2017 சர்வதேச மகளிர் தினம்: ஒரு புதிய அரசையும், அமைப்பையும் உருவாக்கும் குறிக்கோளோடு தங்களுடைய போராட்டத்தைப் பெண்கள் தீவிரப்படுத்த வேண்டும்
இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறைகூவல், பிப்ரவரி 27, 2017 மார்ச் 8-இல், தங்களுடைய உரிமைகளையும், எல்லா மக்களுடைய உரிமைகளையும் நிலைநாட்டிக் கொள்வதற்காக இந்திய மற்றும் எல்லா நாட்டுப் பெண்களும் மேற் கொள்ளும் இடைவிடாத, வீரமான போராட்டங்களை கம்யூனிஸ்டு கெதர் கட்சி போற்றுகிறது. முதலாளித்துவச் சுரண்டல், ஏகாதிபத்தியப் போர்கள், இனவாதம், அரசு பயங்கரவாதம் மற்றும் மக்கள் மீது நடத்தப்படும் எல்லா வகையான ஒடுக்குமுறைக்கும் பாகுபாட்டிற்கும் எதிரான மாபெரும் ஆர்பாட்டங்களின் முன்னணியில் இருந்து பெண்கள் உலகெங்கிலும் போராடி வருகின்றனர். தொழிலாளர்களுடைய வேலை நிறுத்தப் போராட்டங்கள், உழவர்கள் மற்றும் இளைஞர்களுடைய இயக்கங்களின் ஒரு அங்கமாக அவர்கள் இருந்து வருகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களாலும், ஏகாதிபத்திய அரசுகளாலும் தாக்கப்பட்டு வரும் தேசிய உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்தில் பெண்கள் முக்கிய பங்காளர்களாக இருந்து வருகின்றனர். பரந்துபட்ட சீரழிவையும், போர்ப் பகுதிகளிலிருந்து இலட்சக் கணக்கான அகதிகள் தப்பி ஒடி வரும் நிலையையும் உருவாக்கி அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதனுடைய கூட்டாளிகளும் நடத்திவரும் அநியாயமானப் போர்களை அவர்கள் எதிர்த்து வருகின்றனர்.
நூறாண்டுகளுக்கு முன்னர் – சர்வதேச மகளிர் தினத்தில்
ஆயிரக் கணக்கான பெண்கள் மார்ச் 8, 1917-இல் இரசியாவின் பெட்ரோகிராட் நகரத்தின் வீதிகளில் அணி வகுத்துச் சென்றனர். அவர்களில் சிலர் தொழிலாளர்களாகவும், சிலர் போர் வீரர்களுடைய மனைவியராகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும், “எங்களுடைய குழந்தைகளுக்கு உண்ண உணவு வேண்டும்” எனவும், “போர்முனையிலிருந்து எங்கள் கணவர்களைத் திருப்பியனுப்புங்கள்” என்றும் கோரினர். சார் மன்னனுடைய இரசியாவில், “உழைக்கும் பெண்களுக்கு வாக்குரிமை” என்ற முழக்கம் அப்போது பரவலாக எழுப்பப்பட்டது. அந்த நேரத்தில் ஐரோப்பாவெங்கும் உழைக்கும் மக்களுக்கு தாங்க முடியாத நிலைமைகளை முதல் உலகப் போர் உருவாக்கியிருந்தது. 1915-இல் துவங்கி, கிளர்ச்சி அலை செர்மனியெங்கும் பரவியிருந்தது. குடும்பப் பெண்களுடைய கிளர்ச்சிகள் அடிக்கடியும், பல்வேறு நேரங்களிலும் ஆஸ்திரியா, இங்கிலாந்து, பிரான்சு, செர்மனி மற்றும் இரசியாவில் நடைபெற்று வந்தன. இரசியாவில் ஆடைத் தொழில் மையமாகிய போகோரோடிஸ்க் என்ற நகரத்தில் அக்டோபர் 1915 ஒரு சந்தை நாளில் கிளர்ச்சி வெடித்தது. பல வாரங்கள் நீடித்த ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தை, 12,000 பெண் தொழிலாளர்கள் துவக்கினர். சூன் 1916-இல் இரசியாவின் கோர்டீவ்கா நகரில் ஒராயிரம் பெண்கள் கூட்டம் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் ஒவ்வொரு கடையாக சென்று, கிடங்கைத் திறக்குமாறு கடைக்காரர்களிடம் கோரினர். செர்மனியில் உள்ள போர் வீரர்களின் மனைவியர்களுடைய ஒரு கூட்டம், ஆகஸ்டு 1916-இல் ஒரு அமைதி உடன்படிக்கைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென ஹேம்பர்க் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை எழுப்பினர். “நாங்கள் இனி மேலும் பசியில் வாட விரும்பவில்லை. எங்களுடைய கணவர்களும், பிள்ளைகளும் போரிலிருந்து திரும்பி வர வேண்டும்” என்று அவர்கள் எழுதினர்.
அந்த காலக் கட்டத்தில் நடைபெற்ற பெண்கள் ஆர்பாட்டங்களில் மிகவும் புகழ் பெற்ற ஆர்பாட்டம் மார்ச் 8, 1917-இல் நடைபெற்றது. ஆயிரக் கணக்கான பெண் தொழிலாளர்களும், குடும்பத் தலைவிகளும் காவல் துறையினரை எதிர்த்து எழுந்தனர். தங்களோடு சேர்ந்து கொள்ளுமாறு சாரிச இராணுவத்தின் போர் வீரர்களை அவர்கள் கேட்டுக் கொண்டனர். அதற்கு மறுநாள், 2 இலட்சம் பெண் மற்றும் ஆண் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மக்கள் கூட்டம் அதிக அளவில் அரசியல் கோரிக்கைகளை எழுப்பியது. அவர்கள், “போர் ஒழிக”, “சார் மன்னராட்சி ஒழிக” என்பன போன்ற முழக்கங்களை எழுப்பினர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்க வேண்டுமென கொடுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்ற பெட்ரோகிராட் படை வீரர்கள் மறுத்துவிட்டனர். நூறாண்டுகளுக்கு முன்னர், மார்ச் 8 அன்று இரசியப் பெண்மணிகள் மேற் கொண்ட வீரமான செயல்பாடுகள், சார் மன்னனை தூக்கியெறிந்த பிப்ரவரி (இரசிய நாள் அட்டவணைப் படி) புரட்சியென அழைக்கப்படும் மக்கள் திரள் எழுச்சிக்கு ஒரு உணர்வூட்டும் நிகழ்ச்சியாக இருந்தது. |
மக்கள் திரள் ஆர்பாட்டங்களிலும், தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கலுக்கு எதிராக தொடர்ந்து வருகின்ற ஆர்பாட்டங்களிலும் இந்திய மகளிர் முன்னணியில் பங்கேற்று வருகின்றனர். பெரும் தொழில் நிறுவனங்களிலிருந்து சிறிய தொழிற்சாலைகள் வரை ஒவ்வொரு வேலை செய்யும் இடங்களிலும் தொழிற் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு எதிராக செய்யப்படும் திருத்தங்களுக்கு எதிராக அவர்கள் குரலெழுப்பி வருகின்றனர். தொழிலாளர்கள் என்பதாலே தங்களுக்கு உரிய அனைத்து உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டுமென ஆசிரியர்களும், செவிலியர்களும், ஆங்கன்வாடி மற்றும் ஆஷா தொழிலாளர்களும் கோரி வருகின்றனர்.
சமுதாயத்தில் பெண்களை இழிவாக நடத்திவரும் நிலவுடமைப் பழக்க வழக்கங்களையும், காலாவதியான கருத்துக்களையும் எதிர்த்து நமது நாட்டுப் பெண்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பெண்கள் என்ற அடிப்படையிலும், மனிதர்கள் என்பதாலும் தங்களுடைய எல்லா உரிமைகளுக்கும் உத்திரவாதமளிக்கக் கூடிய நவீன சட்டங்களை அவர்கள் கோருகிறார்கள்.
வகுப்புவாத வன்முறைக்கும், அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் முன்னணியில் பெண்கள் இருந்து வருகிறார்கள். காஷ்மீர், வட கிழக்கு, சந்தீஸ்கர் அல்லது பிற “கலவரப் பகுதி”களிலும், இராணுவ ஆட்சிக்கு எதிராக பெண்கள் வீரமாகப் போராடி வருகின்றனர்.
தற்போதுள்ள அரசும், அது பாதுகாக்கும் பொருளாதார அமைப்பும் பெண்கள் விடுதலை பெறுவதற்கு முக்கிய தடைக்கற்களாக இருக்கின்றன என வாழ்க்கை அனுபவம் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது. காவல் துறையும், பிற அதிகாரபூர்வமான ஆயுதப்படைகளும் பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்வதில்லை. மாறாக பெண்களைச் சிறையில் அடைத்து கற்பழிப்பு செய்வது உட்பட மிகக் கொடூரமான குற்றங்களை அவர்கள் நடத்தி வருகிறார்கள். நீதி மன்றங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களை இழைக்கும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு பதிலாக அந்தக் குற்றவாளிகளை இந்தியக் குடியரசின் நிறுவனங்கள் பாதுகாக்கின்றன.
இன்றைய அரசில் அதிகாரத்திற்காகப் போட்டி போடும் கட்சிகள், எல்லா சமூகக் கேடுகளுக்கும் முடிவு கட்டுவோமென வாக்குறுதியளிக்கிறார்கள். ஆனால் அதிகாரத்திற்கு வந்தவுடன், அவர்கள பெரு முதலாளி வகுப்பினருடைய நலன்களுக்காகத் திட்டவட்டமாக சேவை செய்கிறார்கள். அவர்கள் ஏகபோகக் குடும்பங்களைக் கொழுக்கச் செய்வதற்காக, பெண்களுக்கும் மக்களுக்கும் எதிரான அதே முதலாளித்துவ சீர்திருத்தத் திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள்.
“உலகில் மிகவும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த சனநாயகத்தில்”, அரசியல் அதிகாரம் மிகச் சிறுபான்மையானவர்களுடைய கைகளில் குவிக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் பெரும்பான்மையான பெண்கள் மற்றும் ஆடவர்களை விலையாகக் கொடுத்து, தங்களுடைய சுயநலத்தை நிறைவேற்றி வருகின்றனர். பொருளாதார அமைப்பு, உற்பத்திக் கருவிகள் தனியார் உடமையாக இருப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
அது, மனித உழைப்பை அதிகபட்சமாகச் சுரண்டுவதன் மூலமும், சிறு உற்பத்தியாளர்களைத் திருடுவதன் மூலமும், இயற்கை வளங்களைச் சூறையாடுவதன் மூலமும் முதலாளித்துவ இலாபத்தை அதிகரிப்பதற்காகச் செயல்படுகிறது. பெண்கள் கீழ்த்தரமாக நடத்தப்படுவதையும், அவர்கள் கடுமையாகச் சுரண்டப்படுவதையும் பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பு பாதுகாத்து நீடிக்கச் செய்கிறது.
சர்வ தேச மகளிர் தினத்தின் துவக்கம்
1910-இல் டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகனில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச சோசலிச மகளிர் கருத்தரங்கு, மார்ச் 8-ஐ சர்வதேச பெண்கள் தினமாகக் கொண்டாடும் பாரம்பரியத்தை நிறுவியது. 17 நாடுகளிலிருந்து வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட பெண் பிரதிநிதிகளால் இந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த பிரதிநிதிகளில் பின்லாந்தின் பாராளுமன்றத்திற்கு முதல்முறையாக தேர்வு செய்யப்பட்ட 3 பெண்மணிகளும் அடங்குவர். 1907-இல் செர்மனி ஸ்டுட்கார்ட்-இல் நடைபெற்ற முதல் சர்வதேச சோசலிச மகளிருடைய கருத்தரங்கில் உழைக்கும் பெண்களுக்கும், பெண்களுடைய உரிமைகளுக்கும் ஆதரவாக ஒவ்வொரு ஆண்டும் ஆர்பாட்டம் நடத்த வேண்டுமென்ற கருத்தை முதலில் முன்வைத்த கிளாரா ஜெட்கின் தான், சர்வ தேச மகளிர் தினம் குறித்த தீர்மானத்தையும் முன்வைத்தார். அந்தத் தீர்மானங்களில் ஒன்று “எல்லா நாடுகளிலும் உள்ள சோசலிச மகளிர் இயக்கம் முதலாளி வகுப்பின் பெண்ணுரிமையாளர்களோடு சேராமல், சோசலிச கட்சிகளோடு கூட்டாகப் போராடி வருகிறார்கள். அவர்கள், வாக்குரிமையை சனநாயகப்படுத்துவதற்காக மிகவும் முக்கியமான கோட்பாடு மற்றும் நடைமுறையின் அடிப்படையில் பெண்களுக்கு வாக்குரிமை கோரிக்கையையும் முன்வைத்துப் போராடி வருகின்றனர்” என்று கூறுகிறது. பெண்களுடைய அரசியல் அதிகாரத்தை முன் கொண்டு செல்ல, மேற் கூறப்பட்ட கோட்பாடுகளின்படி உழைக்கும் மக்களிடையே ஓய்வு ஒழிவின்றி போராட வேண்டியது எல்லா நாட்டு சோசலிச பெண்களுடைய கடமையாகும். சமூகத் தேவை குறித்தும், மகளிர் அரசியல் விடுதலை பெற வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் கருத்துரைகள் மூலமாகவும், புத்தகங்கள் மூலமாகவும் பரப்புரை செய்வதும், அதற்கு ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவதும் அவசியமாகும். அந்த பரப்புரைக்கு, எல்லா வகையான அரசியல் மற்றும் பொது மன்றத் தேர்தல்களை முக்கியமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” “தத்தம் நாடுகளிலுள்ள வகுப்பு உணர்வு கொண்ட பாட்டாளி வகுப்பினருடைய அரசியல் மற்றும் தொழிற் சங்கங்களின் புரிந்துணர்வோடு, எல்லா தேசங்களையும் சேர்ந்த சோசலிசப் பெண்கள் சிறப்பாக ஒரு பெண்கள் தினத்தை ஏற்பாடு செய்து நடத்த வேண்டும். அது முதலாவதாக பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு பரப்புரை நடத்த வேண்டும். இந்தக் கோரிக்கையை ஒட்டுமொத்த பெண்கள் பற்றிய கேள்வியோடு, சோசலிச கருத்தியல் அடிப்படையில் விவாதிக்க வேண்டும்” என பிரதிநிதிகள் தீர்மானித்தனர். |
தொழிலாளி வகுப்பின் போராட்டங்களுக்கும், பெண்களுடைய போராட்டங்களுக்கும் இடையில் தொடர்பு எதுவும் இல்லையென கூறுபவர்கள், பெண்களுடைய விடுதலைக்கான போராட்டத்தை அழிப்பதற்காகப் பொய் சொல்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஐ சர்வதேச பெண்கள் தினமாகக் கொண்டாடும் வழக்கத்தை முதலில் கொண்டு வந்ததே சோசலிச, கம்யூனிசத்திற்கான இயக்கத்தின் தலைவர்களாகிய உழைக்கும் பெண்கள் ஆவர்.
நூறாண்டுகளுக்கு முன்னர், மார்ச் 8, 1917 அன்று, போருக்கும், பசிக்கும், சார் மன்னனுடைய யதேச்சையதிகாரத்திற்கும் முடிவு கட்ட வேண்டுமென்று கோரி, இரசிய பெண்மணிகள் பெட்ரோகிராட் மற்றும் பிற நகரங்களின் வீதிகளில் குவிந்தனர். அன்று பெண்கள் நடத்திய மாபெரும் ஆர்பாட்டங்கள், சாரின் முடியாட்சியைத் தூக்கியெறிந்த ஒரு புரட்சிகர கிளர்ச்சிக்கு ஒரு சக்திவாய்ந்த ஊட்டமாக இருந்தது. அந்த ஆண்டு இரசியாவில் புரட்சி முன்னேற்றமடைய பெண்கள் தொடர்ந்து ஒரு முக்கிய பங்காற்றினர். அது, உழவர்கள் மற்றும் படை வீரர்களுடைய கூட்டுறவோடு தொழிலாளி வகுப்பு, மாபெரும் அக்டோபர் புரட்சியில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வழி வகுத்தது. புதிய சோசலிச அமைப்பைக் கட்டுவதற்கு அவர்கள் உழைக்கும் ஆடவரோடு தோளொடு தோள் சேர்ந்து உழைத்தனர்.
பெண்களுடைய விடுதலைக்கு பாட்டாளி வகுப்புப் புரட்சிப் பாதையும், சோசலிசமும் மட்டுமே சரியான பாதை என்பதை இரசியாவின் புரட்சிகர அனுபவம் காட்டியிருக்கிறது. அப்போதிலிருந்து, எல்லா நாடுகளைச் சேர்ந்த முதலாளிகள், பெண்களாக பெண்கள் ஒன்றிணைவதையும், சமுதாயத்திலுள்ள தொழிலாளி வகுப்பு மற்றும் பிற எல்லா ஒடுக்கப்பட்டவர்களோடும் ஐக்கியப்படுவதையும் தடுப்பதற்காக பல்வேறு வழிகளைத் தொடர்ந்து கண்டுபிடித்து வருகின்றனர். ஆடவர்களே அவர்களுடைய எதிரிகள் என்றும், பெண்களுடைய முக்கியப் போராட்டமானது குடும்பத்திற்குள்ளே அவர்களுடைய சமத்துவத்திற்கானது என்றும் பல கருத்துக்களை முன்னேற்றுவதன் மூலம் பெண்களுடைய இயக்கத்தைத் திசை திருப்ப அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
உழைக்கும் பெரும்பான்மையான மக்களைப் பிளவுபடுத்தவும், அவர்கள் மீது ஆட்சி நடத்தவும், பெரும் நிலவுடமையாளர்கள் மற்றும் பிற கொழுத்த பிரிவினரோடு கூட்டணி சேர்ந்துள்ள நமது நாட்டை ஆளும் பெரும் முதலாளிகள், ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்களிடமிருந்து அவர்கள் கற்றுக் கொண்ட பல்வேறு முறைகளைக் கையாண்டு வருகின்றனர். அவர்கள் திட்டமிட்ட முறையில் சாதி, மத, இன, தேச அடிப்படைகளில் மோதல்களைத் தூண்டி விட்டு வருகின்றனர். குறிப்பிட்ட சாதிகளுக்கும், சமூகங்களுக்கும் ஒதுக்கீடு என்பதன் மூலம் அவற்றிலுள்ள மேல் தட்டு மக்களை தன்னோடு சேர்த்துக் கொள்ளும் முறையை அவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
பாராளுமன்றத்திலும், சட்ட மன்றங்களிலும் 33% ஒதுக்கீடு என்ற பழைய வாக்குறுதியை தற்போதைய மோடி அரசாங்கம் மீண்டும் திரும்பத் திரும்பக் கூறி வருகிறது. 1996-இலிருந்து பெண்கள் இயக்கத்தின் முன்னே இந்த காரட்டு தொங்கவிடப்பட்டு வருகிறது. அதனுடைய நோக்கமானது, போராடி வருகின்ற பெண்கள், தற்போதைய அமைப்போடு விட்டுக் கொடுத்துச் சமரமாகச் செல்ல வேண்டும் என்பதாகும். தற்போதைய அதிகாரக் கட்டுமானத்தில் ஒரு குறிப்பிட்ட சிலருக்கு இடமளிப்பதன் மூலம் இது, பெண்களுடைய போராட்ட ஒற்றுமையை உடைக்கும் நோக்கம் கொண்டதாகும்.
ஆளும் வகுப்பினருடைய இந்த சூழ்ச்சி குறித்து இந்தியப் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென கம்யூனிஸ்டு கெதர் கட்சி உறுதியாக நம்புகிறது. பெண்களுடைய குறிக்கோளானது, தற்போதுள்ள பாராளுமன்றத்தில் ஒரு ஒதுக்கீட்டைப் பெறுவதல்ல. குறிக்கோளானது, தற்போதுள்ள வெட்டிப் பேச்சு பாராளுமன்றத்தை மாற்றி, உழைக்கும் பெண்களையும், ஆடவரையும் உண்மையிலேயே பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு மன்றத்தைக் கொண்டு வருவதாகும். பெரு முதலாளிகள் மற்றும் பிற சுரண்டல் அதிபர்களின் ஆதரவு பெற்ற ஒரு அரசியல் மேல் தட்டைச் சேர்ந்தவர்களிடம் இல்லாமல், உழைக்கும் மக்கள் கைகளில் அதிகாரம் இருக்கக் கூடிய அரசியல் வழி முறையையும், ஒரு புதிய அரசையும் நிர்மாணிக்க அடித்தளங்களை அமைப்பது நம்முடைய நோக்கமாகும். அப்படிப்பட்ட தொரு அரசு மட்டுமே அனைவருக்கும் வளமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதோடு, பெண்களுடைய உரிமைகளையும், மாண்பையும் எவரும் மீற முடியாது என்ற உத்திரவாதத்தையும் அளிக்க முடியும்.
எல்லா வகையான சுரண்டலுக்கும் முடிவு கட்டுவதற்கு, குடியிருப்புப் பகுதிகளிலும், வேலை செய்யும் இடங்களிலும் பெண்களாகவும், தொழிலாளி வகுப்பு மற்றும் அதனுடைய புரட்சிகர இயக்கத்தின் ஒரு பிரிவினர் என்ற அடிப்படையிலும் பெண்கள் அணி திரள வேண்டும். உழைக்கும் பெண்கள், ஆடவர், மாணவ மாணவிகள் ஆகிய நாம், நம்முடைய வேலை செய்யும் இடங்களிலும், வளாகங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் நம்முடைய சொந்தக் குழுக்களைக் கட்ட வேண்டும். நம்முடைய உரிமைகளுக்காகப் போராடுகின்ற அதே நேரத்தில், இந்தச் சமுதாயத்தினுடைய ஆட்சியாளர்களாக ஆவதற்கும் நாம் தயாரிப்புகளில் ஈடுபட வேண்டும்.
சர்வதேச மகளிர் தினமானது நியாயமற்ற போர்கள், சுரண்டல், ஒடுக்குமுறை, மக்களுக்கிடையே பால் அல்லது வேறு அடிப்படைகளில் பாகுபாடுகள் ஆகியன அறவே இல்லாத ஒரு புதிய உலகிற்காக போராடுவதற்குப் பெண்கள் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு நாளாகும்.
இந்தியாவின் மறுமலர்ச்சிக்காக, மக்கள் கைகளில் இறையாண்மையை கொண்டு சேர்க்கக் கூடிய ஒரு நவீன சனநாயக அரசிற்காகப் போராடுவதற்கு நாம் ஒன்றுபடுவோம்! சனநாயக, காலனிய எதிர்ப்பு, நிலவுடைமை எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நிபந்தனையாக முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதற்கு நாம் ஒன்றுபடுவோம்! புரட்சியின் மூலம் சோசலிசத்தைக் கட்டுவதற்கு நாம் ஒன்றுபடுவோம்!
சமுக முன்னேற்றத்திற்காகப் போராடுவதில் உறுதியாக இருக்கும் பெண்களை இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியில் இணைந்து, தொழிலாளி வகுப்பு மற்றும் கம்யூனிசத்திற்கான புரட்சிகர இயக்கத்தை வலுப்படுத்த முன்வருமாறு அழைக்கிறோம்!
பெண் விடுதலைக்கான போராட்டம் வாழ்க!
இன்குலாப் ஜிந்தாபாத்!