- மா.சேரலாதன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)  

செல்பேசி: 9245363755

Pin It