புதுவிதக் கொரோனா (கொவிட்-19) உலகையே உலுக்கி விட்டது இன்றளவும் உலுக்கிக் கொண்டிருக்கிறது, இந்த நெருக்கடி மாந்தக் குலத்தின் நல்வாழ்வு தொடர்பானது மட்டுமன்று. இந்த நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் நோயாளர்களைப் பேணும் ஏற்பாடுகளும் பொருளியல், அரசியல், பண்பாட்டுத் தளங்களில் கடுமையான சமூகத் தாக்கமும் கொண்டுள்ளன. உடல்நல நெருக்கடியும் சமூக நெருக்கடியும் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை என்பதை மனத்திலிருத்தி, கொரோனாவுக்கு எதிரான போரை இருதளங்களிலும் இணையாக நம்மால் முன்னெடுக்க முடிந்தால் உறுதியாகவும் இறுதியாகவும் வெற்றி பெற முடியும் என நம்புகிறோம். இயற்கை வளமும் மாந்த வளமும் அளப்பரியவை, இவற்றைப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்களால் கணித்து விட முடியாது.
இந்த நெருக்கடியை வென்று மீள்வதற்கான முயற்சிகள் நல்வாழ்வுத் துறை சார்ந்தவையாக இருந்தால் மட்டும் போதாது. சமூகம் சார்ந்தவையாகவும் இருக்க வேண்டும். எனவேதான் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் நல்வாழ்வு சார்ந்த உடனடியான பத்துக் கோரிக்கைகளை முதலில் வெளியிட்டோம். பிறகு பொருளியல் சார்ந்த 13 உடனடிக் கோரிக்கைகளையும் வெளியிட்டோம். உடல் நலமும் பொருளியல் நலமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை என்பதை நினைவிற்கொண்டும், இந்த இடைக்காலத்தில் கிடைத்துள்ள பட்டறிவைக் கருத்திற்கொண்டும் கொரோனா தொடர்பான எம் கோரிக்கைகளை ஈண்டு தொகுத்தளிக்கிறோம்.
கோரிக்கைகள்:
1) பயணக் கட்டுப்பாடுகளும் சமூக விலகலும் பழைய வழிமுறைகளே என்றாலும் உலகெங்கும் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த உதவியுள்ளன என்பதால் இவற்றை உறுதியாகவும் அறிவார்ந்த முறையிலும் தொடர வேண்டும். இவை குறித்த விழிப்புணர்வை வளர்ப்பதற்குக் குண்டாந்தடிகள் அல்லாத நல்ல பல வழிகளையும் அரசுகள் கையாள வேண்டும். இன்றியமையாத் தேவைகள் அனைத்தையும் அரசே மக்களுக்கு நிறைவு செய்வதோடு நேரில் சேர்ப்பிக்கவும் ஆவன செய்ய வேண்டும்.
2) நீண்ட கால நோக்கில் பார்த்தால், மனித வளத்தை முடக்கிப் போட்டு விட்டு கொரோனா எதிர்ப்புப் போரிலோ, கொரோனாவின் சமூகத் தாக்கங்களுக்கு முகங்கொடுத்து வாழ்வதிலோ நம்மால் வெற்றி ஈட்ட முடியாது. நல்வாழ்வுப் பணியில் போலவே சமூகத் துயர்தணிப்புப் பணியிலும் ஆர்வமுள்ளோரை உரிய எச்சரிக்கை கலந்த பாதுகாப்புடன் ஈடுபடுத்த வேண்டும். எதிர்காலத்தில் கிருமித்தொற்றுக்கு ஆளாகாமலும், அதே போது வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமலும் சமூகம் இயங்குவதற்கு இவ்வாறு வழிகாண முடியும் என நம்புகிறோம். முழு அடைப்பைக் கவனமாகத் தளர்த்தி சமூகம் படிப்படியாக இயல்புநிலைக்கு மீள்வதற்கான எதிர்கால முயற்சிகளுக்கு இது ஊக்கமளிக்கும். இப்போதே மக்களுக்குத் தேவையான உதவிகளை உரிய பாதுகாப்புடன் ஒருசில தொண்டர்களைக் கொண்டுசெய்து தர இயலும். தன்னார்வலர்கள் இந்தப் பணியைச் செய்ய அனுமதிக்க வேண்டும். தமிழக அரசே முன்முயற்சி எடுத்துத் தொண்டர் படை போன்ற ஓர் அமைப்பை நிறுவ வேண்டும்.
3) ”வீட்டில் இரு” என்ற அறிவுரை வீடற்றவர்களை நோக்கிச் சொல்லப்படுவது பெரிய முரணகையாக உள்ளது. வீடில்லாதவர்கள், தெருவோரம் வசிப்போர், அலைகுடிகள், புலம்பெயர் தொழிலாளர்கள், பிச்சைக்காரர்கள், ஆதரவற்றோர், கண்பார்வையிழந்தோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளர்கள் ஆகியோரை இந்த நெருக்கடிக் காலத்தில் பேணிக் காக்கும் முழுப் பொறுப்பையும் அரசே மேற்கொள்ள வேண்டும். அவர்கள் தங்குவதற்குரிய காப்பகங்கள் உடனே அமைக்கப்பட வேண்டும். அங்கு அவர்களுக்கு உணவும் நீரும் பிற இன்றியமையாத் தேவைகளும் கிடைக்கச் செய்ய வேண்டும். இப்போதே காப்பகங்களா அல்லது எதிர்காலத்தில் மருத்துவமனைகளா என்ற கேள்விதான் நம்முன்னுள்ளது. அரசுடன் தனியார் அறக்கட்டளைகளும் உடனே இந்தக் காப்பகங்கள் அமைக்க வழிசெய்ய வேண்டும்.
4) நோய்த் தொற்று ஆய்வு பரவலாகச் செய்யப்படாததுதான் நம் புள்ளிவிவரங்கள் நிலைமையின் தீவிரத்தைக் குறைத்துக் காட்டுவதற்குக் காரணம் என்ற குற்றாய்வில் நியாயம் இருப்பதாகக் கருதுகிறோம். நோய் அறிகுறிகளைத் தொடக்கத்திலேயே கண்டறியவும் நோயுற்றவர்களைத் தனிமைப்படுத்தவும் ஆய்வு வசதிகளை விரிவாக்க வழிகாண வேண்டும். பழைய நோய்காண் கருவி வழி ஆய்வில் முடிவு தெரிய நீண்ட நாளாவதால் முதற்கட்ட ஆய்வுக்கான புதிய மீவிரைவு ஆய்வுக் கருவியைப் பயன்படுத்தி விரிவான அளவில் ஆய்வு செய்வது அவசரத் தேவையாகும். சீனத்திடமிருந்து இந்த மீவிரைவு ஆய்வுக் கருவிகளை இறக்குமதி செய்யும் தமிழக அரசின் முயற்சியில் இந்திய அரசு குறுக்கீடு செய்வது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டிலும் இந்தியத் துணைக்கண்டமெங்கிலும் மீவிரைவு ஆய்வுக்கருவிகளைக் கொண்டு பரந்த அளவில் முதற்கட்ட ஆய்வு செய்து இன்னுங்கூடுதலானோரை இறுதி ஆய்வுக்குத் தெரிவு செய்ய வேண்டும்.
5) நோய் தொற்றியிருக்குமோ என்ற ஐயத்தின் பேரில் சிலரைத் தனிமைப்படுத்தி அவர்தம் இல்லத்திலேயே இருக்கச் செய்திருப்பதற்கு மாறாக அரசு அமைக்கும் தனி முகாம்களில் அவர்களைப் பிரித்து வைக்க வேண்டும். அயல்நாட்டிலிருந்து இங்கு வந்தவர்களுக்குச் செய்தது போல் முழுஅடைப்பு அறிவிப்புக்குப் பின் பயணம் செய்தவர்களுக்கும் அவர்களோடு தொடர்பு கொண்டவர்களுக்கும் இவ்வாறு ஆய்வு செய்யலாம். சில பகுதிகளை நோயடக்கு மண்டிலங்களாக இனங்கண்டு ஆய்வுகள் செய்வது மேலும் பல பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட வேண்டும்.
6) இன்றைய சூழலில் மருத்துவர்கள் உள்ளிட்ட நல்வாழ்வுப் பணியாளர்களின் பாதுகாப்பும் உடல், மன நலமும் தனி அக்கறைக்குரியவை. அவர்களையும் அவர்தம் குடும்பத்தாரையும் பிணியிலிருந்தும் பிறவகைத் துன்பத்திலிருந்தும் காப்பதற்கு அரசுகள் முன்னுரிமை தர வேண்டும். மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பிறவகைப் பணியாளர்களுக்கும் முழுக்காப்புடைகள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கச் செய்ய வேண்டும். குறிப்பாகத் தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம், காலணிகள், காப்புடை உள்ளிட்ட அனைத்தும் வழங்க வேண்டும். இந்த நோய்நீக்கப் பணியில் ஈடுபட்டு அதனாலேயே நோய்த்தொற்றுக்கு ஆளாகி மருத்துவர்களோ மற்றவர்களோ மடியும் அவலம் இத்தாலி, பிரிட்டன் போன்ற அயல் நாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கும் வந்து விடுமோ என்று அச்சப்படுவதற்குக் காரணம் உள்ளது. ஏற்கெனவே மருத்துவர்கள் உள்ளிட்ட நல்வாழ்வுப் பணியாளர்கள் கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு ஆளான செய்தி வந்துள்ளது. இந்த அவலம் நேரிட்டு விடாமல் எப்பாடுபட்டும் தடுக்க வேண்டும்.
7) இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இப்போதுள்ள மருத்துவ மனைகள், படுக்கைகள், தீவிர சிகிச்சைக் கூடங்கள், மூச்சுக்கருவிகள், முகக்கவசங்கள், மற்ற மற்ற ஏந்துகள் எத்தனை நோயாளர்களுக்குப் போதும்? இன்னும் எத்தனைப் பேர் வந்தால் என்ன செய்வது? என்று திட்டமிட்டு முன்கூட்டியே வழிவகை செய்ய வேண்டும்.
8) தொடர்வண்டிப் பெட்டிகளை மருத்துவ அறைகளாகப் பயன்படுத்தலாம் என்று தொடக்கத்தில் பேசப்பட்டது. கொரோனாவுக்கான தனி மருத்துவமனைகளும் கள மருத்துவமனைகளும் தனியடைப்புக் கூடங்களும் பல்வேறு வகையான முகாம்களும் அமைப்பதற்குப் பெரிய தொழிற்கூடங்கள், நிறுவன அலுவலகங்கள், கட்சி அலுவலகங்கள், தனியார் மாளிகைகள், பழைய அரண்மனைகள், உல்லாச விடுதிகள், சிறைச்சாலைகள், விளையாட்டரங்குகள் போன்றவற்றையும் அரசு இடைக்கால அடிப்படையில் கையகப்படுத்திப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
9) அறைக்கலன் தொழிற்சாலைகளில் படுக்கைகள், ஆடைத் தொழிற்கூடங்களில் காப்புடைகள், முகக்கவசங்கள், ஆய்தத் தொழிற்சாலைகளில் மூச்சுக் கருவிகள் என்று உடனே மாற்று ஆக்கங்கள் செய்வது இந்த ஏந்துகளுக்கு எந்தக் கட்டத்திலும் பற்றாக்குறை வராமல் தவிர்க்க உதவும்.
10) மருத்துவர்கள், செவிலியர்கள், நல்வாழ்வுப் பணியாளர்கள், மருத்துவமல்லாத பணியாளர்கள், ஆய்வுக் கூடங்களுக்கான செய்நுட்பர்கள், ஓட்டுநர்கள் ஏராளமாகத் தேவை. இதற்காக அவசரக்கால அடிப்படையில் ஆள்சேர்த்துக் குறுகிய காலப் பயிற்சி தர வேண்டும். முழு அடைப்பு என்று எல்லாரும் வீட்டில் அடைபட்டுச் சோம்பியிருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. விழிப்புணர்வும் தொண்டுள்ளமும் கொண்டவர்கள் வெளியே வந்து மக்கள்பணி செய்யலாம். இராணுவம் உள்ளிட்ட ஆய்தப்படைகளில் இருப்பவர்களையும் வேறு துறை சார்ந்தவர்களையும் கூட இந்தக் கடமைக்கு அழைக்கலாம். இதற்கு உடனே ஆவன செய்து எந்தப் பணிக்கும் பெரிய ஆள் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போது அனைவரும் உரிய பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் பணியாற்ற வழிசெய்ய வேண்டும்.
11) கொரோனா எந்தெந்தப் பிரிவு மக்களுக்கு உறுதியாக உயிர்க் கொல்லியாகக் கூடும் என்று கணித்து அந்தந்தப் பிரிவு மக்கள்பால் தனிக்கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக முதியோரையும் ஏற்கெனவே வேறு வகையில் நோயுற்றவர்களையும் இனங்கண்டு பேணுதல் வேண்டும். கொரோனா மீது கவனத்தைக் குவிப்பது கருவுற்ற தாய்மார்கள், குழந்தைகள் போன்றோர் மீதான கவனத்தைக் குறைத்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நோயாளர் யாராயினும் நல்வாழ்வுப் பேணுகையில் குறை ஏற்படலாகாது. யார் சாகட்டும், யார் உயிர்வாழட்டும் என்று மருத்துவர்கள் தேர்வு செய்யும் இக்கட்டான நிலை இங்கு ஏற்படாமல் உறுதி செய்ய வேண்டும்.
12) கொரோனா தொற்றுக்கான ஆய்வு ஆனாலும், சிகிச்சை ஆனாலும் மருந்து ஆனாலும் எல்லாம் முற்றிலும் இலவயமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும். இது குறித்துத் தனியார் ஆய்வகங்களோடும் மருத்துவமனைகளோடும் அரசு இப்போதே பேச்சு நடத்தி உடன்பாடு காண வேண்டும். ஒத்துவராத தனியார் ஆய்வகங்களையும் மருத்துவமனைகளையும் இழப்பீடின்றி நாட்டுடைமை ஆக்க வேண்டும். கொரோனா நெருக்கடி தீரும் வரை எல்லா மருத்துவமனைகளையும் அரசு தன் கட்டுக்குள் கொண்டுவரவும் செய்யலாம். கொரோனா நோய் தொடர்பான எல்லாச் செலவுகளுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும். ஒரே ஒருவர் கூட கட்டணம் செலுத்தக் காசில்லாமல் கொரோனாவுக்கு பலியானார் என்ற அவலம் நேராது உறுதி செய்ய வேண்டும்.
13) கொரோனா தடுப்புக்கும் சிகிச்சைக்கும் மருந்து கண்டுபிடிக்க மருத்துவ அறிவியல் உலகம் செய்து வரும் முயற்சிகளை உளமார வரவேற்கிறோம். இந்த முயற்சிகள் விரைவில் வெற்றி பெற வாழ்த்துகிறோம். அதே போது இந்தத் திசையில் பல்வேறு மரபுசார் மருத்துவ முறைகளின் பங்கையும் அறிந்தேற்று ஆதரிக்க வேண்டும்.
14) கொரோனாவுக்கு எதிரான இன்றைய போராட்டத்துக்கு மட்டுமின்றி சமூகத்தின் வருங்கால நல்வாழ்வுக்கும் சுற்றுப்புறத் தூய்மை இன்றியமையாதது என்பதைக் கருத்தில் கொண்டு, துப்புரவுப் பணியாளர்கள் என்று இதுகாறும் அழைக்கப்பட்டு வந்த தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான முகக்கவசங்கள், காலணிகள், தலையணிகள், கையுறைகள், காப்புடைகள், கிருமியழிப்பான்கள், வழலைகள், துப்புரவுக் கருவிகள், வண்டிகள் ஆகிய அனைத்தையும் வழங்க வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்களின் நெடுநாளையக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதோடு அவர்களது பணியைத் தமிழக அரசு நிரந்தரமாக்கவும் அரசுப் பணியாளர்களுக்குரிய அனைத்து உரிமைகள், சலுகைகளும் அவர்களுக்குக் கிடைக்கச் செய்யவும் வேண்டும். சிறும (குரைந்தபட்ச) ஊதியச் சட்டப்படி தூய்மைப் பணியாளருக்கு மாத ஊதியமாக ரூ. 25, 000/- வழங்க வேண்டும்.
15) கொரோனா எதிர்ப்பின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், புதிய வேலைவாய்ப்புகளைத் தோற்றுவிக்கும் வகையிலும், மருத்துவப் பணிக்கும் தூய்மைப் பணிக்கும் தேவையான காப்புறைகள், ஆய்வுக்கருவிகள், மூச்சுக்கருவிகள் ஆக்கம் செய்வதற்கான சிறப்புத் தொழில் அலகுகளை அவசரக்கால அடிப்படையில் நிறுவ வேண்டும்.
16) சமூக உணவாக்கக் கூடங்களைப் பரவலாக நிறுவி நோயெதிர்ப்புத் திறன் வளர்க்கும் ஊட்டச் சத்துள்ள உணவு கிடைக்கச் செய்ய வேண்டும். அம்மா உணவகங்களைப் பரவலாக்குவதோடு அம்மா உணவகப் பணியாளர்களுக்கும் சிறும ஊதியச் சட்டத்தைச் செயலாக்க வேண்டும்.
17) சென்ற மார்ச்சு 22ஆம் நாள் ’மக்கள் ஊரடங்கு’ அறிவிக்கப்பட்டதிலிருந்து, குறிப்பாக 24ஆம் நாள் முழு அடைப்பு தொடங்கியதிலிருந்து மக்களின் அன்றாட வாழ்க்கை அடியோடு முடங்கிக் கிடக்கிறது. மக்களும் இதை ஏற்றுக் கொண்டு பெரும்பாலும் ஒத்துழைத்து வருகின்றனர். ஆனால் அன்றாடக் கூலிகள், குறையூதியக்காரர்கள் போன்றோரின் வாழ்க்கை இந்த முழுஅடைப்பினால் நூலறுந்த பட்டம் போலாகி விட்ட்து. ஆனால் மக்களுக்கு உருப்படியான துயர்தணிப்பு நடைபடிகள் ஏதும் இந்திய அரசாலோ மாநில அரசாலோ அறிவிக்கப்படவில்லை. அரசுகள் அறிவித்துள்ள அற்பசொற்ப உதவிகளும் அவற்றை வழங்கும் வழிமுறைகளும் மக்களின் இன்றியமையாத் தேவைகளுக்கும் கூடப் போதுமானவை அல்ல என்பதோடு முழுஅடைப்பின் நோக்கங்களுக்கும் உதவக் கூடியவை அல்ல. எனவே, அமைப்புசாரா உழைப்பாளர்களுக்கும் வேலையற்றோருக்கும் முழு அடைப்பு நீடிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் 500 ரூபாய் வீதம் வாழ்க்கைப் படியாக வழங்க வேண்டும். இந்தத் தொகையை முன்கூட்டியே மொத்தமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும். முழு அடைப்பு இப்போதைய அறிவிப்பையும் நீண்டு செல்வதால் வாழ்வூதியமாக குடும்பம் ஒன்றுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 20, 000 வீதம் வழங்க வேண்டும். வங்கிக் கணக்கின் வழியாக, அல்லது வங்கிக் கணக்கு இல்லா விட்டால் அரசே வங்கிக் கணக்கு தொடங்கிக் கொடுத்து இணையப் பரிமாற்றம் வழியாக இத்தொகையை வழங்க வேண்டும்.
18) முழு அடைப்பினால் விளைபொருள் வீணாகிப் பேரிழப்புக்கு ஆளாகியுள்ள உழவர் பெருமக்களுக்கு அரசுகள் இழப்பீடு வழங்குவதோடு, விளைபொருள் முழுவதையும் சரியான விலைக்குக் கொள்முதல் செய்யவும் பொறுப்பேற்க வேண்டும். உழவர்கள் பட்ட கடன் முழுவதையும் நீக்கம் செய்ய வேண்டும்.
19) இந்தியச் சேம வங்கி அறிவித்துள்ள கடன் சலுகைகள் பெரிதும் பெருங்குழுமங்களுக்கே போய் விடாமல் உழவுக்கும் சிறு, குறு தொழிலுக்கும் பயன்படுவதை உறுதி செய்ய வேண்டும். வீட்டுக் கடன், கல்விக் கடன், சொந்தக் கடன் உள்ளிட்ட அனைத்துவகைக் கடனுக்கும் திருப்பிச் செலுத்தும் மாதத் தவணைகளை குறைந்தது மூன்று மாதக் காலம் தள்ளி வைக்க வேண்டும். வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் ஒத்திவைப்புக்கு சேம வங்கியின் பட்டும்படாத அறிவுறுத்தல்கள் போதுமானவை அல்ல என்பதால், இந்திய அரசே பொறுப்பேற்றுத் தெளிவான ஆணைகள் பிறப்பிக்க வேண்டும்.
20) அடைப்புக் காலத்திலும் தொடர்ந்து ஊதியம் பெறும் பிரிவினர் தவிர மற்றவர்களுக்கு வீட்டு வாடகையைத் தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது மூன்று மாதக் காலத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும். வீட்டு உரிமையாளர்களுக்கு அரசே இதற்கான உறுதியும், தேவைப்படுமிடத்து இழப்பீடும் வழங்க வேண்டும்.
21) கொரோனா நெருக்கடியைக் காரணம் காட்டி அரசுகள் உரிய திட்டமிடல் இன்றி மேற்கொண்ட அடைப்பு நடவடிக்கைகளால் பெரிதும் அல்லலுற்றவர்கள் புலம்பெயர் தொழிலாளர்களே. 130 கோடி மக்களையும் மிகக் குறுகிய அவகாசத்தில் பூட்டியடைக்கும் திடீர் முடிவு படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கக் கண்கிறோம். ஏழை எளிய மக்கள், அன்றாடங்காய்ச்சிகள், புலம் பெயர் தொழிலாளர்கள் நடந்து நடந்து களைத்துச் சோர்ந்தும், சோறும் நீரும் இல்லாமல் வாடி வதங்கியும் அவர்களில் சிலர் மடிந்தும் போன அவலம் கொடிது! இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு மாநிலங்களிலும் சிக்கிக் கொண்ட இவர்கள் அவரவர் தாயகம் திரும்ப முடியாமல் இன்றளவும் இன்னலுற்றுத் தவிக்கின்றார்கள். இந்த மானிடத் துயரத்துக்கு நடுவணரசும் மாநில அரசுகளுமே பொறுப்பு. நோய்த் தடுப்பு என்ற நோக்கத்தையே இந்த அரசுகள் கேள்விக்கிடமாக்கி விட்டதோடு, இதனால் வறியோர் கூட்டம் அனலிட்ட புழுவாய்த் துடிக்க நேர்ந்துள்ளது, இவ்வகையில் துயருற்ற மக்களுக்கு அரசுகள் பொறுப்புக் கூறுவதோடு தக்க இழப்பீடும் வழங்க வேண்டும், வெளி மாநிலத்திலானலும் வெளி நாட்டிலானாலும் இன்னும் ஆங்காங்கே சிக்கிக் கொண்டுள்ள மக்களை கண்ணியத்துடனும் காப்புடனும் அவரவர் தாயகத்தில் கொண்டுசேர்க்க அரசுகள் வழிவகை செய்ய வேண்டும், ஈரான் போன்ற அயல்நாடுளில் சிக்கிக் கொண்ட இந்திய நாட்டவரைத் தனி வானூர்தி அனுப்பி அழைத்து வந்தது போல் இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இம்மக்களையும் அவரவர் இடத்துக்கு அனுப்பவோ அழைத்துக் கொள்ளவோ ஆவன செய்ய வேண்டும். கேரளம், மராட்டியம் போன்ற வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழ் உழைப்பாளர்களைத் தமிழ்நாட்டுக்குப் பாதுகாப்பாகத் திருப்பி அழைத்துவரத் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
22) தமிழகச் சிறைகளில் கொரோனா தொற்று பரவும் ஆபத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து வகை சிறைப்பட்டோரையும் காப்பு, பிணை அல்லது வேறு எவ்வகையிலேனும் விடுதலை செய்ய வேண்டும். அமைச்சரவை விடுதலை செய்ய முடிவெடுத்த பிறகும் சிறையில் தொடரும் தமிழர் எழுவர் உட்பட பத்தாண்டுக்கு மேல் சிறையில் கழித்த அனைவரையும் இந்தத் தருணத்திலாவது உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
23) அகதி முகாம்களில் அல்லது முகாம்களுக்கு வெளியே வாழ்ந்து வரும் ஈழத்தமிழர் உள்ளிட்ட ஏதிலியரின் நல்வாழ்வுக்கும் வாழ்க்கைக்கும் அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
24) கொரோனா நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் நல்வாழ்வுப் பணிகளுக்கும் சமூகத் துயர்தணிப்புப் பணிகளுக்குமான செலவையும், முழுஅடைப்பால் தொழில், வணிகம், பணிகள் முடங்குவதால் ஏற்படும் இழப்பையும் ஈடுசெய்யும் நிதிச் சுமையை நடுவணரசும் தமிழக அரசும் 75க்கு 25 தகவில் பகிர்ந்து கொள்ளலாம். மாநில அரசுக்குத் தரவேண்டிய சரக்குசேவை வரி மற்றும் கடன் நிலுவையை அடைத்து இந்த நேரத்துக்குத் தேவையான கூடுதல் செலவை ஈடு செய்வதோடு இணக்கச் சூழல் ஏற்படவும் வழி செய்ய வேண்டும்.
25) கொரோனாக் காலத்தில் தமிழக உரிமைகளைப் பறிக்க இந்திய அரசு செய்து வரும் முயற்சிகளுக்கு எதிராக தமிழக மக்களுக்கு விழிப்பூட்டவும், கொரோனா எதிர்ப்பு நடவடிகைகளில் அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பையும் உறுதிசெய்யவும் தமிழக அரசு அனைத்துக்கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள், இயக்கங்களையும் அழைத்துப் பேச வேண்டும். தொடர்ச்சியான அடிப்படையில் ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும் வேண்டும்.
26) இந்திய அரசும் தமிழக அரசும் கொரோனாவுக்கு எதிராக நன்கொடை வழி நிதி திரட்டுவதில் பிழை இல்லை. அதே போது அரசு மற்றும் அரசுசார் பணியாளர்களிடம் வன்கொடைத் தண்டலாக இது மாறிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறோம். ஏற்கெனவே பொருளியல் நெருக்கடியால் துவண்டு கிடக்கும் உழைக்கும் மக்கள் மீது கொரோனாவைச் சாக்கிட்டுப் புதிய சுமைகள் ஏற்ற முயலக் கூடாது என்றும் எச்சரிக்கிறோம். இப்போதே சட்டப்படியான தலைமையமைச்சர் துயர்தணிப்பு நிதியம் இருக்க, புதிதாக பி. எம். கேர்ஸ் என்று அறக்கட்டளை தொடங்கி நிதி சேர்ப்பது தேவையற்றது, குடியாட்சியத்துக்குப் புறம்பானது. இந்த நெருக்கடியான நேரத்தில் பெருங்குழுமங்களுக்கும் பெருஞ்செல்வத்துக்கும் பெருவரி விதிக்கவும் பெருஞ்சொத்துகளை அரசே கைப்பற்றவும் வேண்டும்.
27) நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவையான ஆக்கப் பணிகளுக்குத் தங்கள் அதிகாரத்துக்குட்பட்டு ஓரளவு உதவி செய்யும்படியான நிதியை இந்திய அரசு தட்டிப்பறித்துள்ள செயல் கண்டிக்கத்தக்கது. இவ்வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையை மீட்டளிக்க வேண்டும்.
28) கொரோனா நெருக்கடியை முன்னிட்டு அரசு படைத்துறைக்கும் படைக் கருவிகளுக்குமான செலவைக் குறைத்து நல்வாழ்வுக்கான செலவைப் பன்மடங்கு கூடுதலாக்க வேண்டும். குறிப்பாக அமெரிக்காவிலிருந்து போர்த்தளவாடங்கள் கொள்முதல் செய்யும் முடிவைக் கைவிட வேண்டும்.
29) இத்துணை நெருக்கடியிலும் கொரோனாவின் முற்றுகைக்கு ஆளான பிற நாடுகளுக்கு இந்தியா இயன்ற வரை உதவ வேண்டும் என விரும்புகிறோம், அதே நேரத்தில் அயல் நாடுகளுக்கும் உலக வங்கி, பன்னாட்டுப் பண நிதியம் போன்ற நிறுவனங்களுக்கும் தர வேண்டிய கடன் வட்டி அனைத்துக்கும் இடைக்காலத் தடை கோரி இந்தியா உரிய முயற்சிகள் எடுக்க வேண்டும்.
30) கொரோனா நெருக்கடிக்கு முகங்கொடுக்க தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கான கணக்கெடுப்புப் பணிகளை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்ததை வரவேற்றோம். ஆனால் அதே அரசு சந்தடி சாக்கில் காசுமீரின் தன்னாட்சிக்கு எதிராகப் புதிய ஆணை பிறப்பித்திருப்பதைக் கண்டிக்கிறோம். கொரோனா நெருக்கடியில் குடியாட்சியம் முடக்கப்பட்டுள்ள நிலையில் அரசு புதிய அடக்குமுறை நடவடிக்கைளைத் தவிர்த்து, எதிர்க்கட்சிகளோடும் குடிமக்களோடும் ஒரு மொழியா தேக்கநிலை உடன்பாட்டைக் (A Tacit Standstill Agreement) கடைப்பிடிக்க வேண்டும்.
31) இவ்வாறே, நகரப்புற நக்சல்கள் என்று சட்ட வரையறைக்கு அப்பால் முத்திரை குத்தப்பட்டு, பீமா கொரேகான் – எல்கார் பரிசத் வழக்கில் சிறைப்படுத்தப்படாமல் வெளியே மீதமிருந்த ஆன்ந்த் தெல்தும்ப்டே, கௌதம் நவ்லக்கா ஆகிய இரு மாந்தவுரிமைச் செயற்பாட்டாளர்களுக்கும் உச்ச நீதிமன்றம் பிணை மறுத்து சிறையிலடைத்திருப்பது, அரசும் நீதிமன்றமும் கூடிச் செய்துள்ள பாசிச நகர்வே என்பதில் ஐயமில்லை. குடியரசுத்தலைவர் தமது சிறப்பதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வழக்கை நீக்கம் செய்து இவர்களையும் இதே வழக்கில் சிறையிலுள்ள மற்றவர்களையும் விடுதலை செய்யக் கோருகிறோம்.
32) பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட 1897ஆம் ஆண்டின் தொற்று நோய்கள் சட்டத்துக்கு மாற்றாக, நோயாளர்கள், நல்வாழ்வுப் பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் உரிமைகளைக் காக்கும் வகையிலும் அரசின் கட்டற்ற அதிகாரத்தைக் கட்டுக்குட்படுத்தும் வகையிலும் புதிய சட்டம் இயற்ற வேண்டும்.
33) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நல்வாழ்வு என்பதை அடிப்படை உரிமையாக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை முழுக்க முழுக்க மக்கள்நல நோக்கில் முன்வைக்கிறோம். இவற்றைச் செயலாக்குவதில் ஆட்சியாளர்களோடு முழுமனதாக ஒத்துழைக்க அணியமாக உள்ளோம். இவற்றை மக்கள் கோரிக்கைகளாக மாற்றுவதில் அனைவரின் ஆதரவும் தோழமையும் நாடுகிறோம்.
- தியாகு