உத்தப்புரம் தலித் மக்கள் அமைதியாக வாழும் போது மார்க்சிஸ்டுகள் தேவை இல்லாமல் போராடி அமைதியைக் கெடுக்கிறார்கள் என்பதாகக் கலைஞர் அறிக்கை விட்டு இருக்கிறார். என்னதான் ஆட்சிப் பொறுப்பின் சுமைகளில் முடங்கிக் கிடந்தாலும் தன்னைப் பெரியாரின் சீடர் என்று கூறிக் கொள்ளும் கலைஞரிடம் இருந்து இப்படி ஓர் அறிக்கையா என்று அதிர்ச்சியாய் இருக்கிறது. இப்படியான அமைதியான வாழ்க்கைக்காகவா அந்த ஈரோட்டுக் கிழவர் கடைசிக் காலம் வரை தெருத் தெருவாய் ஊர் ஊராய்ச் சுற்றி வந்தார்? தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டத்திற்குப் பிறகுதானே நீங்கள் உட்பட இந்த உலகத்திற்கு அந்த அவலம் தெரிய வந்தது?அதுவரை உங்கள் உடன் பிறப்புகளோ, அரசு நிர்வாகமோ அதனை உலகுக்கு அம்பலப்படுத்தியதா? அதனைப் போக்க நடவடிக்கை எடுத்ததா?

பிரகாஷ் காரத் வருகையால்தானே வேறு வழி இல்லாமல் அந்த அவலச் சுவரில் சிறு உடைப்பைச் செய்தீர்கள்?

 அந்தசுவர் உடைப்புக்குப் பிறகும் கடந்த மூன்றாண்டுகளாய் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் பெரிதாய் நேர்ந்து விடவில்லை; மாறாக சாதி இந்துக்களோடு சேர்ந்து கொண்டு நிர்வாகமும், காவல்துறையும் போலி வழக்குகள், காலம் கடத்துதல் போன்றவற்றில் ஈடுபடும்போது அதற்காகப் போராடிய அமைப்பு தொடர்ந்து போராடாமல் பூ பறித்துக் கொண்டிருக்க முடியுமா என்ன?

 சுவர் உடைத்துத் திறக்கப்பட்ட வழியைப் பயன்படுத்த முடியாமல் கூரைகளை நீட்டியும், வேறு பொருட்களை வழியில் போட்டுத் தடைகள் ஏற்படுத்துவதை இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக அந்த தலித் மக்கள் வாழ வேண்டும் என்பதுதான் அரசின் எதிர்பார்ப்பா?

 அரச மர வழிபாடு தலித் மக்கள் உரிமைதான் என்று அரசு உறுதிப்படுத்தியும் அதற்கு அனுமதி மறுக்கப்படுவதை ஏற்றுக் கொண்டு வாழ்வதுதான் அமைதியான வாழ்க்கையா?

 அரசு நிர்வாகம் தலித் மக்களை கைது செய்யக் கூடாது என்று சொன்னபிறகும் அவர்கள் கைது செய்யப்படுவதை அமைதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

 மூன்று ஆண்டுகளாய்ப் பல ஆட்சித் தலைவர்களால் கவனிக்கப்படாத அம்மக்களின் கோரிக்கை தொடர்ந்து அவ்வாறு ஆகிவிடக்கூடாது என்று போராட்டத்தை அமைதியாகத தொடர்வது ஜனநாயக விரோதம் ஆகுமா?

 பேருந்து நிழற்குடை கட்டுவதற்கான இடம் புறம்போக்கு நிலம்தான், தனியார் இடம் அன்று என்று அரசே சொன்னபிறகும் அதைக் கட்டமுடியாமல் தடுப்பதை ஏற்றுக் கொண்டு தலித் மக்கள் வாழ வேண்டும் என்பதுதான் அமைதியான வாழ்வா?

இந்த அமைதியைத்தான் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தடுத்து விட்டது என்று தாங்கள் கருதுகிறீர்களா?

 கலைஞர் அவர்களே யாரோ உங்களிடம் தவறான தகவல்களைச் சொல்லித் தவறாக வழி நடத்துகிறார்கள். நீங்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது அவர்களிடம்தான்.

 ஊடகச் செய்திகளை விழிப்புடன் கவனித்துச் செயல்படுவதில் உங்களுக்குள்ள தனிக் கவனத்தை நாங்கள் அறிவோம்! சிலபல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தங்களைத் தலித் மக்களுக்கு முற்றிலும் எதிரானவராக தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அதனோடு தொடர்புடைய இயக்கத்தினரோ கருதவில்லை. ஆயரமாயிரம் பிரச்சனைகளுக்கு இடையிலும் எப்படி செம்மொழி மாநாட்டைக் கவனமாக நடத்தினீர்களோ, அப்படிப்பட்ட கவனத்துடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நியாயமான போராட்டத்தையும் பாருங்கள். தமிழக முதல்வர் என்ற பார்வையில் அல்லாமல் பெரியாரின் தொண்டர் என்ற முறையில் இப் போராட்டத்தை அணுகுங்கள்! அப்போது உங்கள் பார்வை நிச்சயமாக மாறுபடும். 

- புதுவை ஞானகுமாரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It