ஒன்றுபட்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் தடுத்து நிறுத்துவோம்!

சிரியாவுக்கு எதிரான ஏகாதிபத்திய போரை எதிர்ப்போம்!

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை, செப் 9, 2013. 

அமெரிக்க ஏகாதிபத்தியம் தன் நச்சுப் பற்களை மீண்டும் வெளிக் காட்டியிருக்கிறது. சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா ஒரு ஆக்கிரமிப்புப் போரை எந்த நேரத்திலும் தொடருமென அமெரிக்காவின் தலைவர் ஒபாமா அறிவித்திருக்கிறார். ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தத்திற்கு எதிராகவும், நாடுகளுக்கிடையிலான சர்வதேச நியதிகளுக்கு புறம்பாகவும், அமெரிக்கா சிரியா மீது ஒருதலைப்பட்சமாக ஆக்கிரமிப்பை நடத்துமென அவர் அறிவித்திருக்கிறார். சர்வதேச நியதிகளை சிரியா அரசாங்கம் மீறிவிட்டதாக உண்மையை தலைகீழாக்கி குற்றஞ்சாட்டி, தண்டனை என்ற பெயரில், இந்த ஆக்கிரமிப்பை அமெரிக்காவின் தலைவர் நியாயப்படுத்துகிறார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கு ஆசியாவில் உள்ள நிலைமையை வேண்டுமென்றே தீவிரப்படுத்திவருகிறது. மேற்காசியாவிலும், உலகம் முழுவதிலும் அமைதியையும், பாதுகாப்பையும் அச்சுறுத்துவதற்கு அமெரிக்காதான் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

சிரியாவைக் கைப்பற்றுவதை, இரானைக் கைப்பற்றுவதற்கும், தெற்காசியாவில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும் ஒரு முதல் படியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் பார்க்கிறது. இது, ஆசியா மீதும் மொத்த உலகத்திலும் எவ்வித எதிர்ப்புமற்றதாக தன்னுடைய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ள அமெரிக்காவின் ஒருங்கிணைந்த திட்டமாகும்.

இரண்டாண்டுகளாக, அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதனுடைய கூட்டாளிகளான பிரிட்டன், பிரான்சு, துருக்கி மற்றும் சவுதி அரேபிய அரசாங்கங்கள் பல்வேறு கிளர்ச்சி கும்பல்களுக்கு ஆயுதங்களும், நிதியுதவியும் அளித்து வந்திருக்கின்றனர். முன்னர் ஆப்கானிஸ்தான், இராக் மற்றும் லிபியாவில் செய்தது போல, சிரியாவில் குழப்பத்தையும் வன்முறையையும் பரப்பி, குறுங்குழுவாத அடிப்படையில் பிளவுபடுத்தி அசாத் அரசாங்கத்தைத் தூக்கியெறிந்து விட்டு ஆட்சி மாற்றத்தை உருவாக்குவது அவர்களுடைய நோக்கமாகும். சிரியா மீது ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்துள்ள பொருளாதாரத் தடைகள், சிரியா மக்களுக்கு மிகப் பெரிய இடற்பாடுகளை உருவாக்கியிருக்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் மற்றும் அதனுடைய கூட்டாளிகளுடைய கனவுகளை பொய்ப்பிக்கும் வகையில், சிரியா அரசாங்கமானது இத் தடைகள் காரணமாக வீழ்ந்து விடவில்லை.

இப்படிப்பட்டதொரு சூழ்நிலையில், சிரியா அரசாங்கத்திடம் வேதியல் ஆயுதங்கள் நிறைய இருப்பதாகவும், அது அவற்றை கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தக் கூடும் என்பதால், சிரிய அரசாங்கத்தைத் தூக்கியெறிய வேண்டுமென அமெரிக்க ஏகாதிபத்தியம் பரப்புரை செய்யத் துவங்கியது. இறுதியில் ஆகஸ்டு 21 அன்று சிரிய அரசாங்கம் வேதியல் ஆயுதங்களை மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தியதாக அது அறிவித்திருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் வேதியல், அணுவியல், உயிரியல் மற்றும் பிற கொடூரமான ஆயுதங்களை தங்களுடைய எதிரிகள் மீது பயன்படுத்தியிருப்பது பற்றி நீண்ட, பயங்கரமான பதிவுகள் உள்ளன என்பதை அனைவரும் நன்கு அறிவோம். அணு ஆயுதங்களை முதலாவதாக பயன்படுத்திய நாடும், பயன்படுத்திய ஒரே நாடும் அமெரிக்காதான். அது இரண்டாம் உலகப் போரின் முடிவில், அணுகுண்டின் மூலம் இலட்சக்கணக்கான சப்பானிய மக்களை ஒரேயடியில் கொன்று குவித்தது. வியட்நாம் போரின் போது அமெரிக்கா, நேபாலம், பயங்கரமான ‘ஏஜன்ட் ஆரஞ்சு’ போன்ற வேதியல் ஆயுதங்களைப் பயன்படுத்தியது. அதன் காரணமாக எண்ணெற்ற கொடுமையான மரணங்களும், தீக்காயங்களும் வியத்நாமிய மக்களுக்கும், கம்போடிய மக்களுக்கும் ஏற்பட்டது. இரான்-இராக் போரின் போது, இரானுக்கு எதிராகவும், இராக்கிலுள்ள குர்தேஷ் மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்துவதற்காக வேதியல் ஆயுதங்களை அமெரிக்கா சதாம் உசேனுக்கு கொடுத்தனர். இன்றும் இந்தக் கொடூரமான ஆயுதங்களின் உலகிலேயே மிகப் பெரிய குவியலை அமெரிக்கா வைத்திருக்கிறது. இஸ்ரேல் உட்பட அவர்களுடைய எல்லா கூட்டாளிகளும் இப்படிப்பட்ட ஆயுதங்களைப் பெரிய அளவில் குவித்து வைத்திருக்கிறார்கள்.

கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும், அதனுடைய கூட்டாளிகளும் வேதியல் ஆயுதங்களைக் கொடுத்து வருகிறார்களென இதுவரை கிடைத்துள்ள சான்றுகள் கூறுகின்றன. வேதியல் ஆயுதங்கள் சிரியா அரசாங்கத்திடம் இல்லை என்பதையும், அது மக்கள் மீது அதைப் பயன்படுத்த வில்லை என்பதையும், ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வுக் குழுக்களே வந்து உறுதி செய்து கொள்ளலாமென சிரிய அரசாங்கம் அழைப்பு விடுத்திருக்கிறது. இதற்கு முன்னர் ஆய்வு நடத்திய ஐக்கிய நாடுகள் ஆயுத ஆய்வுக் குழு, கிளர்ச்சியாளர்கள் வேதியல் ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கலாம் எனவும், சிரியா அரசாங்கம் பயன்படுத்தவில்லை எனவும் தெளிவான முடிவுக்கு வந்திருந்தனர். இப்போதுங்கூட களத்திலிருந்து வரும் அறிக்கைகள் இதையே சுட்டிக் காட்டுகின்றன. ஒரு ஐக்கிய நாடுகள் ஆய்வுக் குழு சிரியாவிலிருந்து அண்மையில் தான் திரும்பி வந்திருக்கிறது. அதனுடைய முடிவுகள் ஒரு சில வாரங்கள் கழித்தே தெரியவரும். சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் வேதியல் ஆயுதங்களை வைத்திருப்பது குறித்தும், அவற்றை அவர்கள் பயன்படுத்தி வருவது குறித்தும் இரசியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு குழுவிற்கு ஒரு அறிக்கையை அளித்திருக்கிறது. சிரியாவில் உள்ள பிரச்சனைக்கு ஒரு தீர்வாக போரைப் பயன்படுத்துவதை ஐ.நா பொதுச் செயலாளரும் எதிர்த்திருக்கிறார். இவையனைத்தையும் புறக்கணித்துவிட்டு, அமெரிக்காவின் தலைவர் ஒபாமா, சிரியா அரசாங்கம் “குற்றவாளி” யென்பதற்கு அமெரிக்காவிடம் “ஆதாரம்” இருப்பதாகவும், சிரியா “தண்டிக்கப்பட” வேண்டுமெனவும் அறிவித்திருக்கிறார்.

“சனநாயகத்தைப் பாதுகாப்பது”, “மனித உரிமைகள்”, “பயங்கரவாதத்தை எதிர்த்துப் போர்”, “மனிதாபிமான உதவி” ஆகிய முழக்கங்களுக்குப் பின்னால், தன்னுடைய மேலாதிக்கத்திற்கு எதிராக உலகில் எந்த மூலையிலும் எதிர்ப்பு எழுந்தாலும் அதை நசுக்கும் இரத்தவெறி கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கம் இருக்கிறதென கடந்த இருபதாண்டுகளின் அனுபவம் காட்டுகிறது.

அமெரிக்கப் பொருளாதாரமானது, மிகவும் இராணுவமயப்படுத்தப்பட்ட ஒரு பொருளாதாரமாகும். அமெரிக்காவிலுள்ள இராணுவ தொழில் வளாகம்தான் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையைத் தீர்மானிக்கிறது. சர்வதேச வாணிகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைப் பாதுகாக்க தன்னுடைய இராணுவ பலத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் பயன்படுத்துகிறது. டாலருடைய ஆதிக்கம் அமெரிக்காவினுடைய போர்ச் செலவுகளுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் பின்பற்றிவரும் பாதையானது, தவிற்கவியலாமல் இன்றுள்ள பெரிய ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையிலுள்ள முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி வருகிறது. மேலும், உலகை மறு பங்கீடு செய்வதற்கான போரையும் அது கூர்மைப்படுத்தி வருகிறது.

ஐநா பாதுகாப்புக் குழுவின் ஒப்புதலுக்குக்கூட காத்திருக்காமல், சிரியாவுக்கு எதிராக போர் தொடுப்பது பற்றிய தன்னுடைய முடிவை ஒபாமா அறிவித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், பின்னணியில் பல்லாயிரக்கணக்கான போர் எதிர்ப்பு ஆர்பாட்டக்காரர்கள் சிரியாவுக்கு எதிராக எந்தப் போர் நடத்துவதையும் அமெரிக்க மக்கள் கடுமையாக எதிர்ப்பதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். போருக்கு எதிராக மிகவும் சக்திவாய்ந்த ஆர்பாட்டங்கள் பல அரபு நாடுகளிலும், துருக்கியிலும் நடைபெற்றிருக்கின்றன. இன்னொரு ஏகாதிபத்திய போருக்கு எதிராக இங்கிலாந்தில் எதிர்ப்பு கடுமையாக இருந்த காரணத்தால் கேமரூன் அரசாங்கம் பாராளுமன்றத்தில் இது பற்றி வாக்கெடுப்பு நடத்த கட்டாயப்படுத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. ரசியாவும், சீனாவும் போருக்கும், சிரியாவில் வன்முறை மூலம் ஆட்சி மாற்றத்திற்கும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பகற்கொள்ளைகளிலிருந்து இந்தியா பாதுகாப்பாக இருப்பதாக எந்த மாயையிலும் நாம் இருக்க முடியாது. சிரியா மற்றும் பிற நாடுகளின் மீது அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக நாம் மிகவும் சக்திவாய்ந்த முறையில் குரலெழுப்ப வேண்டும். நாம் ஒற்றுமையோடு, அமெரிக்காவின் சிரியா ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐநா பாதுகாப்புக் குழு, அணிசாரா நாடுகளின் இயக்கம் உட்பட சர்வதேச அரங்கங்களில் ஒரு உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளுமாறு நமது அரசாங்கத்தை நாம் கட்டாயப்படுத்துவோம். மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக, அமெரிக்கா தான் கண்டிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்.

சிரியா மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் எதிராக குற்றவியலான அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திவரும் ஆத்திரமூட்டும் செயல்களுக்காக அதை இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சிரியாவுக்கு எதிரான இந்த ஏகாதிபத்திய போரை நமது நாட்டுத் தொழிலாளி வர்க்கமும், மக்களும், அமைதியையும் நீதியை விரும்பும் சக்திகளும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டுமென குரலெழுப்புகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் தடுத்து நிறுத்துவோம்!

சிரியாவின் தேசிய இறையாண்மையைப் பாதுகாக்க ஒன்றுபடுவோம்!

நாடுகளுக்கு இடையிலான உறவில் வன்முறையைப் பயன்படுத்தாதே!

அமெரிக்க ஏகாதிபத்தியமே, சிரியா மீது கை வைக்காதே!

Pin It