MartaYoung Castroபுரட்சிக்கு முன்:

மார்த்தா ரோஹாஸ் 1931ஆம் ஆண்டு மே 17ல் கியூபாவில் உள்ள சாண்டியாகோவில் பிறந்தார். அவர் தந்தை தையல் வேலை செய்து வந்தார். தாயார் ஓர் ஆடை வடிவமைப்பாளர். மார்த்தாவின் பாட்டி ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்தவர், தாத்தா மானுவல் ரோட்ரிக்ஸ் ஸ்பானிய இனத்தைச் சேர்ந்தவர்.

மார்த்தா சிறுமியாக இருக்கும் போது மருத்துவராக வேண்டும் என்ற விருப்பத்தால் பொம்மைகளுக்கும், பல்லிகளுக்கும் அறுவை சிகிச்சை செய்து பார்த்துள்ளார்.

மார்த்தா நூலகத்திலிருந்து உடற்கூறியல் குறித்த நூல்களை முடிந்த அளவிற்கு எடுத்து வந்து வீட்டில் அமர்ந்து அனைத்தையும் மனப்பாடம் செய்ததாகவும், உடலின் மர்மத்தைப் புரிந்து கொண்டு அதன் ரகசியங்களை வெளிக்கொணர விரும்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பிறகு ஹவானா ​​பல்கலைக் கழகத்தில் மாணவராக இருக்கும் போது மருத்துவர் ஆவதற்கான இயல்பான விருப்பமும், அந்த அறிவியல் படிப்பை முடிப்பதற்கான ஆர்வமும் தனக்கு இல்லாததை அறிந்து கொண்டார். எழுதுவதை மிகவும் நேசித்ததாலும் புத்தகங்கள், கதைகள் அவற்றின் மர்மங்களை வெளிக்கொணரும் ஆர்வம் மேலிட்டதாலும் மருத்துவர் ஆவதற்கு பதில் தான் ஒரு பத்திரிகையாளர் ஆனதாக மார்த்தா கூறியுள்ளார்.

மார்த்தா தன் வாசிப்பை பால்சாக்கிடமிருந்து தொடங்கினார், பிறகு ஹென்றி பார்பவுஸ், கர்சியோ மலபார்டே ஆகியோரின் படைப்புகளையும் டான் குயிக்சோட்டையும் வாசித்துள்ளார். அவர் இப்போதும் ஓரிரு வருடங்களுக்கு ஒரு முறை டான் குயிக்சோட்டை வாசித்து வருவதாக கூறுகிறார்.

மார்த்தா ஹவானா பல்கலைக் கழகத்தில் இதழியல் துறையில் படித்துப் பட்டம் பெற்றார். அவர் ஒரு மாணவராகத் தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பில் (சேனல் 4) உள்ளுறைப் பயிற்சி பெற்றிருந்தார்.

புரட்சியில்:

ஒரு கல்லூரிப் பட்டதாரியாக, தொலைக்காட்சி நிருபராக வேண்டும் என்ற இலக்குடன், மார்த்தா விடுமுறைகளைக் கழிக்க தனது சொந்த நகரமான சாண்டியாகோவுக்குச் சென்றார். போஹேமியா பத்திரிகையின் புகைப்படக் கலைஞர் பஞ்சிட்டோ கேனோ உள்ளூரில் நடைபெறும் திருவிழா நிகழ்வுகளைச் செய்தியாக்கும் வேலையைச் செய்யுமாறும் அதற்கு 50 பெசோ அளிப்பதாகவும் மார்த்தாவிடம் கேட்டுள்ளார். அதற்கு சம்மதித்தவராய் கேனோவுடன் திருவிழாவுக்குச் சென்றார் மார்த்தா.

அவர்கள் திருவிழாக் கொண்டாட்டத்தின் நடுவில் இருந்த போது, ​​1953 மார்ச் 26 அதிகாலையில் திடீரென வெடிச் சத்தம் கேட்டது. இது என்ன சீனப் பட்டாசா என மார்த்தா கேட்டதற்கு, இல்லை. துப்பாக்கிச் சூடு என்றார் கேனோ. இருவரும் சம்பவ இடத்தை நோக்கி விரைந்தனர். ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் தோழர்கள் மன்கடா ஆயுதப்படைத் தளத்திற்கு எதிரான தாக்குதலில் ஈடுபடுவதைக் கண்டனர்.

கியூப வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த மன்கடா நிகழ்வின் நேரடி சாட்சிகளாக இருந்த மார்த்தாவும், கேனோவும் எந்த ஆதரவும் பாதுகாப்பும் இல்லாமல் தங்களால் இயன்ற இடத்தில் ஒளிந்து கொண்டே தாக்குதலைப் பற்றிய விவரங்களைச் சேகரித்தனர். அந்த இடம் இறந்த உடல்களால் நிறைந்திருந்தது.

அவர்கள் இறந்த மற்றும் காயமடைந்த வீரர்களைப் படம்பிடித்தனர். திருவிழாவைச் செய்தியாக்க சென்ற மார்த்தா இப்படித்தான் சில மணி நேரத்தில் போர் நிருபராக மாறினார். மார்த்தா மன்கடா நிகழ்வுடன் தொடர்புடைய பிற இடங்களான போராளிகளின் பயிற்சி முகாமாக இருந்த சிபோனி பண்ணைக்கும், மருத்துவமனைக்கும் சென்று செய்திகளைச் சேகரித்து அறிக்கையாக்கினார்.

போராளிகள் மீது கொடுங்கோன்மையாளர்கள் செய்த அடக்குமுறையின் புகைப்பட ஆதாரங்களையும் அறிக்கையையும், போஹேமியா பத்திரிகையின் ஆசிரியர் குழுவுக்கு கொண்டு சேர்ப்பதற்காக மார்த்தா விமானத்தில் ஹவானாவுக்குச் சென்றார்.

மன்கடா நிகழ்வுகள் குறித்த எந்தவொரு அறிக்கையையும் வெளியிடக் கூடாது எனத் தடைசெய்து அரசாணை பிறப்பிக்கப் பட்டிருந்ததால் அது தணிக்கை செய்யப்பட்டது. போஹேமியா இதழ் மார்த்தாவுக்கு ஒரு வேலையை வழங்கியது.

மார்த்தா மன்கடா தாக்குதலைப் பின் தொடர்ந்த நிகழ்வுகளை விட்ட இடத்திலிருந்து தொடர்வதற்காக உடனே சாண்டியாகோவுக்குத் திரும்பிச் சென்றார். அது குறித்த எந்த விவரத்தையும் தவற விடக் கூடாது என்பதற்காக செப்டம்பரிலிருந்து செய்வதாக இருந்த சேனல் 2 தொலைக்காட்சி நிருபர் வேலையை நிராகரித்தார்.

“ரோஹாஸ், உங்கள் மகள் அங்கே நேரத்தை வீணடிக்கிறாள்; அது எதுவும் வெளியிடப்படப் போவதில்லை. தொலைக்காட்சியில் பணிபுரியும் வாய்ப்பை அவள் இழக்கப் போகிறாள்?” என்று ஒரு நிருபர் மார்த்தாவின் தந்தையை எச்சரித்தார். மார்த்தாவின் நல்வாழ்வு பாதிக்கப்படுமோ எனத் தந்தை ரோஹாஸ் அச்சமடைந்தார். செப்டம்பர், அக்டோபர் என நாட்கள் கடந்தன, மார்த்தாவின் அறிக்கைகளும் நீண்டன.

ஃபிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட பலர் ஃபாத்திஸ்டா அரசால் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர், மார்த்தா நீதிமன்றம் சென்று ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு எதிரான வழக்கு விசாரணையை (வழக்கு எண் 37) நேரில் கண்டு குறிப்புகள் எடுத்தார். வழக்கு எண் 37இன் அமர்வுகளுக்குச் செல்வதை மார்த்தா ஒரு நாளும் நிறுத்தவில்லை.

“நீங்கள் குறிப்புகள் எடுப்பதை நான் கண்டேன். அவர்கள் அதை வெளியிடப் போவதில்லை” -- ஒரு நாள் விசாரணையின் போது ஃபிடல் மார்த்தாவிடம் பேசிய முதல் வார்த்தைகள் இவை. "அது ஒரு விஷயமே இல்லை, நான் அதைப் பாதுகாப்பாக வைத்திருப்பேன்," என மார்த்தா அவருக்கு உறுதியளித்தார்.

காஸ்ட்ரோவின் ”வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்ற புகழ்பெற்ற நான்கு மணி நேர நீண்ட உரையை நேரில் கண்டு குறிப்புகளை எடுத்துக் கொண்டார். மன்கடா தாக்குதல், வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து உண்மைத் தகவல்களையும் குறிப்பெடுத்து அறிக்கைகளாகத் தொகுத்துத் தட்டச்சு செய்து பாதுகாப்பாக வைத்திருந்தார்.

புரட்சியின் வெற்றிக்கு பின்னர், 1960இல், மார்த்தாவின் அறிக்கைகள் ’மன்கடா: ஒரு அசாதாரண விசாரணை’ என்ற நூலாக்கப்பட்டு முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. “எனது அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று மட்டுமே நான் விரும்பினேன். இது ஒரு புத்தகமாக மாறும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. முதலில் ஒரு இதழியளாராக இதைச் செய்ய வேண்டும் என்ற உந்துதலிலே ஆரம்பித்தேன். பின்னர் எழுதும் போது, ​​ மக்கள் மீதான பரிவு மேலிட்டதால், இறுதியாக அரசியல் வழியில் ஈடுபட்டேன்” என மார்த்தா குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையின் போது ஃபிடல் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற நிலையிலிருந்து குற்றம் சாட்டுபவராக ஃபாத்திஸ்டாவின் கொடுங்கோலாட்சியைக் கூண்டிலேற்றியதையே தனக்கு மிகவும் நெகிழ்வூட்டிய தருணமாக மார்த்தா குறிப்பிடுகிறார்.

”நீங்கள்தான் இந்தத் தாக்குதலுக்கு சூத்திரதாரியா?” என ஃபிடலிடம் கேட்கப்பட்ட போது: "மன்கடாவின் அறிவுசார் தலைவர் என்று குற்றம் சாட்டப்படுவதைப் பற்றி இங்கு யாரும் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் மன்கடாவின் ஒரே அறிவுசார் தலைவர் ஹொசே மார்த்தி மட்டுமே என்று ஃபிடல் பதிலளித்ததே விசாரணையில் தன்னை மிகவும் கவர்ந்த விசயம் என மார்த்தா குறிப்பிட்டுள்ளார்"

1953இல் ஃபிடல் மீது விசாரணை தொடங்குவதற்கு முன்பு, மன்கடா தாக்குதல் ஒரு தோல்வி என்பதே புரட்சி ஆதராவாளர்கள் உட்பட அனைவரின் பொதுவான உணர்வாக இருந்தது. ஆனால் ஒரு பின்னடைவை ஃபிடல் வெற்றியாக மாற்றினார். பல நேரங்களில் ஃபிடல் அதைச் செய்துள்ளார், பின்னடைவை வெற்றியாக மாற்றும் ஃபிடலின் ஆற்றலே ஒரு தலைவராக அவரது திறன்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார் மார்த்தா.

புரட்சிக்குப் பின்:

கியூபப் புரட்சியின் வெற்றியின் போது அவர் ரெவிஸ்டா போஹேமியா பத்திரிக்கையில் பணியாற்றி வந்தார், அதன் பிறகு ‘புரட்சி’ என்ற செய்தித் தாளுக்கான பத்திரிகையாளர்கள் குழுவில் சேர்ந்தார்.

வெர்டே ஒலிவோ, டிராபஜோ ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றினார். கிரன்மா (1965) செய்தித் தாளின் நிறுவனர்களில் ஒருவராக, அதில் நெடுங்காலம் பணியாற்றி வந்தார். கிரான்மா பத்திரிகையின் தகவல், செய்தி அறை மற்றும் கலாசாரப் பக்கத்தின் தலைவராகச் செயல்பட்டார். சமூகத் தொடர்புக்கான இணைப் பேராசிரியராகவும் செயல்பட்டார்.

பல தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளைச் செய்தியாக்கி அறிக்கைகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்துள்ளார். ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவிலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் மேற்கொண்ட பயண நிகழ்வுகள் குறித்த முக்கியமான விசயங்களைச் செய்தியாக்கிய பெருமை மார்த்தாவை சேரும். அவர் தெற்கு வியட்நாம் மற்றும் கம்போடியாவில் முதல் கியூப மற்றும் லத்தீன் அமெரிக்கப் போர் நிருபராக (1965-1975) பணியாற்றியுள்ளார்.

அமெரிக்கப் போரின் போது வீரமிக்க வியட்நாமை உலக மக்களுக்கு அறியச் செய்த மூன்று சர்வதேசப் பத்திரிக்கையாளர்களில் மார்த்தாவும் ஒருவர்.

தனது அறிக்கைகள் மூலம், ஹோ சி - மினையும், வியட்நாமிய மக்களையும் கியூபாவிற்கும், பிற லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் பரிச்சயப்படுத்தினார். ஸ்பானிஷ், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் வெளியிடப்பட்ட கிரன்மாவுக்கான மார்த்தாவின் அறிக்கைகள் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தன.

1969ஆம் ஆண்டு வியட்நாம் அதிபர் ஹோ சி-மின் மரணிப்பதற்கு முன் கடைசியாக அவரைப் பேட்டி கண்ட சர்வதேசப் பத்திரிகையாளர்களுள் மார்த்தாவும் ஒருவர்.

1969 ஜூலையில் மார்த்தா அதிபர் ஹோ சி-மின்னைப் பேட்டி கண்டுள்ளார்.

ஹோ மாமாவும் கொடியும்:

மார்த்தா செல்லும் போது ஹனோயின் அந்தச் சிறிய வீட்டில், எல்லாம் அமைதியாக இருந்தது. ​​ஹோ சிமின் ”காலை வணக்கம் தோழர் மார்த்தா” என ஸ்பானிய மொழியில் வரவேற்றார்.

மார்த்தாவின் முதல் பயணத்தின் போது நேரில் சென்று வரவேற்க இயலாததற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார். ஹோ சி-மின் வெண்ணிற சட்டை, கால் சராயும், காலணிகள் இல்லாமல் வெள்ளைப் பருத்திக் காலுறைகளும் அணிந்திருந்தார். ”என்னை அதிபர் என்று அழைக்க வேண்டாம், ஹோ மாமா என்று அழையுங்கள்” என்று மார்த்தாவிடம் கேட்டுக் கொண்டார்.

"நேர்காணல் செய்ய விரும்பிய தன்னை அதிபர் ஹோ சி-மின்னே பேட்டி எடுத்து ஆச்சரியப்படுத்தியதாக மார்த்தா நினைவு கூர்கிறார். டே நின் மாகாணத்தில் மார்த்தாவின் அனுபவங்களைப் பற்றியும் ஃபிடலை பற்றியும் ஹோ கேட்டுள்ளார். மார்த்தா 17வது இணைக்கு (வடக்கு மற்றும் தெற்கு வியட்நாமுக்கு இடையிலான இராணுவ எல்லைக் கோடு) சென்று வந்ததால் அவர் ஒவ்வொரு விவரத்தையும் விசாரித்தார்.

குண்டுகளால் பிளக்கப்பட்ட பள்ளங்களில் மீன் வளர்க்கப்பட்டு ஓரங்களில் பூக்கள் வளர்ந்து, சமீபத்தில் இரசாயனத் தாக்குதல்களுக்கு இலக்கான வின் லின் பகுதியைப் பற்றி மார்த்தாவிடம் கேட்டுள்ளார். பென் ஹை ஆற்றின் கரையில் அமைந்துள்ள வியட்நாம் ஜனநாயகக் குடியரசின் 60 மீட்டர் நீளமுள்ள கொடி எவ்வாறு பறக்கிறது என்றும் ஹோ சி-மின் கேட்டுள்ளார்.

தெற்கே வெயிலடித்தாலும், மழை பெய்தாலும் வியட்நாம் ஜனநாயகக் குடியரசின் கொடி எப்போதும் புதிதாகவே காணப்படுகிறது என்று மார்த்தா பதிலளித்துள்ளார். "ஏனென்றால் வியட்நாமில் உள்ள அனைத்து வர்க்க மக்களுக்காகவும் போராடுவதன் நோக்கம் கொடியை அதன் சரியான இடத்தில் பாதுகாப்பதே. இது வியட்நாமின் சின்னம். நாம் அமெரிக்காவை வெல்வோம். தென் மக்களின் அனைத்து துன்பதுயரங்களும் எனது துன்பதுயரமே" என்று ஹோ கூறியுள்ளார்.

மார்த்தா விடியற்காலையில் 17 இணைக்கு வந்த போது, அங்கிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் வியட்நாம் கொடி அசைவதைக் கண்டார். பின்னர் அங்கிருந்த ஒருவர் அந்தப் பகுதியிலிருந்து காலி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும், ​​கொடிக்கு அருகிலே இருப்பதற்காக ஒரு தங்குமிடம் தோண்டி, தையல் இயந்திரத்துடன் இருந்து வருவதாகவும், எதிரியின் தீயால் கொடி எத்தனை முறை அழிக்கப்பட்டாலும் அத்தனை முறை கொடியை மாற்றுவதற்குப் போதுமான துணி வைத்திருந்தார் என்பதையும் மார்த்தா நினைவு கூர்ந்துள்ளார்.

ஹோ பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஹோ சி-மின் மகத்தான கலாசாரப் பண்புகள் கொண்டவர் என்பதை நான் அறிவேன். அவரது எழுத்துகளையும், கவிதைகளையும் படித்துள்ளேன். ஆனால் அவர் இவ்வளவு எளிமையாகவும் நேசத்துடனும் இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

அந்த நேர்காணலே அவரது ஆளுமையைத் தெரிந்து கொள்ளப் போதுமானதாக இருந்தது. அவருடைய கருத்துகள் மட்டுமல்லாமல், அவற்றை அவர் வெளிப்படுத்திய எளிய முறையும் என் கவனத்தை ஈர்த்தது என நினைவு கூர்ந்துள்ளார்.

ஹோ மாமா கையெழுத்திட்டுத் தனக்கு அளித்த புகைப்படத்தை மார்த்தா பாதுகாப்பாக வைத்திருக்கிறார்.

மார்த்தாவின் படைப்புகள்:

அரசியல் நூல்கள்:

வியட்நாமிலிருந்து வரும் காட்சிகள், தெற்கு வியட்நாம், கியூபா 1992: புரட்சியின் கடினமான ஆண்டு, சே பற்றிய சாட்சியங்கள், மன்கடாவில் நூற்றாண்டு தலைமுறை (1964), தானியா, மறக்க முடியாத கெரில்லா (1971- இணை ஆசிரியர்), வாழ வேண்டியவர் (ஆபெல் சாண்டமரியா பற்றிய சாட்சியங்கள்) வியட்நாமில் போருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை; போஹேமியன் பக்கங்கள், உட்படப் பல நூல்களை வெளியிட்டுள்ளார்.

வரலாற்று புதினங்கள்:

கியூப தேசத்தின் தோற்றம் குறித்தும், 18ஆம் நூற்றாண்டிலிருந்து கியூபாவின் காலனித்துவ வரலாற்றில் கலப்பு இன மக்களின் சமூக வாழ்க்கையையும், கலாசாரங்களின் வரலாறையும், போராட்டங்களையும், இன, வர்க்க சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியதற்காக அவரது வரலாற்று புதினங்கள் லத்தீன் அமெரிக்கா முழுவதும் பாராட்டப்பட்டுள்ளன. கியூப வரலாற்றில் புலம்பெயர்ந்த ஆப்பிரிக்கப் பெண்களின் பங்களிப்பைத் தம் படைப்புகளின் வாயிலாக அறியச் செய்துள்ளார்.

ஸ்பென்சர் அரசரின் ஊஞ்சல், வெள்ளை ஆவணங்கள், சாண்டா லுஜூரியா, ஜுவானா லா லோகாவின் மணிகள், குடும்ப மருத்துவர், மன்கடா சோதனை, பச்சை வகுப்பறை, இறந்தவர்களின் குகை, எல் ஹரோன் டி ஒவியெடோ, இங்க்லெசா போர் அன் ஆகோ என பல்வேறு வரலாற்றுப் புதினங்களை படைத்துள்ளார். சீனாவிலிருந்து கியூபா, பெருவிற்குக் கடத்தப்பட்ட சீனர்களை பற்றி மஞ்சள் பொதி என்ற புதினத்தை எழுதியுள்ளார்.

மார்த்தா ரோஜாஸின் கதைகள்:

உப்புச் சிலைகள் (Estatuas de Sal), இன்றைய கியூபாவின் கதைசொல்லிகள் (Cuentistas cubanas de hoy), ஆஃப்ரோ கியூபா (Afrocuba), ஆப்பிரிக்காவின் புதல்வியர் (Daughters of Africa) ஆகிய நூல் தொகுப்புகளில் இந்தக் கதைகள் வெளியிடப்பட்டன.

ஆசை அறைகள் (1996), பெனிலோப்பின் புன்னகையும் அவரது விடைபெறும் வாடிக்கையும் (1993) என இரண்டு கவிதைத் தொகுப்புகளை மார்த்தா வெளியிட்டுள்ளார்.

விருதுகள்:

மார்த்தாவின் வாழ்க்கைப் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக அவரைச் சிரப்பித்து காசா டி லாஸ் அமெரிக்காஸ் விருது (1978) வழங்கப்பட்டது. ஹொசே மார்த்தி தேசியப் பத்திரிகை விருது (1997), தேசியப் பத்திரிகையாளர் விருது, மெக்ஸிமோ கோமேஸின் மச்சீட்டி விருது, அன்டோனியோ பெர்னாண்டஸ் டி காஸ்ட்ரோ கலாசார விருது (2004), குடியரசின் தொழிலாளர் தேசிய நாயகர் விருது (1999), இளைஞர் தலைவர் விருது (2017), மிரர் டோர்ஸ் விருது (2019). அலெஜோ கார்பென்டியர் புதினப் பரிசு (2006) என பல்வேறு விருதுகளால் மார்த்தா சிறப்பிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அலெஜோ கார்பென்டியர் புதினப் பரிசு வழங்கிய நடுவர் மன்றத்தின் கூற்றுப்படி, சந்தேகத்திற்கு இடமின்றி கியூபாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த படைப்பு (இங்க்லெசா போர் அன் ஆகோ) அதன் தீவிரமான புலனாய்வுப் பணிக்காகவும், அறியாத காலப் பகுதிகளை வெளிச்சம் போடத் துணிந்ததற்காக மட்டுமல்லாமல் அதன் உண்மையான நடைக்காகவும், விறுவிறுப்பான, தத்ரூபமான சம்பவங்களுக்காகவும் பாராட்டப்படும் என்று போற்றப்பட்டது.

அன்கன்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியரும் இலக்கிய ஆராய்ச்சியாளருமான எல்பா பர்மிங்காம்-போகோர்னி கிங் ஸ்பென்சர் அரசரின் ஊஞ்சல் புதினத்தைப் பாராட்டி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

மார்த்தா ரோஹாஸைப் பொறுத்த வரை, அவரது நாவல்கள் கியூபக் காலனித்துவச் சமுதாயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றன, இதில் வர்க்கப் பாகுபாடு, பணக்காரர்களின், பிரபுக்களின் சலுகைகள் பாசாங்குகள் உண்மைத் தன்மையுடன் புனையப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

மிகுவல் டி செர்வாண்டஸ் விருதை வென்ற அலெஜோ கார்பென்டியர் எழுதிய ஒரு புத்தகத்தின் முன்னுரையில், மார்த்தாவை" பத்திரிகை தொழிலுக்கான ஆழ்ந்த அறிவுடன், கூர்மதி கண்களுடன், நேரடியான துல்லியமான பாணியில், பல விஷயங்களை சில வார்த்தைகளில் சொல்லும் சுறுசுறுப்பான திறமையான எழுத்தாளர், ". என வர்ணிக்கிறார்.

லிசாண்ட்ரோ ஓடெரோ "மார்த்தா ரோஹாஸ் ஒரு சிறந்த பத்திரிகையாளருக்கான அடிப்படை நற்பண்புகளைக் கொண்டிருக்கிறார் ... ஆனால் அதற்கும் மேலாக, ஒரு நல்ல கதைசொல்லியின் பண்புகளையும் அவர் பெற்றிருக்கிறார், அந்தக் கதையை அமைதியான பாய்வோடு அரவணைக்கும் தாளத்தோடு எப்படிச் சொல்வது என்று அவருக்குத் தெரியும்” என வர்ணித்துள்ளார்.

மிர்தா யீஸ்: ”மார்த்தா ரோஜாஸுக்கு உணர்வு நயம், கற்பனையை விலக்காது இயல்பான முறையில், பானங்கள், பாடல்கள், உடைகள், உணவுகள் அனைத்தையும் தனது நாவல்களில் எப்படி அளிப்பது என்பது அவருக்குத் தெரியும். மோசமான சலிப்பூட்டும் வரலாற்று நாவல்களை விலக்குமாறு ஒரு விடாமுயற்சியுள்ள புலனாய்வாளராக அன்றாட வாழ்க்கையின் தொனியை அவர் பொறித்தெடுக்கிறார் என பாராட்டியுள்ளார்.

இறந்தவர்களின் குகை, என்ற மார்த்தாவின் வரலாற்று நாவல் இயக்குனர் சாண்டியாகோ அல்வாரெஸால் ஒரு திரைப் படமாக்கப்பட்டுள்ளது.

மார்த்தா கியூப திரைப்படக் கலைத் தொழிலக அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து இயக்குநர்கள் ஜோஸ் மால்டாவ்ஸ்கி மற்றும் கோன்சலோ அரிஜான் குழுவில் இணைந்து பிரெஞ்சுத் தொலைக்காட்சிக்காக ஆவணப் படங்கள் தயாரித்துள்ளார்.

அமெரிக்காவின் நீண்ட சமூகப் பொருளாதாரத் தடைகள் மார்த்தாவை வடக்கு அரைக்கோளத்தின் பத்திரிகை அரங்கிலிருந்து தள்ளி வைத்தது போலவே, இந்த அற்புதமான முன்மாதிரியை வட அமெரிக்கப் பெண்கள் இழக்கும் படியும் தடுத்து விட்டது என முன்னாள் பத்திரிகையாளரும், நியூயார்க் புரூக்ளின் கல்லூரியில் ஆங்கில இணைப் பேராசிரியருமான ரான் ஹோவெல் குறிப்பிட்டுள்ளார்.

தன் நீண்ட நெடும் எழுத்துப் பணியால் வரலாற்றுக்கு வாழ்வளித்து, தன் புதினங்களால் அதற்குப் புத்துயிர் ஊட்டிய மார்த்தா நீடுழி வாழ வாழ்த்துவோம்.

(தொடரும்)

- சமந்தா

Pin It