திருச்சிராப்பள்ளியில் ”அஞ்சாதே, போராடு!” மாநாடு

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திருச்சிராப்பள்ளியில் சென்ற பிப்ரவரி 23ஆம் நாள் மக்களதிகாரம் சார்பில் நடைபெற்ற "அஞ்சாதே போராடு" மாநாட்டில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கோபால கௌடா, தோழர்கள் பெங்களூர் பாலன், ஜவகர்லால் நேரு பல்கலை மாணவர் பாலாஜி, இயக்குநர் லெனின் பாரதி, காளியப்பன், சி. ராஜு ஆகியோருடன் த தே வி இ சார்பில் தோழர் தியாகு கலந்து கொண்டு பேசினார். தாகிர் சதுக்கத்தின் அரபு வசந்தம் போல், ஜல்லிக்கட்டுக்கு மெரினா வசந்தம் போல், இந்தியா முழுவதும் ஷாஹின் பாக்குகள் என வர்ணித்தார். ம.க.இ.க. கோவன் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.

தமிழ்க் குடியுரிமைப் பரப்புரை

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ”வேண்டும் தமிழ்க் குடியுரிமை!” என்ற கோரிக்கை முழக்கத்துடன் இரண்டாம் கட்டப் பரப்புரை 01.03. 2020 ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை சைதாப்பேட்டையில் செட்டித் தோட்டம் பகுதியில் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தோழர் தியாகு தலைமையில் தோழர்கள் தமிழ்க் கதிர், நிலவொளி, திலீபன், பொழிலன், மகிழன் ஆகியோர் கலந்து கொண்டனர். இசுலாமியர்கள் கணிசமாக உள்ள பகுதி என்பதால் மிகுந்த ஆர்வத்தோடு நம்மை வரவேற்று அவர்களே நமக்கு வழிகாட்டி நம்மோடு இணைந்து பரப்புரை செய்தனர். நம்மை விருந்தோம்பியும் ஆதரவு தெரிவித்தனர். தமிழ்நாட்டுக் குடியுரிமை பெறும் வரை நமது பரப்புரைப் பயணம் தொடரும். 

தொழிலாளர் போராட்டம்

கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்ட்த்துக்கு எதிராக சென்னை அயனாவரத்தில் ஐந்து தொழிலாளர்கள் 26.02.2020இல் தொடங்கிய கால வரையற்ற பட்டினிப் போராட்டத்தைத் தோழர் தியாகு வாழ்த்திப் பேசினார். குடியுரிமைக்கான போராட்டத்தில் தொழிலாளர்கள் முன்ன்னுக்கு நிற்க வேண்டிய தேவையை அவர் வலியுறுத்தினார்.

தில்லியில் இசுலாமியருக்கு எதிரான கலவரம்! இந்து பாசிச பயங்கரம்!

இந்தத் தலைப்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே சென்ற மார்ச்சு 3ஆம் நாள் மாலை பல்வேறு இயக்கங்களின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர் தியாகு உரையாற்றினார். தாழ்த்தப்பட்டோர் போராடுவதைப் பொதுவாக சாதி இந்து மனநிலை ஒத்துக்கொள்வதில்லை. அல்லவா, அதே போல் முஸ்லிம்கள் போராடுவதை இந்துத்துவ ஆற்றல்களால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. இது புதிவகை மனுநீதி என்றார்.

’ஷாகின் பாக்’ போராட்ட அமர்வுகளில் நமது குரல்

மதுரை மகபூப்பாளையத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த ஷாகின் பாக் போராட்ட அமர்வின் 21ஆம் நாளில் மார்ச்சு 5ஆம் நாள் இரவு தோழர் தியாகு வாழ்த்திப் பேசினார். ஏழு மாதமாகச் சிறை வைக்கப்பட்டுள்ள காசுமீரத்து மக்களை ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் மறந்து விட்டன. உயிரை உருக்கி ஆசாதி முழக்கமிடும் அம்மக்களை இந்தப் போராட்டக் களத்திலிருந்து வணங்குவோம் என்றார்.

மார்ச்சு 7ஆம் நாள் மாலை ஈரோட்டில் ஷாகின் பாக் போராட்ட அமர்வில் தோழர் தியாகு உரையாற்றினார். தமிழ்க் குடியுரிமை வேண்டும் என்ற ததேவிஇ நிலைபாட்டை விளக்கியதோடு, தமிழ்நாட்டுக்கு சட்டமியற்ற நீ யார்? என்ற தந்தை பெரியாரின் கேள்வியை மீட்டுயிர்க்க வேண்டிய தேவை எழுந்திருப்பதாகவும் சொன்னார்.

மார்ச்சு 12ஆம் நாள் மாலை குடந்தை நகரிலும் இரவு கூத்தாநல்லூரிலும் ஷாகின் பாக் அமர்வுகளில் தோழர் தியாகு பேசுகையில் கொரோனா கிருமித்தொற்று பரவி வருவதை முதன்முதலாக எடுத்துக்காட்டினார். இந்தியத் தலைமை அமைச்சர் கொரோனா குறித்து விடுத்திருக்கும் அறிவுரைகளை எடுத்துக்காட்டி, அரசுக்கு மக்களின் முழு ஒத்துழைப்பு தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றைக் கைவிடும்படி அல்லது ஆறு மாதம் பிற்போடுமாறு கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டால் போராட்டத்தையும் ஒத்தி வைக்கலாம் என்றார்.

சாதியும் நீதியும்

பவானி அருகே குருப்பநாயக்கம்பாளையத்தைச் சேர்ந்த இளமதி, கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்வன் ஆகிய இருவரும் 09/03/2020 காலை சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே காவலாண்டியூர் பெரியார் படிப்பகத்தில் திராவிடர் விடுதலைக்கழகத் தோழர் ஈசுவரன் தலைமையில் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இளமதியின் தந்தையும் வன்னிய சாதி வெறியர்களும் சாதிமறுப்புத் திருமணத்துக்குப் பகையான அமைப்பினரும் (பாமக மற்றும் கொங்கு வேளாளர் கட்சியினர்) கொடிகட்டிய வண்டியில் வந்து நள்ளிரவில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஈசுவரனும் செல்வனும் கடுங்காயமுற்றனர். செல்வியை சாதி வெறியர்கள் கடத்திப் போய் விட்டனர். வன்முறை வெறியாட்டம் ஆடிய சாதிவெறிக் கும்பலை எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் தளைப்படுத்திச் சிறையிலடைக்கக் கோரியும், மணமகளை மீட்டு மணமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் சாதியாணவக் குற்றங்களுக்கு எதிராகத் தனிச் சட்டம் கோரியும் மார்ச்சு 11ஆம் நாள் மாலை சென்னையில் பெரியார் சிலையருகே திராவிடர் விடுதலைக் கழகம் தோழர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டத்தில் ததேவிஇ-யும் கலந்து கொண்டது. தோழர் தியாகு கண்டன உரை ஆற்றினார். (பின்குறிப்பு: செல்வியைக் கடத்திய கும்பல் அவரைக் கொண்டே கொளத்துர் மணி, ஈசுவரன் உள்ளிட்ட தோழர்கள் மீது கடத்தல் முறையீடு செய்து காவல்துறை வழக்கும் பதிந்து விட்டது, )

உடுமலை சங்கர் நினைவேந்தல்

சாதி மறுத்துக் காதல் மணம் புரிந்து கொண்டதால் நட்டநடுத் தெருவில் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட உடுமலை சங்கரின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடைபெற்றது, ததேவிஇ சார்பில் தோழர்கள் சுதா காந்தியும் தமிழ்க்கதிரும் நினைவுரை வழங்கினர். ஆணவக் குற்றங்களுக்கு எதிராகத் தனிச் சட்டம், சாதி மீறி மணந்து கொண்டவர்களுக்குப் பாதுகாப்பு, அவர்களின் வழித் தோன்றல்களுக்குத் தனி இட ஒதுக்கீடு ஆகிய கோரிக்கை முழக்கங்கள் எழுப்ப்ப்பட்டன. இறுதியில் அனைவரும் நினைவுச் சுடரேந்தினர். சங்கர், இளவரசன் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Pin It