கொரோனாக் காலத்தில் தூய்மைப் பணியாளர்களுக்குத் தலைமையமைச்சர் பாத பூஜை செய்கிறார். செய்யட்டும். அவர்களை அமைச்சர்கள் வணங்குகிறார்கள். வணங்கட்டும். ஆனால் இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் அவரவர் வீட்டுக்குள் அழைத்து சென்று அமர வைத்து மனிதர்களாக மதியுங்கள். தூய்மைப் பணியாளர்கள் எனப்படும் துப்புரவுப் பணியாளர்கள் காலம் காலமாய்க் கண்டுகொள்ளப்படாத மக்களாகவே இருந்து வருகிறார்கள். சமூகநீதியின் வெளிச்சம் முதலில் யார் மீதாவது படர வேண்டும் என்றால் அது தூய்மைப் பணியாளர்கள் மீதுதான் எனலாம்.

காலம் காலமாக மனிதர்களின் கழிவுகளை அகற்றுவது கழிப்பிடங்களைத் தூய்மைப்படுத்துவது, குப்பைகள் அகற்றுவது, பேரிடர் காலத்தில் உயிரைப் பணயம் வைத்து உழைப்பது, மலக்குழி மரணம், நச்சுவாயு மரணம் என வேதனைகள் மட்டுமே வாழ்வாகிப் போனது அவர்களுக்கே! ஆண் பெண் இருசாராரும் கண்ணியமற்ற முறையில் நடத்தப் படுகின்றார்கள். மனித உரிமை மீறல்கள் நிகழாத நாளில்லை. பெண்களுக்கு மிகக்குறைந்த ஊதியமே தரப்படுகிறது. பேரிடர் காலப் பணிகளிலும்  திருவிழா நாள் பணிகளிலும் ஓய்வறியா உழைப்பு நல்குகிறார்கள். சென்னைப் பெருவெள்ளத்தின் போது தமிழகம் முழுவதிலிருந்தும் தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு 50 ஆயிரம் டன்னுக்கு மேல் குப்பைகள் அகற்றப்பட்டன. அவர்களுக்கு மழைக் காலக் கவசம், காலணி, கையுறை, மருத்துவக் கவனிப்பு, அதிக ஊதியம் எதுவும் கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இன்றளவும், மலக்குழிகளையோ, தொழிற்சாலைகளில் உள்ள மிகப்பெரிய கழிவுநீர்த் தொட்டிகளையோ சுத்தம் செய்ய அழைக்கப்பட்டு , விஷ வாயு தாக்கி மரணித்தவர்கள் எண்ணிக்கை அதிகம். இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிவரங்கள் அரசிடம் உள்ளனவா? என்பதே கேள்விக்குறிதான்..சமூகத்தின் கடைக்கோடி மக்களின் தொழிலுக்கும் சாதியத்திற்குமான தொடர்புகள் சொல்லித் தெரிய வேண்டியவை அல்ல.

ஜனநாயக சக்திகளும் மனித உரிமை ஆர்வலர்களும் இந்த மக்கள் நிலைமையைக் கவனிக்க வேண்டிய நேரம் இது.  வெள்ளையர் காலத்திற்குப் பிறகு, கழிவுநீர் சுழற்சி மையங்கள் பெரும்பாலும் அதிகரிக்கப்படவில்லை. கிராமப்புறங்களிலோ கழிவுநீர் மேலாண்மை தொடங்கப்படவே இல்லை. கிராமப்புறத் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவே இல்லை.

இது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் பரிந்துரைகளும் ஏட்டளவிலேயே உள்ளன. அவற்றைக் கிடப்பில் போடாமல் உடனே செயலாக்க வேண்டும். இதற்காகத் தமிழக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் , மனிதவுரிமை ஆர்வலர்கள் களமிறங்க வேண்டும்.

1993ஆம் ஆண்டு கையால் மலம் அள்ளுவோரை வேலைக்கு அமர்த்துதல் மற்றும் உலர் கழிவறை கட்டுதல் (தடுப்பு) சட்டம் (The Employment of  Manual Scavengers and Construction of Dry Latrines (prohibition) Act -1993)  நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி தூய்மைப் பணியாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும். மறுவாழ்வு அளிப்பதற்கு தொழிலாளர் மற்றும் அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர் பட்டியல் எடுக்க வேண்டும். ஒரு தடவை பண உதவித் தொகை வழங்குவதோடு, அவருக்கு இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும்.

அவரது குடும்ப உறுப்பினர்களில் வயது வந்தவர்களுக்கு வாழ்வாதாரத் திறன் வளர்ப்புப் பயிற்சியும், கற்றல் உதவித் தொகையும் வழங்க வேண்டும். மேலும் இன்றளவும் பாதாள சாக்கடை மரணங்களில் இறந்தவர்கள் குடும்பத்திற்குப் 10 இலட்சம் அல்லது இன்றைய ரூபாய் மதிப்பிற்குக் கூடுதல் தொகை வழங்க வேண்டும்.

தொடர்வண்டித் துறையில் தூய்மைப் பணியாளர்களின் பணி என்பது இன்றளவும் முறைப்படுத்தப்படவில்லை. மேலை நாடுகளில் இருப்பது போல் தொடர்வண்டிக் கழிப்பறை நவீனத் தொழில்நுட்பத்துடன் இருக்க வேண்டும். ஓய்வுபெற்ற தொடர்வண்டித் தூய்மைப் பணியாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும். அவர்களின் வாரிசுகளுக்கு அரசுத் துறைகளில் தகுதியான வேலைகள் கொடுக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் என்பது தூய்மைப் பணியாளர்களின் வாழ்வுரிமைக்காகவும் அவர்களின் மேம்பாட்டிற்காகவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். ஒன்றிய அரசின் சமூகநீதித் துறை இதற்குத் தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கைக்கேற்ப நிதி ஒதுக்க வேண்டும். இதுவரை மனிதக் கழிவு அகற்றும் வேலையில் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களைத் தொடர்ந்து கண்டறிந்து 10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

கழிவுநீர்த் தொட்டிகளிலும் மலத் தொட்டிக்களிலும் நவீன எந்திரங்களைப் புகுத்தி கழிவுகளை அகற்ற வேண்டும்.தமிழகத்தில் உள்ள அறிவியல் தொழில்நுட்பக் கழகங்களின் உதவியுடன் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு நவீன அறிவியல் தொழில்நுட்பக் கருவிகள் கண்டுபிடிக்க வேண்டும். கழிவுநீர் உறிஞ்சுவதற்கான நவீன ரோபோக்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

இடைக்காலக் கோரிக்கைகளாக, தூய்மைப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் ரூ.25000 வழங்க வேண்டும். பஞ்சப்படி உயர்த்திக் கொடுக்க வேண்டும். ஒப்பந்தப் பணியாளர்களை உள்ளவர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும். பாதுகாப்புக் கவசங்கள் கொடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் மாதம் இருமுறை இலவச மருத்துவ பரிசோதனை செய்து உரிய மருத்துவம் தர வேண்டும். உயர்ந்த பதவியில் அமர்ந்து கொண்டு வேலை வாங்கும் அதிகாரிகளுக்கு அதிக சம்பளம் வாகன வசதி இருப்பது போல், தூய்மைப் பணியாளர்களுக்கும் வசதி செய்து தர வேண்டும். அவர்களின் அடுத்த தலைமுறைக்கு சிறப்பான உண்டு உறைவிடப் பள்ளிகள், கல்லூரிகள் வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளோடு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், ஐநா உடன்படிக்கைகள், மற்ற இயக்கங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தொகுத்து இம்மக்களின் வாழ்வில் மாற்றம் காணப் போராட வேண்டியது சமூகநீதிப் பற்றாளர்களின் கடமையாகும்.  

Pin It