கவிதைகள் தொடக்கத்தில் பனையோலையில் எழுதப்பட்டன. ‘ஓலை சுவடி’ என பெயர் பெற்றது. 1850 களில் எழுத்து முதன் முதலில் அச்சு ஏறியது. இருபதாம் நூற்றாண்டில் பல படிகளைக் கடந்தது. இந்நூற்றாண்டின் இறுதியில் கவிஞர் வைரமுத்து ‘வைரமுத்துவின் குரலில் வைரமுத்து கவிதைகள்’ என்னும் தலைப்பில் ஒரு ஒலிநாடாவை வெளியிட்டார். காற்றின் வழி கவிதைகள் காதுகளை அடைந்தது; இதயம் நுழைந்தது. விஞ்ஞான முயற்சி என்று வரவேற்கப்பட்டது.

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கம். தொலைபேசிக்கு மாற்றாக ‘அலைபேசி’கள் பரவத் தொடங்கியது. தொலைபேசி பேசுவதற்கு மட்டுமே பயன்பட்டது. அலைபேசியின் பயன்கள் பல. அவற்றில் ஏராளமான தொழில் நுட்பங்கள். உள்ளங்கைக்குள் உலகம். அலைபேசியின் வாயிலாக செய்திகள் அனுப்ப முடிந்தது. பரிமாறிக் கொள்ளப்பட்டது. அவ்வாறு பரிமாறிக் கொள்ளப்படுவதற்கு பெயர் S.M.S. Short messaging service என்பதன் சுருக்கம். இதை இளைஞர்களும் இளைஞிகளும் மாணவ மாணவிகளும் ‘நன்கு’ பயன்படுத்திக் கொண்டனர். அவரவர் அவரவர் எண்ணங்களை அனுப்பி மகிழ்ந்தனர். செய்திகளும் சிரிப்புகளும் அனுப்பப்பட்டன. தமிழக்ததில் ஹைக்கூ வெகுவாய், பிரபலமாய், பரவியிருந்த காலம். அளவிடப்பட்ட அசைகள் ஓவ்வோர் அடியிலும் நடைமுறைப்படுத்தபடவில்லை என்றாலும் மூன்றடியே அதன் அளவு. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் வல்லமைப் பெற்றது. குறுஞ்செய்திகள் அரை நொடிக்குள் அடுத்தவரை சென்றடையும்.

எஸ்.எம்.எஸ். மூலம் செய்திக்குப் பதிலாக ஹைக்கூவை அனுப்பலாமே என முயற்சிக்கப்பட்டது. எஸ்.எம்.எஸ் இல் அனுப்புவதற்கு பொருத்தமாக இருக்கும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஹைக்கூவின் சுருக்கம் அதற்கு ஏதுவாக இருந்தது. அலைபேசியின் திரையில் அடங்கும் அளவிற்குள்ள ஒரு ஹைக்கூவைத் தேர்ந்து எடுத்து 2004ம் ஆண்டு இறுதியில் ஒரு சில கவிஞர்களுக்கு அனுப்பப்பட்டது. அனுப்பிய ஹைக்கூ

உச்சி வெயில்
இடுப்பில் சுமக்கிறாள்
குடத்தில் சூரியன் என்பதாகும்.
இது
Uchi Veiyil
Idupil Sumakkiral
Kudathil SUriyan என்னும் ஆங்கில எழுத்தில் அனுப்பப்பட்டது. புது முயற்சி என்று சிலரால் வரவேற்கப்பட்டது. சிலர் மௌனம் காத்தனர்.

கவிஞரும் தினத்தந்தி (மதுரை) நிருபருமான இளையராஜா தினத்தந்தி இதழில் ‘இதிலும் நவீனம்... எஸ்.எம்.எஸ் மூலம் வளருது இலக்கிய நட்பு’ என்னும் தலைப்பில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.'எங்கும் எதிலும் நவீனம் புகுந்து விட்ட இன்றைய நிலையில் தமிழ் கவிதை சிந்தனை என்று மூச்சு விட்டுக் கொண்டு இருக்கும் இலக்கிய வட்டத்தினரும் செல்போன் எஸ்.எம்.எஸ்.களின் வழியே ஒருவருக்கொருவர் கவிதைகளை பரிமாறிக் கொண்டு இலக்கிய பசியை தணித்துக் கொள்ள தொடங்கி விட்டனர்.நவீனத்தின் உச்சமான எஸ்.எம்.எஸ். கவிதைகளில் அதிகம் எட்டிப் பார்த்தது ஹைக்கூ கவிதைகளே. நெடுங்கவிதைகள் எப்போதாவது மட்டும் செல் போனில் முகம் காட்டும் நிலையில் ஹைக்கூ கவிதைகளுக்கு கையடக்க சாதனமான செல்போன் சிறந்த ஊடகம் தான் என்கிறார் ஒரு தமிழ்ப் பேராசிரியர். தீவிர இலக்கியவாதிகளும் முற்போக்கு சிந்தனையாளர்களும் எஸ்.எம்.எஸ். வழி கவிதைகளை பரப்பி அதன் மூலம் இலக்கிய வட்டத்தை தொடர்ந்து உயிர்ப்போடு வைத்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய விக்ஷயம் தான் என்கின்றனர். ஆனால் அவர்களே கூட தமிழ்; கவிதையை செல் போனில் ஆங்கில வழியில் அனுப்புவது சற்று நெருடத்தான் செய்கிறது என்று கூறுகின்றனர்.ஹைக்கூ கவிதைகளின் மூலம பத்திரிக்கைகளின் வாயிலாக இலக்கிய வட்டத்தில் பரவலாக அறியப்பட்ட சேலம் கவிஞர் பொன்.குமார் சமீபத்தில் மதுரையில் உள்ள கவி நண்பர்களுக்கு அனுப்பியுள்ள எஸ்.எம்.எஸ். கவிதையில்
உச்சி வெயில்
இடுப்பில் சுமக்கிறாள்
குடத்தில் சூரியன் என்ற கவிதையின் மூலம் இயல்பான ஒரு நிகழ்வை அழகியலோடு கூறி இருந்தார். சமீப காலமாக இளசுகளின் மத்தியில் வேர் விட்டிருக்கும் அருவருக்கத்தக்க எஸ்.எம்.எஸ்.கள் கச்சடா வசனங்கள் தவிர்க்கப்பட்டு இது போன்ற கவிதை பரிமாறல்களின் மூலம் புதியதோர் சிந்தனையை அவர்களுக்குள் விதைக்க முடியும் என்கிறார் கவிஞர் பொன்.குமார். சினிமாவுக்கு பாடல் எழுத முயற்சிக்கும் மதுரை கவிஞர் தென்றல் நிலவன், தமிழ் ஆர்வலர்கள் எஸ்.எம்.எஸ். வழி கவிதைகளை இளைஞர்களின் மத்தியல் பரவச் செய்ய கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்கிறார். எது எப்படியோ செல்போன் மூலம் தமிழும் இலக்கியமும் சாகாமல் இருந்தால் சரிதான் என்கிறீர்களா?' என விமரிசனத்துடன் வரவேற்றுள்ளார்.

எஸ்.எம்.எஸ். மூலம் முதலில் அனுப்பப்பட்ட ஹைக்கூ இதுவே. அனுப்பியவர் பொன்.குமார். தொடர்ந்து தன் ஹைக்கூக்களை மட்டும் அனுப்பி வந்துள்ளார்.

17.01.05 திருவள்ளுவர் தினத்தன்று கவிஞர் கன்னிக் கோவில் இராஜா SMS HAIKU IDAZH என்று தொடங்கி தொடக்கத்தில் தினம் ஒரு குறள் அனுப்பி வந்தார். 26.01.05 குடியரசு தினம் முதல் தன் ஹைக்கூக்களை முன்னோட்டாக அனுப்பி பின்னர் பிறரின் ஹைக்கூக்களை அனுப்பத் தொடங்கினார். அவ்வாறு அனுப்பட்டது கவிஞர் வசீகரனின் ஹைக்கூவாகும்.

கோபாமாய்க் குழந்தை
அம்மாவைத் திட்டியது
பொம்மையை அணைத்தபடி

தொடர்ந்து தினம் ஒரு படைப்பாளியின் ஹைக்கூவை தேர்ந்தெடுத்து அல்லது பெற்று பல்வேறு கவிஞர்களுக்கு அனுப்பி வைத்த பெருமை அவரையே சேரும். ஒரு கடமையாகவே செய்தார். இலக்கிய தகவல்களையும் அவ்வப்போது எஸ்.எம்.எஸ். மூலம் படைப்பாளிகளுக்குத் தெரிவித்து இலக்கியப் பணி செய்து வந்தார். ஐந்து ஆண்டுகளாக இடைவிடாது அனுப்பி வருவது பாராட்டத்தக்கது. 1858ம் நாளாக 07.01.2010ல் வெளியாகியுள்ள ஹைக்கூ

உள்ளங்கைகளைத் தேடும்
மழைத்துளிகள்
ஊருக்குப் போன குழந்தைகள் இவரின் இம்முயற்சி ஏராளமானோருக்குள் ஓர் ஈர்ப்பபை ஏற்படுத்தியது. குறுஞ்செய்தி இதழ் தொடங்கச் செய்தது. குறுஞ் செய்தி இதழ்களின் ஒரு முன்னோடியாக கவிஞர் கன்னிக் கோவில் ராஜா விளங்குகிறார். குறுஞ்செய்தி இதழ்களில் வெளியான ஹைக்கூக்களைத் தொகுத்து முதல் கட்டமாக ஒரு தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

கவிஞர் கன்னிக் கோவில் ராஜாவைத் தொடர்ந்து வசீகரன் ‘வசீகர வாசம்’ என்னும் தலைப்பில் தன் கருத்துக்களை மட்டும் குறுஞ்செய்தி மூலம் பரப்பி வருகிறார். சான்றுக்கு ஒன்று

நிமிர்நத நடை
நெஞ்சுக்கு உரம்
துணிந்த நடை
வெற்றிக்கு வரம் வாசகம் நான்கு வரியால் அமைந்தது.இரண்டாம் வரியின் இறுதிச் சொல்லும் நான்காம் வரியின் இறுதிச் சொல்லும் ஒரே சந்தத்தில் ஒலிக்கும் படி கட்டாயமாக எழுதியுள்ளார்.

அடுத்து குறிப்பிடத்தக்க ஓர் இதழ் ‘மு.மு.ஐ’. ஆசிரியர் கொள்ளிடம் காமராஜ். ஹைக்கூ மீதான பிரியத்தாலும் குறுஞ்செய்தி மேலுள்ள ஆர்வத்தாலும் 12.05.08 முதல் பிறரின் ஹைக்கூக்களை அனுப்பி வருகிறார். பந்தியில் பரிமாறப்பட்ட லட்டுகள்
ஏக்கத்தோடு
லட்டு உருட்டிய சிறுவன் ஏ.கௌதமன். இவ்விதழில் வெளியான முதல் ஹைக்கூ இது.

ஹைக்கூக்கள் மட்டும் குறுஞ்செய்திகள் வழியாக வெளியான நிலையில் புதுக் கவிதைகளையும் கொண்டு வர வேண்டும், கொண்டு செல்ல வேண்டும் என்னும் இலக்குடன் கவிஞர் ம.ஞானசேகரன் ‘பொதிகைக் காற்று’ என்னும் இதழைத் தொடங்கினார். மற்ற கவிஞர்களின் கவிதைகளை அனுப்பி வந்தார். 28.09.08 அன்று பரப்பப்பட்ட ஒரு புதுக்கவிதை.

அறிமுகத்தை
அழிப்பதற்கு
தயாராகி விட்டேன்
வாளேந்திய
துணிவோடு நான்
இன்னும் வெட்ட வெட்ட
வீழாத நினைவுகளில்
அவள் பார்வை - சந்தோஷ்குமார்.
இவரின் புதுக்கவிதை முயற்சித் தொடராதது வருத்தமளிக்கிறது.

ஒரு சில படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை, சிந்தனைகளை, கருத்துக்களை குறுஞ்செய்தி மூலம் தினசரி அனுப்பி பகிர்ந்து வருகின்றனர். ‘யாழி’யும் ஒருவர். இதழ் பெயரும் ‘யாழி’யே.

மிதந்தன கார்முகிலென
என் மகிழ்ச்சிக்கான
பொழுதுகள்
கால Nழலில்
கலந்தன மேகங்ககள்
மழை தொலைத்து வெளிறிய
வானமாய் நான். இதை ‘மீட்டியது’ யாழி. மீட்டிய நாள் 22.09.08. தொடர்ந்து மீட்டுகிறார். ரசிக்கும் படி மீட்டுகிறார். ‘யாழி’ ‘யாழிசை’ யாகியுள்ளது. ‘யாழி’ போல் பல.

சமூகத்தில் சீர்திருத்தத்தை ஏற்படுத்திய சுமூக சிந்தனையாளர் பெரியார். அடிக்கடி உச்சரித்த ஒரு வார்த்தை ‘வெங்காயம்’. இன்று வெங்காயம் ஒரு குறியீடாகி விட்டது. ‘வெங்காயம்’ என்னும் பெயரிலான ஒரு குறுஞ்செய்தி இதழ் பெரியார் வழியில் பகுத்தறிவு பேசுகிறது. மூடநம்பிக்கையைக் களைகிறது. தமிழ் சமூகத்துக்காக குரல் கொடுக்கிறது. ‘பெரியார் பேசுகிறார்’ என்னும் பெயரிலேயே ஓரிதழ். திராவிடர் கழகம் ராஜபாளையம் வெளியட்டு வருகிறது. 'நமக்கு இருக்கிற அரசமைப்பு சட்த்ததிலேயே சாதி இழிவும் சூத்திரத் தன்மையும் பாதுகாக்கப்படுகின்றன்' என பெரியார் பேச்சையே பேசி வருகிறது.

‘வெங்காயம்’ போல் ‘கவியரசு’. திரைப்பாடல்களால் ஒவ்வொரு தமிழனையும் தலையாட்டவும் சிந்திக்கவும் செய்தவர் கவியரசு கண்ணதாசன். இவர் பெருமையைப் பேசி வருகிறது. திரைப்படப்பாடல்களிலிருந்து தினசரி ஒரு பாடலின் முதல் நான்கு அடிகளை அனுப்பி கண்ணதாசனை நினைவுக் கூரச் செய்கிறது. இதற்காக ஒரு ‘வாசகர் வட்டம்’ உருவாகி வருகிறது. வாசகர் கருத்துக்களை, விமர்சனங்களை சுற்றுக்கு விடுகிறது. கூடுதலாக மாதமொரு வாசகரை, விமரிசகரை தோந்தெடுத்து கவியரசு கண்ணதாசன் தொடர்பான புத்தகம் ஒன்றையும் பரிசளித்து, ஊக்குவித்து வருகிறது. இவ்விதழை இயக்கி வருபவர் கவிஞர் பி.கண்ணன் சேகர். முன்பு ‘கவித்துளி’ என்னும் பெயரில் நடத்தி வந்தார். தற்போது ‘கவியரசு’ வாயிலாக தன் ஹைக்கூவையும் விடாமல் அனுப்பி வருகிறார்.

‘ஜெயம்’ என்னும் பெயரில் இதழ் நடத்தி வரும் பா.ஜெயக்குமார் தினம் ஒரு கவிஞரை அவர் பற்றிய குறிப்புகளுடன் அறிமுகம் செய்து வருகிறார். படைப்பாளிகளை அறிய வாய்ப்பாக உள்ளது.

ஓர் ஆர்வத்தில் ஒரு வேக்ததில் தொடங்கப்பட்டு பல்வேறு காரணங்களால் நின்று போனவையும் உண்டு. அவைகளில் ஒன்று ‘புதுவை ஹைக்கூ நாற்று’.
சலனத்தை உண்டாக்கி
ஆழத்தில் புதைந்தது கல்
அமைதி இழந்தது நீர் வெ.கலிவரதன் எழுதிய இந்த ஹைக்கூ 02.1.008 அன்று வெளியாகியுள்ளது.

கவிதை, ஹைக்கூவினிடையே சிரிக்கச் செய்யும் வகையில் இயங்கும் இதழ் ‘தெனாலி’. எப்போதாவது ‘சிரிப்பு’ வரும். சிரிக்க வைப்பவர் கவிஞர் கலைவாணி. சிந்திக்க செய்யும் கவிதையும் எழுதும் ஆற்றலாளர். ‘சித்தன்’ பெயரில் மூலிகைக் குறிப்புகளும் வருகிறது.

குறுஞ்செய்தி உலகில் நண்பர்கள் தோட்டம், கௌதம், தென்றல், அந்தி மலர், தேவா, எண்ணத்தின் வண்ணம் ,களம், கள்ளிப்பூக்கள் ,லிங்கம் ,நண்பன் , பரவசம், பிரேம் ஆனந்த் , புதுகை கவி, தேசிங்கு ராஜா, கே.வி.குமரன், ராகா, சாரல், சாய் சக்தி, சம்பூர்ணம், சிற்பி, சுபா, சுந்தர் , சாரல், தியாகு.பா, உதயம், வாலிதாசன், காகம், விபா என நாற்பதுக்கும் மேற்பட்டவை வந்தன. வருகின்றன. வரும். பார்வைக்கு சில குறுஞ்செய்தி இதழ்களை இயக்குபவர்கள் பெரும்பாலானோர் இளைஞர்கள். கவிஞர் அருணா சல சிவா போன்ற வாலிபத்தைத் தாண்டியவரும் உண்டு. இளைஞர்கள் குறுஞ்செய்தி இதழ்களில் ஈடுபட்டு வருவது அதன் வளர்ச்சியைக் காட்டுகிறது.

இலக்கியத்தை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை சிற்றிதழ்களே. புதுமையும் புரட்சியும் ஏற்படுத்துபவையும் வரவேற்பவையும் சிற்றிதழ்களே. குறுஞ்செய்தி மூலம் பரப்பப்பட்ட கவிதைகளை , ஹைக்கூக்களை இதழ்களில் பிரசுரித்து வருவது குறுஞ்செய்தி இதழ்களுக்கான வரவேற்பாய், அங்கீகாரமாயுள்ளது. மாந்தன் , சிகரம், கவிதை வானில் போன்ற சிற்றிதழ்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகின்றன. எடுத்துக் காட்டுக்காக சில.
சிகரம்

பெற்றோர்
நடக்கமுடியவில்லை
மகள் ஓடிப் போனதால் நா.கி.பிரசாத் (வாலிதாசன்)
சூடு பட்டு
திருந்தியது
சலவை செய்த துணி - எம் செல்வதுரை (லிங்கம்)
ஆற்று மணலை
அள்ளிய லாரியில்
துடித்து அடங்கும் மீன்கள் - ஜி. பிராங்களின் குமார் (உதயம்)
ஊனமுற்ற குழந்தைக்கு
அன்னையானது
குப்பைத் தொட்டி - தேவராஜன் (எண்ணத்தின் வண்ணம்)
உண்ண உணவு
உறங்கத் திண்ணை
மழைக்கு குடை - கா. ராமலிங்கம் (பரவசம்)
சூடும் மகுடங்கள்
நிரந்தரம் இல்லை
புல்லுக்கு உணாத்தியது சூரியன் - எ.அப்துல் காதர் (ராகா)
யாரும் தொட்டுப்பார்க்காமல்
இருப்பதால்தான் என்றும் அழகு
வானவில் - கோவை சந்தியானந்த் (சாய்சக்தி)

மாந்தன்
 
நகம் பெயர்த்த கல்லில்
விட்டு விட்டு வந்தேன்
ரத்த சுவடுகளை -நிலா ரசிகன் (கன்னிக்கோவில் ராஜா)
கிராம சாலையில்
கனரக வாகனங்கள்
மறந்தது மண்வாசனை -பல்லவி குமார் (கன்னிக்கோவில் ராஜா)

குறுஞ்செய்தி பற்றிய தகவல்களும் ஆங்காங்கே, அவ்வவ்போது செய்திகளில் வெளியாகியும் வருகின்றன. குறுஞ்செய்திகளின் இதழ்கள் மீதான விமரிசனம் ஒருபுறம் செய்யப்பட்டே வருகிறது. ஆயினும் அதன் வளர்ச்சி தடைப்படவில்லை. சேலத்தில் நவம்பர் 2009 சேலம் மதுரபாரதியின் ‘முகவரி தொலைத்த தேசம்’ என்னும் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க பொதுச் செயலாளர் எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வன் உரையாற்றும் போது எஸ்.எம்.எஸ். வாயிலாகவும் கவிதைகள் வரத் தொடங்கி விட்டன என்றது குறிப்பிடத்தக்கது. விமரிசனமாக இருந்தாலும் இலக்கிய மேடைகளில் குறிப்பிடும் அளவிற்கு குறுஞ்செய்தி இதழ்கள் வளர்ந்துள்ளன என்பது முக்கியமானது.

கவிஞர் இரா.நரேந்திரகுமார் இராசபாளையம் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிக்கு டிசம்பர் மாதம் வர கவிஞர் தமிழச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அவர் மார்ச் வருவதாக தெரிவித்து 17.09.2008 அன்று மாலை 7.47.12க்கு இரா.நரேந்திர குமாருக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். அது ‘‘ will certainly come in March. May be March end. If winter comes , can spring be far behind?‘‘ என்பதாகும். இது குறித்து இரா,நரேந்திரகுமாரின் கருத்து ‘‘ஷெல்லியிடம் தோய்ந்தவாறு தமிழச்சி வழங்கிய இந்த குறுஞ்செய்தி ஒவ்வொருவரின் வாழ்விலும் நம்பிக்கை விதைப்பது. அச்செய்தி இலக்கிய ஆர்வலர்களுக்கு அவரால் வழங்கப்படும் DESSERT, சிலருக்கு இனிப்பு. சிலருக்கு பனிக்கூழ். இன்னும் சிலருக்கு பழக்கலவை.’’ இவர் குறிப்பிட்டது போல் இன்று குறுஞ்செய்தி ஓர் இலக்கிய தரத்தைப் பெற்றுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
 
திருச்சியில் காஜாமலை பகுதியில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர் ‘‘குறுங்கவிதையில் குறுஞ்செய்திகளின் பங்கு’’ என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு உள்ளார். இது குறுஞ்செய்தி இதழ்கள் இலக்கிய தகுதி பெற்றுள்ளதை உறுதிப்படுத்துகிறது.

குறுஞ்செய்தி இதழ்கள் விதையாக விழுந்து விருட்சமாகி வளர்ந்து நிற்கிறது. பல்வேறு கிளைகளையும் விழுதுகளையும் கொண்ட இலக்கிய உலகில் ஓரிடத்தைப் பெற்றுள்ளது. குறுஞ்செய்தியாளர்கள் ஒவ்வொருவரும் சிரமப் பட்டு செலவு செய்து நேரம் ஒதுக்கி அனுப்பி வருகின்றனர். அனுப்பப் படும் படைப்புகள் தரமாக, சமூக சிந்தனையுடன் அமையும் படி கவனிக்க வேண்டிய பொறுப்பு குறுஞ்செய்தியாளர்களுக்கு உண்டு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போதே இலக்கிய உலகம் ஏற்றுக்கொள்ளும். இலக்கியத்தில் வரவாகும். பதிவாகும். ஒவ்வொரு புதிய வடிவமும் எதிர்ப்பை  எதிர் கொண்டே வெற்றிப் பெற்றுள்ளன. குறுஞ்செய்தி இதழ்களும் வெற்றி பெறும் என்னும் நம்பிக்கை அளிக்கிறது.

- பொன்.குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It