‘ஸைனப்’ என்பது அழகான பெயர். அரபுச் சொல். தமிழில் எழுதும்போது ‘ஸைனப்’ என்றோ ‘ஸெய்னப்’ என்றோ எழுதுகிறார்கள். 1500 வருடங்களுக்கு முன்னிருந்து அரபிகள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டி அழைத்த பெயர் இது. உலகம் முழுக்கவும் வாழும் முஸ்லிம்கள் இன்றும் தமது பெண் குழந்தைகளுக்கு இந்தப் பெயரைச் சூட்டிக் கொண்டேயிருக்கிறார்கள்.

மொழிகள் எவ்வளவுதான் இனித்தபோதும் அவற்றின் அடிப்படைத் தேவை தொடர்பாடலைச் செய்வதுதான் என்பதைப் போல பெயர் எவ்வளவு அழகாக இருந்த போதும் அவற்றின் மூலமாக அடையப் பெறுவது தொடர்புக்கான அடையாளப்படுத்தலாகும்.

எல்லா மொழிகளிலுமே காலப் போக்கில் சொற்கள் திரிபடைகின்றன. அந்ததந்தப் பிரதேச மக்களது இயல்பு, வாழ்க்கை முறை, மற்றையோருடனான தொடர்புகள், கல்வியறிவு என்பவற்றுக்கேற்பவும் இது நடைபெறுகிறது எனலாம்.

 ‘ஸைனப்’ என்ற அழகான பெயர் கிழக்கில் ‘செய்னம்பு’ என்றாகியிருக்கிறது. கதீஜா என்ற பெயர் ‘கதிசம்பூ’ என்றும் ஹாஜறா என்ற பெயர் ‘ஆஸரா’ என்றும் ஆங்காங்கே அழைக்கப்படுவதைக் காண்கிறோம். பெண்கள் பெயர் மட்டுமல்ல சில ஆண்களின் பெயர்களும் திரிபடைந்திருக்கின்றன. அப்துல்லாஹ் என்ற பெயர் ‘அத்துள்’ என்றும் இஸ்மாயில் லெப்பை என்ற பெயர் ‘இசுமாலெவ’ என்றும் ஆகியிருக்கின்றது. கிழக்கில் மட்டுமன்றி எல்லாப் பிரதேசங்களிலும் இந்த மாற்றம் இருக்கிறது.

நண்பர் தக்கலை ஹலீமா சில காலங்களுக்கு முன்னர் வெளியிட்ட ‘அவ்வல்’ என்ற ஒலிநாடாப்பேழையில் ஒரு பாடலில் ‘கதிசம்பூ பாய் முடைஞ்சா’ என்று ஒரு பாடல் வருகிறது. காத்தான்குடியில் பிறந்த பெருங் கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்கள் ‘செய்னம்பு நாச்சியார் மான்மியம்’ என்ற ஒரு சிறு காவியத்தைத் தந்திருக்கிறார். படிக்கப் படிக்க ரசனை சொட்டும் அந்தக் காவியத்தின் ஒவ்வொரு எழுத்திலும் கிராமியம் சந்தனமாய் மணக்கிறது. அக்காவியத்தின் நாயகி, செய்னம்பு என்கிற ‘ஸைனப்’. இந்தச் செய்னம்பு நாச்சியை கவிஞர் அப்துல் காதர் லெப்பையவர்கள் இவ்வாறு வர்ணிக்கிறார்:-

“செய்னம்பு நாச்சி  செங்காட்டுப் புலி
வாயில்லாமலே வங்காளம் போவாள்...”

செய்னம்பு என்ற பெயர் உச்சரிக்கப்படும் போது எனது இளைய - தாய் மாமன் சொன்ன கதையொன்று எனக்கு ஞாபகத்துக்கு வரும். இந்தக் கதையைப் படித்து விட்டு அறியாமையைக் கேலி செய்கிறேன் என்று நீங்கள் கருதக்கூடாது. ரசிக்கத்தக்க ஒரு சம்பவமாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

கதையைச் சொல்வதற்கு முன்னர் இரண்டு பாத்திரங்களை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். ஒரு பாத்திரம் செய்னம்புவின் கணவனான அப்துல் கபூர் என்ற இயற்பெயர் கொண்ட அத்துளவுறு. அத்துளவுறுக்குப் படிப்பறிவு கிடையாது. சிறு வயதிலிருந்தே வயலில் வெள்ளாமை வெட்டுதல் போன்ற கூலி வேலைகளில் ஈடுபட்டுப் பிழைப்பு நடத்துபவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முழு பலமும் விடுதலைப் புலிகளின் கைகளுக்கு வந்த பிறகு முஸ்லிம்களின் வயற்காணிகள் யாவும் கைவிடப்பட்டன. விடுதலைப் புலிகளுக்குக் கப்பம் செலுத்திச் சிலர் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டபோதும் விளைச்சலை விடக் கப்பம் அதிகமாக இருந்த காரணத்தால் அவர்களும் அதனைக் கைவிட்டார்கள். நியாயம் பேசினால் நெற்றிப் பொட்டில் சூடு விழும். இதனால் அத்துளவுறு - செய்னம்புத் தம்பதிக்கு வாழ்க்கைச் சுமை பல மடங்கு அதிகரித்தது.

அடுத்த பாத்திரம் எனது மாமா. இவர் ஓர் ஆசிரியராகவும் பின்னர் பாடசாலை அதிபராகவும் கடமையாற்றியவர். சமூகாபிமானி. பொது வேலையென்றால் தன்னலம் மறந்து செயற்படுவார். யார் உதவிக்கு அழைத்தாலும் தனது தலைபோகிற காரியத்தையும் விட்டுத் தள்ளிவிட்டு அவரோடு அதற்காகச் சென்று விடுவார். உதவிக்கு அழைப்பவரின் வர்க்கம், தரம் எதையுமே அவர் கணக்கில் கொள்வதில்லை.

வாழ்க்கை நெருக்கடி அதிகரித்த போது அத்துளவுறு - செய்னம்புத் தம்பதியருக்கு இருந்த ஒரேயொரு வழி, செய்னம்பு வீட்டுப் பணிப்பெண்ணாக மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்குச் செல்வதுதான். அத்துளவுறு குவைத்துக்குத் தனது மனைவியை அனுப்புவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு விமான நிலையம் சென்று வழியனுப்ப மாமாவின் உதவியை நாடினார்.

கொழும்புக்கு வந்து இரவுச் சாப்பாட்டுக்குப் பின்னர் பஸ் எடுத்து விமான நிலையத்துக்கு அவர்கள் வந்த போது நேரம் இரவு 11.00 மணி. அதிகாலை 4.00 மணிக்கு செய்னம்பு விமான நிலையத்துக்குள் பயணத்துக்காக நுழைய வேண்டும். அதுவரை அங்குள்ள பார்வையாளர் மண்டபத்தில் அவர்கள் தங்கியிருக்க வேண்டும். வெளிநாட்டுக்குப் பணிப் பெண்களாகச் செல்ல வருவோரும் அவர்களை வழியனுப்ப வருவோரும் இவ்வாறுதான் தங்கியிருப்பார்கள். மத்திய கிழக்குக்குச் செல்வதற்கான அநேக விமானங்கள் அதிகாலையிலேயே புறப்படுவது அதற்கு ஒரு முக்கியமான காரணமாயிருந்தது. புதிதாக வருவோர் அந்த மண்டபத்தில் இருந்தபடி விமானம் ஆகாயத்துக்கு ஏறுவதும் தரையிறங்குவதுமான அற்புதமான காட்சிகளை தம்மை மறந்து பார்த்திருப்பார்கள். அடிக்கடி வந்து பழகியோரும் விநோதங்களில் லயிக்காதோரும் ஒரு பழைய பேப்பர் துண்டை விரித்தோ தங்களது துவாயை விரித்தோ சற்றுத் தூங்கி எழுவார்கள்.

அங்கு முள்வேலிக்கப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குவைத் ஏர்வேய்ஸ் விமானத்தைச் சுட்டிக் காட்டி, “அத்துளவுறு... இந்த ஃபிளைட்டுலதான்டா செய்னம்பு குவைத்துக்குப் போகப் போறாள்” என்று மாமா சொல்லி விட்டுப் பேப்பரை விரித்துச் சாய்ந்தார். அத்துளவுறு செய்னம்புவிடம் விமானத்தைச் சுட்டிக் காட்டி, “இந்த பிலட்டுலான் புள்ள நீ போப்பறாயெண்டு காக்கா சென்னாரு...” என்று சொல்லி விட்டு விமானத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் மாமாவுக்கருகில் பேப்பரை விரித்து உறங்க, செய்னம்பு தனக்குத் தூக்கம் வரவில்லையென்று சொல்லி விட்டு அருகேயிருந்த சுவரில் சாய்ந்திருந்து வருவதும் போவதுமாயிருந்த சனங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
 அத்துளவுறுக்குத் தூக்கம் வரவில்லை. மனைவி பிரிந்து சென்று விடுவாள் என்ற துக்கம் ஒரு காரணம். ஆனால் முக்கியமான வேறு ஒரு கேள்வி அத்துளவுறை உறுத்திக் கொண்டிருந்தது. பிரயாணக் களைப்பில் அசந்து உறங்கிக் கொண்டிருந்த மாமாவை இரண்டரை மணிபோல் எழுப்பிய அத்துளவுறு,

 “காக்கா... இதப் பிலேட்டு பிலேட்டு எண்டுதானே எல்லாருஞ் செல்லுறாக... அப்ப ஏரோப் பிலேன் என்டா என்ன காக்கா?” என்று கேட்டாராம்.

 இதை மாமா என்னிடம் சொன்ன போது நான் விழுந்து விழுந்து சிரித்தேன்.

மாமா நாங்கள் வளர்ந்த பிறகு நல்ல நண்பனாக இருந்தவர். எனது தாயாருக்கு முன்னர் பிறந்த கடைசிச் சகோதரர். எங்களில் மிகவும் அன்பு வைத்திருந்தார். நாங்கள் அவரைச் சின்ன மாமா என்று அழைப்போம். எந்த வேளையில் அவரைப் பார்த்தாலும் ஏதாவது ஒரு விடயத்தில் ஓயாமல் இயங்கிக் கொண்டேயிருப்பார். எப்போதும் சுறுசுறுப்பு.

 நான் ஆசிரிய சேவைக்கான நேர்முகப் பரீட்சைக்காக பண்டாரவளைக் கல்விக் காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டபோது சின்ன மாமா என்னை அழைத்துக் கொண்டு சென்றார். சிங்கள மொழி தெரியாத நிலையில் வேறு எங்கும் செல்ல முடியாமல் பண்டாரவளைப் பள்ளிவாசலுக்குள் ஓர் இரவு தங்கினோம். மாமா எந்த இடத்துக்குப் போனாலும் அந்த இடத்தில் உள்ளவர்களை சினேகிதர்களாக்கிக் கொள்வார். அப்படிச் சொல்வதை விட அவரது பேச்சு, செயற்பாடுகளைக் கண்டு பலர் அவரோடு ஒட்டிக் கொள்வார்கள் என்பதுதான் பொருத்தம். எனக்கு அதிக குளிர் ஒத்துவராது என்பது அவருக்குத் தெரிந்திருந்ததால் பள்ளிவாசல் முஅத்தினாருடைய கட்டிலை எனக்குப் படுக்கைக்காகப் பெற்றுத் தந்து விட்டு மாமா கீழே படுத்தார். குளிர் தாங்க முடியாமல் முஅத்தினார் மூன்று மணிக்கே எழுந்து விட்டார் பாவம். நல்ல வேளை தூக்கக் கலக்கத்தில் அந்நேரம் அவர் பாங்கு சொல்லவில்லை.

நான் கடமையேற்கப் புறப்பட்டபோதும் என்னை அழைத்துச் சென்றதும் சின்ன மாமாதான். மலை நாட்டில் அடிக்கடி மழை பெய்யும் என்றும் மழையில் நனையக்கூடாது என்று சொல்லி எனக்கு அழகான குடை ஒன்றை வாங்கி அன்பளித்தார் மாமா. அந்தக் குடையை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. அது சின்னச் சின்ன மஞ்சள் பூக்கள் நிறைந்த ரோஸ் கலர் குடை.

சின்ன மாமா மிகவும் கச்சிதமாக ஆடைகள் அணிவார். எப்போதும் டிப்டொப்பாகவே இருப்பார். அவருக்குத் தையல் தெரியும். முன் பக்கத்தில் இருக்கும் காற்சட்டைப் பைகள் சில நாட்களில் பார்த்தால் காற்சட்டையின் வல, இடது பக்கங்களுக்கு வந்து விடும். ஒரே காற்சட்டையில் நறுவிசாக எப்படி இந்த வித்தை செய்கிறார் என்று எனக்கு எப்போதுமே ஆச்சரியமாக இருக்கும்.

நான் சிறு வயதிலேயே நூல்களைப் படிக்கத் தொடங்கியவன். நான் அதிகம் படித்துக் கிழித்த புத்தகங்களுக்குச் சொந்தக்காரர் சின்ன மாமாதான். நான் பத்திரிகைகளுக்கு எழுத ஆரம்பித்தபின் அவரிடமிருந்த புத்தகங்களைக் கேட்டபோது றாக்கையோடு தூக்கிச் செல்லுமாறு சொல்லி விட்டார்.

எழுபதுகளில் பெல்பொட்டம்  காற்சட்டையும் நாய்க்காது ஷேர்ட்டும் பிரபல்யமாக இருந்தது. நண்பர்கள் எல்லோரும் இப்படி அணிய நான் மட்டும் உடைகளில் மாற்றம் செய்ய முடியாமல் தவித்தேன். என்னுடைய தந்தையார் பிரதேசத்தின் மூத்த மார்க்க அறிஞர். பொறுத்துக் கொள்ள முடியாமல் மாமாவைச் சரணடைந்தேன். இப்படியான சந்தர்ப்பங்களில் மாமாவைச் சரணடைவதுதான் வழக்கம். முதலில் அவர் சில கண்டிஷன்களைப் போடுவார். அதற்கு ஒத்துக் கொண்டால்தான் அடுத்த கட்டத்துக்குப் போவார்.

தினமும் எங்கள் வீட்டுக்கு வருவார் மாமா. அநேகமாக ஒரு நண்பர் குழாத்துடனேயே வருவார். தனியே வரும் நாட்களில் எனது தந்தையார் இருக்கும் வேளை பார்த்து ‘என்னடா இன்னும் பழைய உலகத்தில்தான் இருக்கிறாயா?’ என்று எடுத்துக் கொடுப்பார். நான் முனங்கத் தொடங்குவேன். எனது தந்தைக்குக் கேட்கக் கூடியவாறு எனது தாயாரைப் பார்த்து “சின்ன வயசில அவனுகளுக்கும் ஆசையிருக்கும்தானே... “ என்று எனக்கு ஆதரவாக நான்கு வார்த்தைகளைச் சொல்லுவதுடன் அதற்கான அதிகாரத்தையும் தனது கைகளில் எடுத்துக் கொள்வார். பிறகு எனது கனவு நிறைவேறும். அந்தக் காலத்தில் மிகப் பெரிய நாய்க்காது ஷேர்ட்டும் நடந்தால் முழுத் தெருக் குப்பையையுமே கூடவே இழுத்து வருவது போன்ற எலிபன்ட் பெல் பொட்டமும் அணிந்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். ஆனால் ஊரில் அவற்றை அணிய முடியாது. அணிந்திருந்தால் வேப்பங்கொத்தை எடுத்துக் கொண்டு துரத்த ஆரம்பித்திருப்பார்கள்.

மாமா எப்போதும் மூன்று வண்ணப் பேனாக்களை வைத்திருப்பார். பிற்பகல் தவிர ஏனைய வேளைகளில் நீலம் அல்லது கருப்பு, சிகப்பு, பச்சை ஆகிய நிறங்களில் ஊற்றுப் பேனாக்கள் அவரிடமிருக்கும். அவற்றை ஒரு தேவையோடுதான் அவர் பயன்படுத்தினார். எல்லோரும் குமிழ் முனைப் பேனாக்களைப் பயன்படுத்த அவர் மட்டும் தொடர்ந்து ஊற்றுமைப் பேனாக்களை உபயோகித்தது பற்றி ஒரு வேளை நான் சிந்தித்துப் பார்த்தேன். பாடசாலை ஆவணங்களில் தில்லாலங்கடி ஆசிரியர்கள் அதிபரின் எழுத்துக்களில் மாற்றத்தை மேற்கொண்டு விடக் கூடாது என்பது ஒரு காரணமாக இருக்க வேண்டும்.

மாமா வீட்டில் தனது எழுத்து வேலைகளை மேசையில் அமர்ந்து செய்ய மாட்டார். வரவேற்புக் கதிரையில் அமர்ந்து இரண்டு கைப்பிடிகளிலும் ஒரு பலகையை வைத்து எழுதுவார். அந்தப் பலகை வயிற்றுப் பகுதியை உறுத்தாமல் இருப்பதற்காக வட்டமாக வெட்டப்பட்டு, அழகாக ஒற்றை வர்ணம் தீட்டப்பட்டிருக்கும். இப்படி எல்லா விடயங்களிலும் மாமா ஒரு வித்தியாசமான மனிதராக இருந்தார். இன்னும் சொல்வதாக இருந்தால் சிறு வயதில் எனது ரோல் மொடலே சின்ன மாமாதான்.

1992ம் ஆண்டு டிஸம்பர் 26ம் திகதி ஒரு சனிக்கிழமையாக இருந்தது. அன்று காலை மாமாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான வை.அஹமத் தனது கடமை ரீதியான பயணம் ஒன்றுக்குத் தன்னுடன் துணை வருமாறு தகவல் அனுப்பினார். வை. அஹமத் எமது பிரதேசத்தின் மூத்த படைப்பாளி. தனது ‘புதிய தலைமுறைகள்’ நாவலுக்கு சாஹித்ய விருது பெற்றவர். இலங்கையின் சிறந்த சிறுகதையாளர்களில் ஒருவர். ஆசிரியராக பொதுச் சேவை ஆரம்பித்து அப்போது மேலதிக மாவட்ட அரச அதிபராக (மேலதிக மாவட்ட ஆட்சியர்) இருந்தார்.

அரச வாகனமான மாருதி ஜிப்சி வண்டியில் அவர்கள் புறப்பட்டனர். அவ்வாகனத்தில் இவர்கள் இருவர் தவிர பிரதேச செயலாளர் உதுமான் அவர்களும் இருந்தார். சாரதி மகேந்திரன் வாகனத்தைச் செலுத்த ஆரம்பித்தபோது கொழும்பு செல்வதற்கு பஸ் தரிப்பில் நின்ற சட்டத்தரணி முகைதீனைக் கண்டார்கள். அவரும் நண்பர்களுடன் அந்த வாகனத்தில் ஏறிக் கொள்ள கொழும்பு செல்லும் பாதையில் உள்ள மாவட்ட எல்லைக் கிராமமான ரிதிதென்ன நோக்கி வாகனம் புழுதி கிளப்பிப் பறந்தது.

மீயான் குளச் சந்தியில் ஹமீது நானா விறகு உடைத்துக் கொண்டு நின்றார். அப்பகுதியில் விறகுடைத்து ஊருக்குக் கொண்டு வந்து விற்று அதன் மூலம் தனது குடும்பத்தின் பசியை ஓரளவு தணித்து வந்தார். ஆயுதங்கள் அதிகாரம் பண்ண ஆரம்பித்ததிலிருந்து எல்லோரும் ஆமை தனது ஓட்டுக்குள் தலை, கால்களை மறைத்துக் கொள்வது போல அடங்கிக் கிடந்தனர். ஏழை எளிய சனங்களின் வாழ்க்கை ஒரு நேர உணவு இரண்டு தினப் பட்டினி என்று இருந்தது. தான் உடைத்த விறகுகளை ஒன்று சேர்த்துக் கட்டிக் கொண்டிருந்தபோது சற்றுத் தொலைவில் ஒரு வெடிச் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார். ஒரு ஜீப் வண்டி பாதையிலிருந்து கிளம்பிய புகையுடன் உயரே வீசப்படுவதைக் கண்டு அவசரமாகத் தெருவுக்கு ஓடினார்.

 அந்த வாகனத்தை எதிர்பார்த்துப் புதர்களுக்குள் நின்றவர்கள் மேலே கிளம்பிய ஜீப் வண்டியிலிருந்து உதிர்ந்த மனிதர்கள் மீது துப்பாக்கிச் சன்னங்களைச் சரமாரியாகப் பொழிந்து தள்ளினார்கள். தெருவுக்கு வந்த ஹமீது நானாவைக் கண்ட அவர்கள் அவர் மீதும் சுட்டுத் தள்ளினார்கள்.

 எங்களது சின்ன மாமாவை இப்படித்தான் அவர்கள் கொலை செய்தார்கள். 

- அஷ்ரஃப் சிஹாப்தீன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It